முகப்பு...

Thursday 28 November 2013

சிதறல்கள்...

நிர்வாகத்தின்

வளர்ச்சியிலும்,
வீழ்ச்சியிலும்
தன் பங்கை திறம்பட
வகிக்கிறது
”தகவல் பரிமாற்றம்...”
----
உணர்த்தாமல் 
உணரவேண்டியதை
உணர்த்தி 
உணரவைப்பதைவிட
உணர்த்தாதிருப்பதும்,
உணராதிருப்பதும் மேல்....!
---
சந்தேக விதைகளை 

மனதுள் விதைத்து 
நம்பிக்கை கனிகளை 
அறுவடை செய்ய முயற்சிக்கிறோம் 
பலநேரம்..!
----
இரு(று)க்கும் 

நினைவுகளை 
இறக்(கி)க வைக்க முயற்சிக்கிறேன்..
இறக்க விரும்பாமல் பறக்கிறது
உனை நோக்கியே...!
----

Wednesday 27 November 2013

கண்ணீர்...


கண்ணீர் கரிக்குமென 
கதை சொன்னது யார்..?
நீயறிந்த 
என் கண்ணீரின்
சுவையினை உனையன்றி யாரறிவார்..??
நித்தமும்
என் கண்ணீரை
சுவைத்திட
நீயெடுக்கும் முயற்சிகளை
எனையன்றி யாரறிவார்..?
முயற்சிகள் பலசெய்தே
நீ கொணர்ந்த
என் கண்ணீருக்கு
சுவை அதிகம்தான்..!!

இரங்கல் பா...!!!

மரணத்திலும் நின்மடி
தழுவிச்செல்ல ஆசை...
நீயோ..
என் மரணச்செய்தியை
யாரோ சொல்லக்கேட்டு
எனக்காக எங்கோ நடக்கும்
இரங்கல் கூட்ட
மௌன அஞ்சலியில்
எனை நினைவுகூர்ந்து...
எனக்காக
”யாருமறியாமல்” மனதினுள்
நீயெழுதும் இரங்கல்பாவை
நானே மொழிபெயர்த்துக்கொள்ள
விருப்பம்தெரிவிக்கிறாய்
மௌனமாய்...!!
நீ
எனக்காக எழுதுவது
”இரங்கல்”பா வானாலும்
”காதல்” பா வானாலும் ..
நீ
செலவிடும் அந்த ஒரு நிமிடமும்..
சிந்தும் ஒற்றைத்துளி
கண்ணீரும் கூட போதுமானது
என் ஆன்மா அமைதிகொள்ள...!!




Tuesday 26 November 2013

நொடியில் ஏற்படும் மாற்றம்...

நொடியில் ஏற்படும் இரக்க உணர்வு 
கடந்துவந்த வெறுப்பை மறக்கச்செய்கிறது...!
நொடியில் ஏற்படும் அன்பு
கோபத்தை மறக்கச்செய்கிறது...!
நொடியில் ஏற்படும் நட்புணர்வு
பகைமையை மறக்கச்செய்கிறது...!
நொடியில் ஏற்படும் மரியாதை
அலட்சியத்தை மறக்கச்செய்கிறது..!!
நொடியில் ஏற்படும் மரணம்
அஞ்ஞானத்தை மறக்கச்செய்கிறது..!!
நொடியில் ஏற்படும் ஞானம்
பொறாமையை மறக்கச் செய்கிறது...!!
நொடியில் ஏற்படும் மாற்றங்களின்
நொடியையறியும் 

நொடியின் நொடியெதுவோ..??!!

பக்குவம்...

தம் மனம் 
பக்குவப்பட்ட மனமென
உணரும்போதே..
மனம் 
பக்குவப்படவில்லை என்பது 
உணர்த்தாமல் 
உணர்த்தப்படுகிறது...  
பக்குவமடைந்ததை 
பக்குவமடைந்ததாக 
நினைக்காமலிருப்பதே 
பக்குவமென அறியாமலிருப்பதும்
பக்குவமற்ற மனமென 
அறிவதற்கும் பக்குவம் 

தேவைப்படுமோ..??

Monday 25 November 2013

புன்னகை...!!


ஒற்றைப்புன்னகையில்தான் 
எத்தனையெத்தனை
அர்த்தங்கள்..!!

காதலை
உணர்த்தாமல் உணர்த்தி
நெகிழச்செய்யும் புன்னகை..!

கவலைகளை 
மறக்கச்செய்யும்
கள்ளங்கபடமற்ற மழலையின் 
குறும்புப் புன்னகை..!

கண்களை செருகச்செய்யும்
காமத்தின் தூதாய்
புன்னகை..!

உடன்பாடில்லா ஒப்பந்தம்
நிறைவேறும்போது 
மௌனப்புன்னகை..!

கொந்தளிக்கும் மனம்
கொட்டத்துடிக்கும் 
கோப வார்த்தைகளுக்கு
தடைபோடும்
அமைதிப் புன்னகை..!!

ஊடலின் உச்சத்தை
எச்சமின்றி செய்யும்
புன்னகை..!

சண்டைக்கு 
சமாதிகட்டும் சமாதானப் 
புன்னகை..!

செலுத்தப்படும் அன்பை
புறக்கணிக்கும் 
அலட்சியப்புன்னகை..!

பிறரின் வார்த்தைகளை
ஏற்கமறுக்கும்
கேலிப்புன்னகை..!

சம்மதத்தைத் தெரிவிக்கும்
அமைதிப்புன்னகை..!

புன்னகைக்க
மற(று)க்கும் மனத்தோரே
புன்னகையின் 
வலிமை அறிந்து
பொன்னகையாய்ப்
புன்னகைபூண்டிடுவோமே..!!

அர்த்தங்கள் பொதிந்த
புன்னகையின் 
மதிப்பை அறிந்து
புன்னகைக்குப்
புன்னகையை
புன்னகையால்
வழங்கிடுவோம்..!






குழந்தைகள்...:)

உலகத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் தன் 

கண்களிடத்தே தேக்கிவைத்து, தம் குறுஞ்சிரிப்பால் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி சொர்க்கம் இதுவென உணர்த்தும் வல்லமை குழந்தைகளிடத்தே இருக்கிறது. 


விளையாடுவதற்கு ஆடம்பர பொருட்கள் வேண்டும், அமர்ந்திருக்க விலை உயர்வான சோஃபா வேண்டும் அங்கேதான் உள்ளது மகிழ்ச்சியென தத்தம் மகிழ்ச்சிதனை வட்டத்திற்குள் சுறுக்கிக்கொள்ளாமல், கீழே கிடந்த பொம்மையினை, தூக்கியெறியப்பட்ட பூச்சரத்தை உதிர்த்து அலங்கரித்து விளையாடும்போது கூட… விலை கொடுத்து வாங்கமுடியா மகிழ்ச்சிதனை தன் பிஞ்சு முகத்தில் தேக்கிவைத்திருக்கும் குழந்தைகள், மனமிருந்தால் எந்த சூழலிலும் மகிழ்ச்சியினை அடையமுடியும் என எடுத்துரைக்கும் ஆசான்களாய் தோற்றமளிக்கின்றனர்....!!

Friday 22 November 2013

இலக்கை நோக்கி..! * 250ஆவது பதிவு...! -

அன்பு வலைப்பூ தோழமைகளுக்கும், ​அவ்வப்பொழுது எம் சந்தேகங்களை தீர்த்துவைத்து ஆசானாய் ​உடன் பயணித்து வரும் நட்புகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   சிறு, சிறு கோடுகளாய் நான் வரைந்த ஒவ்வொரு கிறுக்கலையும், ​ஓவியமென ரசித்து, எம்மைத் தொடர்ந்து உற்சாகப் படுத்திவரும் அன்புத் தோழமைகள் அனைவரும், எமது குறைகளை சுட்டிக்காட்டி எம் எழுத்துக்களை செம்மையாக்க உதவும்படி வேண்டுகிறேன். ​தங்களது தொடர்ந்த ஊக்கமும், வாழ்த்துகளும் வழங்கி எமது தூரிகைத்தோட்டத்தில் தொடர்ந்து மணம் வீசும் அனைத்து நட்பு மலர்களுக்கும் மனமார்ந்த நன்றி.._/\_ 
**********
எண்ணப் பேருந்தில் 
பயணிக்கும் அறிவு
சந்திக்கும் நிறுத்தங்கள்தான்
எத்தனையெத்தனை...??!!

ஆசை, பேராசை, கோபம்,
நகைச்சுவை, அழுகை,
காதல், காமம், உறவு, பாசம், 
நட்பு, பகை, நன்றி,  பழிவாங்கல், 
துரோகம், நம்பிக்கை, நம்பிக்கை துரோகம்..
வெறுப்பு,பொறாமை,அலட்சியம்,மரியாதை, 
ஆற்றாமை, சலிப்பு,பிரமிப்பு, 
அன்பு, கருணை, அர்ப்பணிப்பாகிய
நிறுத்தங்களையும் - கடந்து 
ஞானமெனும் இலக்கையடைவதற்குள்
அறியாமையில் இடைப்பட்ட நிறுத்ததில் 
இறங்குமறிவு....
ஞான நிறுத்தத்தை
சேரும் முயற்சி
நாளும் தொடர்கிறது..!

நீளும்
இப்பயணமும் முடிவதெப்போது
நானும்
இலக்கையடைவதெப்போது...?
அடையும் நாட்களுக்குள்
கடக்கும் நிறுத்தங்கள்தான்
மனம் கலங்காது காத்திடுமோ..?!!

Thursday 21 November 2013

மகிழச்செய்யும் மழலைகள்...


குழந்தைகள் எத்துனை பெரியவர்களானும் அவர்களின் சிறு சிறு உரையாடல் என்றும் மனதின் ஓரிடத்தில் நீங்கா இடம்பிடித்து மகிழ்வித்துக்கொண்டேயிருக்கின்றன. ...:) 

1. ஜன்னலோரப்பயணத்தில் தென்றல் தனைத் தழுவியபொழுது, காத்துல மூஞ்சி பறக்குது(மூஞ்சியில் காற்று அடிக்குது)  என்ற மகளின் சொல்லாடல்....:)

2. தீபாவளிக்கு பூஜை செய்யும்போது (இங்கு திராட்சை, வால்நட், பாதாம், முந்திரி இப்படி உலர்பழ வகைகள் வைத்து கும்பிடுவது வழக்கம் ) வால்நட் அதிகம் வை...சாமிக்கு அறிவு நல்லா வளரும் என்ற யதேச்சையான நகைச்சுவை..:)

3. கோவிலுக்கு செல்லும் தந்தையிடம்...நான் முருகனை விசாரித்ததா சொல்லு..என்னுடைய ஆசீர்வாதம் என்னிக்கும் முருகனுக்கு உண்டு.. :) 

இப்படி மனதில் பட்டதை யாரும் எதும் சொல்வார்களோ என்ன நினைப்பார்களோ என உள்ளொன்று வைத்து புறமொன்றுப் பேசாது யதார்த்தமாய் பேசி மகிழ்ச்சியில் ஆழ்த்தி அவர்களைப்பற்றி நினைக்கும்போதே உதட்டோரம் ஒரு புன்னகையை வரவழைக்கும் சிறப்பு மலருக்கும், மழலைக்குமே சாத்தியமாகிறது.  குழந்தைகள் என்றுமே ரசனைக்குரியவர்கள். குழந்தைகள் வளர்ந்தாலும், குழந்தை மனம் அப்படியே இருக்கட்டும்..:)

Tuesday 19 November 2013

வார்த்தை...

பேசிய வார்த்தைகளும்,
பேசத்தவறின நொடிகளும்
உடலைப்பிரிந்த உயிரென
திரும்ப வாராததுபோல்
நாம் பேச மற(றுத்)ந்த மனிதர்களும்
கிடைக்காமலே போகலாம் ..:) 

******
கோபத்தில் விதைக்கப்படும் 
வார்த்தை விதைகள் 
வெறுப்பை அறுவடை செய்ய...
மௌனத்தில் 
புதைக்கப்படும் வார்த்தைகள்  
மனதை ரணமாக்க..
மனத்தோட்டத்தில்
கோபத்திற்கும், மௌனத்திற்குமிடையேயான
வார்த்தைகளை
விதைத்து வாசம் வீசும்
மலர்களை பயிரிட
மறு(றந்)த்த நிலையில்
இருப்பது ஏனோ.....!??

Monday 18 November 2013

முற்றுபெறாத கவிதை...!!



உன்
தேகப்புத்தகத்தில்..
இதழைத் தூரிகையாக்கி
எண்ணங்களின் வண்ணத்தில்
எழுதுகிறேன்
காதல் கவிதை..!!

என்னவனே...!
மையலில்
உனையே மையமாக்கி
நானெழுதும் கவிதையின்
நாயகனும் நீயே..
வாசகனும் நீயே..
என் இரசிகனும் நீயே..

நான்
எழுதிக்கொண்டேயிருக்க
நீ
ரசித்துக்கொண்டேயிருக்க
யாதுமானவனே
உனைப்பற்றிய
கவிதை
முடிவுறாமலே
தொடர்கிறது என்மனதினிலே..!!!

Sunday 17 November 2013

இரவு நேரத்தில்...!!


மையிருட்டு வேளையிலே
மங்கையவளும்
பேருந்து நிறுத்தத்தில்
பெருந்தவிப்போடு
தன்னந்தளியவளாய் நின்றிருக்க..

அதிவேகமாய் பயணிக்கும் வாகனங்கள்....
காலதேவனை சபித்தே
நொடிக்கொருமுறை
நேரம் பார்த்தபடி அவள்...!!

அச்சமா, ஆற்றாமையா
இயலாமையா....
கோபமா, சலிப்பா
எதிர்பார்ப்பா, வெறுப்பா
எடுத்துக்கூறமுடியா
எண்ண அலைகள் முகத்தில் பாய...

இடமும், வலதுமாய் பார்த்தே
இடம்மாற்றி நிற்கிறாள்..

அவள் எண்ணம் விழைய முனைந்த
ஆடவனைத் தவிர்த்தே
அவ்விடம் நகர..
மூன்றுசக்கர வாகனமும் முன்னுக்குவரவே
தனித்துபயணிக்கும் தைரியமற்றே
மறுத்து மறுபக்கம் நோக்கவே..

”வர்ரீயா” என்ற வார்த்தைக்கு
வெகுண்டு வசைபாடியனுப்ப..

இவள் மனமறியா
அலைபேசியின் எதிர்முனையோ
தொடர்புகொள்ளமுடியா தூரத்தில்...!!

கடந்துசெல்வோரும்
இவள் தனிமைகண்டே
எவனுக்கு காத்திருக்கிறாளோ இந்நேரத்தில்..!
எத்தனை திமிரிவளுக்கு
வீட்ல கேட்க மாட்டாங்களோ..
கிராக்கி படியலையோ
இரவுராணி இவளுக்கு..!!

அவரவர் எண்ணத்தில்
ஆயிரமாயிரம்
எண்ணவிதைகள் விதைத்தே
விருட்சமாய் வளர்த்து
கல்லூரியில் கிடைக்கா பட்டமதனை
கால்கடுக்க நிற்கும் நேரத்தில்
தந்துசெல்ல..

இவள் தவிப்பையறிந்ததுபோல்
பேருந்து வந்திடவே
வெற்றியடைந்தவளாய்
இருக்கையில் அமர்ந்து
அலைபேசியில் அன்புக்குரியவனிடம்
கெஞ்சலாய் கொஞ்சி..
மாமா..குழந்தை தூங்கியாச்சா..?
பணி அதிகம் பேருந்தை தவறவிட்டேனென
தவிப்புடன் கூறிடவே..
எதிர்முனையின்
அன்பான சமாதானத்தில்
நிம்மதியடைந்து சாய்ந்தமர்ந்தவளை யெண்ணி
சலனமின்றி புன்னகைக்கிறேன்
மனதினுள் மௌனமாய்..!!

என்னவளையும்
என்றேனும், எங்கேனும்,
எவரேனும்
பேசக்கூடும் இவ்விதம்....
நடந்த காட்சிகளின்
சாட்சியான நான்..
எவருக்குப்புரியவைப்பது
அவளின் இதயத்தை...??!

Friday 15 November 2013

மௌனம்...!!!

மனம்படித்தவளின்
மனம் தகிக்கிறது
உன்
மௌனக்காற்றின் வெப்பத்தில்...!

என்மனதை
தன்மனதாய்க் கொண்டவனே
மனம்படிக்கும்
மொழியும் மறந்ததோ...??

மௌனத்தை
விரும்பியேற்ப(ற)வனே...
நீ விரும்புவதால்
நானும் மௌனத்தை
எனதாக்கிக்கொள்கிறேன்...!

மௌனமே..
மௌனத்தின்
மௌனத்திடம்
என் மௌனத்தை
மௌனமாய்
மொழிபெயர்ப்பாய்...!

Wednesday 13 November 2013

காணவில்லை..


அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.

**************


அதிகாலை அரக்கப்பரக்க
அலறியடித்து எழாது..
அமைதியை 
முகத்தோட்டத்தில் விதைத்து
கண்மலர்களில் 
படபடக்கும் பட்டாம்பூச்சியுடன்
கனவுகளையும், கற்பனைகளையும்
காட்சியாக்கிக் கதைகள்கூறும் 
பூச்செடிகளைக் காணவில்லை...!!

அன்னை பரிமாறுவது
அமுதமென 
காலையிலும் அமர்ந்து
உண்டுகளித்து...
அறிவுப்பசி தீர்க்க
பள்ளி செல்லும் பாலகர்களைக்
காணவில்லை..!!
 
புத்தகங்களை 
சுமையாகவும்
பள்ளியை 
சிறைச்சாலையாகவும் எண்ணாது...
மகிழ்ச்சியை வழங்கும்
பரிசுப்பெட்டகமாய்
மகிழும் மாணாக்கர்களைக்
காணவில்லை...!!

அறைக்குள் அடைபட்டு
கணினியே உலகமெனக் கருதாது
அந்திமாலைப் பொழுதின் 
அழகைக் கண்டு ரசித்து
ஆடிமகிழ்ந்திட்டக் குழந்தைகளைக்
காணவில்லை...!!

இரவுவேளையில்
இல்லத்தினர்களோடு
இன்பமாய் உண்டுகளித்த
குழந்தைகளைக் காணவில்லை..!!

தாயின் மடியில் தலைவைத்து
புடவைத் தலைப்பை
கெட்டியாய்ப் பிடித்து
கதைகேட்டு உறக்கம் தழுவிய
கள்ளம் கபடமற்ற உள்ளத்தினரைக்
காணவில்லை..!!

குழந்தைகள் தினமாம் இன்றேனும்
குழந்தையுள்ளத்தைத் தொலைத்திட்ட
குழந்தைகள் 
குழந்தைப்பருவத்தை
குழந்தையின் இருப்பிலிருந்து
குழந்தையாய் இருந்திடும்
குழந்தைகளைக் கண்டிடும் 
வாய்ப்புண்டா..??
ஏங்கித்தவிப்பது
குழந்தைகளா..?
குழந்தைகளைக் 
குழந்தைகளாய்க் காணமுடியாப் 
பெற்றோர்களா..??

Sunday 10 November 2013

சமூகம்...!!!

ஒருவேளை போதைக்காக
உடைக்கப்பட்ட 
பாதாள சாக்கடையின் இரும்பு மூடியும்,
மேம்பாலத்தின் கைப்பிடிச்சுவற்றிலிருந்து 
வெட்டப்பட்ட இரும்பும்
விளக்குகிறது 
சமுதாயத்தின் மீதான அக்கறையை..!!
*****
விபத்துக்குள்ளானவர்களிடம்
களவாடப்பட்ட பொருட்களும்..
அவசர சிகிச்சையில் சேர்ப்பதற்கு
இங்குமங்கும் 
அலைக்கழிக்கப்படுவதிலும்
சவத்தை எடுத்து செல்ல காசுகேட்டு
அடாவடி செய்யும் பிணவறை ஊழியரிடமும்
வெளிப்படுகிறது மனிதாபிமானம்..
*****
பசிக்கொடுமையில்
எச்சிலையானாலும்
எடுத்துண்ண தயங்காதவனை
வட்டமேசை மாநாட்டில்
சீண்டப்படாதிருக்கும் உணவுகள் 
எள்ளி நகைத்தபடி விளக்குகிறது 
கருணையுள்ளத்தை..!!
*****


Thursday 7 November 2013

விசுவும், நானும் - 2


காயத்ரி : வணக்கம் விசு சார்...

விசு      : என்னம்மா, கொஞ்சநாளா ஆளக்காணோமேனு பார்த்தேன் வந்துட்டியா..? மறந்திட்டியோ நினைச்சேன்.

காயத்ரி : அது எப்படி சார் உங்கள மறக்கமுடியும்..?!!

விசு      : சொல்லும்மா இன்னிக்கு என்ன தீர்மானத்தோட வந்திருக்க..?

காயத்ரி : ஒரு தீர்மானத்தோடவும் வரல ஐயா..சும்மா ஒரு சந்தேகம் அவ்ளோதான்..

விசு      : சின்னதா சந்தேகம்...? சந்தேகமே இப்படி வேற இருக்கா..முடிவோட வந்துட்ட கேளும்மா .

காயத்ரி : எழுத்தும் எழுத்தாளனும் இதப்பத்தி தான் சார்..

விசு      : ஏதோ சிக்கல்ல சிக்கவைக்கிறமாதிரி தோனுதே..

காயத்ரி : சிக்கல் இல்லாததகூட சிக்கலாக்கி சிக்கல நீக்க எல்லாரையும் சிக்கவைக்கிற உங்கள சிக்கல்ல சிக்க வைக்க முடியுமா.. ?

விசு     : ஆரம்பமே சிக்கலாச்சே சொல்லுமா.

காயத்ரி: எழுத்தும், எழுத்தாளனும் ஒன்றுதானா..? எழுத்த வச்சி எழுத்தாளன எடைபோடமுடியுமா..? எழுத்தாளனின் பிரதிபலிப்புதான் எழுத்தா...??

விசு     : சின்ன சந்தேகம்னு இத்தன எழுத்த எழுதியிருக்கியேம்மா

காயத்ரி : :)

விசு     : எழுத்தாளனோட
             எண்ணம் எழுத்தாவதும்
             எழுத்தே எண்ணமாவதும்..
             எண்ணத்திலிருப்பது அனைத்தும்
             எழுத்தாகாமல் போவதும்..
             எழுத்தில் வந்ததெல்லாம்
             எழுத்தாளனோட  எண்ணமா
             இல்லாமல் போவதும் உண்டு..

காயத்ரி : இப்படி தெளிவா சொல்வீங்கன்னுதான் உங்கள கேட்டேன் மேல சொல்லுங்க சார்.

விசு      :சந்தோசமா எழுதறவன் எல்லாம்
              சந்தோசமா இருக்கான்னோ,
              சோகமா எழுதறவன் எல்லாம்
              சோகமா இருக்கான்னோ,
              சமூக அக்கறையா எழுதறவன் எல்லாம்
              சமூக ஆர்வலன்னோ
              ஆன்மீகத்தை எதிர்ப்பவன் எல்லாம்                                          
              பகுத்தறிவாளன்னோ
              பகுத்தறிவு பேசறவன் எல்லாம்
              ஆன்மீகத்துக்கு எதிரானவன்னோ
              பெண்ணீயம் பேசறவன்
              பெண்களைப் போற்றுபவனோ
              பெண்களுக்கு எதிரா எழுதுபவன்
              பெண்களை வெறுப்பவனோ..
              இரக்கம் சொட்ட சொட்ட எழுதுபவன்
              மனிதாபிமானம் உடையவன்னோ
              யதார்த்தத்த யதார்த்தமா எழுதறவன்
              கல்மனசுக்காரன்னோ இல்ல..

              சந்தோசமா எழுதறவன் சோகத்தை மறைத்தும்
              சோகமா எழுதறவன் சந்தோசத்தை அனுபவித்தும்
              சமூகம் பற்றி எழுதறவன் அதன்மீது             
              அக்கறையின்றியும்
              ஆன்மீகத்தைப் பேசுபவன் நாத்திகனாகவும்
              பகுத்தறிவு பேசறவன் பக்தியாளனாகவும்
              பெண்ணீயம் பேசறவன்                                                        
              பெண்களுக்கெதிரானவனாவும்..
              இரக்கமா எழுதறவன் கொலைபாதகனாகவும்
              யதார்தமா எழுதறவன் இரக்ககுணமுடையவனாவும்
              இருந்ததில்லையா...?
              இருக்கக்கூடாதா...
              இருக்கமாட்டாங்களா..? என்னம்மா சொல்ற..??

காயத்ரி : சார்...நான் அப்படி சொல்லல...அப்படியும் நினைக்க வாய்ப்பு இருக்கே அதான் உங்ககிட்ட சந்தேகம் கேட்கறேன்..

விசு      :குழப்பமா பேசறவங்க எல்லாம்
              குழப்பவாதியோ
              தெளிவா பேசறவங்க எல்லாம்
              தெளிந்த சிந்தனையுடையவங்களாவோ                                 
              இருக்கனுமா என்ன..
              குழப்பமா பேசி தெளிவா இருப்பதுமுண்டு
              தெளிவா பேசி குழம்பினவங்களும் உண்டு..
              குழப்பமும், தெளிவும்
              கொடுக்கறவங்களவிட
              எடுக்கறவங்ககிட்டதான் இருக்கு..
              அப்படித்தான் எழுத்தும் எழுத்தாளனும்..
              அவன் பொதுவாத்தான் கொடுக்கறான்                                   
              எடுக்கறவங்க
              எடுக்கறத வச்சிதான்
              கொடுக்கிறது கணிக்கப்படுது..
              கொடுக்கறதுல
              எடுக்கறது தப்பாயிருந்தா
              கொடுக்கறதும் தப்பாயிடும்..
              என்னமா புரிஞ்சுதா..உன் சந்தேகம் தீர்ந்துச்சா...

காயத்ரி : நீங்க இவ்வளவு தெளிவா குழப்பமா கொடுத்தாலும் குழம்பாம தெளிவா கொடுக்கும்போது குழம்பினமாதிரி இருந்தாலும் தெளிவா புரியுது சார்..

குழப்பித்தெளியவைக்க உங்களவிட்டா யாரு இருக்கா..ரொம்ப நன்றி சார்...என் சந்தேகத்தை தீர்த்துவச்சதுக்கு...:)

விசு      : நல்லதும்மா..உன் குழப்பத்த தீர்த்ததுல எனக்கும் மகிழ்ச்சினு குழப்பமில்லாம தெளிவா சொல்லிக்கிறேன்..பிறகு சந்திப்போம்..

காயத்ரி : எண்ண ஓட்டம்.. எல்லாம் தெளிவா ஆச்சு..ஆனா இப்ப எழுத்துன்னா என்னன்னுதான் மறந்துட்டேன்.. தெளிஞ்சிடும்..:)

Tuesday 5 November 2013

கண்ணீருக்குப்பின்னே...!!!


கடற்கரையில் அமர்ந்த
காரிகையவளின் பார்வையும்
கடலழகை ரசிக்காது
எங்கோ நிலைகுத்தியிருக்க..
எண்ணக்கொந்தளிப்பின்
சாட்சியாய் 
அழுதுச்சிவந்த கண்மலர்கள்..!!

காலையில் படிப்பு,
மாலையில் விளையாட்டு
எனக்கூறிய பாரதியின் - பிற்பாதி வரிகளை 
கடைபிடித்து
பெற்றோர் ஆசையை 
நிறைவேற்றாது
விளையாட்டுப் பெண்ணாயிருந்ததை 
எண்ணியா..??

கன்னிப்பருவத்தில்
களவுபோன மனதையேற்க
குடும்பம், சமுதாயமென
மறுத்து, மறந்த 
துணிவில்லாதவனுக்காய்
ஏங்கியதை எண்ணியா....??

திருமணம் துறந்து
அனைத்துக் குழந்தைகளுக்கும்
அன்னையாய் விளங்கி
கருணையோடு திகழவெண்ணி
தோற்றப் பேதைமையை எண்ணியா..??

திருமணமே
இல்லம் பராமரிக்கவென - இசைந்து 
தொலைக்காட்சியில் தொலைந்து 
தொடரில் வரும் மாமியோரோடு ஒப்பிட்டு
கணவனோடு சண்டையிட்டு
சராசரிப்பெண்ணாயில்லாது..
பிரபஞ்சம் வியக்க
நாலும் கற்றறிந்து 
நிலவிலும், செவ்வாயிலும்
காலடி வைக்கவிரும்பி
முடியாது போகவே
கணவனுக்கும் நல்ல மனைவியாக 
திகழ முடியாததை
எண்ணியா..??

குழந்தை பிறக்காதென்ற
மருத்துவரின் கூற்றை
எண்ணியா.??

கர்ப்பத்தில் 
தரித்தகுழந்தை
தரணி காணாது
கருவறையைக் 
கல்லறையாய் ஏற்றதை
எண்ணியா...?

பிறந்த குழந்தைகள்
ஏட்டளவில் படித்து
மதிப்பெண்கள் மதிப்பாய் - பெற்றால் 
போதுமென எண்ணாது
மனதிற்கு பிடித்தாற்போல் இருக்க 
அனுமதித்து
பொறுப்பற்றத் தாயாக 
இருந்ததை எண்ணியா..??

அலுவலகத்தில்
நிர்வாகத்தின் புலியாக 
விரும்பி செயல்பட..
நிர்வாகியோடு 
தொடர்பு படுத்தி பேசும்
சகாக்களின் எண்ணங்களை
எண்ணியா.??

கண்ணெதிரே நடக்கும்
சமுதாய சீர்கேடுகளை
களைந்தெடுக்க முயல - உரிமையில் 
உணர்வு விளங்கிடப்பட்டு
செயலிழக்க செய்யப்பட்டதை
எண்ணியா...??

இதில் ஏதாவதொரு
எண்ணம் அவளுள் 
கொந்தளித்துக்கொண்டிக்கலாம்...
ஒரு நொடி நின்று 
அவளை உற்றுநோக்கி
கண்ணீரின் காரணமறிய நினைக்க...

தம்முள் எங்கோ மூலையில்
எச்சமிருக்கும்
சோகத்தளிரை 
துளிர்த்தெழச்செய்யுமோ..??!
என்றெண்ணி அஞ்சியே
அனைவரும் கடக்கின்றனர்..
எவருமறியாமலே கரைந்து
கடலில் சங்கமிக்கிறது
அவள் கண்ணீர்...!!