முகப்பு...

Friday 30 December 2011

”கொல்” அல்லது ”கொள்”

நீ
வெற்றியடைய
என்னுயிரையே தியாகிக்கத்
தயாராயிருக்க...

என் உணர்வையா
விடமாட்டேன்.....??

உனக்காய் உருகும்
என் இதயமுமே...!!

என் மனமெறியும் வெளிச்சத்தில்
உனக்கான வெற்றிப்பாதையமைப்பேன்...

உன் கை வலிக்கும் வரை
என்னைக் காயப்படுத்து

மனம் குளிரும் வரை..
என் மனதை ரணமாக்கு....

தேன் சுவைத்த நான்
திராவகத்தையும் ருசிக்கக்
காத்திருக்கிறேன்...

உள்ளத்தைப் பகிர்ந்த நீ...
உதட்டில் சிந்தும் அலட்சிப்
புன்னகையை அடைவதிலும் ஆனந்தமே.....

உள்ளத்தில் எரிமலையாய்க்
குமுறும் என்னை
அமைதிபடுத்துவதும்...
என்னுள் உள்ள நீயே....!!

மகிழ்வுடன் ஏற்கிறேன்..
எனைக்”கொல்”வதும், ”கொள்”வதும்
நீயென்பதால்......!!!


Thursday 29 December 2011

வண்ணக்கோலங்கள்.....!!!!



மார்கழி மாதமிது..
அதிகாலைப் பொழுது...

அரைகுறை தூக்கத்தில் விழித்து...
அம்சமாய் வாசல் கூட்டி,
சாணம் தெளித்து..


நான் வண்ணக்கோலமிடத் தொடங்க..
நிலவானவள்
தன் தூக்கம் தொலைந்ததையும் மறந்து.
வேடிக்கை பார்க்க...

புள்ளி வைத்த பூக்கோலம்,  சிக்குக்கோலம்..
புள்ளியில்லா ரங்கோலி,
படிக்கோலம்...

நடனமிடும் மயில் கோலம்...
கற்பனையில் முயலுக்கு வண்ணம் தீட்டி.,
வண்ண மயமான முயல் குட்டிகளை ஓடவிட...

சரஸ்வதி, கோமாதா, லட்சுமியும்..
கோலவடிவில் என் வீட்டில் குடியேற

தரையில் நீந்தும் மீன்கள்.,
பூமியில் பூத்த வண்ணத் தாமிரை, ரோசா   
கோல வடிவில் வட்டமிடும் வண்ணத்துப்பூச்சி.,

என என் வீட்டு வாசலில் கற்பனைகளை சிதறவிட...

திருஷ்டிக்காக...பசும்சாணம் எடுத்து
அதில் பரங்கிப்பூவை அமர்த்தி.,
விடிந்தது கூடத் தெரியாமல்..
வித விதமாய் அலங்கரிக்க..

விழாக்கோலமாய் காட்சியளிக்கும்.,
வண்ணக்கோலங்களைக் கண்ட
நிலவுமகள் வெட்கி மறைய..

இவ்வழகைக் கண்டு ரசிக்க
கதிரவனும் தன் கண் திறக்கிறான்...
நானும் கண் விழிக்கிறேன்..
ஓ! நான் கண்டது கனவா...??!!

ஆடம்பர வாழ்க்கையில்,
அடுக்குமாடிக் கட்டிடத்தில்
இரண்டுக்கு மூன்றடி வாசலிலே..
சாணம் தெளிப்பதெப்படி. வண்ணக்கோலமிடுவதெப்படி...
இரண்டு நிமிடத்தில் இருபது முறை
மாடியேறி, இறங்கும் அண்டை, அசலார்..
இங்கு..
இரண்டு மணி நேரம்.,
கோலமிடுவதும் சாத்தியமா..??

நான் கண்ட விழாக்கோலம்
கிட்டாமல் இறந்தகாலமாய்ப் போனதே..
எனதருமை மகளுக்கு....??















Wednesday 28 December 2011

காதல் முரண்பாடு.....

அந்திநேரம்...
மனமது.,
அகமுடையவனின் அங்கமெல்லாம்
முத்தமழைப் பொழிய...

அவன் கேசங்களில்
கொஞ்சி விளையாடும் என் விரல்கள்...

அவன் தலைசாய்த்து இளைப்பாற
என் மடிகொடுத்து...
பிரபஞ்சத்தையே பேசித் தீர்த்து...
அவன் மனமதை மகிழச்செய்து..
என்னவனின் முகத்தைப்
பார்வையால் விழுங்கி.,
அவன் மடிசாய்ந்து.,
நான் கனவில் மிதக்க..
நிலவானவள் பொறாமையில் எனை நோக்க..

நான் வெட்கி அவன் மடியில்
முகம் புதைக்க..
அவன் மெல்ல என் மேனி தழுவ..
தழுவும் அவன் கரங்களில்
துவளும் என் தேகம்...

இதழை, இதழால் சுவைக்கும்
வித்தையறிந்து  என் இதழ் சுவைக்க...

காதல் இரசம் ஒழுகும்.,
அவன் விழி நோக்கும் என் விழி
உறங்குகிறதா..?
உல்லாசத்தில் உழலுகிறதா..?

எனை மயக்கும் வித்தையறிந்து..
என் மேனிசாய்க்க.,
மண்ணும் மலராய்த் தோன்றுகிறது..

எனை முத்தமழையில் நனைக்க..
நிலவை நோக்கியபடி நான்....

அவனுக்காய் நிலவும் மறைகிறாள்..
மனம் முழுதும் வியாபித்திருக்கும் அவன்..
உடலையும் ஆக்கிரமிக்க...

அங்கமெல்லாம் பரவி...
தேகம் இறுக்கி..
என் இடை நொறுங்கும் சத்தம்
இனிமையான இசையாய்...
அவன் மூச்சுக்காற்றின்.,
உஷ்ணம் தணிக்க நிலவின் குளுமை...!!


அனைத்தும்..
ஊமை கண்ட கனவாய்..

மனதில் அக்னியாய் எரியும் காதலை.,
தண்ணீர் ஊற்றி தணிக்க நினைப்பது எது...??

தண்ணீராய்..........

வெட்கம்.....?? சமூகம்.....??
கலாச்சாரம்.....?? சூழல்.....??
அவன்......??

அக்னியை தண்ணீர் அணைக்குமா.....??
தண்ணீரையும் பற்றி முன்னேறுமா அக்னி....??!!

விடையறியாமல்...
விடையறிய...
விடைகளுக்காய்..
விடையைத் தேடி நானும்....!!!??



















Saturday 24 December 2011

பிரியமானவனே....




பிரியமானவனே..
மனம் படித்தவளின்.
,
மனம் படிக்கத் தவறியதேனோ...??

ஒற்றைச் சொல்லில் உலகம் அளந்தவளை
மௌனத்தால் மரணிக்கச் செய்தாயே...!!

ஆன்ம சினேகம் கொண்ட நம்முள்
அறிமுகம் ஏதும் தேவைதானோ...!!??

நம்பிக்கையின் நட்சத்திரம்,
பேரன்பின் சூட்சுமம்.
உன் மனதின் பிம்பமாய்
உனக்கு விளங்கிய நான்.,
செருக்கடைந்து...

உனைப் படித்த மகிழ்வில்...
உன்வயப்பட்டு என்வயம் இழந்த.,
என் மனதைப் படிக்கும் மொழியறியாயோ நீ...??
எரிமலையாய்க் குமுறும்
என் மனமும் குளிர்வதெப்போது...?

நம்பிக்கைக்குரியவன்.,
நம்பிக்கையானவளிடம்..
நம்பிக்கையற்று..
நடக்கும் அதிசயம் அரங்கேற...
அங்கென் இதயமும் வெடித்துச்சிதற..     

விளங்காத புதிராய் நீ...!!
விடையறியாமல் நான்....??

மனம் படித்தவளும் மனம் குழம்பும்..
அதிசயம்..
உனையறிய முடியா அந்த சில நிமிடங்கள்....!!!
               







Thursday 22 December 2011

பெண்.....!!!




சவத்தை மணந்து,
சுயத்தை இழந்து,
சிவத்தை அடைய நினைக்கும்
என்
சித்தத்தை என்ன செய்வது?

நித்தமும்
நான் சவமாகி சிவனை
அடைந்தேனோ என குதூகலிக்க...

விழித்துப்பார்த்த என்னை,
விளையாட்டுப் பொருளாய் நினைத்து.,

இல்லையில்லை...
உன்னைத் தீண்டியது
அரவமில்லை.,
அடியேன்தான்...
என வேடிக்கையாய் சொன்னான் கணவன்!!!

******************************************************
பெண்ணே
உன் மனக்காயங்களை,
மறக்க, மறைக்க..

நீ
உன் உடலில்.,
காயங்களை ஏற்படுதிக்கொண்டாய்!

உன் உடற்காயங்களை
தாங்கும் வலிமை உன்
மனதிற்கு இருக்கலாம்....,

ஆனால்,
உன் மனக்காயங்களுக்கு
இணையாக காயங்களை
ஏற்படுத்த.,
உன் உடலில் இடமுள்ளதா??
*****************************************************

ஓடி, ஓடி களைத்துப்போன
நான்,
உட்கார்ந்து ஓய்வெடுக்க.,
ஒரு இடம் தேடுகிறேன்..

ஓ சிவனே!
நிரந்தரமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை..

ஒரு நாளாவது
என்னை சவமாக்கி,
உன் இடத்தில்
ஓய்வெடுக்க இடம் கொடுப்பாயா??
            --
முதிர் கன்னி.





Tuesday 20 December 2011

இரு துருவம்.......!!!

சேர முடியா இரு துருவம்
சேர நினைக்குது,
கற்பனையில் மிதக்குது..

கானல் நீரருந்த நினைக்கும் மனம்.,
இறந்தவனை மறக்க முடியாமல்.,
ஏங்கும்
மங்கையின் உள்ளம்..

தாகத்திற்குதவாத சமுத்திரமாய்...
காதலித்தவனின் நினைவுடன்
அவள்.....!!

இணைய முடியா இரு துருவத்தை
இணைக்க.,
இங்கேயும், அங்கேயுமாய்
அல்லாடுகிறது காதல்...

இறந்தவனுடன் இணைவதும்
சாத்தியமா...??!!

அறிந்தும் கனவுலகில் வாழ்ந்து.,
அவன் காலடித் தடம் தொடர்ந்து.,
அவனையடைந்தவளை....

இழந்த சோகத்தில்
பூமித்தாய் வடித்த கண்ணீர் சுனாமியாய்..

மரங்களும் தன் பசுமையிழந்து.,
சொல்லொனா சோகத்தை சொல்கிறது.

அவள் காதலையெண்ணி
அழுதுசிவந்த வானம்...
வெண்முகில் வேடிக்கைப் பார்க்க.,
இடியோ..முழக்கமிட்டு
அவளை வரவேற்கிறது...

அவனோ.,
இறந்தும் சுமக்கிறான் அவளை....!!!






குருவிக்கூடு........

என் உள்ளம் கவர்ந்தவனை.,
மனம் சிட்டுக்குருவியாய் சிறகடித்து
அவன் கூட்டில் தஞ்சமடைய....

அவனை சிட்டுக்கள் பல வட்டமிட..,

தஞ்சமடைந்தது கூட்டிலா..??
பறவைகள் வந்து செல்லும் வேடந்தாங்களிலா...?

கூட்டில் இருப்பதா..

இல்லை பறப்பதா...??!!!
சிட்டுக்குருவி சித்தம் தடுமாற.....,
வேடந்தாங்கலில் தஞ்சமடைய.,
வந்து செல்லும்
பறவையில்லையே நான்...??

ஒரு மரத்தில் வீடமைத்த
குருவிக்கு..
வேடந்தாங்கலில் வீடமைப்பதும் சாத்தியமா..?

தஞ்சமடைந்தது குருவிக்கூட்டிலா...?
தேன்கூட்டிலா...??

குருவியின் குரல் கேட்ட எனக்கு..
தேனீக்களின் ரீங்காரம்...

என் கூட்டில் தஞ்சமடைய
எவரிடம் கேட்க அனுமதி...?

கூட்டிடமா...?
வந்து செல்லும் பறவைகளிடமா..??




Monday 19 December 2011

மரணம்....


திங்களைக் கண்டுறங்கி ..
ஞாயிறைக் காணா உறக்கம் மரணம்..

மீளா உறக்கம் அது மரணம்...

நிரந்தரமில்லா வாழ்க்கைப் பயணத்தில்
நிரந்தரமானது மரணம்..

ஒருவனை மனிதனாக்க.,
ஒருவன் மரணமடைந்து தெய்வமாகிறான்..

அடுத்தவன் மரணத்தைக் கண்டவன்.,
அந்த நேரம் பயந்து..
அடுத்தநாளே ஆட்டமிடுகிறான்..

இடுகாட்டில் வரும் ஞானம்.,
நிலைப்பதில்லையே நம்மிடம்..??

நெருங்கிய உள்ளத்தை.,
நினைவு கோர வைக்கும் மரணம்.

உறவின் ஆழத்தை உணர்த்துவது மரணம்..

நல்லவனுக்கு.,
கூடும் கூட்டமாம் மரணத்தில்..
கெட்டவனுக்கு.,
எட்டுக்கால் கிட்டுவதே அரிது..

உடன் வாரா சொந்தம்..
அந்த உண்மைப் புரியும் மரணத்தில்..

எடுத்துச் செல்ல முடியா
பொருளுக்காய்..
உறவுக்கும் எதிரியாகும் உள்ளம்..

வெறுப்பவரையும் விரும்பவைக்கும்.

மனசாட்சி பேசும் நேரமது.,
மரணப்படுக்கை..

அறுசுவை சுவைத்தவன்...
அரை பிடி அரிசி மட்டும்.,
கடைசி உணவாய்.,
சுவைக்கப்படாமலேயே.

பணம் காசு அறியா இடுகாடு.
பிடி சாம்பலே பரிசாய்...
ஆறடி நிலமே சொந்தம்..
அடுத்த பிணம் வரும் வரை..

வேற்றுமை காணா உலகமாம் இடுகாடு...
வெளியே வந்தவுடன் மறப்பதேனோ..??

விதவிதமாய் உடுத்தியவன்..
வெள்ளைத் துணியோடு...

இருக்கும்போது உணவுக்கு ஏங்கியவனும்.,
இறந்தபின் பல்லக்கில் ஊர்வலம்..

பஞ்சு மெத்தையில் படுத்துறங்கினாலும்,
மீளா உறக்கம் மண்ணில் தானே...??
விரும்புவோரின் மரணத்தையும்.,
வேண்டி நிற்கும் உள்ளம்..

அவன் படுக்கையில் கிடக்கையில்...

ஒரு துளி பாலும் விசமாகும்..
காலனுக்காய் காத்திருக்கையில்..

வீரனையும் கோழையாக்கும்,
கோழையையும் வீரனாக்கும்..

இறந்தபின்னும் உணவளிப்பான்.
அவன்
இடுகாட்டு வெட்டியானுக்கு...

புறச்சூழல் மறந்து.,
கதறி அழவைக்கும் மரணம்..
அழுவதனாலே ஆவதென்ன...??
அறியாதவரா நாம்..?

புறத்தை விடுத்து உள்ளம்.,
அகத்தை அறியத் தூண்டும் மரணம்..
புத்தனது போதிமரமாய்
மனிதனுக்கு இடுகாடு...

நிரந்தரமில்லா இப்பூவுலகில்
நிரந்தரமான மரணத்தை வெறுப்பதேனோ...???



வரமா..?? சாபமா...?



ஓ விஞ்ஞானமே..!

அன்று,
ஓடித்திரிந்து ஆடிய நாங்கள்..

இன்று,
உட்கார்ந்த இடத்தில்
உலகத்தைக் கண்டு களிக்கும்
சோம்பேறிகளாய்.....

அன்று,
இயற்கையால் முதுமையிலும்.,
இளமையாய்..

இன்று,
செயற்கையால் இளைமையிலும்
முதுமையாய்...

அன்று,
நலம் அறிய
நாட்கள் பல காத்திருக்க..
இன்று..
நொடியில் நாடறிய வைத்தாய்...

அன்று,
ஒற்றை வார்த்தைக்கு
கால்கடுக்க காத்திருக்க..
இன்று,
முகம் பார்த்து நலம் அறிய வைத்தாய்...

இன்று,
அருகில் இருப்போரையும்
அந்நியர்களாய்
பார்க்க வைத்து.,

தூரத்தில் இருப்போரையும்.,
அருகில் கொணர்ந்தாய்.

அன்னையின் ஆசீர்வாதத்தையும்.,
அலைபேசியில் வாங்கவைத்தாய்..

உடன்பிறப்பின் திருமணத்தை
கானொளியில் காணவைத்தாய்..

ஒற்றை விசையில்
ஊருக்கே வாழ்த்து கூற வைத்தாய்..

ஆடம்பரத்திற்கு
அடிமையான நாங்கள்
அயல்நாட்டிற்கும் அடிமைகளாய்..!!??

அன்னைக்கு அண்டை வீட்டாரை
கொல்லி வைக்க வைத்தாய்...

மனிதனை,
தன் வசப்படுத்துவது
எப்படி என்றறிந்து.,

உன் அடிமையாக்கி,
ஆட்டுவிக்கும்...
திறன்படைத்த,

அறிவியல் தொழில் நுட்பமே!!
நீ
எங்களுக்கு வரமா...?? சாபமா....??
 

தலை தீபாவளி(லி) ……

அது கீர்த்தனாவிற்கு தலை தீபாவளி...எல்லாரையும் போல் அவளும் தன் தலை தீபாவளி பற்றிய கனவுகளுடன் காத்திருந்தவளுக்கு முதல் குழந்தை இறந்த இருபது நாளில் தீபாவளி வர... அப்படி ஒரு பாக்கியம் இல்லாமலே போனது.....
தீபாவளிக்கு நான்கு நாள் முன்பு கீர்த்தனாவின் தாய் வீட்டிற்கு வந்த மாமியார்எப்படியோ கொண்டாட வேண்டிய உன் தலை தீபாவளி இந்த முறை உன் குழந்தை இறந்துவிட்டதால் நமக்கு தீபாவளி கிடையாது.. நீ வீட்டுக்கு வர வேண்டாம் உன் கணவரையும் வர வேண்டாம் என சொல்லி விட்டோம்இந்தா இதை வைத்துக்கொள் என பணியாளுக்குக் கொடுப்பதுபோல் இருநூறு ரூபாயைக் கையில் கொடுத்துவிட்டு   சென்று விட்டாள்.. கீர்த்தனாவிற்கு துக்கம் தொண்டையடைக்க வழக்கம்போல் அமைதி..கணவர் கனேஷ் ஒரு இடத்தில்,  இவள் ஒரு இடத்தில்.  முதல் குழந்தை பிறந்தவுடன் இறந்த துக்கம், மாமியார் ஒரு ஆறுதலுக்குக் கூட சின்னக் குழந்தை தானே அதுக்காக இப்படி பண்டிகை நேரத்தில் துக்கம் காக்க கூடாது என தன்னை சமாதானப் படுத்தாமல்மாறாக அவர்கள் முந்திக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம் என கூறியது எல்லாம் சேர்ந்து மனத்தை அழுத்த எங்கே தான் அழுதால் அம்மா திரும்பவும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து விடுவார்களே என உள்ளுக்குள்ளேயே அழுகிறாள்..

மறுநாள் கார்த்தி தன் கணவரின் மூத்த சகோதரன் வந்து..கீர்த்தனாவிடம் துக்கம் விசாரிக்க..சிறிது நேரம் பேசிவிட்டு, நாளை மறுநாள் தீபாவளி உன் கணவரும் இங்கு இல்லை..நீ ஏன் அம்மா வீட்டில் இருக்க வேண்டும்? வா வீட்டுக்குப் போகலாம்அங்கு அனைவரும் வந்து இருக்கிறார்கள் என அழைக்க, மாமியாரோ வரவேண்டாம் என கூறிச் சென்றாள்மைத்துனரோ வா என அழைக்க, சுயமாக சிந்திக்க இயலாத நிலையில் கீர்த்தனா..

அம்மா அருகில் வந்து, எப்படியும் ஒரு முறை குழந்தை பிறந்தவுடன் மாமியார் வீட்டுக்குப் போகனும்..எனக்கும் குழந்தை இல்லாமல் உன்னை தனியாக கொண்டு விட சங்கடமா இருக்கு..அவர் கூப்பிடும்பொழுதே  நீயும் செல்என அறிவுறுத்த...வேறு வழியில்லாமல், சுயம் இழந்து மைத்துனருடன் மாமியார் வீடு சென்றாள்.

கீர்த்தனாவா...? தீபாவளி கிடையாதேனுதான்  உன்ன கூப்பிடலை..மாமியார் முகத்தில் இவள் எப்படி இங்கே என கேள்விகுறி..

கார்த்தி,  “நான் தான் அங்க போனேன் எதற்கு அவள் தனியா அங்க இருக்கனும் என  இங்க அழைத்துக்கொண்டு வந்து விட்டேன்என கூற, பதில் கூற முடியாமல் மாமியார் தேவகி.

மறுநாள் அனைவருக்கும் மகிழ்வுடன் தொடங்கிய தீபாவளி அவளுக்கு மட்டும் சோகமாய்...மைத்துனர் கார்த்தி,  அவர் மனைவி ஜானகி,  குழந்தை, கொழுந்தன் ரவி..என அனைவரும் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிக்க..நீ என்னை தேய்த்து குளிக்க வேண்டாம் என தேவகி கூறினாள்.

வழக்கம்போல்  எந்த குறையும் இல்லாமல் தீபாவளியை சிறப்பாகத் தானே கொண்டாடுகிறார்கள்.. !!??

பிறகு என்னை மட்டும் ஏன் வர வேண்டாம் என்றார்கள்..? புரியாத புதிராக மனதில் அவ்வப்பொழுது எழும் வினா....??

சரி கூப்பிடவில்லை இருந்தும் மருமகள் தலை தீபாவளி வீட்டுக்கு வந்து இருக்கிறாள் அதுவும் கணவர் வேறு அருகில் இல்லை.  குழந்தையும் இல்லாமல் தனியாக. அவள் துக்கப் பட்டாலும் ஆறுதல் படுத்தி உற்சாகப் படுத்த வேண்டியவர்கள்,  எதற்காக உற்சாகமாக இருந்தும் இல்லை என வெளியில் பேசுகிறார்கள்...?  புரியவில்லை..அந்த நேரத்தில் யார் வந்தாலும் ஒரு புடவை வாங்கித் தரும் தமிழர் பண்பு இங்கே எப்படி இல்லாமல் போனது..மனம் ஏங்குவது அவர்கள் கொடுக்கும் ஒரு புடவைக்காக அல்ல..அவர்கள் அளிக்கும் அங்கீகாரத்திற்காக.  மருமகளை மகளாக வேண்டாம்..ஒரு உயிரும் உணர்வும் உள்ள பெண்ணாகவாவது பார்த்து இருக்கலாமே..இப்படி பல கேள்விகள் தோன்றினாலும்  கேட்பது யாரிடம்?

மதிய உணவின்போது அனைவரும் உற்சாகமாக இனிப்புடன் உணவருந்த..இவளுக்கோ விஷமாக இருக்கிறது ஒரு ஒரு பருக்கையும்..உண்ணவும் முடியவில்லை,  மறுக்கவும் முடியவில்லை. மறுத்தால் தவறாக எண்ணுவார்களோ என்ற அச்சம்...அந்த நேரம் பார்த்து மும்பையிலிருந்து கணவர் கனேஷ்   தொலை பேசியில் அழைக்க..நான் மட்டும் தன்னந்தனியாக இங்கு இருக்கிறேன் என அவர் குரல் தழுதழுக்க...நெஞ்சை யாரோ அழுத்துவதுபோல் கீர்த்தனா உணர,  அதற்குமேல் சாப்பிடுவதுபோல் நடிக்கக் கூட முடியாமல் பொங்கிவரும் கண்ணீரை மறைக்க கை அலம்புவது போல் சென்றுவிட்டாள்.  இந்த நிகழ்வு எதுவும், யாரையும் பாதிக்காததுபோல் அவரவர் கவனம் விருந்து சாப்பிடுவதிலும், தங்கள் உடைபற்றிய பேச்சிலும் இருந்தது.  மனிதர்களில்லா தேசத்தில் தனித்து விடப்பட்டவளாய் உணர்ந்தாள் கீர்த்தனா.  எத்தனை மகிழ்ச்சியான பண்டிகைகள் வந்தாலும் மனிதர்களின் மனதை புரிந்துகொள்ள உதவியாகவும், மறக்க முடியாத அனுபவமாகவும் அமைந்து, நெஞ்சைப் பிசைந்த அந்தத் தலைதீபாவளி, கீர்த்தனாவின் மனதில் இன்றும் "வலி" யாகவே...







Thursday 15 December 2011

மனித நேயம்.....

பெட்டிப் பெட்டியாய் வீடு,
அதுக்கு அடுக்குமாடின்னு பேரு..

அக்கம்பக்கம் யாரிருக்கா
அறியமாட்டோம்..

அன்புடன் ஆறுதலாய்
பேசமாட்டோம்..

அவசரத்திற்கு அழைத்தாலும்
செல்லமாட்டோம்..

அன்றாட வேலைகளை
இயந்திரத்திடம் விட்டுவிட்டு...
இயந்திரமாய் நாங்கள்....

மரங்களை வெட்டி.,
வீடுகளமைப்போம்..
நாங்கள்...
காற்று வாங்கவென கடற்கரை நோக்கி
படையெடுப்போம்...

இயற்கையை அழித்து.,
செயற்கையில்.,
இயற்கை தேடும் சிந்தனைவாதிகள்..
நாங்கள்தான் நாகரீக மனிதர்கள்...?!!

அம்மாவின் அறுசுவை உணவின்
அருமையறிய மாட்டோம்,
துரித உணவை சுவைத்து.,
மகிழ்ச்சியடையும் மனது...

மனசாட்சியை மதிக்காமல்
தாயின் பாசமும், தந்தையின் தியாகமும் மறந்து,
முதியோர் இல்லம் அனுப்பும் நாகரீக மோகம் ...

மனிதா நீயும் விழித்துக்கொள்...
மனித நேயம் வேண்டுமென ஒத்துக்கொள்...
மனித நேயம் இல்லா மனம்.,
இருந்தென்ன...? இறந்தென்ன...
?