முகப்பு...

Tuesday 31 July 2012

சின்ன சின்ன ஆசை....!!!


ஆசமச்சான் ஆசமச்சான் கொஞ்சம்
என்னாசையுந்தான் கேளு மச்சான்..
என்னதிகாலை தொடங்கனும்
உம்முத்தத்தோட...

நா வாசக்கூட்டி கோலம் போட
நீ சாணத்தில பூவ வச்சி
அழகு கூட்டனும்....

அடுக்களையில் காஃபித்தண்ணி வெக்கயில
நீயும் அன்பாத்தான் அங்கங்கே
என கட்டிப்பிடிக்கனும்.....

குளிச்சி முடிச்சு சாமி கும்பிட
எஞ்சாமி நீயும் கூட நிக்கனும்...

பூப்போல இட்டிலியத்தான்
வெள்ள சிரிப்புக்கார வுனக்கு
புன்னகையோட நா ஊட்டனும்...

சோலிக்குப் போகயிலே
நீ சொக்கிப்போக
முத்தமொன்னு கொடுக்கனும்....

அப்பப்ப போன போட்டு
நீ ஆசவார்த்த பேச..
ஆறுமணிக்காவ நானுந்தவமிருக்கனும்..

கடிகாரமும் ஆறடிக்க..
வாசலிலே நா காத்துக்கிடக்கனும் ..
சோர்ந்து போன நீயும் முகங்கழுவி
எஞ்சேலையில முகம் துடைக்க..
சொர்க்கத்தத்தான் நா உணரனும்.....

மல்லிப்பூவ மச்சான் நீயும்
வச்சிவிடனும்...

எம்மடிமீது தலசாச்சு உலகக்கத நீ பேச
உம்முகம் பாத்து நா வியக்கனும்....

நீ நிலாச்சோறு ஊட்டும் விதம் கண்டு
மதியவளும் உம்மேல ஆசப்படனும்.....

அப்பப்போ சின்னதா சண்டையிடனும்..
ஆசவார்த்தை பேசி நீயும்
சமாதானஞ்செய்யனும்.....

நள்ளிரவு குளிரிலே நடுங்கும்
எனையிறுக்கி அணைக்கனும்..
சொல்லமுடியா ஆசயத்தான்
நீயும் சூதனமா புரிஞ்சுக்கனும்....


வருசத்துக்கு ஒன்னுன்னு
புள்ளைகள பெத்து போடனும்..
அதுகள வருசத்தின் பெயரால கூப்பிடனும்
பூமித்தாயும் என
பொறாமையா பாக்கனும்..
நம் புள்ளகளிடம்
கலைமகளும் கல்வி கற்கனும்...
அதக்கண்ட பிரம்மனும் திகைக்கனும்....
புதியதோர் பிரபஞ்சத்த உருவாக்கனும்...

இறவா வரமுனக்கு கிடைக்கனும்
பிரபஞ்சமே உம்பெருமைய பேசனும்..
உன் அன்புமுகம் பாத்தபடி
உன்னணைப்பில நா உசிரவிடனும்..

ஆச மச்சான் ஆச மச்சான்
என் சின்ன சின்ன
ஆசயத்தான் கேளு மச்சான்...!!





Saturday 28 July 2012

மலையரசி.....



பசுமைநிற புடவையிலே
கரும்பச்சை முந்தியிலே
வண்ணமலர் பூவோடு..
கண்கவர் அழகுடன்
கர்வத்துடன்  காட்சியளிக்கும் மலையரசி..

இவளைக்காண
காளையரோடு கன்னியரும் போட்டியிட...

எழிலின் எழிலான
மலையரசியிவளிடம் மையல்கொண்ட
கருமுகிலும், வெண்மேகமும் போட்டியிட..

உணர்விற்கு உயிரூட்டுபவளை
எண்ணத்தில் எண்ண
ஏகாந்தநிலை கொள்பவர் ஏராளம்...

கவிஞர்களை ஈன்றெடுக்கும் தாயாகி..
காதலையும், காமத்தையும் கற்பித்து
தன்னையுணர தவம் செய்யத்தூண்ட....
காலமெல்லாம்
இவள்மடி உறங்கும்
ஆசையும் நிராசையாக...

மலர் சூடி, நகையணிந்து
பசும் பட்டுடுத்தி
புதுமணப்பெண்ணாய்
மூவிரண்டு திங்கள் 
உவகையளித்தவள்...

கோடையிலே
ஆதவனின் சினத்திற்கு அஞ்சியிவளும்
மூவிரண்டு திங்கள்
அழகுதனை அஞ்ஞாத வாசமனுப்ப.. .
கரடு,முரடான மலையிவளும்..
 
முதியவளின் வறுமையாய்
காய்ந்த புற்கள் சூழ
காட்சியளிக்க...

பூவிழந்து, பொட்டிழந்து
வண்ணவுடை தவிர்த்த
கைம்பெண்கண்ட பெற்றோராய்
துடிக்குதே மனம்.......!!!!












Wednesday 25 July 2012

”100” வது பதிவு....


என்னை கவிதையுலகிற்கு கரம் பிடித்து அழைத்து  வந்து எனக்கு கரம் கற்பித்து  என் சிந்தனைகள் சிறகடித்து  நான் சிகரத்தை அடையவேண்டும் என உறுதுணையாக இன்றுவரை இருந்து வரும் என் ஆசானுக்கு என் மனமார்ந்த நன்றியினையும் வணக்கத்தையும் உரித்தாக்குகிறேன்.


என்னை இவ்வழி பயணிக்கப் பணித்த இறையையும், என்னுடைய எழுத்துக்கும், எண்ணத்திற்கும் உடனிருந்து ஆசி வழங்கிவரும் கலைமகளையும்  பாதம் பணிந்து வணங்குகிறேன்.  

என் வலைப்பூ  வாசகர்களுக்கும்என்னுடைய எழுத்தின் நிறைகுறைகளை சுட்டிக்காட்டி என் எழுத்துக்களை மெருகேற்றிக்கொள்ள துணைபுரிந்து எனை ஊக்குவித்து வரும் என் தோழமைகளுக்கும் மற்றும் நான் எழுத உறுதுணையாக இருந்து வரும் என்  குடும்பத்தாருக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்..என் எழுத்தை செம்மை படுத்திக்கொள்ள தங்களது தொடர்ந்த ஆதரவை  வேண்டி..இப்பதிவினை தொடருகிறேன்.....
******************************************************************************************************************************************************************************************

ஆன்ம ராகம்...!!


மனமும்புத்தியும் குவியும் 

இடத்தில் மௌனம் பிறக்க..
ஆன்மாக்களின் புணர்வில் உதிக்கிறது காதல்….!! 

சொர்க்கத்தைப் புவியில் கொணர்ந்து
எனை உயிர்ப்புடன் வைத்திருக்கும்
ஓசையில்லாமல் அவனிட்ட முத்தம்....

அம்புலியையும்ஆதவனையும் சந்திக்கவைத்த
மனதோடான அவன் பேச்சு ...
கண்ணிமைக்க மறந்த எனை
இசையாய் குளிர்விக்க......

மௌனம் மௌனமாய்
மௌனத்தைத் துறந்து
மெய்சிலிர்க்க வைத்த காதல்...

அவன் கண்ணோக்கிய
என் விழிகள் மண் நோக்க..

மேனிபரவிய விரல்கள்
மென் தேகத்தை வீணையாய்மீட்ட
ஆன்மராகத்தின் அன்புணர்த்த...
என் மனதின் நரம்புகள்
அறுபடுகின்றன
உணர்ச்சி வெள்ளத்தில்....!!!

அகத்திலும்அங்கத்திலும் இடமளித்து
அர்த்தநாரீசுவரருமாகி...
இன்பக்கடலில் ஆழ்த்தியவன்
இசைக்கும் ஆன்ம ராகத்தில் மூழ்க ..
இன்னுமோர் சொர்க்கத்திற்காக ஏக்கமுடன் காத்திருக்கிறேன்... !!!

















Friday 20 July 2012

வாழ்க்கைப் பயணம்...


இல்லம் முதல் இடுகாடு வரை...
வாழ்க்கைப்பயணத்தில்தான்

எத்தனையெத்தனை அனுபவங்கள்..
எத்தனையெத்தனை மனிதர்கள்
சந்திப்புகள்...???

அன்பை அருவியென வழங்கும் சிலர்..
அன்புக்கும் அளவுகோல் கொண்டு அளப்பவர் சிலர்..
அன்பை படிக்கல்லாய் நினைக்கும் சிலர்..
அன்பைக்கூட தடைக்கல்லாய் நினைக்கும் சிலர்..
அன்புக்காய் ஏங்குவோர் சிலர்..
அன்பாக இருப்பதுபோல் சிலர்..

ஆற்றாமையில் சிலர்..
இயலாமையில் சிலர்..
இடுக்கண் களைபவர் சிலர்..
இடுக்கண் கொடுப்பவர் சிலர்..
ஈகைகுணத்தோடு சிலர்..

உறவை வரவாய் எண்ணும் சிலர்..
உறவே உயிரெனக் கருதும் சிலர்..
உறவை துச்சமென கருதும் சிலர்..
உறவின் உன்னதம் புரிந்தவர் சிலர்..

உணர்விற்கு உயிர் கொடுப்பவர் சிலர்.
உணர்விற்கு திராவகம் ஊற்றுபவர் சிலர்..

உணவே வாழ்வெனக் கருதும் சிலர்..
வாழ்வதே உணவிற்கெனக் கருதும் சிலர்..



பிறருக்கு படிக்கல்லாய் சிலர்,,
தடைக்கல்லாய் சிலர்..
படிக்கல்லையும் தடைக்கல்லாய் நினைக்கும் சிலர்
தடைக்கல்லையும் படிக்கல்லாய் மாற்றும் சிலர்..




சூழ்ச்சிவஞ்சகபொறாமையின் உருவமாய் சிலர்..
இதையறியாமல் இதில் சிக்குவோர் சிலர்..
நட்பிற்கு உதாரணமாய் சிலர்..
நட்பையும் நாடகப்பாத்திரமாய் எண்ணும் சிலர்..
நம்பிக்கையின் நட்சத்திரமாய் சிலர்..
நம்பிக்கையில் நம்பிக்கையிலாமல் சிலர்..
நம்பிக்கையில் நம்பிக்கையிருப்பவர் போல்
நடிப்பவர் சிலர்..

சாதிக்க வேண்டுமென சிலர்..
சாதனையேன் வாழ்வினிலே என சிலர்..

இறங்கப்போகும் இடமறிந்தும்
அடித்துப்பிடித்து பேருந்தில்
இடம்பிடிக்கும் சிலர்..
இறக்கும் தருவாயும் அறிந்துவிட்டால்
தாங்குமா இப்புவியுமே...??
கிடைத்த இப்பிறவியும்..
உதவியாய் இல்லாமல் உபத்திரமாய்
ஏனிருக்கவேண்டும்..??வாழ்க்கைச் சக்கரம் 
நிற்கும் இடமறியாத நேரத்திலே
எண்ணிப்பார்ப்போர் எத்துனைபேர் ..??

விருப்புவெறுப்புகோபம்
அலட்சியம்,அகங்காரம்ஆணவம்..
அன்புபாசம்,போட்டிபொறாமை..சூழ்ச்சிபாசாங்கு.............

நூற்றுக்கணக்கான குணங்களுடன்
கோடிக்கணக்கான மனிதர்களில்
ஆயிரக்கணக்கான அனுபவங்களும்
சந்திப்புகளும் நிறைந்த வாழ்க்கைப்பயணம்..

இத்துனை எண்ணச்சுமைகளை
சுமந்து முற்றுப்பெறும் பயணத்திலே...
சுமக்கப்போகும் நாலுபேருக்கு
நன்றி கூறி..
எரிக்கப்போகும் வெட்டியானுக்கும்
நன்றி கூறி..
இத்துனை சுமைகளையும் 
இறுதியில் ஏற்கப்போகும் இறைவனுக்கும்
நன்றி கூறி
வேண்டுகிறேன்..
இனிவேண்டாமே இப்பிறவி 
எனை ஆட்கொள்வாய் என்னிறைவா...!!!