Saturday, 25 April 2015

‪இதய_அரங்கு‬...!!மனதாளும் மன்னவன் 
இதழ் திறவாது..
உணர்வுகளை உணர்ந்து
அவனை உள்வாங்கி
உணர்வுகளால் ஒன்றியதையெண்ணி
மனமொத்த மனமது வரமென
இறுமாந்திருக்கும் வேளையில்..

அனுபவ முட்கள்
கிழித்த வலியில்
இரத்தம் கசிய
மனம் வாடியிருக்கும் கொற்றவனை
காதலில் கசிந்துறுகும் காரிகை...

வாஞ்சையாய் வாரியணைத்து
வார்த்தைகளால் ஆறுதல் சமைத்து
அவனுக்கு
அமைதியைப் பரிமாறிட
எண்ணியிருக்க..

மனமொத்த மனமது
உரைக்காத போதும்..
அவன்
உணர்வுகளால் உந்தப்பட்டு
வலிகளை உள்வாங்கி
கொந்தளிக்கும் மனம்...
வார்த்தைகளை வற்றச் செய்திட..

வசமிழந்த வார்த்தைகளை சபித்து
மௌனத்தை
மொழிபெயர்க்கத் தெரிந்தவனுக்கு
மௌனமாய்
மௌனத்தால்
மருந்திடுகிறேன்
மனதினால்..!

மனமொத்த 
உணர்வுகளையடைந்தது
வரமா...? சாபமா..?
பட்டிமன்றம் நடத்தப்படுகிறது
என் இதய அரங்கில்...!

Sunday, 19 April 2015

ஆன்மாவின்_அமைதி‬..!!


காலனை 
கரம் பிடிக்கும் தருவாயிலும் 
உன்மடிமீது உயிர்துறக்க விரும்பியவளின் மரணத்தை..
எங்கோ நடக்கும் 
எனக்கான இரங்கல் கூட்டத்தில் அறிகிறாய்..!
என்னவனே
நீயறியாது என்னுயிர் பிரியாதென்றாயே..!
நாம் ஆடிய
கண்ணாமூச்சியாட்டத்தில்...
காலனடைந்த வெற்றியை
நீ சிந்தும் கண்ணீர்த் துளிதான்
மாற்றிடுமா...?!
எப்படியிருந்தாலென்ன. .
எனக்காக நீ சிந்தும்
ஒற்றைத்துளி கண்ணீரும்
என் ஆன்மாவைக் குளிர்விக்கும்
அடைமழையென மகிழ்ந்து
அமைதி கொள்கிறேன்...!! smile emoticon

Friday, 17 April 2015

மரணத்தை வேண்டி....!!பூசை  முடித்து வெளியே வந்த வனிதாவிடம்,. அம்மா உங்களுக்கு போன் என்றபடி வேலைக்காரப்பெண் கனகம் ரிசீவரை கொடுக்க, “ ஹலோ, ஆமா வனிதாதான் பேசறேன்.. ஓ அப்படியா...?? எப்போ...!!  ம்ம் என்றவாறே போனை வைத்தவள்,அப்பா கடவுள் கண்ணைத் திறந்திட்டார்..... என நிம்மதிப்பெருமூச்சு விட்டாள்.

என்னம்மா யாரு போன்ல..? ஒரு நிமிசம் அதிர்ச்சியானீங்க, பிறகு கடவுளுக்கு நன்றின்னு சொன்னீங்க என்னமா விசயம்.?  நடப்பதை அறிந்துகொள்ளும் ஆவலில் கனகா கேட்க, என் ஃப்ரண்ட் சுஜா காலையில் இறந்துட்டாளாம் அவளோட கணவர்தான் போன் செய்தார்.”  அதிர்ந்தாள் கனகா..!!! ஃப்ரண்டு சொல்றீங்க இப்படி நிம்மதிப்பெருமூச்சு விடறீங்களே வனிதாவை சற்றே வித்தியாசமாக உற்றுநோக்க... அவளின் பார்வையைப்புரிந்த வனிதா.. ஏய் என்ன அப்படி பார்க்கற.. தோழியோட சாவுக்கு சந்தோசப்படறேன்னா..??

ம்ம்..

அதுக்குக்காரணம் இருக்கு கனகா என்றவள் தன் தோழி சுஜா பற்றி கூறத்தொடங்கினாள். 

சுஜா ஒரு கிராமத்தில் பிறந்திருந்தாலும் வளர்ந்தது எல்லாம் பெங்களூரில்.  அம்மா,அப்பாவிற்கு ஒரே பெண்.  நல்ல வசதியான குடும்பம்.  தாய் உமா வெளி உலகம் அறியாதவள்.    சுஜாவிற்கு  பிறப்பிலேயெ முதுகு சற்றே புடைத்திருப்பதை உமா கவனிக்கவே இல்லை. எடுத்துக்கூற பெரியவரும் இல்லை. சுஜா அனைவரையும்போல் பள்ளிப்படிப்பு  முடித்து, கல்லூரிக்கு செல்லும்பொழுது  கூண் அதிகம் தெரியவே மருத்துவரிடம் கேட்க சிறு வயதிலேயே சரி செய்திருக்க வேண்டும் இப்ப ஒன்னும் செய்யவியலாது என்று கைவிரித்து விட்டனர்.  அப்பப்ப எல்லாரும் நிமிந்து நட சுஜா என்பார்கள் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு சென்றுவிடுவாள்.  வயது வந்த காரணத்தினால் வெட்கத்தில் கூண் போடுவதாக அனைவரும் நினைத்து  அதைக்கண்டு கொள்ளவில்லை.  சுஜா இருக்கான்னு அந்தத் தெருவுக்கு வரும்போதே தெரியும் எப்பவும் ஒரே சிரிப்பு சத்தம் கேட்கும் அப்படி ஒரு கலகலப்பு.  தன்னைச்சுற்றி அனைவரும் எப்பவும் மகிழ்ச்சியா இருக்கனும் என்பதில் கவனமா இருப்பா. தன் கவலை, உடல்நிலை ஒருபோதும் பகிரமாட்டாள்.

சில காலங்களில் பணிக்கு சென்று விட்டாள்.  அனைவரிடமும் அன்பாகப் பழகும் அவளுக்கு.  பெற்றோர்கள் நிச்சயித்தபடி திருமணமும் நிகழ்ந்து ஊரை விட்டே சென்றுவிட்டாள்.  அப்பப்போ போனில் பேசுவோம்.  குழந்தை பிறந்த பொழுதுகூட சென்றுபார்க்க முடியவில்லை.  கணவன் அரவிந்த நல்ல அனுசரனையானவன். அதிகம் பேசாவிட்டாலும் கூடமாட ஒத்தாசை செய்வது என உதவியாக இருப்பான். அடிக்கடி கணவர் பற்றி என்னிடம் பெருமைபட்டுக்கொள்வாள். மாமியார் மாமனார் உடன் இல்லை எனினும் அவ்வப்போது அந்த பதவிக்கே உரித்தான முறையில் அலைபேசியிலேயே அனைத்து வில்லங்கமும் வந்துசெல்லும். 2 வருடத்தில் ஒரு மகனும் பிறக்க மகிழ்ச்சியாகவே இருந்தாள் சுஜாதா. குழந்தைக்கு 10 வயது இருக்கும்போது திடீரென நெஞ்சுவலிக்க துடித்துப்போனாள்.  மருத்துவரிடம் காண்பித்து அனைத்து பரிசோதனையும் செய்ய, ஒன்றுமே இல்லை ஆன்சைட்டிதான் காரணம் கவலையில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என மருத்துவர்கள் கூறி அப்போதைக்கு மருந்துகள் பரிந்துரைத்தனர்.
இப்படி அடிக்கடி நெஞ்சுவலி வருவதைக்கண்ட அவள்   கணவன் அர்விந்த் அப்படி என்னதான் வியாதியோ கவலைபட காரணம்  எதுவுமில்லை…டாக்டரும்ஒன்றுமில்லையென சொல்லிட்டார்… .ஆனால் இந்த நெஞ்சுவலி உனக்கு எதனாலதான் வருதோவென ஒருநிலநேரம் சலித்துக்கொள்வான். அதன்பிறகு நெஞ்சுவலிச்சாகூட யாரிடமும் சொல்லாமல் தனக்குத்தானே வலியை அனுபவிக்கத் தொடங்கினாள்.  10 முறை வலிச்சா ஒருமுறை மட்டும் சொல்லுவா.  ஒருநாள் வேற ஒரு பிரச்சினைக்காக முழு செக் அப் செய்ய,எக்ஸ்ரேவில் முதுகுத்தண்டு பெண்ட் ஆகி ஒரு பக்க லங்க்ஸ் கம்ப்ரஸ் ஆகி இருப்பதாகவும், தற்போதைக்கு பிரச்சினை இல்லை ஆனா வயதாக வயதாக மூச்சு விடுவதே சிரமமாக இருக்கும் என்றும்  மருத்துவர்கள் கூறிவிட்டதை சுஜா என்கிட்ட போன்ல சொல்லி வருத்தப்பட்டாள். நானும் ஆறுதல் சொன்னேன்.

அதைப்பெரிதும் பொருட்படுத்தாதவர்கள் அந்த நேர மருத்துவ உதவி பெற்று சரியானதும் மறந்தேபோயினர்.  மகிழ்ச்சியாய் காலங்கள்  உருண்டோட ஒருநாள் வழக்கமான நெஞ்சுவலி அதிகரிக்க மூச்சுவிடவே சிரமப்பட்டவளை மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்ய,  டாக்டர்கள் இனி இப்படித்தான் இருக்கும் எனக்கூறிஏதேதோ மருந்துகள் பரிந்துரைத்து அனுப்பிவிட்டார்.

இரண்டுமாதத்திற்கு முன் ஒருநாள் திடீரென  சுஜா போனில் அழைத்து, ”வனீ  நா உன்ன பார்க்கனும் உடனே வா என்றாள்.” நானும்  அவளை சென்று சந்தித்தேன். படுக்கையில் இருந்த சுஜா, என் கையைப்பற்றிக்கொண்டவள், ”வனிதா எனக்கு இப்ப எல்லாம் ரொம்ப முடியல இதுவரை உன்னத்தவிர யார்கிட்டயும் மனம் பகிர்ந்தது இல்ல.  என் வாழ்க்கை இனி இப்படித்தானு டாக்டர் சொல்லிட்டாரு.  ஆனா எனக்கு இதில விருப்பம் இல்ல.  கணவரும், குழந்தையும் என்னைப் பரிதாபமா பார்க்கறமாதிரி ஒரு ஃபீல்.   நான் தான் வலில கஷ்டப்படறேன்னா என்னப்பார்த்து அவங்க வருத்தப்படறது இன்னும் அதிகமா வலிக்குது. இப்படி அடிக்கடி மூச்சு விட சிரமப்பட்டு நானும் வலி அனுபவித்து மற்றவர்களுக்கும் ஒரு சலிப்பு ஏற்படுத்தி என்மேல் ஒரு வெறுப்பும், பச்சாதாபமும் வருவதற்குள் நல்லமுறையில் என் மரணம் நிகழனும்.  ”படுத்தபடுக்கையா அதுவும் ஒரு பெண் எல்லா நேரத்திலும் பிறரின் உதவியை எதிர்நோக்கியிருப்பது எவ்வளவு கொடிதுன்னு உனக்கு நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை.” வனிதா, ”எப்பவும்போல வீடே அதிர சிரித்து மகிழ்ந்து என் சாவு இருக்கனுமே தவிர நோயாளியா படுக்கையிலேயே இருக்கக்கூடாது” என்றவளின் கரம்பிடித்து, ”உன் மனசுபோல அமையும் கவலைப்படாத” என்று ஆறுதல்படுத்த.. ”இல்ல நீ சும்மா என்ன சமாதானம் செய்யாத எனக்கு ஒரு வாக்கு கொடு என்றவளிடம், என்ன என்பதுபோல் நெற்றி சுருக்க...”ஒவ்வொரு நாளும் நீ எனக்காக என் மரணத்தைவேண்டி பிரார்த்திக்கனும்.” சுயநலமற்ற வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.  என்மீதான உன் அன்பு எனக்குத்தெரியும். நான் வலியில் துடிப்பதை உன்னால் தாங்க முடியாது.உன்னாலதான் இது முடியும்” என்றவளிடம் மனதை திடப்படுத்திக்கொண்டு சத்தியம் செய்துட்டு வந்தேன்.

அவள் மீதான அன்பும், அவள் வேண்டலில் இருந்த உண்மையும் புரிய தோழியிடம் செய்த சத்தியத்தைக் காப்பாற்ற அவளின் வலியற்ற மரணத்திற்கு  நித்தமும் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு செய்தி.  தோழியின் கதையைக்கூறி முடித்தாள் வனிதா.

இறப்பு நிச்சயம்.  அதை மாற்றவோமறுக்கவோ இயலாது.  ஆனா, என் தோழி அதிகம் துன்பப்படாமல் இறக்கவேண்டும் என எண்ணியதில் என்ன தவறு..?மகிழ்ச்சிதானே கனகா..?  அதான் கடவுள் கண்ணைத் திறந்துவிட்டார்னு சொன்னேன் என்ற வனிதாவை வியப்பாய் பார்த்தாள் கனகா.

சரி சரி நேரமாச்சு நான் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கனும்.  சார் வந்தா நீ விசயத்த சொல்லிடு. அவர் போன் ஆஃப்ல இருக்கு. முக்கியமான வேலையில இருப்பார். வந்தவுடன் சொல்லு என்றுகூறிச்செல்லும் வனிதாவையே பார்த்துக்கொண்டிருந்தாள் கனகா.

சுஜா வீட்டில் அனைவரும் இவளுக்காக காத்திருக்க கடைசி யாத்திரைக்கு தோழிக்கு மாலை அணிவித்து அவளை  முத்தமிட்ட வனிதா, சுஜாவின் சிரிப்பு சத்தத்தை உணர்ந்தாள்...!!