Saturday, 27 August 2011

திருமணம்.....


இருமனம் இணையுமாம்..
திருமணத்தில் கூறுகிறார்கள்.

திருமண பந்தத்தில்...
ஆண்
தன் மனதில் இருப்பதை வெளிப்படையாகக்
கூறினால்  அது "விருப்பம்"
அதுவே,
பெண் கூறினால் "வாயாடி"

ஆண்
தன் உடையலங்காரம் மாற்றிக்கொண்டால்
"நாகரீகம்"
பெண் மாற்றிக்கொண்டால்
"அடக்கமின்மை"

ஆண்

தன் புகுந்த வீட்டில் ஒட்டாமல் விலகி இருந்தால்
"கூச்ச சுபாவம்"
பெண் விலகி இருந்தால்
"குடும்பத்தில் ஒட்டாதவள்" 

தம்பதிக்கு குழந்தை இல்லை என்றால்
பெண்ணுக்கு கிடைக்கும் பட்டம் "மலடி"

இருமனம் பிரிந்து தனி மனமானால்
பெண்ணுக்கு கிடைப்பது "வாழாவெட்டி"
என்ற பெயர்.

ஆணுக்கு முன்னால்
பெண் இறந்து விட்டால்
பெண்ணுக்கு கிடைக்கும் பரிசு "சுமங்கலி"

பெண்ணுக்கு முன்னால்

ஆண் இறந்து விட்டால்
அங்கேயும்
பெண்ணுக்குத்தான் பரிசு..."கைம்பெண்"

ஆரண்யத்தில் ராமனும்தானே தனித்திருந்தான்?
சீதை அசோகவனத்தில் இருக்கும்போது...
”அக்னிபரீட்சை” என்னவோ  சீதைக்கு மட்டும்.

சூதாடியதென்னவோ தருமர்தான்,

”அவமானமும் தண்டனையும்” திரௌபதிக்கு.

இப்படி இருமனம் இணையும்,
திருமண வாழ்வில்,
அனைத்து
"பரிசை"யும் பெண்ணுக்கே வழங்கி 

மகிழ்வித்துப் பார்க்கும்
விந்தையானது நம் சமூகம் !!!!!!!!

   

Wednesday, 17 August 2011

மகனுக்கு இரங்கல்.....மகனே,
கருவில் பத்து மாதம்
இருக்க வேண்டிய நீ,
எட்டு மாதத்தில் எட்டிப்பார்த்தது....
எமனிடம் செல்வதற்குதானா ??


உன் இறப்பைக்கூட அறியாமல்,
இறுமாப்புடன் இருந்த என்னை...
பெற்றெடுத்த உனக்குப்
பால் புகட்ட முடியாத பாவியாக்கிச் சென்றாயே!

குதூகலமாய் உன்னுடன்
தாய்வீடு செல்லவேண்டிய என்னைத் ,
தனியாக செல்லவிட்டாயே!!

என் தவிப்பரியாதவர்கள்,
உன்னைப்பற்றி துக்கம் விசாரிக்க,
விவரமறியாத...
என்னை விழி பிதுங்க வைத்தாயே!உன் பிறந்ததினத்தைக் கொண்டாட வேண்டியவளிடம்
உன் பிணத்தையல்லவா கொடுத்து
உன் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கச் சொன்னார்கள்..

உன் சவத்தைக் கண்டு,
கண்ணீர் விடக்கூடத் தோன்றாமல்
சித்தம் கலங்கி சிலையாய்  நின்றேனே!!நீ
விளையாடி மகிழவேண்டிய,
உன் பாட்டன் வீட்டிலேயே,
உன்னை மண்போட்டு புதைத்தார்களே!

சடங்கு முடித்து,
சந்தோசத்தை இழந்து...
செய்வதறியாது சித்தம்
கலங்க வைத்தாயே!!!

யார் அழுதாலும்,
நீ
அழுவதாய் உணர்ந்து
பாலூட்ட நினைத்து, வீங்கிய மார்பில்..
வீணாகிப் போகும் பாலை
வீசி எரிந்து பாவம் செய்து,

விடியும் வரை விழித்திருந்து...
விழி சிந்திய கண்ணீரை யாரறிவார்?


பிள்ளையில்லாத் தொட்டிலை ஆட்டி
பாழும் அறைக் காத்தப் பாவியானேன்!!

கணவனிடம் கனிவை எதிர்பார்த்துச்
சென்ற என்னைக் கடிந்து,
பிள்ளையின் இறப்புக்குப் பெற்றவளே
காரணம் என்றவனிடம்.,


சொல்வதறியாது..
துக்கங்களை விழுங்கி,
உள்ளத்தை உரமாக்கி,
முகத்தில்  புன்னகைப் பூட்டி...
இன்று வரை நடித்து வருகிறேன்.,
அரிதாரம் பூசாமல்.,

நீ 
காணாத உன் உடன்பிறப்பிற்காக...
வண்ணமயில்...


ஓவியனுக்கே,
ஓவியம்
கற்றுக்கொடுத்த
வண்ணமயிலே!!!

உன்னைக்கண்டுதான் 
ஓவியனே
வண்ணம் கலப்பதைக்
கற்றானோ?

அந்தப் பிரம்மனே 
போற்றும்
பேரழகு உனக்கு!

நீ 
நடனமிடும் 
அழகைக்கான,
அந்த நடராசனும்
நாட்டம் கொள்வானே!

உன்  அழகுக்கு முன்னால் 
அந்த 
ரதியும் தோற்றுப்போவாளே!  

உன் மயக்கும் 
அழகினால்,
உன் குரலைக் கூட 
மறக்க வைத்து 
எங்களை மயக்கி விட்டாயே!

அந்த 
மாயக்கண்ணன் முடிமேல்,
ஒய்யாரமாய் 
அமர்ந்து
காட்சி கொடுக்கும்.,
நீயும்,
மாயாவிதான்...