Thursday, 8 March 2012

இன்றைய பெண்கள்...


பெண்கள்:  பெண் என்பவள் சக்தி..ஆக்கமும் அவளே...அழிவும் அவளே..நல்லதை உற்பத்தி செய்பவள்.  தீயதை அழிப்பவள்.  பெண்கள் நாட்டின் கண்கள்... தன்னை வருத்தி தன்னைச் சார்ந்தவர்களுக்காக நித்தமும் ஓடும் தியாகத்தின் பிரதிபலிப்பு.  ஒரு கிலோ எடையைக்கூட அடிக்கொருதரம் கைமாற்றுபவர்களுக்கிடையில், தன் வயிற்றில் சுமக்கும் தன் வாரிசை இடையில் இறக்கிவைக்காமல் பேணிக்காக்கும் உன்னதம்.. தன் குழந்தைக்கு  உதிரத்தையே பாலாய் புகட்டும் உயர்வு.... பெண்ணாய்ப் பிறப்பதும் மாதவமே..
பெண்களின் அன்றைய நிலை: அன்று பருவமடைந்த பெண் பள்ளிக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டது.  அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என பெண்களின் அன்றாட வாழ்வு அடுக்களையிலேயே கழிந்தது.  கருத்துரிமை கிடையாது. அந்நிய ஆணிடம் பேசுவதற்கே அஞ்சினார்கள்.  இளவயதிலேயே  திருமணம் செய்துவிடுவதால் வெளிஉலகம் அறியும் முன்னே வாழ்க்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.  ஒவ்வொரு நிலையிலும், தந்தை, சகோதரன், கணவன் என ஆணுக்கு கட்டுப்பட்டு அவர்களைச் சார்ந்தே  தன் சுயம் இழந்து வாழ்ந்தார்கள்.  இளவயதிலேயே கணவனை இழந்தாலும் தன் வாழ்வு அதோடு முடிந்துவிட்டதாகவே வெறுமையான வாழ்வை மேற்கொண்டனர் விரும்பியோ, விரும்பாமலோ..
பெண்களின் இன்றைய நிலை:  இன்றைய பெண்கள் தங்களின்  வாழ்வை அவர்களே  நிர்ணயம் செய்து கொள்ளும் வல்லமை கொண்டுள்ளார்கள்.  பருவமடைந்த பிறகும் பட்டங்கள் பல வென்று பதவிகள் பல வகிக்கிறார்கள்.  ஆண்களிடம் பேசுவதற்கே அஞ்சியவர்களும் இன்று ஆண்களிடம் பாலினம் கடந்த  நட்பு பாராட்டும் அளவிற்கு அவர்களின் இன்றைய நிலை உயர்ந்துள்ளது.  அந்தி நேரத்தில் வெளியில் செல்ல தயங்கியவர்களும் இன்று பணி காரணமாக அதிகாலை வீடு திரும்புகின்றனர்.  இன்று தனக்கான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் பக்குவமும், உரிமையும் பெற்றுள்ளனர்.
முன்னேற்றம்:  இன்றைய பெண்களின் வளர்ச்சி வியப்பையே அளிக்கிறது.  நாடாளுகிறாள்.. நட்சத்திரமாய் ஜொலிக்கிறாள். விண்வெளியில் பயணம் என  வளர்ந்து ஆணுக்கு சமமாக அனைத்துத் துறையிலும் ஒளிவீசி வருகிறாள்.  வீடே உலகமென இருந்தவர்கள் கணினி, இணையம் என உலகத்தையும் வீட்டில் காண்கிறாள். ஆண்களுக்கே உறிய விளையாட்டிலும் கூட பெண்கள் பங்குகொண்டு அசாத்தியமான சாதனை படைக்கிறார்கள்.  பொருளாதார ரீதியாகவும் இன்று வலுப்பெற்றுள்ள பெண்கள் தங்களுடைய தேவைகளுக்காக யாரையும் எதிர்பார்க்காமல் தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் அளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள்.  திருமண வாழ்வு சரியில்லாது போனால் அதை நேர்செய்து தன் வாழ்வை அமைத்துக்கொண்டு சுதந்திரமாக செயல்படுகின்றனர்..
அவர்களின் சமூகப் பார்வை:  சமூக அமைப்பில் பெண்கள் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.. இருப்பினும் முழு அளவில் அவர்களது சமூக பார்வை திருப்திகரமாக இருக்கிறதா என்றால் இல்லை என்பதே வருத்தமான உண்மை. இன்றும் சமூகம் சார்ந்தவர்களை உதாரணம் சொல்லவேண்டும் எனில் அன்னை தெரசா, நைட்டிங்க் கேர்ள் என அழைக்கப்பட்ட  சரோஜினி நாயுடு போன்றோரைத் தான் உதாரணம் காட்டி வருகிறோம்.. அன்னை தெரசாவைப் போல் முழுவதும் சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் அளவு இன்னும் பெண்களிடையே மனப்பக்குவம் வரவில்லை என்பதே உண்மை.
சமூகத்தில் பெண்கள்:  இன்றைய பெண்கள் பொருளாதாரத்திலும் மற்றும் அனைத்து துறையிலும் முன்னேற்றம் அடைந்திருப்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு இன்றும்  பல இடங்களில் பெண்கள் மதிக்கப்படுவதில்லை என்பதும் உண்மையே. ஆணுக்குச் சமமாக பதவி வகிப்பதையும், ஆண்களைப் போல் உடையணிவதையுமே சுதந்திரம், வளர்ச்சி முன்னேற்றம் என திருப்தியடையும் பெண்கள் பலர். முதலில் ஒரு பெண்ணை மற்றொரு பெண் சமமாக பாவிக்க வேண்டும். அந்தப் பக்குவம் இன்னும் இன்றைய பெண்களிடம் இல்லாதது துரதிருஷ்ட வசமானது.  பெண்கள் வளர்ச்சி, முன்னேற்றம், சுதந்திரம் என்பது என்ன என்பதை முதலில் உணர வேண்டும். நாகரீக ஆடை அணிவதும், ஆணுக்கு சமமான நட்பு போற்றுவதும், பொருளாதாரத்தில் வளர்ச்சியும், கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக தன் மனம் நினைத்தபடி வாழ்வை தீர்மானம் செய்வது மட்டும் அல்ல முன்னேற்றம்..உண்மையான முன்னேற்றம், வளர்ச்சி என்பது வீட்டில் துவங்க வேண்டும்.  எப்பொழுது ஒரு தாய், தகப்பன், சகோதரன் மட்டும் அல்ல கணவன், மாமியார், மாமனார் என அனைவரும் ஒரு பெண்ணின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பதோடு, அவர்களை ஊக்கமளித்துப் பாராட்டுகிறார்களோ அப்பொழுதுதான் அது உண்மையான வளர்ச்சியாக கருதப்படும்.  

வீட்டில் கிடைக்கும் ஊக்கமே பெண்களை சமூகத்தை நோக்கி தன் பார்வையைத் திருப்புவதற்கு உதவியாக இருக்கும். என்று ஒரு கணவன் தன் மனைவி தெரசாவாகவும், ஜான்சிராணியாகவும், நைட்டிங்க் கேர்ள் அம்மையாராகவும் பிரதிபலிக்க வேண்டும் என விரும்பி ஊக்கப்படுத்துகிறானோ அன்றுதான் பெண்கள் வளர்ச்சி அடைந்துள்ளார்கள் என்பது நிரூபனமாகும். இன்று வளர்ச்சியில் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் பெண்கள் வளர்ச்சியை மட்டும் அடைய வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு செயல்படவேண்டும்......!!
No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__