முகப்பு...

Monday 27 January 2014

மௌனத்தின் மொழி..


உணர்வுடன் அணுகவேண்டியவற்றை யதார்த்தத்துடனும், யதார்த்தத்துடன் அணுகவேண்டியவற்றை உணர்வுடனும் அணுகினால், சிக்கலே அதிகமாகும் என்பதை பல நேரம் மறந்துவிடும் மனம்...


*****

வார்த்தைகளுக்கு அடிக்கப்படும் வண்ணத்தை காணாததுபோல் மௌனக்கண்ணாடி அணிந்து செல்லவேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது பலநேரம்..


*****

மனம்விட்டுப்பேசுவது எல்லாம் மனதாரப் பேசுவதாகிவிடாது...


*****
வார்த்தைகளின் மேல் பூசப்பட்ட வர்ணங்களை நீக்கி அதன் சுயநிறத்தை அறியமுடியும் என்பதை அறிந்தாலும், வார்த்தைக்கு வர்ணமடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து பூசிக்கொண்டுதான் இருக்கின்(றோம்)றனர்.:)
*****
வார்த்தைகளின் வர்ணம் மூச்சைத் திணறடிக்கச் செய்யும்போது, மௌனத்திரை கிழித்தெறியப்படுகிறது...விரும்பியோ விரும்பாமலோ..
*****

Sunday 26 January 2014

விடிதல் நன்று...!!

குழந்தையின் அழுகைக்கு - விடிதல்
அன்னையின் அரவணைப்பில்..
மாணவனுக்கு - விடிதல்
தேர்வு முடிவினில்..
ஆசிரியருக்கு - விடிதல்
மாணவர்களின் தேர்ச்சியில்..

குழந்தைத்தொழிலாளிக்கு - விடிதல்
தரமான கல்வியில்..
வறுமைக்கு - விடிதல்
வசதியில்..
அனாதைக்கு - விடிதல்
நல்லோரின் ஆதரவில்..

வணிகனுக்கு - விடிதல்
வியாபார லாபத்தில்..
எழுத்தாளனின் - விடிதல்
அவனுக்கான அங்கீகாரத்தில்..
பேச்சாளனுக்கு - விடிதல்
காதைப்பிளக்கும் கரகோஷத்தில்..

ராணுவ வீரனுக்கு - விடிதல்
எதிரியை வெற்றிகொள்கையில்..
கூலித்தொழிலாளிக்கு - விடிதல்
நிரந்தர வருமானத்தில்..
தனிமைக்கு - விடிதல்
நல்ல தோழமையில்..

விவசாயிக்கு - விடிதல்
நல்ல விளைச்சலில்..
நோயாளிக்கு - விடிதல்
தரமான மருத்துவத்தில்...
முதுமைக்கு - விடிதல்
மனிதத்தின் ஆதரவில்...

தெருவோரம் வசிப்போர்க்கு - விடிதல்
வசிப்பதற்கான ஒரு குடிசையில்..
தேவைகள் நிறைந்த புவிதனில்..
அவரவர் எதிர்பார்ப்பில்
விடிதலை நோக்கியப் பயணமுந்தான்
நாளும் தொடர்கிறதே..!

மனிதனின் முடிவாம் மரணம்..!

மரணத்தின் விடிதல் நன்றாம்
ஆன்மீகம், விஞ்ஞானம், மெய்ஞானம்
அறிந்தோரிருக்கும் அவனியிலே..
மரணத்தின் விடிதல்
அறிவோரும் உளரோ...?!

Friday 24 January 2014

வார்த்தை (விதை)கள்...!!

இனிப்பு, புளிப்பு, கசப்பு
காரமெனப் பல்சுவை
வார்த்தைப் பரிமாற்றத்தில்...!

பிடித்த சுவை இனிப்பென
பரிமாறிட..
இனிப்பில் ஒவ்வாமை இருக்கென
காரத்தையே
தேர்ந்தெடுத்திட்டால்
பரிமாற மறுத்திடத்தான் முடியுமா..?

விரும்பியவர்
விருப்பத்திற்காய்
காரம் பரிமாறப்படுகிறது
விரும்பியோ, விரும்பாமலோ..!!

காலமது செய்யும் கோலத்தில்
இனிப்பாய் வழங்கிடும்
வார்த்தையுமிங்கே
கசப்பாய்த் தோன்றி
வெறுப்பாய்  மாறிடுது....!!

இனிப்பாய் இருந்திடக் கொடுத்திடும்
கசப்பு வார்த்தையும்
புளிப்பாய்த் திகழ்ந்திடுதே
புவிதனில்...!!

இனிப்பு,கசப்பு,புளிப்பு
காரமென பல்சுவையும்
வரக்கூடும் வார்த்தைப்
பரிமாற்றத்தில்...!!

பரி(கிர)மாறப்பட்ட
வார்த்தை ஒன்றெனினும்
சுவைக்கப்படும்
வார்த்தையின் “சுவை”
அவரவர் எண்ணத்திலன்றோ...!!

Thursday 23 January 2014

மௌனப்பயிர்கள்...!!


நேற்று..
மனதில்
தேனைப் பாய்ச்சிய வார்த்தைகள்
இன்று
அமிலத்தை வார்க்கலாம்...
அமிலத்தை வார்க்கும் வார்த்தைகள்
நாளை
தேனைப் பாய்ச்சலாம்....

இங்கு
நிரந்தரமில்லா
தேனும், அமிலமும்
மாறி மாறி பாயும் - மனதை
தேனில் மயங்க(கி)விடாமலும்..
அமிலத்தில் கருகிவிடாமலும்
பாதுகாக்க..
மனத்தோட்டத்தில்
மௌனப்பயிர்கள்
பயிரிடப்படுகின்றன...!!

மனிதனுக்கு
மௌனப்பயிர்களின்
அறுவடை நேரம்வரை காத்திருக்க
அவகாசமில்லை ...

சிலநேரம்
அறிந்தோ அறியாமலோ
பரித்தெறியப்படுகின்றன பயிர்கள்
அரை- குறையாய்...!

மீண்டும் மீண்டும்
மௌனப்பயிர்களை பயிரிடும் முயற்சிகள்
தொடர்கின்றன...!! :)


மௌனமாய்...!!


என்ன பொன்னாத்தா.. நான் வாரதக்கூட கண்டுக்காம போற..?

குரல் கேட்டுத் திரும்பிய பொன்னாத்தா எதிரே முனிம்மா நிற்பதைக்கண்டாள்.  கவனிக்கல முனிம்மா...ஏதோ விசனம்.

“என்னாச்சு இன்னிக்கு ரொம்ப கவலையா இருக்கறியே..?!”

உனக்கே தெரியும் எங்க மொதலாளியம்மாவ பத்தி, அவங்க எவ்ளோ அன்பா எங்கிட்ட இருப்பாங்கனு. எதாயிருந்தாலும் எங்கிட்ட சொல்லுவாங்க. நல்லது கெட்டது அவுக ஆஃபீசு விசயம் இப்படி யாரப்பார்க்கறாங்க...எப்ப வருவாங்க எல்லாம் சொல்வாங்க.

எனக்கும் அந்தவீட்டில வேலை செய்யறோம்ன்ற நினப்பே இல்லாம  நம்ம வீடுமாதிரியே இருக்கும்.  அந்த உரிமையில சிலநேரம் எங்க போறீங்க எப்ப வருவீங்க.. நேரத்துக்கு வாங்கன்னு சொல்வேன். முன்னெல்லாம் அத சந்தோசமா ஏத்துக்கிட்ட அந்தம்மா, இப்ப கொஞ்ச நாளா அவங்க சுதந்திரத்துக்கு இடைஞ்சலா நினைச்சுட்டாங்க போல.

இப்பல்லாம் அதிகம் அப்படி உரிமையா அன்பா பேசறது இல்ல. எதும் வேலைன்னா சொல்வாங்க..நானும் செஞ்சுட்டு வந்திடறேன்.  இருந்தாலும் என்ன அறியாமையே ஏதோ என் மனச சஞ்சலப்படுத்துது. எங்கனா கொஞ்ச நாள் அமைதியா போயிடமாட்டமானுகூட தோணுது.

ம்ம்.. அதுக்கு என்ன செய்யறது.  உன்ன யாரு வேல செய்ற வூட்ல எல்லாம் அன்பா இருக்க சொன்னது..போனமா வேலைய முடிச்சமா சம்பளத்த வாங்கினமானு இல்லாம..தேவையா இது..??

”சரி நாளைக்கு கோயிலுக்கு வாரியா...? அங்க ஒரு சாமியார் வந்திருக்காராம்.  எப்பவும் மவுனத்துலதான் இருப்பாராம். எப்பனாச்சுந்தான் பேசுவாராம். ஆனா நம்ம குறைய சொன்னா கொஞ்சம் பாரம் குறையும்...போலாமா..?”

ம்ம் வா, நானும் கோயிலு குளமுன்னு போயி ரொம்ப நாள் ஆச்சு. நாளைக்கு காலைல வெள்ளென வரேன் போவோம்  பொயிட்டு வந்தா மனசுல பாரம் கொறஞ்சமாதிரி இருக்குமுல்ல.  ராத்திரி சாப்பாட்டை  முடித்து படுத்தவள், நீண்ட நேரம்  புரண்டு புரண்டு படுத்து பின் தூங்கிப்போனாள்.

கோயிலில் கூட்டம் இல்லாமல் சற்றே அமைதியாக இருக்க. சாமியார் முன்பு அமைதியாக உட்கார தன்னையறியாமல் வரும் கண்ணீரை கட்டுப்படுத்த சிரமப்பட்டாள் பொன்னாத்தா.

இப்ப எதுக்கு கண்ணீர் வடிக்கிற அமைதியா உட்காரு என்று அதட்டிய முனிம்மாவை பார்த்து  மௌனமாய் சிரித்த பொன்னாத்தா கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

தொடர்ந்து இதையே கடைபிடி ..கண்ணீரே வராது அசரீரி மாதிரி குரல் கேட்டு பொன்னாத்தா நிமிர,  எதிரே மௌனச்சாமியார் புன்னகைத்தபடி.“ எல்லாம் உன்னால, உனக்காக, உன்னோடதுன்னு நினைக்காம, உனக்கான பணி மட்டும் செய்துட்டு மற்ற விசயங்களில் தலையிடாம உன்பாட்டுக்கு மௌனமா கடந்துபோகப்பழகு.  கண்ணீரே வராது. கவலையும் இருக்காது”

திடுக்கிட்டு கண்விழித்த பொன்னாத்தா கனவில் கண்ட சாமியாரின் வார்த்தைகளில் தெளிந்தவளாய் மனம் இப்பொழுது இலேசாகி இருப்பதை உணர்ந்தவள், வீட்டு வேலைக்கு செல்ல தயாரானாள்..:)

Tuesday 21 January 2014

எண்ணச்சிதறல்...

அன்றைய தினத்தை சூன்யமாக்கவும், மகிழ்ச்சிப்பூவை மலரச்செய்யவும் அன்புடையவரின் அலட்சியமான/அன்பான ஒற்றை சொல் போதுமானதாகிறது.
***
உறவு வண்டியில் 
நம்பிக்கை எரிபொருளூற்றி 
இலட்சிய நிறுத்தம் நோக்கிப் பயணிக்க
கசியும் எரிபொருள்
வேகத்தை குறைக்குமா..?
விபத்தையடைந்து
பயணம் தடைப்படுமா..?
கவலைகள் தோன்றிடினும்
நிறுத்தத்தை சென்றடைய
குறையும் எரிபொருளை நிரப்பியவண்ணம் 
நாளும் தொடர்கிறது 
முயற்சிகள்..:)
***
எங்கோ விழுங்கப்பட்டு, ஜீரணிக்கப்படாத விடவார்த்தைகளின் எச்சம் விரும்பியவரையும் விடமாய்த் தீண்டுகிறது நம்மையறியாமலேயே..
***
சிந்தையில் தோன்றுவதை 
என் மனம் உணருமுன்னே
வார்த்தையாகி 
உன்செவியைச் சென்றடைகிறது
நீ விரும்பியோ
விரும்பாமலோ...!!

அழகோவியம்...


பூமகளை மகிழ்விக்க வைரக்கற்களை வீசி ஓடவிட்டு விளையாட்டு காட்டும் நீர்த்துளிகள்... 
----​
பகல்பொழுதை ஆட்சி செய்யும் கதிரவனை, மேகம் தன்வசப்படுத்திக் கதிரவனை காணாது செய்து, வருணனுக்கு வழிகொடுக்கும் காட்சி..:)
-----
கண்ணெதிரே இருக்கும் மனிதனை நொடிப்பொழுதில் கண்ணிலிருந்து மறைத்து மாயம் செய்யும் பனிப்பொழிவு...
------
​வைரமூக்குத்தியை புல்வதனத்திற்கு அணிவித்து அழகுபார்க்கும் அதிகாலை நேரப் பனி...​
---

Sunday 19 January 2014

மரண தாகம்...!!


மரணத்தைத் தழுவத் துடிக்கும்
சிந்தனையை 
சிறைவைக்கிறேன்...!!

படைசூழ பவனிவந்து
அரியாசனத்தில் அமர்ந்து 
ஆட்சிசெய்யும் நீ 
ஏதேனும் ஓர் நொடி 
தனித்திருக்கக்கூடும்..!

மர(றந்)த்துப்போன 
உன் உணர்வுப்பூக்கள்
புத்துயிர் பெற்று..
அன்பின் ஆழத்தை உணர்ந்தமனம்
நின் கண்மலர்களில்
கண்ணீர்த் துளிகளை 
மலரச்செய்யலாம்..!

செந்நீராய்க் காட்சியளிக்கும்
நின் கண்ணீரைக் காணும் மனவலிமை
எனக்கு மட்டுமல்ல
என் ஆன்மாவிற்கும் இல்லையென்பதால்..

என்னவளே(னே)
சிந்தனை உளிகொண்டு
நீ செதுக்கும் இலட்சிய சிற்பத்தை
எங்கோ ஓர் மூலையில் இருந்தேனும் - தரிசிக்க
மரணத்தின் மீதான தாகத்திற்கு
மரணதண்டனை விதிக்கிறேன்..!!

நித்தமும் மார்கழி...!!!


வண்ணக்கலவையில்
வகை வகையாய் கோலமிட்டு
வீதிமகளை அலங்கரித்த
காரிகைகள் காணவில்லை..!

பூமித்தாயை அலங்கரிக்க
மார்கழி போதுமென
ஐயாறு திங்களுக்குள்
அடக்கியது யாரோ..?

அழகுக்கு அழகுசேர்க்க
ஆயுளும் போதாதே..
பசுஞ்சாணி சேர்த்தே
நித்தமும் நீர்தெளித்து
பளபளக்கும் வாசலிலே
வெண்மைப் பளிச்சிட
அரிசிமாக்கோலமிட்டு..

வண்ணக்கலவையினால்
வானவில்லும் பொறாமைகொள்ள
ஈராறு மாதமும்
இன்முகத்துடன்
வாசலை அலங்கரித்தே
புவிதனை மகிழ்விக்க
பூவையரே புத்துணர்வுடன்
வாருமிங்கே..! 

Friday 17 January 2014

மௌனச்சிதறல்கள்...

மௌனமாய் கடந்துசெல்லும் நொடிகள் அனைத்தும் மனதிற்கு பிடித்தமானது என்பதாகாது.
****
இதுவும் கடந்துபோகுமென, அனைத்து நிகழ்வுகளும் கடக்க(முடி)ப்படுவதில்லை பலநேரம்.
****

துள்ளிக்குதித்தோடும் மனக்குதிரையின் வேகத்தின் தன்மையறிந்து, மட்டுப்படுத்த மௌனச்சாட்டை தேவைப்படுகிறது சிலநேரம்..

****

உற்சாகத்திடலில் ஓடி மகிழும் மனக்குதிரையை உணர்விழக்கச் செய்ய வார்த்தை சாட்டை போதுமானதாகிறது..

****

பிரமிக்கவைக்கும் இயற்கை...!!


செல்லுமிடமில்லாம்
நமைப் பின்தொடர்ந்து
நமக்கானதென எண்ணவைத்து
மகிழச்செய்யும் நிலவு..!!
***
உறக்கத்தில்
சிரித்தும், அழுதும்
நம்மை மகிழ்விக்கும்
கபடம் விதைக்கபடாத குழந்தை...!!
***
நொடிப்பொழுதில்
ஒலி, ஒளியுடன் வானத்தில் ஓவியம்
ஏற்படுத்திச்செல்லும் மின்னல்..
***
ஒற்றை விதையில்
உருவாகும்
எண்ணிலடங்கா மரங்கள்..
***
வானவீதியில்
விசிறியெறியப்பட்ட
வைர கற்களாய்
மிளிரும் நட்சத்திரங்கள்..!!
***
வறண்ட பூமித்தாயின்
மனம் குளிர்விக்க
வருணன்
தன் ஈரவார்த்தைகளால்
கவிதைபொழிய...
அவன் காதல்மொழியில்
மனம் குளிர்ந்து
தன் மகிழ்ச்சிதனை
மண்ணின் மணம் வீசி
வெளிப்படுத்தும் பூமித்தாய்...!!
***
கண்முன்னே இருப்பதை
காணவிடாது மறைத்து..
வளர்ந்ததை வீழ்த்தியும்
வீழ்ந்திருப்பதை
உயரத்தில் அமர்த்தியும்
இடம்மாற்றித்
தடம் மாற்றித் தடுமாறவைக்கும்
ஆடிமாதக்காற்று...
***