Friday, 30 March 2012

ஆசான்...!!
கைபிடித்து நடக்கவைக்கும்
அன்னையாய்
அகரம் கற்பித்தாய்..!!

என்னுள் எண்ணத்தை விதைத்து
எழுதத் தூண்டியாய்...!!
எழுந்து நடக்கத் துவங்கியவளின் 
எழுத்தை
எட்ட நின்று இரசித்து..
நான் கரம் கற்பதற்குள்
உலகம் கற்றவளாய் கைவிடுத்து
தூரத்தில் காட்சியளிக்கிறாய்..!!

கைபிடித்து கற்பித்தவன்
காலமெல்லாம் கற்றுக்கொடுக்க
காத்திருக்கிறேன் நானுமே...!!

இறுதி எழுத்துவரை
இறையாய் உடனிருந்து
எண்ணத்தை எழுத்தாய் வடிக்க
என்றும்..
உரமாய் உடனிருப்பாய் நீயுமே...!!!

Wednesday, 28 March 2012

சொல்....!!!சிந்திய வார்த்தைக்கும்
சிந்தையைக் கலங்கடிக்கும்
வல்லமை உளதோ....??

உன் சொல்லாடலால்..,
வாலியின் பலத்தைப் போல் வலுவான வார்த்தைகளால்..


என் சிந்தையை  சிதறடித்து.,
நான் என்னிலை மறந்து
தன்னிலை உணராமல்
எனை தடுமாறச் செய்ததேனோ....??!!

முட்டிவரும் கண்ணீரையும்,
அழுதுச் சிவந்த கண்களையும்,
புன்னகை மறந்த இதழ்களையும்
வறட்சியான கண்ணத்தையும்
அலங்கரித்து மறைக்க முயற்சித்து.,
தோற்றுத்தான் போகிறேன் நானும்.......:(:(Monday, 26 March 2012

திருமண விலங்கு....!!!


இருமணம் இணையுமாம் 
திருமணத்தில்..!!
என்னவென்றுணரும் ஆசையில் சிலர்..
எதுவாயினும் வேண்டாமென சிலர்..
விருப்பும், வெறுப்பும் உணருமுன்  சிலருக்கு.

விரும்பிய வாழ்வு சிலருக்கு
விரும்பா வாழ்வு சிலருக்கு..
விரும்பிய வாழ்வு 
விரும்பாமல் போவது சிலருக்கு 
விரும்பாத வாழ்வை 
விரும்பி ஏற்க வைப்பது சிலருக்கு..

விரும்பாத வாழ்வை விரும்பியேற்க
வைக்கும்  வீணர்களின் விடாமுயற்சியில் சிலர்...

விரும்பாமல் விரும்பிய வாழ்வில்
விருப்பமில்லா விருந்தாளியாய்
வந்த குழந்தைக்காய்..
விரும்பாத வாழ்வை விரும்பி ஏற்கும் சிலர்..

திருமண விலங்கை விரும்பி ஏற்கும் சிலர்..
திருமணத்தால் விலங்காய் சிலர்...
பணயக்கைதியாய் சிலர்...

விலங்கை விடுவிக்க நினைப்போர் சிலர்..
விலங்கை விடுவிக்க நினைப்போரை
வினோதமாய் விமர்சிப்பவர்கள் பலர்...

திருமண பந்தத்தில்
ஆயுட்கைதியாய் சிலர்...

ஆயுட்கைதியானவர்தாம்
ஆதர்ச தம்பதியாம்...!!

ஆயுள்முழுவதும் சுயமிழப்பதுதான்
ஆதர்ச தம்பதியோ...???!!!!


Sunday, 25 March 2012

தொலைந்த என்னுள்ளம்...


உறங்கா உன் விழிகண்ட
நானும் உறக்கம் துறக்க..
என் அறிவுக்கண் திறக்க

உமிழ்நீர் வற்றிய உன் பேச்சு
கலைவாணியின் வீணையிசையாய்
காதில் ஒலிக்க...

மலரறியாமல் தேனெடுக்கும் தேன்சிட்டாய்
நானறியா நேரத்தே..
என் உளம்கவர்ந்து
மனதில் சிம்மாசனமமைத்த
உன் மனதில் நிரந்தரமாய்க்
குடியேற நிபந்தனையும் உளதோ.....!!???


Friday, 23 March 2012

நிராசை.....!!!


நினைத்த கல்வி.....
விரும்பிய வாழ்க்கை..
நட்பாய் கணவன்...
சகோதரியாய் நாத்தனார்...
சகோதரனாய் மைத்துனன்..
பெற்றோராய் மாமனார், மாமியார்..
பெற்றோரைப் புனிதமாய்க் கருதும் பிள்ளைகள்..

வேடமணியா அன்புள்ளம்...
மாறாத நட்பு..

சாதனைக்கு ஊக்கமளிக்கும் சமூகம்...
உணர்வை உணர்வோடு உணரும் உறவுகள்...
பாலினம் தாண்டிய ஆன்மசினேகம்..

சோதனையில்லா சத்தியம்..
எதிர்பார்ப்பில்லா பக்தி..

நம்பிக்கை செலுத்துமிடத்தில்
நம்பிக்கையாய்
நம்பிக்கையான 
நம்பிக்கையை நோக்கி
நம்பிக்கையோடு
தொடரும் நிராசைகள்.....!!

Wednesday, 21 March 2012

நாளைய நம்பிக்கை...!!!

மனதாளும் மன்னவனே...!!
நீயும் நானுமான வாழ்வில்
உன்னில் எனைத் தொலைத்து
என்னில் உனைத்தேடி..
எனக்கும் உனக்குமான பந்தத்தில்..

அழகில் முருகனாய்
அறிவில் குருவாய்
ஆற்றலில் அனுமனாய்
ஆன்மீகத்தில் ஞானியாய்..
இசையில் இராவணனாய்..
இலக்கியத்தில் சிலப்பதிகாரமாய்...

ஈகையில் கர்ணனாய்..
உபதேசிப்பதில் கீதையாய்.
உண்மைப் பேசுவதில் அரிச்சந்திரனாய்..
ஊக்கத்தில் கிருஷ்ணனாய்..
ஊரில் காசியாய்..

எதிர்ப்போருக்கு வாலியாய்..
எப்பொருளிலும் மெய்யாய்...
ஏற்றங்களில் மலையாய்..
ஐம்பூதங்களில் அக்னியாய்..
ஐம்புலனடக்கத்தில் முனிவனாய்..
ஒழுக்கத்தில் இராமனாய்..
ஓவியம் தீட்டுவதில்  ரவிவர்மனாய்...
ஔவியம் பேசாதவனாய்..

கவியில் கம்பனாய்..
குறியில் அர்ச்சுனனாய்..
சாதுர்யத்தில் சாணக்கியனாய்..
ஞானத்தில் சம்பந்தனாய்

தர்மம் காப்பதில் தர்மனாய்...
தூய்மையில் அன்னமாய்..
நட்பில் அதியமானாய்..
பக்தியில் பிரகலாதனாய்..
பாசத்தில் பரதனாய்...
மன்னிப்பதில் கடவுளாய்..

யவனத்தில் மன்மதனாய்...
ரகசியத்தில் பிரம்மமாய்..
லட்சியத்தில் முனைப்பாய்..
வள்ளலில் பாரியாய்..
விவேகத்தில் விதுரனாய்..
வீரத்தில் கட்டபொம்மனாய்..

விளங்க பொக்கிசமான மகவை..
நானும் ஒற்றைப் பிள்ளையாய்
ஈன்றெடுக்க...
எனை பூமித்தாயும் பொறாமையுடன்
நோக்க...!!

இயற்கையும்,
தேவர்களும்
மும்மூர்த்திகளும் ஆசீர்வதிக்க..
அவன் என்றும்
இறவாத் தன்மையுடன் விளங்கி
அவனில்
உன் பெயர் தழைக்க வேணுமாய்
இந்தக்காதலியின்
சின்ன சின்னப் பேராசை............!!!
Monday, 19 March 2012

சுகமான சுமைகள்..!பிஞ்சுப் பருவத்தில்
பெற்றோரின் அன்பைச் சுமந்து.....,
உடன்பிறப்பின் பாசத்தை சுமந்து.....,
பள்ளிப் பருவத்தில்
புத்தகத்தை சுமந்து.....,

வளரும் பருவத்தில் நட்பை சுமந்து......,
பருவத்தில் காதலை சுமந்து......,


படித்து பட்டத்தை சுமந்து.....,
நல்ல பணியைச் சுமந்து.....,
ஊழியர்களின் பாசத்தை சுமந்து.....,

கணவனின் தாலியைச் சுமந்து.....,
கணவர் வீட்டாரை சுமந்து.....,
பொறுப்பானவள், பொறுப்பற்றவள்
என்ற பெயரைச் சுமந்து.....,
இன்னல்கள் பல சுமந்து.....,
கருவைச் சுமந்து.....,

சுமந்து, சுமந்து சுமந்தே பழகிய நீ….
உன் சிசுவிற்கு
இரத்தத்தையே பாலாய் புகட்டினாய்
அன்பை கொடுத்தாய்..
உழைப்பை அளித்தாய்..
விருப்பு, வெறுப்புக்களை விடுத்தாய்..

குழந்தைக்கு கல்வி அளித்தாய்..
நல்ல தோழமையாய் விளங்கினாய்..
பருவமடைந்ததும்,
பாதுகாப்பை அளித்தாய்..
அவளுக்கு ஒரு துணையை தேர்ந்தெடுத்தாய்...

அவள் சுமந்த கருவுக்கு.,
நீ தாயானாய்..
தாயாய் உன் பணி தொடர்ந்தாய்..

சுமந்தும், கொடுத்தும், சுமந்தும்...
..
இதுதான் சுகமான சுமையோ...??

சுமையையும் சுகமாய் எண்ணும்
நீயும்
தொடர் கதையாய்.......