Friday, 25 January 2013

கவி மாலை...

சிந்தையில் பூத்த
எண்ண மலர்களை
வார்த்தையெனும் நார்கொண்டு
கவிதை மாலையாக்கி
உனக்கு சமர்பிக்க
எண்ணுகிறேன்..

வார்த்தைநாரும் வசப்படாதுபோக
உள்ளத்தில் உதிர்த்தவைகளை
மனதினில்  மாலையாக்கி
உதிரிப்பூக்களாய் அர்ச்சிக்கிறேன்..

சிந்தையில் இருப்போனே
எம்மனம் அறிவாய்
மலர்களின் நறுமணம் உணர்வாய் நிறைவாய்
என்னிறைவா,,!!

Sunday, 20 January 2013

தலைப்புச்செய்தி..


கதிரவனைக்காணவில்லை..
குளிர்ந்த காற்றினிலும்
மரங்கள்  உதிர்த்த இலைகளின் அழகினிலும்
பொதுமக்களை மயங்கச்செய்து
மேகங்களின் கூட்டணியோடு
வருணன் செய்த சதியாகவிருக்குமென
இயற்கை செய்திகள் சந்தேகப்படுகின்றன....

கதிரவனைக் காணாத இல்லத்தரசிகள்
கவலையுடன் காணப்பட
அவர்களுக்கு ஆறுதல் அளித்து
விரைவில் கதிரவனை வரவழைப்பதாக
நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...!! :)


Sunday, 13 January 2013

பண்டிகையும், தொலைக்காட்சியும்..தோழமைகள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.  இல்லத்தில் என்றும் மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும். வாழ்க வளமுடன்..:)

***********
பண்டிகை எனும்போதே நம்மையறியாமல் நம் முகம் மகிழ்ச்சியை பிரதிபலிக்கும்.  குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரையும் கட்டி இழுக்கும் சொல் பண்டிகை.   பண்டிகை வருவதற்கு ஒரு மாதம் முன்பிலிருந்தே  நாள்காட்டியை நாள்தோறும் பார்க்கவைத்து நம்மில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். குடும்பத்தலைவன் நெருக்கடியான பொருளாதார சூழலிலும் தன் வீட்டிற்குத் தேவையானவற்றை பார்த்து பார்த்து செய்யும்போது வலியிலும் ஒரு சுகம் இருக்கும். வீட்டை சுத்தம் செய்தல், பழுதுபார்த்தல், வெள்ளையடித்தல் போன்ற வேலைகள் முன்னதாகவே துவங்க பண்டிகை வருவதற்கான அறிகுறி கலைகட்ட ஆரம்பித்து விடும்.  புதுத்துணிகள் எடுத்து தையல்காரரிடம் கொடுத்துவருவது, பலகாரங்கள் செய்யத்தேவையான பொருட்கள் வாங்கிவருவதுபெண்கள் தோழிகளுடன் சென்று மருதாணி பறித்து வந்து அரைத்து ஒருவருக்கொருவர் போட்டுக்கொள்வது என ஒவ்வொருவரிடமும் ஒருவித எதிர்பார்ப்புகள், மகிழ்ச்சிகள்  ஏற்படும்.

பண்டிகையன்று  வண்ணக்கோலமும்மாவிலைத்தோரணமும்  வீட்டினை அலங்கரித்திருப்பது  பார்ப்பதற்கே  மனதை மயக்கும்படி இருக்கும்.  
பெண்கள், கோலங்களுக்கு வண்ணம் சேர்ப்பதற்கு செங்கற்களைப் பொடி செய்தும், காப்பித்தூளைக் காயவைத்தும், பச்சிலையை அரைத்து காயவைத்து பொடித்து பச்சை வண்ணம் என இயற்கையாக தம் தம் கரங்களால் வண்ணங்கள் தயாரித்து மகிழ்ந்து, பொங்கல் அன்று, பொங்கல் பானை, கரும்பு, மாடு, வாழைப்பழம், வெற்றிலை என அனைத்தும் கோலங்களில் முதலில் குடியேறிவிடும். தமது கைகளினால் செய்த வண்ணங்கள் கோலங்களை அலங்கரிக்க பார்க்கப்பார்க்க பூரிப்பு அதிகரிக்கும். தம் வீட்டு கோலம் முடிந்தகையோடு அடுத்தடுத்த வீட்டு கோலங்கள் கண்டு ஒப்பிட்டுப்பார்த்து வர, பொழுது விடிந்திருக்கும்.  பெரியவர்கள் பூசைக்கான ஏற்பாடுகள் செய்வதிலும், சமையல் வேலையிலும் தீவிரமாக ஈடுபட்டிருக்க குழந்தைகளோ புத்தாடைகளின் சரசரப்பில் இங்கும் அங்கும் ஓடிவிளையாடி நமையெல்லாம் மகிழ்வித்த அந்தத் தருணங்களும்  இனி  வருமா என்ற ஏக்கமே மிஞ்சுகிறது.

அனைவர் வீட்டிலும் பலகாரம் செய்திருந்தாலும், அவரவர் வீட்டுப்பலகாரங்களை தத்தம் பகிர்ந்துகொள்ளும் மகிழ்ச்சியும் காணாமல் போய்வருகிறது. 

இன்றும் பண்டிகையினை ஆவலுடன் எதிர்பார்க்கத்தான் செய்கிறோம்.  குழந்தைகள்  பள்ளி விடுமுறை என்ற மகிழ்ச்சிலும்மற்றவர்கள் அலுவலக விடுமுறை தாமதமாக எழலாம் என்ற எதிர்பார்ப்பிலும், மற்றும் தொலைகாட்சியின் சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த எதிர்பார்ப்புகளுடனும் எதிர்பார்க்கிறோம்..:) இன்றைய நமது நேரத்தையும், பண்டிகையையும், மகிழ்ச்சியையும் முடிவு செய்வது நமது  தொலைக்காட்சியிடம் தான் உள்ளது.   தொலைக்காட்சி தேர்ந்தெடுக்கும் புதுமுகக்கதாநாயகிகள், பிரபலங்களைப் பொறுத்து, அந்த தொலைக்காட்சி முடிவு செய்கிறது அன்றைய பண்டிகையின் சிறப்பை.

பொருளாதார நிலைக்கருதி தன் வசிப்பிடம் தவிர்த்து இடம் பெயர்ந்தவர்கள் பட்டிணத்திலும் விடாமல் கடைபிடித்து வந்த பழக்க வழக்கங்கள் நாளடைவில் நாகரீகம், வளர்ச்சி, அலுவல், நேரமின்மை எனப் பல காரணங்களினால் நாளடைவில் பண்டிகையின் சுவாரசியம் குறையத்தொடங்க...இன்றைய தலைமுறையிடம் பண்டிகை என்றாலே தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சி எனும் அளவிற்கு ஆளுமை செலுத்துகிறது என்பது மறுக்கமுடியாது.  மக்களின் மனமாற்றத்தை சாதகமாக்கிப் பணமாக்கும் முயற்சியில் வெற்றியும் கண்டுவருகின்றன தொலைக்காட்சி நிறுவனங்கள். தங்களது டி.ஆர்.பி ரேட் அதிகரிக்க அன்றைய தினப் பிரபல நடிக நடிகையரின் பேட்டி, வரலாற்றில் முதல் முறையானப் படம் போன்று நம்மை ஆட்டுவிக்கும் அத்துனை கலையும் கற்று வைத்துள்ளனர். பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஒருவருக்கொருவர் கொடுத்து உதவுதல், உறவுகள், நட்புகள் சந்திப்பு அனைத்தும் மறந்(றுத்)து வரும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறோம் நம்மையறியாமலேயே.  அப்படியே யாரேனும் வீட்டிற்கு வரநேரிட்டால் கூட தொலைக்காட்சி பார்ப்பது தடைப்பட்டுவிட்டதே என்ற எண்ணம் பிரதிபளிக்கவே செய்கிறது. 

சுதந்திர தினமா..? காலை தேசபக்திப்பாடல், 2 நடிகைகளின் நேர்காணல், நகைச்சுவை என்ற பெயரில் ஒருவரை ஒருவர் தாக்கிப்பேசுவது. 3 திரைப்படங்கள் இவையனைத்தும் விளம்பரங்களுக்கிடையே அவ்வப்போது நிகழ நமது பண்டிகை தினமும் இனிதே நிறைவுறுகிறது. சுதந்திர தினத்திற்கும் நடிக, நடிகையர்களுக்கும் என்ன சம்பந்தம்...?? இருப்பினும் கைதட்டி அமர்ந்து சிரித்து பார்த்துக்கொண்டிருப்போம். இதில் ஒப்பீடு வேறு இந்தத் தொலைக்காட்சியில் என்ன நிகழ்ச்சி, அதில் என்ன நிகழ்ச்சி என்று. ஒரு தொலைக்காட்சியாவது சுதந்திர தினத்தின் அருமை, பெருமை உணர்த்தும் விதமாக நிகழ்ச்சித் தயாரிப்பது உண்டா..? சுதந்திரம்  கிடைக்க சுதந்திர தியாகிகள் அடைந்த  துன்பங்கள், அவர்கள் வாழ்க்கை வரலாறு  என இன்றைய குழந்தைகளும் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு நாடகமாக, குறும்படமாக, அதைப்பற்றி பள்ளிக்குழந்தைகளை வைத்து ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பினால் என்ன..?? இப்படி எதுவுமே தெரியாமல் தேசபக்தி வருவது எங்ஙனம்..??

தீபாவளி, நவராத்திரி, தமிழர் திருநாள் என்று எந்தப்பண்டிகையும் ஏன் கொண்டாடுகிறோம்  ஒவ்வொரு பண்டிகையும் அதன் பெருமை அறிவுறுத்தப்படாமல், அறியப்படாமலேயே கொண்டாடப்பட்டு வருகிறது என்பது வருத்தத்திற்குறியதே.

இன்றைய தலைமுறையினர் உடனிருக்கும் பெரியவர்கள் உட்பட  பண்டிகையை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கேற்பவும், தம் அலுவலக பணிகளுக்கேற்பவும் மாற்றியமைத்து கொண்டாடினால் அதன் உண்மைத்தன்மை அடுத்த தலைமுறையினருக்கு செல்வது எப்படி..?

இதே நிலைத் தொடர்ந்திடுமெனில், சில ஆண்டுகளில் பண்டிகை என்ற ஒன்றே வீட்டில் பெயருக்காகக் கூட கொண்டாடப்படாமல் போய்விடும் அபாய நிலையில் இருக்கிறோம்.

அனைவருக்கும் குறுந்தகவல்கள் பகிர்ந்துகொள்வது, அலைபேசியில் வாழ்த்துக்கூறுவது தொலைக்காட்சி முன் அமர்ந்து நிகழ்ச்சிகள் காண்பதோடு நம் பண்டிகை இனிதே நிறைவு பெறுகிறது. இனியாவது பண்டிகைகளை அதன் காரணம் அறிந்து சிறப்பாக மகிழ்வுடன் கொண்டாடத் தொடங்க முயற்சிக்கலாமே..??

உண்மைநிலையையும் ஏற்றே ஆகவேண்டும்.  பொருளாதார ஈட்டலுக்காக இடம்பெயர்ந்த நாம் கிராமம் போன்று  அனைத்துப் பண்டிகைகளையும் முறைப்படி கொண்டாடும் மனம் இருப்பினும், அதற்கான இட வசதி இல்லையென்று கூறும் ஒரு சாரார்.   உண்மையில் விருப்பமிருப்பின் நகரத்திலும் கிராமத்தைக் கொணர முயற்சிக்கலாம். அடுக்குமாடிக்குடியிருப்பில் வசிப்பவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மையப்பூங்காவில் கிராமத்தில் செய்வது போல் பொங்கல் பண்டிகைகள் போன்ற பண்டிகைகளை ஒருங்கிணைந்து கொண்டாட முயற்சிப்பின் இன்றையக் குழந்தைகளும் நம் பாரம்பரிய முறையினை அறிய நேரிடலாம். பண்டிகைப்பற்றி நன்கு அறிந்தவர்கள் அறியாதவர்களுக்கு அதன் அருமை உணர்த்தி அறியவைத்து சிறப்பாக கொண்டாட வழிவகுக்கலாம்.  வருங்கால நம் சந்ததியினருக்கு  நம்முடைய சிறப்பினை சிறப்பாக உணரும்படி செய்வோம். 

Monday, 7 January 2013

வாழ்த்துகளும், பரிசுகளும்...

சமீப சில ஆண்டுகளாக நம்மிடையே  பரவலாகக் காணப்படும் ஒரு பழக்கம்  தீபாவளி மற்றும் புத்தாண்டுக்கு  ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களோடு பரிசுகள் பகிர்ந்துகொள்வது.  தனிமனிதன் மட்டுமல்லாமல் நிறுவனங்களும் தமது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பரிசுப்பொருட்கள் அல்லது உலர்ந்த பழங்கள், இனிப்பு வகைகள் கொடுத்து வருகின்றன.  இவ்விதம் செய்வதனால் ஊழியர்களுக்கு ஒரு  ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  ஆனால் ஒரு நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கும், நட்பு நிறுவனங்களுக்கும் இதுபோன்று  அன்பளிப்புகள் என்ற பெயரில் கடிகாரம்,அலங்கார பொருட்கள், துணிகள், உலர்ந்த பழவகைகள் மற்றும் இனிப்பு பெட்டிகள் என்று ஏதேனும் ஒன்றை கொடுத்துவருகின்றனர்.  இது சரியா..?? ஒரு வாடிக்கையாளர் பணம் பெற்று பொருள் கொடுக்கிறார்.  அல்லது சேவை செய்கிறார் அப்படியிருக்க இதுபோன்ற அன்பளிப்புகள் அவசியமானதுதானா.?  இந்தப்பழக்கம் இவ்வளவு காலங்களாக இல்லாமல் சமீப காலங்களாக மட்டும் அதிகரித்து வருவது ஏன்.? இதுவும் நாகரீக மாற்றமா..இதுபோன்ற பரிசுப்பொருட்கள் கொடுக்கப்படாதநிலையிலும் சேவைகளும், பணிகளும் செவ்வனே நடந்துவந்து கொண்டுதானே இருந்தது..??

தன் அன்பை வெளிப்படுத்துவதற்கும், வாழ்த்துக்களைப் பகிர்வதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட இந்தப்பழக்கம் நாளடைவில் அத்தியாவசியமாகிப் போய்விட்டது.  ஒரு ஆன்மரீதியான வாழ்த்துப்பரிமாற்றங்கள் போய் வாழ்த்துப்பரிமாற்றமும், பரிசுப்பகிர்தலும் சம்பிரதாயமாகவே  பகிரப்பட்டு வருவதே அதிகமாகக் காணப்படுகிறது இன்றைய காலக்கட்டங்களில்.

ஒரு நிறுவனத்தில் உள்ள முக்கியமான ஊழியர்களுக்கு ஒரு வாடிக்கையாளர் பரிசுப்பொருள் வழங்கவேண்டுமெனில், எதிர்காலத்தில் அதற்கான தொகையையும் நம்மிடமிருந்து ஏதோவொரு முறையில்தானே வசூலிக்கப்படும் அல்லவா.  அந்த நிறுவனத்தார் என்ன கொடுத்தார், இந்த நிறுவனத்தார் என்ன கொடுத்தார் என்ற ஒப்பீடு செய்யும் மனோபாவத்தையும் ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தவே செய்கிறது.  அதோடு அல்லாமல் நமக்குப் பரிசுகொடுத்தவர்களுக்கு(கே) அதற்கு நிகரான பொருட்கள் கொடுக்கவேண்டும் அல்லது சற்று அதைவிட அதிக மதிப்பில் கொடுக்கவேண்டும் என்ற சிந்தனையே மேலோங்கிவருகிறது.  அப்படி பரிசுகள் வழங்காதவர்களை அலட்சியப்படுத்தவும் தூண்டுகிறது.  வேடிக்கை என்னவெனில், இதுபோன்ற பரிசுப்பொருட்கள் வந்துதான் அவர்கள் குடும்பம் சமாளிக்க வேண்டும் என்ற நிலையில் யாரும் இல்லாத நிலையிலும், ஏதோ ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உண்மையான அன்புக்கு அங்கு முக்கியத்துவம் இல்லாமல் போகும் நிலைக்குத் நம்மையறியாமலேயே தள்ளப்படுகிறோம் என்பதும்  மறுக்கமுடியாது.

பரிசுப்பொருட்கள் இன்று தனியார் அலுவலகங்களில் எழுதப்படாத சட்டமாகவே ஆகிவருகின்றது. அப்படி வழங்காதவர்களிடம், என்ன இந்தமுறை, புத்தாண்டிற்கு ஒன்னும் கவனிப்பு இல்லையே என கேட்கவும் செய்கின்றனர். இது மனதிற்கு வருத்தத்தையே அளிக்கிறது. பண்டிகை என்பதே இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு வழங்கி அவர்கள் முகத்தில் காணப்படும் புன்னகையை கண்டு மகிழ்வதே.  ஆனால் இன்றோ,  இருப்பவர்கள், இருப்பவர்களுக்கு கொடுத்து மகிழ்வதே மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு அலுவலக ஊழியர், தமது மேலாளருக்கு அவருக்கு ஏற்ற வகையில் வழங்குவது, வாடிக்கையாளருக்கு ஒரு நிறுவனம் பரிசுப்பொருள் வழங்குவது எல்லாம் அதுவும் மகிழ்ச்சிக்காக மட்டுமே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என கூறவியலாது.  எதையோ எதிர்பார்த்து கொடுப்பது, வாழ்த்துவது வாழ்த்தாகுமா..? நமது இந்தப்பயணம் சரிதானா..? சிந்திப்போமா..?  ஏதோ ஒரு எதிர்பார்ப்பிற்காக, சம்பிரதாயத்திற்காக பரிசுகள் வழங்குவதையும், ஏற்பதையும் தவிர்த்து வாழ்த்துக்களை மட்டும் பகிர்ந்துகொள்ள முன்வர முயற்சிக்கலாமே...!!

இதே நிலைதான் பிறந்தநாள் விழாவிலும்.  இன்று குழந்தைமுதலே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதுபோல் தோன்றுகிறது.. யார் என்ன பரிசு கொடுத்தார்கள், என்ற ஒப்பீடு, அதற்கேற்ற ஒருமரியாதை, அன்பு செலுத்துதல். (இது  அக்கம்பக்கத்தில் காணப்படும் உண்மை.)  குழந்தைகள் முதலே நல்லதை சொல்லிவளர்ப்போமே. நம்மால் இயன்றவரை பிறருக்கு உதவி செய்யலாம், பிறந்தநாள் அன்று, வசதியற்ற குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுத்து மகிழ்வதை கற்றுத்தருவோம். ( குழந்தைகளின் பிறந்தநாளை பரிசுப்பொருள் ஏற்காமல், மகிழ்ச்சி, வாழ்த்துப்பரிமாற்றத்திற்கு மட்டுமே  என்பது போன்று கொண்டாடலாம். குழந்தைகளும் வேற்றுமை நீங்கி, எதிர்பார்ப்பற்று இருக்க பழகுவார்கள். இது எமது தனிப்பட்ட கருத்து.)

இனியாவது வாழ்த்தையும், வியாபாரத்தையும் இணைத்து வாழ்த்துக்கள் சம்பிரதாயத்திற்கு என்று இல்லாமல் மனப்பூர்வமாக வாழ்த்த முயற்சிப்போமே...