Tuesday, 24 September 2013

பயணங்கள்...!!!ஆதவன் கண்விழிக்க 
அவசர அவசரமாய்
படிப்பதற்கு சிலரும்
படிப்பிக்க சிலருமாய்
பள்ளிக்குப் பயணம்..!!

அடிமையென பணிபுரிவதே
அன்றாடக் கடமையென சிலர்...
பணியாளர்களின் 
குருதி சுவைக்க சிலரென
அலுவலகத்திற்குப் பயணம்...!!

இல்லத்துப்பணி முடித்து..
பிற இல்லப்பணி முடிக்க
பணிப்பெண்களின் பயணம்..!!

இல்லத்து வேலைகளும் 
இன்னலெனக் கருதி
நட்புகளுடன் பொழுதுபோக்க 
இல்லத்தரசிகளின் 
கடைவீதிப் பயணம்..!!

பிறக்கப்போகும் குழந்தைக்கும்
தாயுக்குமான பிரார்த்தனையோடு 
சிலரின் பயணம்..!!

பிறந்த குழந்தையை
காணச்செல்லும் பயணம்..
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு
பயணம்..!!

எவரும் அறியாவகையில்
காதலன் காதலியின் 
முகத்திரையிட்ட பயணம்..!!

பகிரங்கமாய் காதல்வெளிப்படுத்தும்
கன்னியர்களின் துணிச்சல் பயணம்..!!

படிப்பு முடித்தவர்களின்
பணிதேடும் போராட்டப் பயணம்..!!

அரசுக்கெதிரான போராட்டப்பயணம்..
போராட்டத்தை ஒடுக்க அதிகாரிகளின் பயணம்...!!

திருமணக் கனவுகளை சுமந்தபடி
இல்லற வாழ்க்கைத்தேடிய பயணம்..!!

திருமண முறிவுக்கென
நீதிமன்றம் நோக்கிய பயணம்..!!

உறவுகள் வளர்க்கும் உன்னதப் பயணம்..!!

விடுமுறைக்கழிக்க
குடும்பத்துடன் சுற்றுப் பயணம்..!

உள்சுமந்து உள்ளத்தில் சுமந்தோரை
முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் பயணம்..!!

அவசர சிகிச்சைக்கென 
அனுமதிக்கப்பட்ட அன்புடையோரை 
பார்வையிடும் பயணம்..!!

ஆன்மதேடலின் 
ஆன்மீகப் பயணம்..!!

இவ்வுலகம் துறந்தவர்களின் 
இறுதிப் பயணம்..
இறுதிப் பயணத்தில் 
ஈடுபடப் பயணமென

நிரந்தரமில்லா 
வாழ்க்கைப் பயணத்தில்
வலி, மகிழ்ச்சி, துன்பம்
பாராட்டு, இகழ்ச்சி, சூழ்ச்சி
ஏமாற்றம், எதிர்பார்ப்பு,
நட்பு, எதிர்ப்பு,உறவு,பிரிவு..
பிறப்பு, இறப்பென...
ஒவ்வொரு நாளும் 
ஆயிரமாயிரம் கனவுகள்
சுமந்தபடி அன்றாடம்
மேற்கொள்ளப்படும் பயணங்கள்
அணுதினமும் தொடர்கிறது
எதைத்தேடுகிறோம் என்றறியாமல்
எதையோ தேடியபடியே...!!Thursday, 19 September 2013

ரோஜாவும், நானும்...

இடம்: ரோஜாவும், மல்லிகையும் நிறைந்த வீட்டுத்தோட்டம்.

சூழல்: மலர்ச்செடிகளை பார்வையிட்டு புதிதாக ஒரு மரக்கன்று நட முயற்சிக்கும் தோட்டக்காரனிடம்(என்னிடம்) ரோஜா தன் எண்ணங்களைப் பகிர்தல்.

பாத்திரங்கள்: ரோஜா, தோட்டக்காரன்(ரி) மற்றும் மல்லி.
                    *****
ரோஜா: என்ன செய்துகொண்டிருக்கிறாய்..?

நான்: மரக்கன்று நடுகிறேன்..

ரோஜா: ஓ...அப்படியா..? நல்லது என்ன கன்று அது..?

நான்: நிழல்தரும் மருத்துவகுணம் வாய்ந்த வேம்புமரம்

ரோஜா: ஓ..!! ----------

நான்: என்ன அமைதியா இருக்க..? ஏன்.?

ரோஜா: ஒன்றுமில்லை...அழகுசேர்க்கும் பல வண்ண வண்ண ரோஜா மலர்களும், மணம்தரும் மல்லிகையும் நிறைந்த இந்த நம்வீட்டுத்தோட்டத்தில் வேம்பு மரமா..?

நான்: ம்ம்..அதனால் என்ன..? இதன்காற்று உடலுக்கு மிகவும் நல்லது.  மருத்துவகுணம் நிறைந்தது...

ரோஜா:  இருக்கலாம்,..மறுக்கவில்லை.  ஆனால், மலர்தோட்டத்தில் நிழல்தரும் இந்த மரம்...சிறுசெடிகளுக்கு இடையூறாக இருக்கலாம்..அதோடு இந்தத்தோட்டத்திற்கு ஏற்றதாகத் தெரியவில்லை.  குப்பை அதிகம் சேரவும் வாய்ப்பு இருக்கே..

நான்: ம்ம்...ஆம்... யாரிடத்தில்தான் குறை இல்லை..? ஒரு குறை இருப்பதாலேயே ஒதுக்கிவிட முடியுமா என்ன..?  ஏன் உன்னிடத்தில் இல்லையா..?

ரோஜா: உண்மைதான்...மல்லிகையும், ரோஜாவும் மட்டும் தோட்டமாகாது..மறுக்கவில்லை.  அதற்காக ஒதுக்கிவிடவும் சொல்லவில்லை.. அதற்கான இடத்தில் அதற்கான நேரத்தில் வைக்கலாமே என்றுதான் சொன்னேன்.  என்னிடத்தில் குறையா..?

நான்: ம்ம்...ஆம் உன்னிடத்தில்தான்..ஏன் உனக்குத்தெரியாதா..? முதலில் அடுத்தவரிடத்தில் குறை காண்பதை நிறுத்து.

ரோஜா: என்னகுறை என நீயே சொல்லவேண்டியதுதானே..? நான் யாரிடத்தும் குறைகாணவில்லை.  இந்த இடத்தில் இந்த மரத்தேர்வு சரியில்லை என்றே கூறினேன்..மரத்தையோ, மரத்தின் குணத்தையோ குறை கூறவில்லை. சரி, தவறென்று பேசுவது குறையாகுமா..?
நான்: எனக்குத்தெரியும்...எப்பொழுது எதை வைப்பது, எங்கே வைப்பது என்று.  உனக்கான பணியை மட்டும் செய்.

ரோஜா: ஏன். என் பணியில் என்ன குறை..? நான் எதுவும் உபயோகமாக செய்யவில்லையா அல்லது கேட்கும் தகுதி இல்லையா..?

நான்: என்ன செய்துவிட்டாய்...பெரிதாக..?

ரோஜா: J  நீ கூறுவதும் ஒருவகையில் உண்மைதான்.  நானாக தனித்து என்ன செய்தேன்..?? முதன்முதலாய், எங்கோ இருந்த என்னை உன் தோட்டத்தில் நீரூற்றி, உரம் சேர்த்து, மகிழ்ச்சியுடன் உன்னுடைய நேரத்தை செலவழித்து, நித்தமும் பாடுபட்டு வளர்த்தாய்.  உன் உழைப்பு விரயமாகிவிடக்கூடாதே என்றும் உன்மீதான அன்பிலும் வெறும் செடியாகமட்டுமிராது, உணர்வுகளையும் கூட்டி மணம் வீசும் அழகிய மலர்களை வழங்கி அனைவரையும் மகிழச்செய்து, தோட்டத்தை நிரப்ப பல மலர்ச்செடிகளை உருவாக்கிக்கொடுத்து....,

நான்: இல்லையென்று கூறவில்லையே...!! 

ரோஜா: என்னைப் பார்த்து,பார்த்து வளர்த்ததுபோல், நானும், இந்தத்தோட்டத்து வளர்ச்சியில் என்னை முழுமனதுடன் ஈடுபடுத்திக்கொள்ளத் துவங்கிவிட்டேன்.  தோட்டக்காரியான நீ என்மீது அன்பும், அக்கறையும் கொண்டதுபோலவே இந்தத்தோட்டம் என்னுடையது என்ற உரிமை என்னையறியாமல் ஏற்படத்துவங்கிவிட்டது.  என் ஆலோசனைகளையும் ஏற்பாய் என்று கருதிவிட்டேன்.   

ஒரு தோட்டத்து செடிகளுக்கு பூத்துக்குலுங்கி தன் மணம்வீசும் குணத்தால்  மகிழ்வித்து  பதியங்கள் பல கொடுத்து தோட்டம் நிறைத்து செடிகள் பலவளர வழிவகுப்பதோடு  எல்லை முடிந்தது என்பதை உணர்ந்தேன்.  தோட்டத்தில் வளரும் செடிகள் தங்களைக் கலைந்துசெல்லும் மேகமெனக் கருதாமல் தன்னையே வானமாய் சிந்தித்துத் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கின்றன.  நானும் அப்படியே மடமையில் இருந்துவிட்டேன். சுடுகாட்டில் அடுத்த பிணம் வரும்வரைதானே எரியும் பிணத்திற்கு இடம்...? எரியும் பிணம் எனக்கான இடம் என்ற எண்ணத்திலா எரிகிறது..?? அப்படித்தான் இதுவும். 

நான்: உனக்கு விருப்பமில்லையெனில் இந்த மரக்கன்றை எடுத்துவிடவா..? நீ விரும்பும் செடிகளை நடலாம்...?!

ரோஜா: எதற்காக..??!! நட்டபிறகு ஒரு மரக்கன்றை பிடுங்கி அதன் இயல்புகுணம் மாற நான் காரணமாக இருக்கவிரும்பவில்லை.  நடுவதற்கு முன் யோசிக்கவில்லை. நட்டபிறகு யோசித்து பிரயோசனம் இல்லை.  இனி என் எல்லையறிந்துகொண்டேன்.

நான்: பதிலேதும் உரைக்காமல் நகர...

மல்லி: உனை நீயே உயர்த்திக்கொண்டாயோ...? ரோஜாவைக்கண்டு நகைத்த மல்லி தொடர்ந்து, இதற்குத்தான் நான் உண்டு என் வேலை உண்டு என மலர்வதும், மரிப்பதுமாய் இருக்கிறேன்.
  .
ரோஜா: புன்னகை கலையாது...அதனால் என்ன..? சில உண்மைகள் சிலநேரம் உணரப்படுவதில்லை.  உணர்த்தப்படுகின்றன அவ்வளவே.  உணர்ந்தாலும், உணர்த்தப்பட்டாலும் உண்மையை ஏற்கத்தானே செய்யவேண்டும்...?!! அதில் என்ன தவறு..? அறியாமல் கொண்ட எண்ணங்களுக்கு அவரவர்களே பொறுப்பாவார்கள். 

மல்லி: இனி உன் வழி செல்...அனாவசியமாக தோட்டமே என்னுடையது என்றில்லாமல் மலர்வதும், உதிர்வதுமாய் இருந்துவிடு.

ரோஜா: இறைவனிடம் பக்தி கொள்கிறோம்.  கண்முன்னே காட்சி கொடுப்பதில்லை என்பதற்காக வழிபாடுகளை நிறுத்துவதில்லையே.?  அர்ப்பணிப்பில் சுயநலமான எதிர்பார்ப்பு இருக்காது. மலர்தலும், மரித்தலும் வெறும் செயலாக இராமல் வழக்கமான நம் தோட்டம், நம் தோட்டக்காரி(ரன்) என்ற உரிமை மாறாது எதிர்பார்ப்பு இன்றித் தொடருவோம். அதற்காக ஏன் நம் இயல்பை மாற்றிக்கொள்ள வேண்டும்.? மணம் வீசி மனதைக் கவரும் தன்மையுடைய நீயும், அழகுசேர்த்து பார்ப்பவர் முகத்தில் புன்னகை தவழச்செய்யும் நானும் கடமைக்கென மலர்ந்து மரிப்பதற்காக மட்டும் தோன்றவில்லையே..??

இந்தத்தோட்டத்தில் தொடர்ந்து மலர்ந்து மணம்வீசி, அழகுசேர்த்து, பதியம் கொடுத்து தோட்டத்திற்கு வருகை தருபவர்களுக்கும், நம்மை பராமரிப்பவருக்கும் மகிழ்ச்சியளித்து புன்னகை சிந்தி வரவேற்போம்.

மல்லி:----- J


Wednesday, 18 September 2013

அறிந்தும்,அறியாமல்...

ஆயிரம் அன்புச்சொற்களையும்
மறக்கச்செய்கிறது
அலட்சியமாய் உதிர்க்கப்படும்
ஒற்றை கடுஞ்சொல்...
--
மகிழ்வுகளைத் தொலைத்து 
வலிகளை வாங்கிக்கொள்கிறோம் 
சிறு சிறு எதிர்பார்ப்புகளில்
நம்மையறியாமலேயே ..
--
கலைந்துசெல்லும் மேகமெனும் 
வாழ்க்கைப்பயணத்தில்..
தானே நிரந்தரமென 
தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் மனம்..!!!
---

Tuesday, 17 September 2013

மனச்சிதறல்..!!

மனத்தின் மணமறிந்து
மனதாள்பவன்...
மனமறியாது
அள்ளிவீசும் வார்த்தைப்பூக்களில்
எழும் திராவக நெடியை நுகரமுடியாது
உயிருக்குத் துடிக்கும் நீரில்லா மீனாய்​...

இதயவெள்ளத்தில்
பெருக்கெடுக்கும் உணர்ச்சிகள்
உற்றார்களை அடித்துச்செல்லாதிருக்க
என் மௌனங்கள் மதகாகின்றன..!!
மௌனத்தின் மொழியறிந்த
வார்த்தையின் வாசம்விரும்பாதவனே..
விருப்பத்தின்
விருப்பத்திற்காய்
விரும்பியேற்கிறேன் மௌனத்தை...:)
என் மௌனம் உனை மகிழ்விக்கட்டும்...!!