முகப்பு...

Thursday 24 November 2011

அவன்=துரோணர்+பார்த்தசாரதி


என்னை.,
அர்ஜுனனாய்  ஆக்கி பார்க்க
நினைக்கும் துரோணர் அங்கே..

அர்ஜுனனாய் ஆக நினைக்கும்
நானோ
இங்கே..

எனக்கு
பிரபஞ்சத்தையே
புரிய வைக்க நினைக்கும்
பார்த்தசாரதியும் அங்கே.

பிரபஞ்சத்தையே
அறிந்திட நினைக்கும்
நானோ
இங்கே...

என்னை.,
எனக்கு அறியவைக்க விரும்பும்.,
பார்த்தசாரதியோ
அங்கே...

என் மனமோ
சிந்தனையைத் தூண்டும்
துரோணரை நாட..

அங்கே.,
துரோணரோ.,
தன்னையறிய தவத்தில்...!!

மனத்தை பக்குவப்படுத்தும் பார்த்தசாரதியும்.,
அறிவைத்தூண்டும் துரோணருமானவன்
அருகிலேயே இருந்தால்....!!
மனம் விரும்ப.,

என்னை அர்ஜுனனாக்குவது.,
மட்டுமா துரோணரின் வேலை..?
புத்தி வினவ..!!

புத்திக்கும், மனதிற்கும் இடையில்
உழலும் என்னை..
மீட்பாரா பார்த்தசாரதியாகிய துரோணர்...?

Saturday 19 November 2011

விதவையின் காதல்....




அறியாப் பருவத்தில் .. 
அக்னியை வலம் வந்து
கட்டியவன் கை பிடித்து
கணவன் வீடு செல்ல..

வாழ்வையறியு முன்னே..
நான் வாழ்விழக்க .,
வாழ்வையறிவதெப்படி..?
வாழ்வதெப்போது....?

அகமுடையவனின் அருகாமையை.,
அவன் அமரன் ஆனதும் உணர்த்தும் 
விதியை என்ன சொல்ல?

  நித்தமும் நோக்கும் கண்ணாடி
பொட்டிழந்த நெற்றியைப் பிரதிபலிக்க..

வண்ணக்கோலமிட்ட வாசலோ
வனாந்தரமாய்....

தாலியிழந்த கழுத்தும்,  
மலர் சூடா கூந்தலும்.,
மங்கையிவளைக் கலங்க வைக்க..

வளையலணியா வெறும் கையும்..
வெறுமையினை உணர்த்த..

வெள்ளைச்சேலையோ என்
விதியை நினைவூட்ட...

 பிறந்த வீட்டுப் பொக்கிசமாம்...
 பொட்டையும், பூவையும் 
 பாவையென்னிடம் பறித்ததேனோ...?

மெட்டியணியா கால்களோ
என் மனதை அழுத்த... 
அன்பாய் பழகிய அண்டை வீட்டாருமே
அபசகுணமாய் நோக்க....
       
 காலனவன் கட்டியவனை காதலிக்க
 கட்டியவனோ.,
 எனைவிட்டு சென்றுவிட.,
 விதி செய்த சதிக்கு.,
 எனை விதவையென விலக்குவதேன்..?
   
எவரும் அறியா நேரத்தில்..
எனை அலங்கரித்துப் பார்க்க..

மல்லிகையின் மணமதுவோ..
என் மந்தகாச உணர்வைத் தூண்ட....

அந்திநேரம் தேகமது.,
அனுதினமும் அகமுடையவனின் 
அணைப்பைத் தேட...
அகால மரணமடைந்தவன் 
அணைப்பதும் சாத்தியமா..??!!
  
கட்டியவனின் காதலைக் கசங்காத
மெத்தை விரிப்பும் நினைவூட்ட..

கண்ணீரால் ஈரமான தலையணையும்.,
கதைகள் பல கூறுமே....!!

வாழ்வையறியா என் வாழ்வில்
வாழ்வை உணர்த்த..
விதவையான என் வாழ்வில்
வசந்தமாய் அவனும்  நுழைய..

நான் காதலெனும் பள்ளியில்
அவனிடம் கல்வி பயிலத் துவங்க...

ஊண் இன்றி, உறக்கம் தொலைத்து..
ஞாயிறையும், திங்களையும் 
ஒரு கோட்டில் கண்டுணர்ந்து.,
காதலில் பட்டமும் வெல்ல..

கன்னியவள் காதலுற்றாள்.
தோழியிடம் பகிரலாம்..

கைம்பெண் உற்ற காதலை
கூறுவது யாரிடம்..

காதலும், கலவியும் விதவைக்கு மட்டும்
விதிவிலக்கா...??

கவலையுடன் மனமும் கலங்கி..
பசலைநோயால் வாடும் எனைப் 
பக்குவப்படுத்தும் மருந்துதான் என்ன?

மையல் கொண்ட மங்கையோ..
மனதினுள் மருகி..

தேகம் இளைக்கும்..சோகம் யாரரிவார்..?

எதிர்காலத்தை சொர்க்கமாக்க 
விரும்பும் மனம்....
நிகழ்காலமோ  எனை நிந்திக்கிறது..

வசந்தத்தை அனுபவிக்க  மனமும் துடிக்க...
புத்தியேனோ தடை போட...

கன்னியவள் காதலையே.
புறக்கணிக்கும் பூமி இது.

கைம்பெண்ணின் காதலையும் 
ஆதரிப்பார் உளரோ இங்கே..??

Sunday 13 November 2011

கதிரவன்.....

கதிரவனே., 

வெட்கத்தினால்
பெண்களுக்கு மட்டுமல்ல.,
ஆண்களுக்கும்,
கண்ணம் சிவக்கும் என்பதை.,

நீ
கண்ணுறங்கும்
வேளையில்,
உன் நிலாக்காதலியை
காண நேரிட்டதால்...
உண்டான வெட்கத்தினால்,
உந்தன் கண்ணம்
சிவந்ததைக் கண்டு
உணர்ந்தேன்... 

                                *************************************************


மெல்ல.,
கேசம் ஒதுக்கி,
நெற்றிப்பொட்டு களைய..

ஆடைகளைத் தளர்த்தி...

நா வறண்டு.,
உடல் அயன்று....

காலிரண்டும்பின்னி,
தன்னிலை மறந்து போய்..
அப்பப்பா...

ஓ, கதிரவனே,
உன் கதிர்வீச்சைக் குறைத்துக்கொள்..
வெட்கை தாங்கமுடியவில்லை...!!
                                                           

Sunday 6 November 2011

காட்சிப்பிழை.....!!!

கதிரவன் கண்விழிக்கும் முன் எழுந்து,

பூமியவள் மனம் குளிர நீர் தெளித்து,
வண்ணக்கோலத்தால் அலங்கரித்து...

கடலை மாவும், கஸ்தூரி மஞ்சளின்
நறுமணமும் வீச...

இன்னமும் காயாத ஈரக்கூந்தலிலிருந்து சொட்டும்
நீரால் ஈரமான ரவிக்கையும்,

குங்குமப் பொட்டும், மயக்கும் மல்லிகையின் மணமும்

சிலிர்பூட்ட....

சாம்பிராணியின் புகையும்,
மணியோசையுமாய்...

புன்னகையுடன் அன்பாய் என்னை
அவள் எழுப்ப புன்னகைத்தபடி விழிக்கிறேன்...

அலைபேசியின் அலறல்..
அழகு நிலையத்தில் அவள் காத்திருக்கிறாளாம்...!!
நான் அழைத்து வருவதற்காக...

ஓ! நான் கண்டது கனவா??!!

இரட்டை உணர்ச்சி.....


அவள் காதலுக்காய்
மலரை சுற்றும்  வண்டாய் மனம் காத்திருக்க......

தாமரையிலைத் தண்ணீராய் அவள்..
வருணனுக்குத் தவமிருக்கும்
வறண்ட நிலமாய் அவன்...

காத்திருப்பதும் சுகம்தானே
காதலிலே..

காலம் கனிய,
அத்திப்பூவாய் அவளும் குறுநகை புரிய
மேகத்தைக் கண்ட மயிலாய் உள்ளம்..

அவள் நெருங்கி வர..
மனம்  தடுமாறுகிறது மகிழ்ச்சியில்..

தேர்வு முடிவுக்கு காத்திருக்கும்
மாணவனாய் உள்ளத்தில் உணர்ச்சிப் போராட்டம்..
வீசும் தென்றலிலும் வியர்க்கும் முகம்..


அவள் மீதான காதலும்.,
மெல்லிய அச்சமும்
வாழ்க்கைக்கான ஒத்திகையும் ...
மனதில் மாறி மாறி..


அவள் இதழ் அசைவிற்காய்.,
ஏங்கும் மனம்......
                                 
                   
கன்னியவள் காந்தப் பார்வையை  வீசி
அவன் மீதான காதலை ....
நாணமுடன் நாசூக்காய் வெளிப்படுத்த...
                        
தேன் குடித்த நரியாய் மனம் 
ஆட்டமிடுகிறது  உற்சாகத்தில்...

இந்தப் பிரபஞ்சமே தனதாய்  உணருகிறான்..
தன் காதல் வென்றதால்..

மெல்ல கடிதம் நீட்டுகிறாள் ..
மங்கையவள் மறையும் வரை காத்திருக்கும்
நிமிடங்களும் வருடங்களாய் உணர
இடிவிழப்போவதை அறியாதவனாய்.,
மடலைப் பிரிக்க..

உன் வயப்பட்டு வாடும் மனம்
தன்வயம் இழக்கத் தவிக்கிறது..

ஊமை கண்ட கனவாய்..
காலத்தின் கோரப்பிடியில் கைதியாகி..

இருதலைக்கொள்ளி எறும்பாய் பரிதவிக்கும்.,
எனை மறப்பாய், மன்னிப்பாய் என் மனமே..!!
காதல் வென்றதும், மரித்ததும் அன்றே..

பிரபஞ்சமே "தனதாய்” உணர்ந்தவன்.,
பிரபஞ்சத்தில்  "தனியாய்"  உணருகிறான்...

இடியுடன் கூடிய மழையாய்....
பிறப்பும், இறப்பும் ஒரே கோட்டில்
மகிழ்வதா?   அழுவதா ??

செய்வதறியாது...
இரட்டை உணர்ச்சியில் துடிக்கும் இவனை..

சமாதானப்படுத்துவது யார்? எப்படி??

Thursday 3 November 2011

கவிக்குடும்பம்....



கவிஞனே...,
நீ
என் கரம் பிடித்த
நாள் முதலாய்
உலகம் மறந்தேன்...

கண  நேரமும் உனைப்பிரியா 
வரம் கேட்டேன் கடவுளிடம்...
பருவம் கொண்ட நாள் முதலாய்., 
பக்குவமாய் காத்திருந்தது உன்
பார்வைப் படத்தானோ….??

நாம் இருவரும் கைகோர்த்து
நாள்தோறும் கவிதை பேச….

நந்தவனமாய்
நம் வாழ்வு மணக்க....
ஆகாயத்தை வீடாய் அமைத்து.,
வானவில்லை வீட்டின் தோரணமாக்கி….

நிலவை விளக்காக்கி,
விண்மீன்களை பொருட்களாக்கி...

கவிதை பேசி களைத்து போன  நீ
குடிப்பதற்கு கங்கையைக் கொணர்ந்து...

குளிப்பதற்கு குற்றால நீர்வீழ்ச்சியை
வீட்டிலமைத்து...

பசியாற செந்தமிழில் 
கவிதை சமைத்து...

வெண்முகிலை மெத்தையாக்கி..
தென்றலை சாமரமாக்கி...

உன் கவிதை சொல்ல,
அந்தக் கண்ணனையும், கலைமகளையும்
குழந்தைகளாய்ப் பெற்றெடுத்து,
குதூகலமாய் குடும்பம்
அமைப்போம்...

கண்ணனையும்,கலைமகளையும்
குழந்தைகளாய் அடைந்த நீ..

அவர்களின் மழலையில் 
நீயும் குழந்தையாகி குதூகளித்து
என்னையும் களிப்படையச் செய்கிறாய்..

அன்று,
கற்பனையில் கல்லையும், புல்லையும்..
கவிதைகளாக்கியவன்..

இன்று,
குழந்தைகளின் சத்தம், முத்தம்,
சிரிப்பு, அழுகை, நடை,தூக்கம்...
என அனைத்தையும்
காவியமாய் மாற்றுகிறாய்..
கற்பனையில்  கவிதையமைத்த உனக்கு
இன்று.,
கடவுளே குழந்தைகளாய் கிடைத்தபின்
காவியமாக்காமல் விடுவாயா....??

கவிஞனும் நீயே....
என் காவியத்தலைவனும் நீயே....

Wednesday 2 November 2011

கானல் நீர்.....


ஜனனி  தன்  சீமந்தம் முடிந்து தலைப்பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு குதூகலமாய் சென்றாள். கனவுகளுடன் தன் குருதியில் உருவாகும் குழந்தையைக் காணும் ஆவலில் நீண்ட நாட்கள் தன் கணவனைப் பிரிந்து இருக்க வேண்டியதையும் மறந்தவாறு அவள்...
நாட்கள் கனவுகளுடன் நகர்ந்தது.  மெல்ல இடுப்பு வலி எட்டிப் பார்க்க, பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றிய கற்பனையில் வலியை மறந்து  ஜனனி. எட்டாம் மாசக் குழந்தை தொட்டில் ஏறாதே, கடவுளே இது பிரசவ வலியாக இருக்கக் கூடாதேஎன ஜனனியின் தாய் பதட்டத்தில்.  துணைக்கு யாரும் இல்லாத நேரம்..  அருகில் இருப்பதோ ஒரே ஒரு அரசு மருத்துவமனை. வேறு வழியில்லாமல் அழைத்துச் செல்ல...

அழகான ஆண் குழந்தையைப்  பெற்றெடுத்தாள்...ஜனனியும்தாயும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க..முதல் குழந்தை அதுவும் ஆண் குழந்தை, அவர்களின் மகிழ்விற்கு எல்லை ஏது?  அதிக நேரம் நீடிக்கவில்லை அந்த மகிழ்ச்சி...குழந்தையின்  மூளைக்கு இரத்தம் செல்லவில்லையாம்.. செவிலித்தாய்  குழந்தையை அவசரப் பிரிவிற்கு அள்ளிச் செல்ல, ஜனனி மயக்க நிலையில்..தாயோ கவலையின் உச்சத்தில்..நல்லபடியாக குழந்தை பிழைக்க வேண்டுமே என நினைவில் வந்த அனைத்து தெய்வங்களையும் வேண்டி நின்றாள்..

ஜனனி  கண்விழித்தவுடன், அம்மா குழந்தை எங்கே? சிகிச்சை நடைபெறுகிறது..இரண்டு நாள் நீ பால் கொடுக்க கூடாதாம்..மருத்துவர் சொன்னார்..ஏன்? அதிர்ந்தாள் ஜனனி..குழந்தை உடல் பாதிக்குமாம்..பிறந்த குழந்தைக்கு பால் கொடுக்கக் கூட முடியவில்லையே..உள்ளூர வருந்தினாலும்,  அம்மா கவலைப் படக்கூடாதே எனஇரண்டு நாள் தானே என்று தன்னை சமாதானப்  படுத்திக்கொண்டாள்..அம்மா ஏன் முகத்தில் கவலையாக இருக்கிறாய் ஜனனி கேட்க, அப்படியெல்லாம் இல்லை..சற்று சோர்வாக   இருக்கு அவ்வளவுதான்

அன்று மதியம்  ஜனனியின் மாமனாரும்,மாமியாரும் வர, அவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்ற ஜனனி குழந்தையைப் பார்த்தீர்களா என கேட்க, ஹம்ம் பார்த்தோம்..என்று கூறியபடியே..உங்களுக்கு வேறு மருத்துவமனையே கிடைக்கவில்லையா..அனைவரும் வந்து செல்லும் இந்த அரசாங்க மருத்துவமனையில் சேர்த்து..இப்படி எங்களையெல்லாம் இங்கே வரவழைத்து விட்டீர்களே என கடிந்தார் மாமனார். புன்னகையுடன் அமைதியாய் ஜனனி.

மாலை அனைவரும் வீடு திரும்ப, கார் வரவழைத்து அனைவரும் அமர்ந்தபிறகு, ஜனனி  அம்மாவிடம், குழந்தையை ஏன் இன்னும் அழைத்து வரவில்லை என புருவம் உயர்த்த, “குழந்தை இன்னும் இரண்டு நாள் இங்கு சிகிச்சை பெற வேண்டுமாம்..நீ இருக்க வேண்டிய அவசியம் இல்லை என மருத்துவர்கள் கூறிவிட்டனர்..நான் வந்து கவனித்துக் கொள்கிறேன் வா அம்மாவைப் பின் தொடர்ந்து காரில் அமர்ந்தாள்.
வீட்டு வாசலையடைந்த  ஜனனி குழந்தையில்லாமல்  தான் மட்டும் தனியாக செல்வதை எண்ணி வெறுமையாய் உணர்ந்தபடியே உள்ளே நுழைய எத்தனிக்க என்ன ஜனனிமா  உன் புள்ள இறந்துட்டானாமே..? பாவம் தளச்சம்புள்ளைய இப்படி பறிகொடுத்திட்டியே தாயி...
ஐயோ பாட்டிம்மா, மெதுவா பேசுங்க.அம்மா காதுல விழுந்தா சண்டைக்கு வந்துடுவாங்க..குழந்தை இறக்கவில்லை..நல்லாத்தான் இருக்கான்..நாளைக்கு அழைச்சிக்கிட்டு வந்திடுவோம். ஜனனியை ஒருமாதிரி பார்த்தவாறே உள்ளே சென்ற பாட்டி..எவ்வளவு அழகான பிள்ளை இப்படி சவமா வந்திருக்கானே அழுகுரல்  கேட்க, உள்ளே விரைந்து சென்ற ஜனனி அந்தக் காட்சியைக் கண்டதும் சிலையாய் உறைந்து நின்றாள். பையிலிருந்து இறந்த குழந்தையை வெளியில் எடுத்துக்கொண்டிருந்தாள் அம்மா..

இப்படி உத்துப் பாக்காத தாயி அழுதிடுமா என பக்கத்து வீட்டுப் பாட்டி கூற, அம்மா இறந்த தன் குழந்தையைக் கையில் கொடுக்க..நெருப்பிலிட்ட புழுவாய் மனம் துடிக்கிறது..அழக்கூடத் தோன்றாமல் மனம் கணக்க, அப்படியே உட்கார்ந்து அமைதி காத்தாள்..இரண்டு பாட்டியும் குழந்தைக்கு செய்ய வெண்டிய சடங்குகளை செய்து முடித்து வீட்டின் கொல்லைப்புறத்தில் குழந்தையைப் புதைத்தும் ஆயிற்று.. தன் உணர்வை வெளிப்படுத்தக் கூடத் தெரியாமல் மௌனத்தைத் தொடர்ந்தாள் ஜனனி.

கொல்லைப்புறம் செல்லும்போதெல்லாம், குழந்தையின் முகம் கண்ணில் தோன்றுகிறது..இரவில் குழந்தை அழும் குரல் கேட்டால் தன் குழந்தை அழுவதாய் உணர்ந்து பாலூட்ட எத்தனிக்க, அழுதது தன் குழந்தை இல்லை என தன்னுணர்வு பெற்று., பின் இரவெல்லாம் விழித்து கண்ணீரில் கரைந்த இரவுகள் காலமெல்லாம் நினைவில் வருகிறது.

அவள் நினைவில் வந்து உறுத்துவது குழந்தையின் இறப்பு மட்டுமல்ல.
தன் குழந்தையைப் பரிகொடுத்ததுக் கூடத் தெரியாமல் இருக்கும் ஒரு தாயிடம் ஆறுதலாய் பேசக் கூடத் தோன்றாமல் ஆசாரத்தை மனதில் கொண்டு அரசாங்க மருத்துவமையில் சேர்த்ததற்காக சண்டையிட்ட தன் மாமனார், மாமியாரின் மனிதாபிமானமற்ற செயலை நினைக்கையில் இப்படியும் மனிதர்களா என்ற விரக்தியும் மேலோங்கி நின்றது....

பாசமில்லா இடத்தில்,  பாசத்தை எதிர்நோக்கும் இவள் கானல் நீரை அருந்தக் காத்திருக்கும் பேதையோ....??

இப்படி பாசமற்ற மனிதர்களிடம் பாசத்தை எதிர்பார்த்தது அவள் குற்றமாஅல்லது பாசத்தை எதிர்பார்ப்பவளிடம் பாசத்தைக் காட்டாதது அவர்கள் குற்றமா?