முகப்பு...

Thursday, 19 September 2013

ரோஜாவும், நானும்...

இடம்: ரோஜாவும், மல்லிகையும் நிறைந்த வீட்டுத்தோட்டம்.

சூழல்: மலர்ச்செடிகளை பார்வையிட்டு புதிதாக ஒரு மரக்கன்று நட முயற்சிக்கும் தோட்டக்காரனிடம்(என்னிடம்) ரோஜா தன் எண்ணங்களைப் பகிர்தல்.

பாத்திரங்கள்: ரோஜா, தோட்டக்காரன்(ரி) மற்றும் மல்லி.
                    *****
ரோஜா: என்ன செய்துகொண்டிருக்கிறாய்..?

நான்: மரக்கன்று நடுகிறேன்..

ரோஜா: ஓ...அப்படியா..? நல்லது என்ன கன்று அது..?

நான்: நிழல்தரும் மருத்துவகுணம் வாய்ந்த வேம்புமரம்

ரோஜா: ஓ..!! ----------

நான்: என்ன அமைதியா இருக்க..? ஏன்.?

ரோஜா: ஒன்றுமில்லை...அழகுசேர்க்கும் பல வண்ண வண்ண ரோஜா மலர்களும், மணம்தரும் மல்லிகையும் நிறைந்த இந்த நம்வீட்டுத்தோட்டத்தில் வேம்பு மரமா..?

நான்: ம்ம்..அதனால் என்ன..? இதன்காற்று உடலுக்கு மிகவும் நல்லது.  மருத்துவகுணம் நிறைந்தது...

ரோஜா:  இருக்கலாம்,..மறுக்கவில்லை.  ஆனால், மலர்தோட்டத்தில் நிழல்தரும் இந்த மரம்...சிறுசெடிகளுக்கு இடையூறாக இருக்கலாம்..அதோடு இந்தத்தோட்டத்திற்கு ஏற்றதாகத் தெரியவில்லை.  குப்பை அதிகம் சேரவும் வாய்ப்பு இருக்கே..

நான்: ம்ம்...ஆம்... யாரிடத்தில்தான் குறை இல்லை..? ஒரு குறை இருப்பதாலேயே ஒதுக்கிவிட முடியுமா என்ன..?  ஏன் உன்னிடத்தில் இல்லையா..?

ரோஜா: உண்மைதான்...மல்லிகையும், ரோஜாவும் மட்டும் தோட்டமாகாது..மறுக்கவில்லை.  அதற்காக ஒதுக்கிவிடவும் சொல்லவில்லை.. அதற்கான இடத்தில் அதற்கான நேரத்தில் வைக்கலாமே என்றுதான் சொன்னேன்.  என்னிடத்தில் குறையா..?

நான்: ம்ம்...ஆம் உன்னிடத்தில்தான்..ஏன் உனக்குத்தெரியாதா..? முதலில் அடுத்தவரிடத்தில் குறை காண்பதை நிறுத்து.

ரோஜா: என்னகுறை என நீயே சொல்லவேண்டியதுதானே..? நான் யாரிடத்தும் குறைகாணவில்லை.  இந்த இடத்தில் இந்த மரத்தேர்வு சரியில்லை என்றே கூறினேன்..மரத்தையோ, மரத்தின் குணத்தையோ குறை கூறவில்லை. சரி, தவறென்று பேசுவது குறையாகுமா..?
நான்: எனக்குத்தெரியும்...எப்பொழுது எதை வைப்பது, எங்கே வைப்பது என்று.  உனக்கான பணியை மட்டும் செய்.

ரோஜா: ஏன். என் பணியில் என்ன குறை..? நான் எதுவும் உபயோகமாக செய்யவில்லையா அல்லது கேட்கும் தகுதி இல்லையா..?

நான்: என்ன செய்துவிட்டாய்...பெரிதாக..?

ரோஜா: J  நீ கூறுவதும் ஒருவகையில் உண்மைதான்.  நானாக தனித்து என்ன செய்தேன்..?? முதன்முதலாய், எங்கோ இருந்த என்னை உன் தோட்டத்தில் நீரூற்றி, உரம் சேர்த்து, மகிழ்ச்சியுடன் உன்னுடைய நேரத்தை செலவழித்து, நித்தமும் பாடுபட்டு வளர்த்தாய்.  உன் உழைப்பு விரயமாகிவிடக்கூடாதே என்றும் உன்மீதான அன்பிலும் வெறும் செடியாகமட்டுமிராது, உணர்வுகளையும் கூட்டி மணம் வீசும் அழகிய மலர்களை வழங்கி அனைவரையும் மகிழச்செய்து, தோட்டத்தை நிரப்ப பல மலர்ச்செடிகளை உருவாக்கிக்கொடுத்து....,

நான்: இல்லையென்று கூறவில்லையே...!! 

ரோஜா: என்னைப் பார்த்து,பார்த்து வளர்த்ததுபோல், நானும், இந்தத்தோட்டத்து வளர்ச்சியில் என்னை முழுமனதுடன் ஈடுபடுத்திக்கொள்ளத் துவங்கிவிட்டேன்.  தோட்டக்காரியான நீ என்மீது அன்பும், அக்கறையும் கொண்டதுபோலவே இந்தத்தோட்டம் என்னுடையது என்ற உரிமை என்னையறியாமல் ஏற்படத்துவங்கிவிட்டது.  என் ஆலோசனைகளையும் ஏற்பாய் என்று கருதிவிட்டேன்.   

ஒரு தோட்டத்து செடிகளுக்கு பூத்துக்குலுங்கி தன் மணம்வீசும் குணத்தால்  மகிழ்வித்து  பதியங்கள் பல கொடுத்து தோட்டம் நிறைத்து செடிகள் பலவளர வழிவகுப்பதோடு  எல்லை முடிந்தது என்பதை உணர்ந்தேன்.  தோட்டத்தில் வளரும் செடிகள் தங்களைக் கலைந்துசெல்லும் மேகமெனக் கருதாமல் தன்னையே வானமாய் சிந்தித்துத் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கின்றன.  நானும் அப்படியே மடமையில் இருந்துவிட்டேன். சுடுகாட்டில் அடுத்த பிணம் வரும்வரைதானே எரியும் பிணத்திற்கு இடம்...? எரியும் பிணம் எனக்கான இடம் என்ற எண்ணத்திலா எரிகிறது..?? அப்படித்தான் இதுவும். 

நான்: உனக்கு விருப்பமில்லையெனில் இந்த மரக்கன்றை எடுத்துவிடவா..? நீ விரும்பும் செடிகளை நடலாம்...?!

ரோஜா: எதற்காக..??!! நட்டபிறகு ஒரு மரக்கன்றை பிடுங்கி அதன் இயல்புகுணம் மாற நான் காரணமாக இருக்கவிரும்பவில்லை.  நடுவதற்கு முன் யோசிக்கவில்லை. நட்டபிறகு யோசித்து பிரயோசனம் இல்லை.  இனி என் எல்லையறிந்துகொண்டேன்.

நான்: பதிலேதும் உரைக்காமல் நகர...

மல்லி: உனை நீயே உயர்த்திக்கொண்டாயோ...? ரோஜாவைக்கண்டு நகைத்த மல்லி தொடர்ந்து, இதற்குத்தான் நான் உண்டு என் வேலை உண்டு என மலர்வதும், மரிப்பதுமாய் இருக்கிறேன்.
  .
ரோஜா: புன்னகை கலையாது...அதனால் என்ன..? சில உண்மைகள் சிலநேரம் உணரப்படுவதில்லை.  உணர்த்தப்படுகின்றன அவ்வளவே.  உணர்ந்தாலும், உணர்த்தப்பட்டாலும் உண்மையை ஏற்கத்தானே செய்யவேண்டும்...?!! அதில் என்ன தவறு..? அறியாமல் கொண்ட எண்ணங்களுக்கு அவரவர்களே பொறுப்பாவார்கள். 

மல்லி: இனி உன் வழி செல்...அனாவசியமாக தோட்டமே என்னுடையது என்றில்லாமல் மலர்வதும், உதிர்வதுமாய் இருந்துவிடு.

ரோஜா: இறைவனிடம் பக்தி கொள்கிறோம்.  கண்முன்னே காட்சி கொடுப்பதில்லை என்பதற்காக வழிபாடுகளை நிறுத்துவதில்லையே.?  அர்ப்பணிப்பில் சுயநலமான எதிர்பார்ப்பு இருக்காது. மலர்தலும், மரித்தலும் வெறும் செயலாக இராமல் வழக்கமான நம் தோட்டம், நம் தோட்டக்காரி(ரன்) என்ற உரிமை மாறாது எதிர்பார்ப்பு இன்றித் தொடருவோம். அதற்காக ஏன் நம் இயல்பை மாற்றிக்கொள்ள வேண்டும்.? மணம் வீசி மனதைக் கவரும் தன்மையுடைய நீயும், அழகுசேர்த்து பார்ப்பவர் முகத்தில் புன்னகை தவழச்செய்யும் நானும் கடமைக்கென மலர்ந்து மரிப்பதற்காக மட்டும் தோன்றவில்லையே..??

இந்தத்தோட்டத்தில் தொடர்ந்து மலர்ந்து மணம்வீசி, அழகுசேர்த்து, பதியம் கொடுத்து தோட்டத்திற்கு வருகை தருபவர்களுக்கும், நம்மை பராமரிப்பவருக்கும் மகிழ்ச்சியளித்து புன்னகை சிந்தி வரவேற்போம்.

மல்லி:----- J


10 comments:

  1. அக்கா...
    கவிக்காயத்ரி எப்போ மல்லி ஆனீங்க...
    கலக்குங்க...
    நல்ல பதிவு...

    ReplyDelete
  2. மிகவும் அழகான [கற்பனை] உரையாடல்கள்.

    நன்கு ரஸித்துப்படித்தேன்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்..நன்றி ஐயா..தங்கள் வாழ்த்து வளமாக்கட்டும்..:)

      Delete
  3. ரோஜாவும் நானும் உரையாடல் அருமை.
    தோட்ட உரிமையாளர் யோசிக்காமல் மரக்கன்றினை நட்டுவதை ஆரம்பத்தில் ரோஜா சற்று எதிர்ப்பதுபோல பேசினாலும் கடைசியாக ஏற்றுக்கொண்டதை பார்க்கும்பொழுது அந்த ரோஜாவின் பார்வைக்கு தோட்ட உரிமையாளரும் ரோஜாவாக காட்சியளித்திருக்குமோ!!! அதனால்தான் நம்மைப்போன்ற இன்னொரு ரோஜாவின் இயல்புகுணம் (மனம்) வாடிவிடக்கூடாதென்று "ஒரு மரக்கன்றை பிடுங்கி அதன் இயல்புகுணம் மாற நான் காரணமாக இருக்கவிரும்பவில்லை". என கூறியிருக்குமென நினைக்கிறேன். தோட்ட உரிமையாளர் ரோஜாவுடனான உரையாடலை பார்க்கும்பொழுது எனக்கும் இரண்டு அழகு ரோஜா மலர்கள் உரையாடியது போல்தான் தெரிகிறது.

    தோட்டத்தில் வளரும் செடிகள் தங்களைக் கலைந்துசெல்லும் மேகமெனக் கருதாமல் தன்னையே வானமாய் சிந்தித்துத் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கின்றன. அருமை

    தூரிகை பூந்தோட்டத்தில் பூத்திருக்கும் அழகு ரோஜாவையும், மயக்கும் மல்லிகையையும் காண வருபவர்களை புன்னகை சிந்தி வரவேற்க காத்திருக்கும் அழகு மலர்களானது இன்னும் பல பதியங்களை தந்து தூரிகை தோட்டத்தை மேலும்மேலும் அலங்கரித்திடட்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஹஹா....வாங்க ஆனந்த்..தங்களுடைய கருத்திற்கும், வாழ்த்திற்கும் நன்றி..தங்கள் அனைவரது ஊக்கத்தினால் எமது எழுத்துக்கள் தொடரட்டும்..நன்றி.

      Delete
  4. வணக்கம்

    கேள்விகளும் அருமை பதிலும் அருமை பதிவும் அருமை வாழ்த்துக்கள்
    வாசிப்பது கடினம் கலர் எழுத்துக்களை மாற்றினால் நன்று.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கும், வருகைக்கும் நன்றி தோழரே...நிறம் மாற்றுவது நிச்சயம் ஏற்கிறேன்..இனி கவனம் கொள்கிறேன்..உரையாடல் என்பதால் பிரித்துக்காட்ட தனித்தனி நிறம் வழங்கப்பட்டது..:)

      Delete
  5. அருமை... சிறப்பாக முடித்து உள்ளீர்கள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ..தங்களது தொடர்ந்த ஊக்கத்திற்கு.._/\_

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__