முகப்பு...

Wednesday 3 July 2013

”திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி”



எனதன்பு வலைப்பூ நட்புகளுக்கு

காத(லி)லன்  எழுத   நினைத்த காதல் கடிதம். 
காத(லி)லன்  எழுத   மறந்த         காதல் கடிதம். 
காத(லி)லன் எழுதிய  காதல் கடிதம்.

இவற்றில் எதை எழுதுவது எதை விடுவது....?? நான் எம் இதயத்தில் எழுதியிருக்கும் எண்ணற்ற கடிதங்களில் இருந்து  ஒரு சில என் தூரிகையில் ஓவியமாய் தீட்டியிருக்கிறேன்..!!
காதல் என்ற உணர்வு வார்த்தையெனும் வட்டத்திற்குள் சிக்குமா..??!! இருந்தும் சிக்க வைக்கும் எமது சிறு முயற்சி உங்கள் அனைவரது வாழ்த்துக்களுடன் இதோ…..
********* 
மனதாள்பவனே... 
நான் கூறுவது உண்மைதானே..எங்கோ அமர்ந்தபடி என் மனதையாள்பவனை என்ன சொல்லிவென்று அழைப்பது...??  
நானறியா வேளையில்,
எனையடைந்து நாணுர்ந்த காதலை,
உனக்குணர்த்த நாணமுற்று
மனதினில் மறைத்துவைத்திருக்கும் காதலை
உள்ளம் புகுந்த கள்வன் உனக்குக்  கடிதமாய் எழுத முயல்கிறேன்.  என்னவென்று எழுதுவேன்.  எண்ணத்தில் எண்ணும்பொழுதே எதிரே காட்சியளித்து என் ஒற்றைப் புன்னகையில் ஒளிந்திருக்கும் ஓராயிரம் அர்த்தத்தை ஒன்றுவிடாமல் கூறும் உனக்கெதற்கு கடிதம்...

எழுத நினைத்த கடிதம் எழுதச்சொல்கிறார்கள்.... உனக்கு நான் எழுத நினைத்ததை எல்லாம் எழுதி முடிக்க இந்த வலைப்பூ போதுமா அல்லது இந்தப் பிறவிதான் போதுமா..?? அவர்களுக்கு எப்படி எடுத்துரைப்பேன் உன் மீதான என் காதல் எழுத்துக்குள் அடக்கமுடியா எரிமலையென...!!! 

உனை நினைக்கும்பொழுதே உள்ளத்தில் எழும் உணர்ச்சிப்பெறுக்கை தடுத்து நிறுத்தும் அணைக்கட்டாய் உன் குரல் கேட்க விரும்புகிறேன்.....!! ஒவ்வொரு நொடியும் உன் பெயரை ஒருநிலைத் தியானமாய் உச்சரிக்கிறேன்.  உச்சரிக்கும் நொடியெல்லாம் மழையில் நனைந்துவிட்டு குளிர்சாதன அறையில் நுழைந்ததைப்போன்ற  சிலிர்ப்பான உணர்வை உடலில் பரவச்செய்யும் உன்னதம் அறிந்தவன் நீ.  காதல் விதை தூவி காதலை விருட்சமாய் வளர்த்து, காதல் கனிசுவைக்கும் வித்தையறிந்த உனக்கு காதல் கடிதம் எழுதுவது எப்படி என யோசிக்கிறேன்...அதற்கும் உனையே யாசிக்கிறேன். 

என் விடியல் கூட உன்னை
எண்ணியே தொடங்குகிறது..

நித்தமும் உன்னை எண்ணி
விழித்தபடி உறங்கி...
உறங்கியபடி விழித்து... 
பசித்தும் உணவருந்தாமல்
தவித்தபடி நான்..

பெண்மையின் தன்மையை உண்மையாய் உணர்த்தியவன் நீ.  உன் ஒற்றை முத்தத்தின் ஒலி ஒவ்வொரு நொடியும் காதுகளில் எதொரொலிக்க, பிறரின் குரல் கேளா செவிடியாய் வலம் வருகிறேன்.  உன்னிடம் பேச வேண்டும் என்பதற்காகவே  பிறருடன் பேசாது மௌனத்தை அனுஷ்டிக்கிறேன். 

இதய சிம்மாசனத்தில்
கம்பீரமாய் அமர்ந்து
எனை உறங்கவிடாத
உன் தோற்றத்துடன் நித்தமும் காதல் யுத்தம் செய்கிறேன்..

உனக்குக் காதல் கடிதம் எழுதிட என் நெஞ்சம் நர்த்தனமாடுகிறது அவற்றைக் கவிதையாய் அரங்கேற்றம் செய்ய  விரல்கள் துடிக்கிறது.  நானும் கவி வடித்திட வந்துதவிடுவாய் என் காதலனே..!! வறண்ட உன்னிதழை என்னிதழால் ஈரப்படுத்தி தளர்ந்த உன்னுணர்வை உயிர்ப்பூட்ட விரும்பும் என் காதலை உணரவும் வாராயோ..?? கண்ணாமூச்சி ஆடி கண்ணீர் பெருகவும் செய்வாயோ..??

உள்ளம் அறிந்த கள்வன் உணராதுபோல் நடிக்கவும் செய்கிறாய். உயிர்துறக்கும்படி தவிக்கவும் விடுகிறாய்.  

என்னவனே என் நிலையை உனக்கு எடுத்துரைப்பார் எவருமிலையோ ..?

வாலியின் பலத்தைப்போன்ற உன் சொல்லாடலில் சிக்கித்திளைக்கிறேன்.  என் இதய வீணையில் நாதம் எழுப்பி என்னை இகபரசுகம் அனைத்தையும் சுகிக்கச்செய்பவன் உனையே எண்ணி உறக்கத்திலும் உன் பெயரை உச்சரிக்கும் என் மனதை உணராதவனா நீ..
வாழ்வையறியா வாழ்வில்
வாழ்வை உணர்த்த..
என் வாழ்வில்
வசந்தமாய் நுழைந்தவன் நீ...

உறங்கியெழும் ஒவ்வொருநாளும் உனைக்காண்பதற்கான நாளாய் உள்ளம் பூரிக்கிறேன்,  உனையே தியானிக்கிறேன்.  கண்முன்னே காட்சியளிக்கிறாய் கட்டியணைக்க முற்படுகிறேன் காணாதுபோகிறாய்.  கேட்டால் கண்ணாமூச்சி எனக்கூறி கவலைக்கிடமாக்குகிறாய் எனை. 
விளையாட்டில்கூட உனைக் காணாது தேடமுடியாமல் தவிக்கிறேன். என்னவனே என்னருகே வருவதெப்போது..?  சாலையில் காண்போரெல்லாம் நீயாகத் தோன்ற ஒரு நிமிடம் நிசமாவென கிள்ளிப்பார்க்கிறேன். நிழலாய் மறைகிறாய்.  உன்பெயர்கொண்டோரெல்லாம் அழைக்கப்படும்போது என்னவனை அழைப்பது யாரென திரும்பிப்பார்க்கிறேன். 
என் மனதாளும்
உன் எண்ணங்களில் இருக்கும்
அன்பைத்தேடி..
வாடிய மனதை
இதமாய் வருடி புத்துயிரூட்டும்
நின் சிந்தனைச்சிறகிலிருக்கும்
அன்பைத்தேடி...எழுதுகிறேன் இந்தக்கடிதம்.
இலக்கியத்தில் படித்ததை எனக்குணர்த்த, இயற்கை சக்திமூலம் காதல் வைரசை உள்ளம்புகுத்தி பசலையில் எனைத் தவிக்கவைக்கிறாய். பசியிருந்தும் உணவருந்தாமல் உறக்கம் தவிர்த்து உயிர்க்குத் துடிக்கும் மீனாய் என் உணர்வுப்பூக்களை மலரச்செய்யும் மன்னவன்  உனை நினைத்தே என் உள்ளம் தவிக்கிறது...!!

சுட்டெரிக்கும் சூரியனும் குளிர்கிறது....
உள்ளிருக்கும்  உனை நினைக்கையில்.

என் சிந்தை முழுவதையும் 
ஆட்கொண்டிருக்கும் 
நீ..
கல்லுக்கும் உயிர்கொடுத்து 
உணர்வு கொடுக்கும் 
வித்தை அறிந்தவன்.. 

இந்தப் பெண்ணின் மனம் அறியாதவனா நீ...??!!

பூகம்பத்தில் நடுங்கும் பூமியைப்போல்
என் தேகமும் நடுங்குகிறது.,
உன் குரல் கேட்க விரும்பியே..!!

தொலைவில் உள்ள உன்னைகூட 
அருகில் அமர்த்திப் பார்க்கிறது மனம்..

யாதுமாய் என்னை வியாபித்திருக்கும்..
உன்னை
அனுதினமும் பிரியாதிருக்க
மனம் விரும்பி கடிதம் எழுத எத்தனிக்கையில் புத்தி தடைபோடுகிறதே..!!

புத்திக்கும், மனதிற்கும் 
நடக்கும் போராட்டத்தில் 
பல நேரம் மனம் வெல்கிறது..
சிலநேரம் புத்தி வெல்கிறது..

புத்தியும் மனமும்... 
மாறி மாறி வென்று கொன்று
என்னைக் கொல்லாமல் கொல்கிறது 
உன் நினைவி(வா)ல்..
என் எண்ணத்தில் கருவானவன் எழுத்தில் வரமறுக்கிறாய்.  
ஆகாயத்தை வீடாய் அமைத்து.,
வானவில்லை வீட்டின் தோரணமாக்கி….
நிலவை விளக்காக்கி,
விண்மீன்களை பொருட்களாக்கி...
கவிதை பேசி களைத்து போன 
நீ
குடிப்பதற்கு கங்கையைக் கொணர்ந்து...
குளிப்பதற்கு குற்றால நீர்வீழ்ச்சியை
வீட்டிலமைத்து...
பசியாற செந்தமிழில்
கவிதை சமைத்து...
வெண்முகிலை மெத்தையாக்கி..
தென்றலை சாமரமாக்கி...
உன் கவிதை சொல்ல,
அந்தக் கண்ணனையும்கலைமகளையும்
குழந்தைகளாய்ப் பெற்றெடுத்து,
குதூகலமாய் குடும்பம்
அமைப்போம்... !!
என் பிரசவ வலியையும் பொய்க்கச்செய்து பிரபஞ்சத்தைப் பார்வையிட பிறக்கப்போகும் நம் பிள்ளைக்கு நீ பண்பாடி வரவேற்க வேண்டும் என்ற ஆசையை என் மௌனமொழியில் மனதில் எழுதுகிறேன். சொர்க்கமென உணர்த்தும்  உன் அன்பைத்தேடி. என் மௌனத்தின் வாசகனே மறவாது வாசிப்பாய் இந்த நேசக்காரியின் நெக்குறுகும் மனதினை..!!  உன் சோகத்தை நீக்கி சுகத்தை உனக்கு சொந்தமாக்க உன்னவள் காத்திருக்கிறேன். 

காதலியாய்
காதல்மொழி கேட்டு
நின் காதலில்
கசிந்துருகும் ஆசையுடன்
உன்முன்னே
உயிரும் துச்சமென
உனக்காக உயிர்துறக்கத் துணியும் துணிச்சலுடன்..
உனக்கானவள்
உனக்காக
உணர்வுகளுடன்
உணர்வோடு நித்தமும்
புரிகிறேன் காதல்யுத்தம்...!!

மனதளவில் குழந்தைப்பெற்று கவிதையாய் குடும்பம் நடத்தி மரணத்தை வென்றிடும்(கற்பனைக்காதலன்)  உன்னுடன் வாழ்ந்துகொண்டிருக்கும்  
நான்..
இறக்கும் வரை
நம் கரங்கள்
இணைந்திருக்கும் ஆசையுடன்
மரணமில்லா என் மன்னவன்
உன்மார் சாய்ந்து
உயிர்துறக்கும் ஆசையுடன்..எழுதுகிறேன் (எனக்கென எங்கோ பிறந்திருக்கும்)  உனக்கோர் காதல்கடிதம். காதலனே உள்ளிருக்கும் காதல் உணர்ந்து வாசிப்பாய்...நேசிப்பாய்...!!
காதலுக்கு, காதலை காதலுடன் வழங்கும் நின்காதலை எதிர்நோக்கி படபடக்கும் இதயத்துடன் பதிலுக்காய் நேசத்துடன் நித்திரையிழந்து காத்திருக்கிறேன்...!! 
நேசமுடன் உன்னவள்..
 

32 comments:

  1. உணர்வுப் பூர்ணமான ரசிக்க வைக்கும்... உருக வைக்கும்... காதல் கடிதம்...

    வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ...மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்..:)

      Delete
  2. நானறியா வேளையில்,
    எனையடைந்து நாணுர்ந்த காதலை,
    உனக்குணர்த்த நாணமுற்று…
    >>
    ஆரம்பமே அசத்தல்

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழி.... :) தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றியும், மகிழ்ச்சியும். :)

      Delete
  3. அக்கா...

    காதலை கவிதையால் வடித்திருக்கிறீர்கள்...
    கவிதைகள் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கின்றன...
    வெற்றி உங்களைத் தேடி வரட்டும்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தம்பியின் வாழ்த்திற்கு நன்றி...:)

      Delete
  4. காதல் என்றாலே எழுத்துக்கள் மடை திறந்துக் கொள்கின்றன.

    படிப்போருள்ளும் பரந்துப் பாய்கிறது கவிதைகள்.

    வெற்றிப்பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழமையே...மிக்க நன்றி...வாழ்க வளமுடன்.

      Delete
  5. நான் நினைத்ததை சத்ரியன் சொல்லிவிட்டார். புது நதியின் தெளிவான ஓட்டம் கடிதத்தின் நடையில் - காதலைப் பற்றியதாலா?
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நன்றி தோழர்.. வாழ்க வளமுடன்..:)

      Delete
  6. உணர்வுபூர்வமான கடிதம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. Ennathu ....I pray god to success your LOVE

    ReplyDelete
  8. மண் முதல் விண் வரை விரவியிருக்கிறது காதல் வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள்.. வாழ்க வளமுடன். :)

      Delete
  9. உங்கள் உள்ள உணர்வை கொட்டி எழுதியிருக்கிறீர்கள்.

    //ஆகாயத்தை வீடாய் அமைத்து.,
    வானவில்லை வீட்டின் தோரணமாக்கி….
    நிலவை விளக்காக்கி,
    விண்மீன்களை பொருட்களாக்கி...//
    அழகான கற்பனை!
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க...மிக்க மகிழ்ச்சி..தங்கள் வாழ்த்துக்கள் எமது எழுத்துக்களை மெருகேற்ற உதவட்டும்..வாழ்க வளமுடன். :)

      Delete
  10. உணர்வுகளை கொட்டி ஒரு கடிதம்.

    //ஆகாயத்தை வீடாய் அமைத்து.,
    வானவில்லை வீட்டின் தோரணமாக்கி….
    நிலவை விளக்காக்கி,
    விண்மீன்களை பொருட்களாக்கி...//
    அழகான கற்பனை.

    உங்கள் காதலும், காதல் கடிதம் போட்டியில் உங்கள் கடிதமும் வெல்ல வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. காதல் கடிதம் வரிகள் ரசிக்க வைக்கிறது

    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க மகிழ்ச்சியும், நன்றியும் தோழரே..:)

      Delete
  12. மண்ணகம் விண்ணகம் என விரும்பிய காதல் உணர்வுடன் காதல்க்கடிதம் அருமை ! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. காதல் கடிதம் சிலிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றது விண்ணகம் மண்ணகம் என்று! போட்டியில் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழமையே. தங்கள் வாழ்த்திற்கு நன்றி..

      Delete
  14. கடிதம் மிகவும் அருமை தோழி. கவிதைகளனைத்தும் இனிமை. இவ்வரிகளை மிகவும் இரசித்தேன்.

    வாழ்வையறியா வாழ்வில்
    வாழ்வை உணர்த்த..
    என் வாழ்வில்
    வசந்தமாய் நுழைந்தவன் நீ...

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழர்.. தங்கள் வாழ்த்திற்கு நன்றி..:) _/\_ போட்டியில் வெற்றி என்பதைவிட தங்களைப்போன்ற நல்ல ரசிகர்களை பெற்றதே மகிழ்வு..

      Delete
  15. Replies
    1. தோழரின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..:)

      Delete
  16. அருமையான காதல் கடிதம்! இதில் எனக்கு பிடித்த வரிகள் என்று சொன்னால் "உள்ளம் அறிந்த கள்வன் உணராதுபோல் நடிக்கவும் செய்கிறாய். உயிர்துறக்கும்படி தவிக்கவும் விடுகிறாய்"
    அற்புதம்....இதை படிக்கும் பொழுது நமக்கு போன இளமை திரும்புகிறது என்றே சொல்லலாம்....இந்த கடிதத்தை தவிர வேறு எந்த கடிதம் வெல்லும்????வென்ற தேதி மட்டும் சொல்லி அனுப்புங்கள்////.....அன்புடன் உன்னிகிருஷ்ணன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழர்...தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி...:)

      Delete
  17. காதல் கடிதம் படித்து சிலிர்த்து போனேன்...அற்புதம் ...அருமையான காதல் கடிதம்...படிக்கும் பொழுது போன இளமை திரும்பி வருவது போல் ஒரு பிரம்மை....எனக்கு பிடித்த வரிகள் என்று சொன்னால்..........."உள்ளம் அறிந்த கள்வன் உணராதுபோல் நடிக்கவும் செய்கிறாய். உயிர்துறக்கும்படி தவிக்கவும் விடுகிறாய்." இவைகள் யதார்த்தமானவை....அதுதான் எனக்கு பிடித்த வரிகள் என்று சொன்னேன்....இந்த கடிதத்தை வெல்ல எந்த கடிதம் இருக்கிறது....வென்ற தேதி மட்டும் சொல்லுங்கள்...வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ஹஹ்ஹா....வாங்க தோழர். தங்களின் நம்பிக்கையான வாழ்த்திற்கு நன்றியும், மகிழ்ச்சியும். தங்கள் அனைவரது ஊக்கம், வாழ்த்துக்களே மிகப்பெரிய பரிசுதான் எமக்கு..

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__