முகப்பு...

Sunday 4 October 2020

பாராட்டு....


பாராட்டு
…!!  இந்த வார்த்தைதான் எத்தனை வசீகரமானது…!  பாராட்டு பெறுபவர் தன்னை சீர்தூக்கிப் பார்த்து நெடுதூரம் பயணிக்க உதவும்.   பாராட்டுபவர் தன்னை  

நோக்கி பல உள்ளங்களை கவர்ந்திழுக்கவும் செய்யும்.

அழகா இருக்கீங்க, சாப்பாடு சுவையா இருக்கு, உங்க ஆடைதேர்வு நேர்த்தியாக உள்ளது, நல்லா எழுதறீங்க, உங்க கையெழுத்து அழகா இருக்கு, எப்படி இப்படி கடினமா  உழைக்கிறீங்க, உங்க சேவை பாராட்டுக்குறியது, குரல்வளம் நல்லா இருக்கு, நல்லா பாடறீங்க, நகைச்சுவையா பேசறீங்க, சிறப்பான செயல், நல்ல முயற்சி... இப்படி எண்ணிலடங்கா சொல்லையும், செயலையும் நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும் கடந்து வருகின்றோம் என்பதில்  ஐயமில்லை.

ஆனால், இப்படி நாம் கடந்துவரும் இந்த எண்ணற்றவைகளில் எவ்வளவு நபரை பாராட்டியுள்ளோம் என்ற கேள்வியை  நமக்கு  நாமே கேட்டுப்பார்த்தால்; அதன் விடை பெரும்பாலும்  என்னவாக இருக்கும்..??!

நம்மையும் பலர் பாராட்டியிருப்பார்கள்,  நாமும் பலரைப் பாராட்டியிருப்போம், மறுப்பதற்கில்லை.  ஆனால் யாரை என்பதுதான் இங்கு நம்மால் உற்று கவனிக்கப்பட வேண்டிய விசயம்.  பொதுவாக (விதிவிலக்கு இருக்கலாம், இங்கே விதிவிலக்கை விதியாக கருத்தில் கொள்ள வேண்டாம் ) நம்மில் இருக்கும் பழக்கம் என்னவெனில், 

நெருங்கிய நட்புகள், நம்மைத் தொடர்பவர்கள், நம்மைப் பாராட்டுபவர்கள், அடுத்து பிரபலங்கள், மற்றும் பிரபலங்களைப் பின் தொடர்பவர்கள் இப்படியாக நமக்கென ஒரு வட்டம்  அமைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் பாராட்டி வருகிறோம் என்பதுதான் உண்மை.

இந்த வட்டத்தைத் தாண்டி யாருமே பாராட்டப் படக்கூடியவர்கள் இல்லையா...? அல்லது அப்படிப்பட்டவர்களை நாம் கடந்து வரவேயில்லையா..?

இருந்தும் ஏன் பாராட்டுவதில்லை…?  நாம் கடந்துவரும்போது நம் கண்ணில் படும் பாராட்டுக்குறிய செயல்கள் நம்மால் பாராட்டப்படும்போது, அவர்கள் அச்செயலை இன்னும் திறம்பட செய்யவும், அடுத்த கட்டத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லவும் உதவுகிறது என்பதை நாம் அறிவோம்.  சில நேரம் நம் வட்டத்தில் இருப்பவரில் ஒருவரை பாராட்டிவிட்டு இன்னொருவரை பாராட்ட நாம் கடந்துவரும் வழியில் கூட பாராட்டுக்குறியவர் இருக்கலாம்.  இருந்தும் அலட்சியமாக் கடந்துவிடுகிறோம்.  நம்மால் பாராட்டாமல் புறக்கணிக்கப்பட்ட செயல்கள், சில நேரங்களில் அடுத்த கட்டத்துக்கு நகராமல் கொலை செய்யப்பட்டிருக்கும் நம்மையறிந்தோ, அறியாமலோ.  செயல்களை பாராட்ட அறிந்தவர்களாகவோ, நட்பாகவோ அல்லது பிரபலமாகவோத்தான் இருக்க வேண்டுமென்பதில்லையே..! அவர்களின் செயலே அங்கு போதுமானதாகிறது அல்லவா..??! வாழ்த்தும், பாராட்டும் அட்சயப்பாத்திரம் போன்றது.  அள்ள அள்ள வந்துகொண்டிருக்கும்.  சூடிக்கொண்டவருக்கு மட்டுமின்றி அருகிலிருப்போருக்கும் தன் மணத்தை கொடுத்து மனமகிழ்வை ஏற்படுத்தும் மணம் வீசும் மலர்போன்றது பாராட்டு. 

வட்டம், சதுரம், செவ்வகம் இவற்றையெல்லாம் கடந்து நம்மை யாரென்றேத் தெரியாதவரிடத்தில் இருக்கும் பாராட்டப் படவேண்டிய செயல்களை பாராட்ட வேண்டிய  நேரத்தில் பாராட்டுபவர் பாராட்டப்பட  வேண்டியவர்.  நாமும் பாராட்டப்பட வேண்டியவர்களாய்  இருக்கலாமா...?!!

அன்புசூழ் உலகில் மனமகிழ்ச்சியை பரவச்செய்வோம்.