Sunday, 28 December 2014

தத்துவச்சிதறல்கள்...

ஞானம்தேடுபவர்களுக்கு
பெண் ஒரு போதிமரம் ..!
மோகமடைந்தவர்களுக்கு 
அவளொரு போ(மோ)கப்பொருள்...!
************
பசியோடு இருப்பவனையழைத்து
பந்தி பரிமாறி 
உணவருந்த எத்தனிக்கையில்..
கரம் தடுத்து வெளியேறவைப்பது போன்றமையும் 
வாழ்க்கை சிலபலநேரங்களில்.
****
பற்றற்ற தன்மையை அடைந்தேன் 
என உணரும்போதே 
பற்றற்ற தன்மையை 
பற்றியிருப்பதிலிருந்து பற்றறுக்கப்படவில்லை 
என்பது உணர்த்தப்படுகிறது..
******

அறிந்தும்,அறியாமலும்...

வார்த்தைகள் உதிர்ப்பவர்களை பொறுத்தே சில பல நேரங்களில் அர்த்தங்கள் கொள்ளப்படு(ம்)கின்றன.
*********
தவறே செய்யாமல் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டு தண்டனை ஏற்கும் அந்த தருணம், வாழ்வின்  ஒட்டுமொத்த தன்னம்பிக்கையும் நொறுக்கப்படும் நேரமாக அமைந்துவிடும். :)
*******
அன்புப்பரிசை பகிர்ந்துகொள்ள காத்திருக்கும் நொடியில் அலட்சியம் பரிசாக வழங்கப்படும் தருணம் வாழ்க்கையில் தன்னைத்தானே வெறுக்கும் நிமிடமாக அமைந்துவிடும்... :)
*******
பொய்களை விதைத்து உண்மைகளை அறுவடை செய்யும் உயரிய சிந்தனை மனிதர்களுக்கே சாத்தியமாகிறது.
*******

Tuesday, 16 December 2014

அன்பெனப்படுவது...

என் மரணத்தை ஒத்திவைக்கும் மருந்து அவனுடைய அன்பு குரல்..:)

****
நம் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தையின்றித் தடுமாறும்(தோற்றுப்போகும்) தருணம், நமக்கான வார்த்தைகளை மனதாள்பவன் உதிர்க்க... மகிழ்ச்சியில் மௌனமாய் இரசித்து அமைதிப்புன்னகை சிந்துவது. :)

****
உலகத்தில் உள்ள இன்பங்கள் அனைத்தும் ஒருபுறம் நிற்க அன்புக்குரியவர் ஒருபுறமிருக்க அவனே(ளே)  அனைத்துமென அவன்(ள்)பக்கம் நிற்பது...:)
****

Friday, 12 December 2014

தமிழ்க்குடில் அறக்கட்டளை கவிதை/கட்டுரை போட்டி பரிசு பெற்றவர்கள் விவரம்..

அன்பு சொந்தங்களுக்கு அன்பான வணக்கம், 

மகாகவி பாரதியின் 132வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்திய கவிதை, கட்டுரை மற்றும் பெண்களுக்கான சிறப்பு கட்டுரை போட்டியின் முடிவுகளை இன்று அறிவிப்பதாக சொல்லியிருந்தோம்.  தோழமைகள் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறியக் காத்திருப்பீர்கள் என்பதால் இதோ தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் முடிவுகள்..

முடிவுகள் அறியும் முன்பு, தங்களுடைய வாழ்க்கைப்பணி, தமிழ்ப்பணி என பல பணிகளுக்கு நடுவில், தங்களுடைய  சிரமம் கருதாமல் நம் தமிழ்க்குடிலுக்காக குறுகிய கால அவகாசத்தில் சிறந்த கவிதைகளையும், கட்டுரைகளையும் தேர்வு செய்து கொடுத்த நடுவர்கள் பற்றிய சிறு அறிமுகம். அவர்களுக்கு தமிழ்க்குடில் குடும்ப உறுப்பினர்கள்  சார்பாகவும், தமிழ்க்குடில் நிர்வாகம் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

கவிதைப்போட்டிக்கான நடுவர்கள்: 

1. முனைவர் வ.வே.சு அவர்கள்   கவிஞர், பேச்சாளர், கட்டுரையாளர்.  தொலைக்காட்சி, வானொலி என பல மேடைகள் சந்தித்தவர். கவிமாமணி(1987) திருப்புகழ் மாமணி (1999) பாரதி விருது-Chennai Dawn-அமைப்பு(2001) விருதுகள் பெற்றவர்.  கல்லூரி ஆசிரியர். ஓய்வுக்கு முன் ஏற்றிருந்த பணி-முதல்வர், சென்னை விவேகானந்தா கல்லூரி.  கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை- திரையிசையிலும் ஈடுபாடுகொண்டவர்.  எழுதியுள்ள புத்தகங்கள்: தொடமுயன்ற தொடுவானம் (கவிதை நூல்); My review book on Kulothungan's Manuda yaaththirai வெளியிடுவதற்கு தயாராக உள்ளது. தற்போது: Director, Phyco Spectrum Consultants (Pvt)Ltd Chennai. அவருடைய பணிகள் ஆற்றிய, ஆற்றிக்கொண்டிருக்கும் சேவைகள் பற்றி குறிப்பிட எங்களுக்கு விருப்பம் எனினும் படிக்கும் உங்களுக்கு முடிவுகள் அறிவதிலேயே ஆர்வம் காட்டுவீர்கள் என்பதால் திரு.வவேசு ஐயா பற்றிய விவரம் இத்துடன் நிறுத்திக்கொண்டு, அடுத்ததாக  கவிதைபோட்டியில் நடுவராக பொறுப்பேற்றிருக்கும்

2. கவிமாமணி இலந்தை சு.இராமசாமி அவர்கள் இலந்தை சு இராமசாமி, காகுத்தன், வீரபத்ர வில்லவராயன் என்ற புனைப்பெயர்களை கொண்ட கவிமாமணி இலந்தை சு. இராமசாமி அவர்கள், கவிமாமணி, சந்தத் தமிழ்க்கடல், பாரதி பணிச் செல்வர்,  சந்தக்கவிச் சிந்தாமணி என பல விருதுகளை வாங்கி தமிழன்னையின் மகுடத்திற்கு அழகு சேர்த்திருக்கிறார். எமக்குத் தொழில் கவிதை எனக்கூறும் இவர் Divisional engineer, Telephones  பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர் 30 புத்தகங்கள் எழுதியுள்ளார். பேராசிரியர் அ.சீ.ரா வின் மாணவரான இவர். 1000க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். 300க்கும் மேற்பட்ட கவியரங்கத் தலைமை சந்தவசந்தம்,  மரபுமலர்கள் குழுமங்களின் மட்டுறுத்துனராக உள்ளார். கவிதை, இலக்கியம், மொழிபெயர்ப்பு, சொற்பொழிவுகளில் ஈடுபாடுகொண்டவர். இவர் எழுதிய நூல்களில் சில: பாரதி வாழ்வும் வாக்கும், அன்றாடம் மலரும் அறிவியல் பூக்கள், பொருநை வெள்ளம்- கவிதைத் தொகுதி) வள்ளுவ வாயில் மற்றும் பல.

கட்டுரைப் போட்டியின் நடுவர்கள்

1. இராஜ.தியாகராஜன் அவர்கள் புதுச்சேரியில் வசிக்கும் இவர், இளங்கலை (பொருளாதாரம்), ஒரு கணினிப் பட்டயம் படித்திருந்தாலும் தமிழின்மீது இவர் கொண்ட காதல் வார்த்தையில் அடங்காது. நம் தமிழ்க்குடில் ஆண்டுவிழாவில் நிகழ்ந்த கவியரங்கத்திற்கு தலைமையேற்ற இவர் அனைவருக்கும் பரிச்சயமானவரே. இவரைப்பற்றிய விவரங்கள் முழுவதும் வழங்கினால் படிக்கும்பொறுமை தங்களில் இருக்குமா எனும் அளவு ஏதும் செய்திடவில்லை எனமிகுந்த தன்னடக்கத்துடன் கூறிக்கொள்ளும் இவர் பெற்ற விருதுகள் விவரம்: நிலவுப் பாவலன் விருது, பாவேந்தர் பற்றாளர் விருது, மகாகவி பாரதி விருது. நடுவண் அரசு ஆதரவுடன் வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளன் விருது.  மின்னிதழும் நடத்திவருவதோடு, தமிழ் ஒருங்குறியில் வலைப்பூ உருவாக்கியிருக்கிறார்.  இதுவரை தோராயமாக1000த்திற்கும் அதிகமான பாக்கள் எழுதியுள்ளார்.  கணினியில், இணையத்தில் தமிழ், தமிழ், தமிழ், தமிழ், தமிழ் கூடவே கர்நாடக இசை என்று  சொல்லப்படும் தமிழிசையில் ஈடுபாடு உடையவர். இணையத்திலும், இதழ்களிலும் நிறைய எழுதியிருந்தாலும், நூலென்று இதுவரை வெளியிட வில்லை.   நான்கைந்து ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களை உருவாக்கி, மின்னிதழ் வாயிலாக அனைவருக்கும் பயன்படத் தருகிறார். அவருடைய வலைப்பூக்கள்:


2.முனைவர் அண்ணாகண்ணன் அவர்கள் கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 19 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ!, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர். மும்பையில் இயங்கும் மொஃபர்ஸ்ட் நிறுவனத்தின் தமிழ் மொழியாக்கக் குழுவுக்குத் தலைவராகவும் இருக்கிறார்.

நடுவர்களுக்கு மீண்டும் உங்கள் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதோடு போட்டியில் வெற்றிபெற்றவர்கள் விவரங்கள் தங்கள் பார்வைக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

கவிதைப்போட்டி:

முதல் பரிசு               :      மாலினி பாலாஜி – முதல் கவிதை    

இரண்டாம் பரிசு      :      திரு.இளஞ்செழியன் – நான்..நான்..நான்..             

மூன்றாம் பரிசு         :      பிரசன்னா தமிழ் – என்னுடைய பங்கு

கட்டுரைப்போட்டி:

முதல் பரிசு               :       - பரிவ. சே.குமார் – வெளிநாட்டு வாழ்க்கை           

இரண்டாம் பரிசு      :       ஜாரா – என் வாழ்வில் பெண் என்பவள்

மூன்றாம் பரிசு         :       முத்துராஜ் தமிழகத்தில் அகத்தியலில் ஆணும் புறத்தியலில்                                                                          பெண்ணும் 

பெண்களுக்கான சிறப்பு கட்டுரைப்போட்டி:

முதல் பரிசு                :     மீரா ஜானகிராமன்  -   நான் படைக்க விரும்பும் சமூகம்.

இரண்டாமிடம்          :     சித்திரப்பாவை(ஸ்டெல்லா தமிழரசி) பெண்                             
                                              விரும்பும் ஆணின் பரிணாமம்- காதலன்,   கணவன், மகன்.

மூன்றாமிடம்           :    அபிராமி உமாசங்கர் மற்றும் மணிமேகலை கைலைவாசன் 
                                              நான் படைக்க விரும்பும் சமூகம் 

குறிப்பு: மதிப்பீட்டில் அதிக வித்தியாசம் இல்லாத காரணத்தினால், நடுவர்களின் பரிந்துரையால் இருவருக்கும் மூன்றாம் பரிசு வழங்கப்படுகிறது.

பரிசு பெற்ற அனைவருக்கும் நடுவர்கள் சார்பாகவும், தமிழ்க்குடில் குடும்ப உறுப்பினர்கள் சார்பாகவும், தமிழ்க்குடில் அறக்கட்டளை நிர்வாகத்தின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

போட்டியில் பங்குகொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியும், வாழ்த்துகளும்.
இனிவரும் போட்டிகளிலும் தொடர்ந்து பெருமளவில் பங்குகொண்டு சிறப்பித்து தமிழ்க்குடிலின் செயல்பாடுகளில் தொடர்ந்திருக்க வேண்டி வாழ்த்தி விடைபெறுகிறோம்.

என்றென்றும் அன்புடன்,

தமிழ்க்குடில் அறக்கட்டளை

Tuesday, 9 December 2014

அன்புச்சிதறல்கள்...அவனை 
சிந்திக்கையில்
சூல்கொள்ளும் 
சிந்தனை முட்டைகளனைத்தும்
வார்த்தை குழந்தைகளை 
பிரசவிப்பதில்லை
சந்திக்கும் வேளையில்..:)
***
சிந்தனை 
சிறைபிடிக்கப்பட்டு
மனக்கூட்டுக்குள்...
மகிழ்ச்சி விருந்தளிக்கப்படுகிறது..
உனை 
சந்தித்த வேளையை
சிந்திக்கையில்...:)

*******
அவனை 
சிந்திக்கும் வேளையில்
சிலையாகிப்போகிறேன்...
சந்திக்கும் வேளையில்
சிறகடித்துப் பறக்கிறேன்..!!

****

Friday, 5 December 2014

தமிழ்க்குடில் போட்டி நாள் நீட்டிப்பு...

அன்புத்தோழமைகளுக்கு இனிய வணக்கங்கள்.

தமிழ்க்குடில் அறக்கட்டளை அறிவித்திருந்த கவிதை, கட்டுரை, பெண்களுக்கான சிறப்பு கட்டுரை போட்டி படைப்பாளிகளின் வேண்டுகோளை ஏற்று (07.12.14) வரை (இன்னும் இரண்டு நாட்கள்) நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழமைகள் விரும்பியபடி இன்னும் இரண்டு நாட்களுக்குள் தங்கள் பதிவுகளை அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பெண்களுக்கான சிறப்பு கட்டுரை எழுதுங்க.. பெண்களுக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரத்தியேக போட்டியில் பெண்கள் முழுஅளவில் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இதுவரை விவரம் அறியாதவர்கள் கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பைக் கண்டு விதிமுறைகளும், விவரங்களும் அறிந்து பதிவுகளை அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.