Sunday, 17 May 2015

மௌனத்தை நோக்கி....!!


காதல் கசிந்துருகி, மனதைக் கனியவைத்து
என் உள்ளம் களிப்படையச்செய்த
தமிழ்க் கவிதைகளைக் காணவில்லை…!
என் கோவம் கொன்று, மனதை வென்று
முகத்தோட்டத்தில்
மகிழ்ப்பூவை மலரச்செய்த
அவன்
அன்பு வார்த்தைகளைக் காணவில்லை…!!
ஐயிரண்டு விரல்களால்
அவனை ஆரத்தழுவி ஆறுதல் கூற…
சொல்லொனா சோகத்தை
வெளிப்படுத்திய
துயர வார்த்தைகளைக் காணவில்லை..!
மனம் வலுவிழக்கும் நேரத்தில்
பலமாய் நானிருக்கிறேன் - எனும்
நம்பிக்கை வார்த்தைகளைக் காணவில்லை..!!
சாதிக்கவேண்டுமென
சபதமேற்க வைக்கும்
அவன்
எழுச்சிவார்த்தைகளைக் காணவில்லை…!!
என் எண்ணங்களுக்கு வண்ணம்சேர்த்து
எழுத்தோவியமாய்ப் படைக்க
சிந்தனைகளைத் தூண்டிவிடும்
உற்சாகவார்த்தைகளைக் காணவில்லை..!
உற்றதோழனாய் நானிருக்கிறேன் - என்ற
நட்புவார்த்தைகளைக் காணவில்லை…!
ஊடலுக்கும், கூடலுக்கும் பாலமாய்..
மனதினில் எண்ணி எண்ணி
மந்தகாசப் புன்னகையை தோற்றுவித்து
உரையாடலைத் தொடரும்
காமம் கலந்த காதல் வார்த்தைகளைக் காணவில்லை…!!
அன்பு, காதல், நட்பு, பாசம்
காமம், குரோதம், பகை..
வெறுப்பு, மௌனம் என
எண்ணற்ற உணர்வுகளை
வார்த்தையில் வடித்தெடுத்த
காலமும் சென்றதோ…?!
உணர்வுருக்கள் உதவியுடன்
உணர்வுகளை வெளிப்படுத்தியே
பறந்துதிரிந்த சிந்தனைச் சிறகுகளை
வெட்டி வீழ்த்தி..
வார்த்தைகளை வற்றச்செய்ததோ…
வரமாய் வந்த உணர்வுருக்களுமே..??!
வார்த்தைகளைத் துறந்து வடிவங்களைப்பகிர்ந்து
நிரந்தர மௌனத்தை நோக்கிய பயணமோவிது..??
உணர்வுருக்களின் வருகை வரமா..?! சாபமா..?!

Friday, 15 May 2015

அன்னையர் தின கட்டுரைப்போட்டி - தமிழ்க்குடில் அறக்கட்டளை


அன்புத் தோழமைகளுக்கு தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கங்கள். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்க்குடில் கவிதை, கட்டுரைப் போட்டிகளை நடத்திவருவது தாங்கள் அறிந்ததே.

2015 ஆம் ஆண்டிற்கான போட்டிகளில் முதல் கட்டமாக ”அன்னையர் தினத்தை” முன்னிட்டு பெண்களுக்கான கட்டுரை போட்டிகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

போட்டி: அன்னையர் தினம் - பெண்களுக்கு மட்டும். smile emoticon


தலைப்பு : அன்னையை முன்னிறுத்தி உங்களுக்கு விருப்பமான தலைப்பில் எழுதவும். தங்கள் சிந்தனைகள் குறிப்பிட்ட ஒரு தலைப்பில் சுறுங்(க்)கி விடாமலிருக்க தலைப்பினை தேர்வு செய்வதை தங்களிடமே வழங்கியிருக்கிறோம். smile emoticon


விதிமுறை: குறைந்தது 3 பக்கம் முதல் 10 பக்கம் வரை இருக்கவேண்டும்.

படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 10.06.15 .

படைப்பாளிகள் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரியுடன் படைப்புகளை tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பிவைக்கப்படவேண்டும். குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது.

படைப்புகள் வேர்டு ஆவணமாக அனுப்பவேண்டுகிறோம். லதா, பாமினி ஒருங்குறியில் தட்டச்சு செய்து அனுப்பவேண்டுகிறோம். கவிதை எழுதியிருக்கும் பக்கத்தில் தங்கள் பெயர், முகவரி குறிப்பிடாமல் மின்னஞ்சலில் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.  போட்டி சம்பந்தமாக எழும் சந்தேகங்களை பதிவில் மட்டும் கேட்கும்படி வேண்டுகிறோம்.

முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்.

முதல் பரிசு: ரூ.1500/- மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்

இரண்டாவது பரிசு: தமிழ்க்குடில் வழங்கும் சிறப்புப்பரிசு மற்றும் சான்றிதழ்

மூன்றாவது பரிசு: நூல் மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்.

இதை போட்டி என்று மட்டுமே எண்ணாமல், நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கொள்ள வேண்டுகிறோம்.

நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக.
அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் உங்களுடன்,
-தமிழ்க்குடில்.

குறிப்பு. : இந்தப்பதிவை காணும் நண்பர்கள் தங்கள் நட்புகளிடத்தும் பகிர்ந்து அதிக எண்ணிக்கையிலான எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தவேண்டுகிறோம். போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம் எனவே தங்கள் நட்பு, சுற்றம் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்.

Thursday, 14 May 2015

தேவை ஒரு முகமூடி..!!

நேசத்திற்குரியவரை
அன்புமலர்களால் அர்ச்சிக்க...
நிராகரிக்கப்பட்டு 
குப்பையில் வீசப்பட்ட மலர்கள்
வழியும் விழிநீரில்
வதங்காது பாதுகாக்க.,
அம்பென வீசப்பட்ட
அலட்சிய வார்த்தைகள்
இதயத்தைக் கிழித்துக் கொணரும்
இரத்தவாடை 

மலரின் மணத்தை மாற்றாதிருக்க...
பாசமென பாசாங்கு செய்வோரின்
வேடத்தை அறிந்தும்
அறியாமலிருக்க..

இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகம்
மறந்திட...

நறுமணமிக்க புன்னகை மலரை
நிரந்திரமாய் அணிந்து
வலிமறைத்து வலம் வந்திட
தேவை ஒரு முகமூடி..! smile emoticon