முகப்பு...

Tuesday 29 October 2013

விடியல்...!!

முழுமையடையா 
நித்திரைக்கு நிர்பந்தமாய் 
விடுதலையளித்து..
இன்னும் கொஞ்சம் உறங்கும்
ஏக்கத்துடன்...
கடிகார சப்தத்தை நிறுத்தி
நேற்றைய நிகழ்வுகளின்
நினைவுகளின் எச்சங்களோடு...
இன்றைய பொழுதின் 
எதிர்பார்ப்போடு
துவங்கும் விடிகாலைப்பொழுது...!

என்ன சமைப்பதென்ற 
சிந்தனையோடும்
ஒரு நிமிடமென சிணுங்கும் 
குழந்தையின் உறக்கம் களைக்கும்
போராட்டத்தோடு...
அலுவலகத்திற்கு
தயாராகவேண்டுமென்ற அவசரத்திலும்
அன்றைய களத்தில் 
இறங்கும் பெண்கள்..

ஞாயிற்றுக்கிழமையின் வரவை
எதிர்நோக்கி 
நாட்களை எண்ணியபடி
குழந்தைகள்...!

தாமதமாய் அலுவலகம் 
செல்வதைத் தவிர்க்க
மனதை(உறக்கத்தை) அடக்கி
எழமுயற்சிக்கும் ஆடவர்கள்...!

ஆரோக்கியம் கருதியே
உடற்பயிற்சி மேற்கொள்ள
உறக்கம் தவிர்த்தபடி இளைஞர்கள்...!

இன்றைய விடியல்
மரணத்தைவென்றதற்கான
வரமென மகிழ்ந்தபடி
வாழத்துடிக்கும் வயோதிகர்கள்...!

இன்னும் எத்தனை விடியலோ
சபித்தபடி நோயாளிகள்...!

எண்ணிலடங்கா
எண்ணங்களை எல்லாரிடத்தும்
பதியமிட்டே
நாள்தோறும் துவங்குகிறது 
அன்றைய விடியல்...!!!









Monday 28 October 2013

கோபம்

தன் கூரிய வார்த்தை வீச்சினால்
எதிராளியின் மனதை
குத்திக்காயப்படுத்தியும்...

விரல்களுக்கு அழகுசேர்க்கும்
தம் நகங்களைக் கடித்து
வழியும் குருதி கண்டும்..

பூவையரின் கூந்தலையோ
இல்லத்தையோ..
இறைவனையோ
கல்லறையையோ..
அலங்கரிக்கக் காத்திருக்கும்
அழகிய மலர்களின்
இதழ்களை உதிர்த்தெறிந்தும்..

யாருக்கோப் பயன்பட
தன்னைத் தயார்படுத்தியிருக்கும்
தாவரத்தினை துண்டு துண்டாக்கியும்...

அரிந்த காய்களின் தோல்களைப்
பல துண்டங்களாக்கியும்..

அடுக்களையில் ஆங்காங்கு
பாத்திரங்களின் ஓசையெழுப்பி
பாசமிக்கவர்க்கு உணர்வுகளை
வெளிப்படுத்தியும்...

பூமியை வெட்டி செதுக்கி
பண்படுத்தியும்...

வெங்காயம் நறுக்கிக்
கண்ணீர்த்திவளைகளை
கன்னங்களின் வழி செலுத்தியும்..

எவரும் அறியாது
கண்ணீரைத் தண்ணீரில்
கரைத்தும்..

எவர் மனதும் காயப்படாதிருக்க
மௌனத்தை
மொழியாய்க் கொண்டு
தன்னையே வருத்திக்கொண்டும்..

அன்றாட கோபங்கள்
கரைக்கப்பட்டும்
மறைக்கப்பட்டும்
இயன்றவரை இழப்புகளை
ஏற்படுத்தி
மனித மனத்தை
எரித்துச்செல்கிறது

இன்னொரு இழப்பிற்கு
எவரையோ தயார் செய்யவே..!!

Thursday 24 October 2013

கவிமாலை..


சிந்தனைத் தோட்டத்தில்
விளையும்
எண்ணச் செடிகளின்
வார்த்தை மலர்களை
கோர்த்து
கவிமாலையமைத்து
தமிழன்னைக்கு சூட்ட விரும்பிய
முயற்சி.....

வார்த்தை மொட்டு கருகியும்
பறிக்கும்போது இதழ்கள் உதிர்ந்தும்..
கோர்க்கும்போது துண்டிக்கப்பட்டும்..
பறிக்கத்தவறிய மலர்களும்..

கவிமாலைக்கு அழகு
சேர்க்கும் மலர்களாம்
உவமையும்,உவமானமும்
கண்ணுக்கெட்டாது
கண்ணாமூச்சியாட
இருக்கும் மலர்களில்
கோர்க்கப்படும் மாலை
கவிமாலையாய் காட்சியளிக்குமா..?
காட்சிப்பிழையில்லையிது
கருத்துப்பிழையெனக் கருதியே...
நல்லதோர் கவிமாலையமைக்கும்
முயற்சி நாளும் தொடர்கிறதே...:)

ஒற்றைக்கம்பம்..





தெருவோரம் 
தனித்துவிடப்பட்ட
ஒற்றை விளக்குக்கம்பம்..!!
இன்னமும் 
ஒளிவீசிக்கொண்டிருக்கிறது
யாருக்கேனும் உபயோகப்படுமென்று...!!

ஒன்றுக்கொன்று அருகேயிருக்கும்
கம்பங்களிலிருந்து 
தனித்துவிடப்பட்டும்...,

மற்ற விளக்குகள்
அணைந்து ஓய்வெடுத்தும்...

தன் ஒளியை 
விரும்புகிறார்களா
வெறுக்கிறார்களா 
தெரியாமலே
ஒளிவீசிக் கொண்டிருக்கிறது 
தொடர்ந்து..

வார்த்தையில் 
வன்மை காட்டும் மனிதர்கள்போல்
வாழ்க்கையே விளையாட்டான 
சிறுவர்கள் சிறுநீரினால் 
தன்மீது வரையும் ஓவியத்தையும் 
பொறுட்படுத்தாது..

தன் ஒளியை அலட்சியப்படுத்தி
தன் முகப்பு வெளிச்சத்தில் ஊர்திகள் 
சாலையைக் கடந்தாலும்...

தனக்கு இடமளித்த
பூமிக்கேனும் வெளிச்சமாக இருக்க
ஒளிவீசிக்கொண்டிருக்கிறது
தொடர்ந்து...

இரவுப்பணி முடித்து 
வீடு திரும்புவோருக்கு 
காலடியில் ஊர்ந்துசெல்லும்
விடப்பூச்சிகளை அடையாளம் காண..

இங்குமங்கும் இரைதேடி
ஓடித்திரியும் எலிகள்
எவர் காலிலும் நசுங்கி மடியாமல் இருக்க..

எதையோ சாதிக்கப்போவதாய்
அதிவேகமாய் செல்லும்
வாகனங்கள் 
மோதிக்கொள்ளாமல் இருக்க

அதிகாலை நடைப்பயிற்சியின்போது
அந்நியர்மீது மோதிக்கொள்ளாமல் இருக்க..
எவருடைய 
பாராட்டையும்
அலட்சியத்தையும் 
பொருட்படுத்தாது
உயிர்துறக்கும்வரை
ஒலியற்று
ஒளிவீசிக்கொண்டிருக்கிறது
ஒற்றை விளக்குக்கம்பம்..!!

Wednesday 23 October 2013

மழலை உலகம்...!!

உலக அரங்கில்
அன்றாடம் அரங்கேற்றப்படும்
அனேக நாடகங்களில்..

நொடிக்கொரு பாத்திரமேற்று
மனதை ஆக்கிரமிக்கும்
மழலைகளின் காட்சிகள்

உறக்கத்தில் உள்ளம் பூரித்து
சிந்தும் புன்னகை..

எதையோக்கண்டு அஞ்சி
உதடு சுழிக்கும் அழுகை..

இரவு,பகலறியாது
கை,கால் உதைத்து
படுத்தபடியான நடனம்....

பசிக்கான அழுகையா..?
உடலின் உபாதையா..?
தாயை பரிதவிக்க வைக்கும்
வீறிட்ட அழுகை..

தாய்ப்பாலை உமிழ்ந்து
படுக்கையில் ஓவியமிடும்
விளையாட்டு..

பசியாறிய சிலநொடிகளில்
கழிவுகளை வெளியேற்றும் முக்கல்..
சூடான சிறுநீரை
உற்றார்களின் மடியில் கழித்து
அவர்களிடத்தே ஏற்படுத்தும்
முகச்(சுழிப்)சிரிப்பு....

பகையாளி, உறவாளி
ஏழை,பணக்காரன்
ஜாதி,மதம்
சிவப்பு, கறுப்பு
ஏதுமறியா வெள்ளைச் சிரிப்பு...
விந்தையான உலகமிது..
நித்தமும் பார்க்கத்தூண்டும்
நிதர்சனமான காட்சிகள் நிரம்பி
அரங்கேறும் காட்சிகளனைத்தும்
சொர்க்கத்தை
அருகே கொணர்ந்து
நரகத்தின் வாயிலை
நிரந்தரமாக மூடச்செய்யும்
அரங்கமிது..!!
அன்றாடம் கண்டுகளிக்களாம்
அதிசய மழலை உலகத்திலே..!!

Tuesday 22 October 2013

இதய மொழி..!


இசையாய்
என்னுள் கலந்து
இதய சிம்மாசனத்தில்
இடம்பெற்று..
ஐயிரண்டு விரல்களால்
ஆரத்தழுவி
மௌனமொழியில்
என் இதயம் மீட்டும்
இசைக்கு
கண்களால்
நீ வடிக்கும் கவிதை
தென்றலாய் என் மனதை வருட..
மேகம் கண்ட மயிலாய்
மனம் களிப்படைந்து
காதல் மழையில் நனைகிறேன்
ஒவ்வொரு நொடியும்....!!!

Monday 21 October 2013

மரண ஒத்திகை


வாழ்க்கை நாடகத்தில்
மரண கதாபாத்திரத்தை
கச்சிதமாய் நடித்துமுடிக்க
ஒத்திகை பார்க்கப்படுகிறது
மருத்துவமனையில்..!

தேர்ச்சியடைந்தவர்
இடுகாடு செல்ல...
தேராதவர்கள் 
இல்லம் திரும்புகின்றனர்
ஒத்திகையைத் தொடரவே...!!

Thursday 10 October 2013

மரணத்திற்கு பின்னே...!!

மரணத்தை நோக்கிய
வாழ்க்கையெனும்
இரயில் பயணத்தில்..

சேருமிடத்தையடையும் வழியை
எவர்தான் அறிவார்..?

இரயில் சக்கரத்தில்
சிக்குண்டு சிதைந்து..
இரத்தமும்,சதையும்
இரும்புத்தண்டவாளத்தில்
வரையும் ஓவியத்திலா..?

ஆற்றின் சுழலில் சிக்குண்டு
மூச்சுத்திணறியா..??

மதிகெட்டு மதுவிற்கடிமையானவனின்
வாகனத்தில் அடிபட்டு
மூளை சிதறியா..??

வறுமை,காதல், தோல்வி, ஏமாற்றம்
வரதட்சிணைக்கொடுமையென
எத்தனையெத்தனையோ அனுபவங்களை
எதிர்கொள்ள மறுக்கும்
கோழைகள் எடுக்கும் கயிற்றிலா..??
விசத்திலா..??

எவரிடமோ பணம் வாங்கி
எவரையோ கொல்லும்
கூலிப்படையிடத்திலா..?

குண்டுவெடிப்பிலா..??

விதவிதமாய் விருந்தினராய்
வந்திருக்கும் நோயினாலா..??

எதுவுமே அறியாத  - இந்த
வாழ்க்கைப்பயணம் முடிவதற்குள்
உறவுகள், நட்புகள்
வாழ்க்கையை படிப்பிக்கும் ஆசான்களும்
எதிரிகளுமாய்..
எத்தனையெத்தனை
பயணிகள்..?!!

எத்தனையெத்தனை
அனுபவ நிறுத்தங்கள்..??!!

இறங்கும் இடம்வருவதற்குள்
இரயிலே தமதென அங்கலாய்க்கும்
அகங்காரத்துடன் சிலர்...

இந்தப்பயணம் தேவையா
அறுவெறுப்புடன் சிலர்..

பயணம் வரமென
ஒவ்வொரு நொடியின்
மணத்தையும் நுகர்ந்தபடி சிலர்..

சாபமாய் அமைந்ததென
பயணத்தை சாடியபடி சிலர்..

பயணத்தைக் கடப்பது
காலத்தின் கட்டாயமென
சேருமிடத்தை எதிர்பார்த்து
தத்துவம் பேசியபடி - சிலர்
மேற்கொள்ளும் பயணத்தில்..

சூழ்ச்சியே தமதாய்க்கொண்டு
பிறர்கேட்டில் மனம்மகிழும் சிலர்..

இ(ற)ருக்கும் வரை
பிறருக்குதவிடும் சிலர்..

பிறருக்காக தன்நலன்
கருதாது தியாகமே உருவாக சிலர்...

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசி புகழ்தேடும் சிலர்..

உழைப்பே உயர்வென சிலர்
பிறர் உழைப்பை தனதாய் கருதும் சிலர்..

நாட்டிற்காக நாமென சிலர்..
நாடே எனக்காகவென சிலர்..

தாயிற்காக இல்லாளை
எள்ளி நகையாடும் கணவனாய் சிலர்...

காரிகைக்காய் கருவில் சுமந்தவளை
கால்பந்தாய் நினைக்கும் சிலர்..

ஆயிரமாயிரம் அனுபத்துடன்
கோடிக்கணக்கான பயணிகளை
சுமக்கும் வாழ்க்கை இரயில்
நிறுத்தத்தை சென்றடையுமா..?
நிறுத்தாமல் மோதிநிற்குமா
அறியாத இந்தப்பயணத்தில்
பயணிகளாய் நாம் போடும் ஆட்டம்தான்
எத்தனையெத்தனை..?

மறுபடியும் அடையமுடியா
வாழ்க்கையினை
வஞ்சம் சூது தவிர்த்து
மகிழ்வுடன் வாழ்ந்திருக்கலாமோ
பிறர் போற்ற
பிறருக்காக வாழ்ந்திருக்கலாமோ....??
மரணித்தவன் மனம் கதறுகிறது
மரணித்தபின்...!!
மகிழ்வுடன் வாழ
மறுபிறப்பு கிடைக்காதாவென
ஏங்கியேத் தவிக்கிறது
இருக்கும் போது வாழாத
இறந்தவனின் மனம்...!!!














Friday 4 October 2013

உணர்வுப்போராட்டம்..!!



உன்னிடம் பேசாது
மனச்சிறையில்
மௌனமாய் வைத்த 
வார்த்தைகள்...
அமைதிக்கெதிராய் 
போராட்டம் செய்கிறது
விடுதலைவேண்டி..!!

வார்த்தையும் உணர்ச்சியும்..
மௌனமும் புத்தியும்..
எதிர் எதிர் பக்கத்தில் 
நின்று நடத்தும் பட்டிமன்றத்தில்
வார்த்தை துறந்து 
உணர்வுகள் விடுபட்டுக் கதறியழ விரும்பும் 
உணர்வின் பக்கம் தீர்ப்பாக..

கண்ணீருக்கு விடுதலையளிக்க
விரும்பும் என் மனம் 
நிபந்தனை விதிக்கிறது 
நின்மடிவேண்டியே..!!

காலம் கைவிடாதென்ற 
நம்பிக்கையில்
நின்வருகையை எதிர்பார்த்து
கண்ணீருக்கு விடுதலையளிக்க
காத்திருக்கிறேன்
விரைவில் வருவாயோ என்னவனே..??!!