அறியாப் பருவத்தில் ..
அக்னியை வலம் வந்து
கட்டியவன் கை பிடித்து
கணவன் வீடு செல்ல..
வாழ்வையறியு முன்னே..
நான் வாழ்விழக்க .,
வாழ்வையறிவதெப்படி..?
வாழ்வதெப்போது....?
அகமுடையவனின் அருகாமையை.,
அவன் அமரன் ஆனதும் உணர்த்தும்
விதியை என்ன சொல்ல?
நித்தமும் நோக்கும் கண்ணாடி
பொட்டிழந்த நெற்றியைப் பிரதிபலிக்க..
வண்ணக்கோலமிட்ட வாசலோ
வனாந்தரமாய்....
தாலியிழந்த கழுத்தும்,
மலர் சூடா கூந்தலும்.,
மங்கையிவளைக் கலங்க வைக்க..
வளையலணியா வெறும் கையும்..
வெறுமையினை உணர்த்த..
வெள்ளைச்சேலையோ என்
விதியை நினைவூட்ட...
பிறந்த வீட்டுப் பொக்கிசமாம்...
பொட்டையும், பூவையும்
பாவையென்னிடம் பறித்ததேனோ...?
மெட்டியணியா கால்களோ
என் மனதை அழுத்த...
அன்பாய் பழகிய அண்டை வீட்டாருமே
அபசகுணமாய் நோக்க....
காலனவன் கட்டியவனை காதலிக்க
கட்டியவனோ.,
எனைவிட்டு சென்றுவிட.,
விதி செய்த சதிக்கு.,
எனை விதவையென விலக்குவதேன்..?
எவரும் அறியா நேரத்தில்..
எனை அலங்கரித்துப் பார்க்க..
மல்லிகையின் மணமதுவோ..
என் மந்தகாச உணர்வைத் தூண்ட....
அந்திநேரம் தேகமது.,
அனுதினமும் அகமுடையவனின்
அணைப்பைத் தேட...
அகால மரணமடைந்தவன்
அணைப்பதும் சாத்தியமா..??!!
கட்டியவனின் காதலைக் கசங்காத
மெத்தை விரிப்பும் நினைவூட்ட..
கண்ணீரால் ஈரமான தலையணையும்.,
கதைகள் பல கூறுமே....!!
வாழ்வையறியா என் வாழ்வில்
வாழ்வை உணர்த்த..
விதவையான என் வாழ்வில்
வசந்தமாய் அவனும் நுழைய..
நான் காதலெனும் பள்ளியில்
அவனிடம் கல்வி பயிலத் துவங்க...
ஊண் இன்றி, உறக்கம் தொலைத்து..
ஞாயிறையும், திங்களையும்
ஒரு கோட்டில் கண்டுணர்ந்து.,
காதலில் பட்டமும் வெல்ல..
கன்னியவள் காதலுற்றாள்.,
தோழியிடம் பகிரலாம்..
கைம்பெண் உற்ற காதலை
கூறுவது யாரிடம்..
காதலும், கலவியும் விதவைக்கு மட்டும்
விதிவிலக்கா...??
கவலையுடன் மனமும் கலங்கி..
பசலைநோயால் வாடும் எனைப்
பக்குவப்படுத்தும் மருந்துதான் என்ன?
மையல் கொண்ட மங்கையோ..
மனதினுள் மருகி..
தேகம் இளைக்கும்..சோகம் யாரரிவார்..?
எதிர்காலத்தை சொர்க்கமாக்க
விரும்பும் மனம்....
நிகழ்காலமோ எனை நிந்திக்கிறது..
வசந்தத்தை அனுபவிக்க மனமும் துடிக்க...
புத்தியேனோ தடை போட...
கன்னியவள் காதலையே.,
புறக்கணிக்கும் பூமி இது.
கைம்பெண்ணின் காதலையும்
ஆதரிப்பார் உளரோ இங்கே..??
வலிகள் நிறைந்த வரிகள்
ReplyDeleteதாழ்வு மனப்பான்மை கொண்ட பெண் போலும் ......
:):)
Deleteகன்னியவள் காதலுற்றாள்.,
ReplyDeleteதோழியிடம் பகிரலாம்..
கைம்பெண் உற்ற காதலை
கூறுவது யாரிடம்..
நல்ல கருப்பொருள் உள்ள கவிதை... இப்போது காலங்கள் கொஞ்சம் மாறுகிறது... விதவைகள் இன்னமும் பழைய கட்டுப்பெட்டித்தனத்தில் கட்டுண்டு கிடக்கும் காலம் இனி மெல்லச்சாகும் என்று நம்புவோம்...
மாற்றம் வரின் மகிழ்ச்சியே தோழமையே...
Delete