முகப்பு...

Thursday 28 July 2011

யார் குற்றவாளி??










கண் முன்னே கொலை முயற்சி..
கை, கால் தளர்ந்து உடல் நடுநடுங்க.,
நெஞ்சு பதைபதைக்க.,
மெய் சிலிர்த்து தடுக்கவும் முடியாமல்,
மற்றவரைப் போல் ரசிக்கவும் முடியாமல்..


செய்வதறியாது சிறிது நேரம் சிலைபோல் நான்.
தன்னை மறந்து,
நத்தையைப் போல் முடங்குகிறேன்.,
பார்க்க மனமின்றி..


இங்கு இறைவன் கொடுத்த உயிரை எடுக்க,
இன்னொரு உயிர் துரத்துகிறது.,
அரசாங்க அனுமதியுடன்.!!
பார்த்து ரசிக்கிறது பல உயிர்கள்..
ஒரு உயிரின் இழப்பில் இன்பம் காணும்
இதுவும் ஒரு பிறவியா??






தன்னைக் காப்பாற்றிக் கொள்ள,
தகுந்த  இடம் தேடி
இறையை எண்ணி இங்குமங்கும் 
ஓடி, தானறிந்த மொழியிலே மரண ஓலமிடும்,
 
நாய்.......


இங்கு இறை கொடுத்த உயிரை,
எடுக்க நினைப்பவன் குற்றவாளியா?
நாயாகப் பிறந்தது அதன் குற்றமா?
இல்லை,
முரண்பாடான சிந்தனையையும், உயிரையும்
படைத்த அந்த இறைவன் குற்றவாளியா??
 
யார் குற்றவாளி??
 

 

Tuesday 19 July 2011

பிதாமகன்

எட்டுக் குழந்தைப் பெற்றெடுத்த
கங்கையே, ஏழுக்கு மோட்சமளித்து,
என்னை மட்டும் இத்தரணியில்
தனியாக தவிக்கவிட்டு சென்றதேனோ?

தந்தை கொடுத்த சத்தியத்தால்
நீ ஏழுக்கும் மோட்சமளித்தாய்..
அவர் சத்தியத்தை மீறியதால் 
என்னை விட்டுச் சென்றாய்...

சுயநலமிக்க மனிதர்களிடையே,
என்னை சிக்கவைத்துச்  சென்றாய் நீ...
உன்னை தந்தைக் கேட்ட கேள்விக்கு,
தண்டனை எனக்கெதற்கு?
பாசத்தின் வேரறுத்த பதிவிரதை நீயோ??

தந்தையைப் போல் நானும
சத்தியத்தைக் காப்பாற்ற...
சந்தோசம், சகோதரர்கள் என
சகலமும் இழந்தேனே...

தாயே,  தரணியில் என்னை விட்டுச்சென்றது
அம்புப் படுக்கையில் கிடத்ததானா?
தந்தையளித்த இச்சா மரணம்
வரமா இல்லை சாபமா??



Monday 11 July 2011

ஏக்கம்.....???


விட்டுகொடுப்பதுதான்
வாழ்க்கை என்றார்கள்!
விட்டுக்கொடுத்தேன்!!

என் பிறந்தவீட்டை,
என் நண்பர்களை,
என் சிறுபிள்ளைதனத்தை,
என் உயர்கல்வியை,
என் வளர்ச்சியை,

என் தனிப்பட்ட
விருப்பு-வெறுப்புக்களை,
என் எதிபார்ப்பை,
என் உணர்வை,

என் வாழ்நாள் முழுவதும்,
உன்விருப்பத்திற்கிணங்கி
என் விருப்பங்கள் யாவையும்
தியாகம் செய்த என் இறுதி மூச்சும் 
உனக்கு முன்பாகவே
நின்றுவிட ......
பெண்ணான
எனக்கு இறுதியில் மிஞ்சியது
"சுமங்கலி "
என்கிற வார்தை மட்டுமே.
இதில் எங்கே என் வாழ்க்கை ???
பெண்ணாக வாழ்ந்தேனே தவிர
என் விருப்பப்படி வாழவில்லையே!
என்கிற ஏக்கத்தோடே செல்லும்
என் உடல்.
..........பெண் .........




Wednesday 6 July 2011

ஆன்மாஞ்சலி



















நீ
எழுதிய அனைத்து
கவிதைகளையும்
இரசித்து வருணித்தவள் நான்

நீ
எனக்காக
வாசித்த கவிதையை 
இரசிக்க மட்டுமே
முடிந்த என்னால்
வருணிக்க முடியாமல் 
போனதே!

இரசிக்க மட்டுமே தெரிந்த
என் ஆன்மாவிற்கு,
வருணிக்கும் வரம்
இல்லாமல்
போனது ஏனோ?

ஓ!
நீ கவிதை சொன்னது,
என் சவத்திற்கு
முன்னால் அல்லவா..?!




Sunday 3 July 2011

சுறுசுறுப்பு



சுறுசுறுப்புக்கு உதாரணம் எறும்பாம்...
யார் சொன்னது?

நகரத்து மக்களைக் கண்டிருந்தால்
இப்படிக் கூறியிருக்க மாட்டார்கள்...

காலை நடைபயிற்சிக்கும், ஆரோக்கிய
உணவை சாப்பிடவும் நேரமில்லாமல்,

அவசர உணவை கிள்ளிச் சாப்பிட்டு...
அண்டை அயலாரின் முகம் தெரியாமல்...

நடை தவிர்த்த பயணத்தில்
மாசுக் காற்றை சுவாசித்து

அலுவலகம் சென்று...
கணினி முன்னாள் காலத்தை கழித்து...

அலைபேசியில் அன்பானவர்களுடன் 
அரை வார்த்தைப் பேசி நலன் விசாரித்து...

இரம்மியமான மாலைப் பொழுதை தவிர்த்து...
இரவு வீடு திரும்பி...

அன்பான மனைவியிடம் 
கொஞ்சிப்பேச நேரமில்லாமல்...

மழலையை மடியேந்தி 
மகிழ நேரமில்லை...

அன்னை மடியில் உறங்க
நேரமில்லை...

தந்தை உடல்நலம், தாயின் மனநலம்
காண நேரமில்லை...

சகோதர, சகோதரியிடம் பாசமுடன் 
நேசம் காண நேரமில்லை...

நட்பு பாராட்ட
நேரமில்லை...

இப்படி எதற்குமே நேரம்
இல்லாமல்...

எங்கே செல்கிறோம்? ஏன் செல்கிறோம்?
என்று கூட அறியாமல்...

ஓடிக்கொண்டிருக்கும்...
நகரத்து மக்களை விட

அந்த எறும்பு என்ன 
அத்தனை "சுறுசுறுப்பா "??

Saturday 2 July 2011

குருதியின் வேர்கள்

கலிங்கத்து மன்னா!

நீ
அன்னையிடம் குடித்தது
பாலா அல்லது குருதியா?!

மனிதர்களைக் கொல்வது வெற்றியா?
கொள்வதில் வெற்றியா?

அன்று,
தாய்ப்பால் அருந்தியவன்
இன்று,
குருதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளானே!

அன்று,
என் கரம் பிடித்து நடந்தவன்
இன்று,
காலனின் கரம் பிடித்தானே!!

அன்று,
அன்னை மடி உறங்கியவன்,
இன்று,
மண்ணில் மீளா உறக்கத்திற்குச் 
சென்றானே!!

இனி,
அன்னை என்றழைக்க
பிள்ளை ஒன்றில்லையே...

பிள்ளைக்குக் கொல்லிவைத்த
பாவியாக்கி விட்டாயே!

நீ
கண்ட வெற்றியால்,
என் தாய்மைக்கு பதில் கூற முடியுமா?

உன்னுடைய இந்த வெற்றி
உயிரை அளிக்க முடியுமா?
பிணக்குவியலுக்கு இடையில்,
வெற்றி விழா வைத்து,
வேடிக்கை காணும்...
விபரீதம்தான் ஏன்??