முகப்பு...

Sunday 31 August 2014

இறுதி சுவாசம்


ஒவ்வொரு இரவும் 
உனையடையும் 
என் வெற்றுக்குறுந்தகவல்..
என் ஆசைகளையும், காயங்களையும்
கூறாவிடினும்..
உறங்கச்செல்லும் நான்
மீளா உறக்கம் தழுவிடின்
என் இறுதி மூச்சும்
உனையே நேசித்து சுவாசித்ததை
நான் இறந்தபின்(னே)னும்
நீயறியவே...!! 

*****
நினைவென்னும் 
கூறிய நகங்களால் கீறப்பட்டு 
வெளிப்படும் கண்ணீர் முத்துக்கள்
அறிவிக்கும்...
ஆறிவிட்டதாக நினைக்கும் 

காயங்கள் புரையோடிவிட்டதை...!
*****

Sunday 17 August 2014

அறிந்தும் அறியாமலும்...

இதுவும் கடந்துபோகுமென்ற நம்பிக்கையும் மனதைவிட்டு கடந்து செல்லும் ஏதோ ஒரு நேரத்தில்.
****
அன்று (பெண்கள்) அக்கம்பக்கத்து வீட்டுக்கதைகளை புறணி பேசியதற்கும்... 
இன்று மாலை வீடு திரும்பியவுடன், அன்றாட அலுவலக நிகழ்வுகளையும், சக ஊழியர்களையும் பற்றி அலைபேசியிலும், சமூக வலைத்தளத்திலும் அலசுவதற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை... விஞ்ஞான வளர்ச்சியைத்தவிர..:)
****
அறிவுச்சிறையிலிட்டாலும்
மனக்கதவை உடைத்து
வார்த்தைக்கு 
முற்றுப்புள்ளிவைத்து
சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறது
கண்ணீர்முத்துக்கள்...!!
***
புலன்விசாரணையின்றி அங்கீகரிக்கப்படும் பொய்கள் வெற்றி கொள்கையில், உண்மைகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நிராகரிக்கப்படு(டலா)ம்..! 
***

Monday 4 August 2014

அறிந்தும், அறியாமலும்..

பசிக்கு பழைய சோறுகூட போடாது, அடுத்தவார விருந்தில்  கலந்துகொள் என்பதுபோல் தேவைப்படும் நேரத்தில் அன்பை வழங்காது, நாம் ஓய்வாக இருக்கும் நேரத்தில் அன்பு பகிரப்படுகிறது(தோ).
*****
அம்மையப்பனும், ஆசானும் கற்றுக்கொடுக்காத 
பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் காலம் கற்றுக்கொடுக்கும்.
*****
சிறிய பொய்தானேவென
நாளுக்கொரு பொய்யினால் அமைக்கப்படும் 
உறவுப்பாலத்தில்...
மெல்லியதாய் விழு(ம்)ந்த பொய்த்திரை
நாளுக்கு நாள் அடர்வு கூடி 
உணர்வுகள் பகிரத் தடையாகி
உறவுப்பாலத்தில் 
விரிசல் உண்டா(க்)குமென்பதை 
உணருவதில்லை..
****
வலித்தோட்டத்தில், விழிநீரூற்றி வளர்க்கப்படும்  செடியில் மலரும் புன்னகைப்பூக்கள் மணம் வீசுவதில்லை.
****