Monday, 16 July 2012

மரப்பாச்சி...வீட்டைத் தூய்மை செய்துகொண்டிருந்த ரேணு, அழகுப்பொருட்களைத் அடுக்கிவைக்க, தன் குழந்தைக்காக வாங்கிய மரப்பாச்சி சற்றே தூசியுடன் இருப்பதைப் பார்த்து தனக்குத்தானே சிரிக்க..என்ன ரேணு நீயா சிரிச்சுக்கறே. கணவன் பாஸ்கர் கேட்டான்..இல்லை மரப்பாச்சி பேசினா எப்படியிருக்கும்னு நினைச்சுப்பார்த்தேன்.  அது சரி, அதுவும் பேச ஆரம்பிச்சிட்டா... அவ்வளவுதான். நீ ஒருத்தி பேசறது போறாதா நகைத்தபடி கணவன் செல்ல. இவளது கற்பனைக்குதிரை மெல்ல வேகமெடுத்தது.

கருங்காலி மரத்தில் பார்த்து பார்த்து செதுக்கி சாண் உயரம், முழ உயரம் என கூறிய மூக்குடன் சிறிதும், பெரிதுமான மரப்பாச்சிகள் கருமை நிறத்தில் வழ வழவென அழகாய் இருக்கும்.  ஆண் மரப்பாச்சி, பெண் மரப்பாச்சி என பொம்மைக்கும் ஜோடி சேர்த்த நம் பெரியவர்கள் ஏதோ காரணமில்லாமலா அப்படி செய்திருப்பார்கள்..? சிறுவயதில் கொலுவைப்பதற்காக வைத்திருக்கும் மரப்பாச்சி பொம்மைகளை கொலு முடிந்தபிறகும் உள்ளே வைக்காமல் அதற்கு பவுடர் போட்டு, மையிட்டு துணி உடுத்தி விளையாடின நாட்கள் மனதைவிட்டு நீங்காதவை.

எவ்வளவு பேசினாலும் எதிர்த்துப்பேசாது, நான் சிரிக்க சிரிப்பதுபோலும், நான் அழுதால் அழுவதுபோலும் காட்சியளிக்கும்.  நான் சொல்லும் விளையாட்டையே மறுக்காமல் ஏற்றுக்கொள்ளும். தோழிகளில் சிறந்த தோழியாக விளங்கும். ஒரு போதும் தன் விருப்பம் வெளிப்படுத்தாது.  தன் உணர்வு, மனம் பகிராது.  ஆசைகள் பற்றி அலசாது.. ஆண்குழந்தைகளை விட பெண்குழந்தைகளே மரப்பாச்சியுடன் அதிகம் விளையாட விரும்புவார்கள்.

ரேணுவும் மரப்பாச்சி போல்தானே..!! வீட்டில் உள்ளவர்கள் அன்புசெலுத்தினால் ஏற்றுக்கொண்டு, அதிகாரம் செய்தால் பணிந்து இனிமையாய் புன்னகைத்து அனைவரது தேவைகளை நிறைவேற்றி இட்டபணி செய்து, புகழும்போது மகிழ்ந்து, இகழும்போது கரைவாள். தனக்கு இன்ன பிடிக்கும் இது பிடிக்காது என மனம் பகிராமல் ஆட்டுவிப்போர்க்கு ஏற்ப ஆடுகிறாள். மனம் திறந்து பிடிக்காத்தைக்கூற உனக்கு என்னதான் பிடிக்கும் என்ற அலட்சியப்பேச்சு..தன் மனமறிந்த தோழமையுடன் மனதைப் பகிர வண்ணத்துப்பூச்சியாய் சிறகடிக்கும் மனம்,  எண்ணத்தைப் பகிரமுடியா அந்த சிலநேரத்தில் சிறகொடிந்த பறவையாய் வருந்துகிறது மனம். சிறகடித்துப் பறந்தும், சிறகொடிந்தும் மாறி மாறி ஏன் இந்த அவஸ்தை. எரியும் நெருப்பிலிட்ட எண்ணெய்போல் இன்னும் மனம் அதிகம் குமுறும்...என்றும் குழந்தைக்கையில் கிடைத்த மரப்பாச்சியாகவே இருந்துவிடலாமோ...?? ரேணு மட்டுமா அப்படியொரு முடிவு எடுத்தாள்..? பல பெண்கள் மரப்பாச்சி போல்தானே இருக்கிறார்கள்? 

மரப்பாச்சியுடன் விளையாடும் குழந்தை அறியாது அதற்கு உணர்வில்லை என. அது ஒருபோதும் கேட்டதுமில்லை, உனக்கு என்ன பிடிக்குமென்று..? பொம்மையின் விருப்பமறியாமலேயே அதுமட்டும் சந்தோசமாக விளையாடும்,  ஆனால் இந்த மரப்பாச்சிப்பெண்களுடன் விளையாடுபவர்களுக்குத் தெரியாதா என்ன..?? இவளும் உணர்வுள்ளவள் மனமென்ற ஒன்று இவளுக்கும் உண்டென்பதையே மறந்தும் விடுகின்றனர் பலநேரம்.  மரப்பாச்சியாக இருப்பதையே விரும்புகின்றனர் பலர். மரப்பாச்சியாக இருக்கும்வரை மட்டுமே குல விளக்கு, குத்துவிளக்கு பட்டங்கள்...மரப்பாச்சியும் பேசத்துவங்கினால்.....??

ஓ பெண்கள் பேசக்கூடாது, விருப்பு, வெறுப்பு கூறி மனம் பகிரக்கூடாது என்பதற்காகத்தான் மரப்பாச்சி பெண்குழந்தைகளுக்கு பரிந்துரை செய்தனரோ..? மரப்பாச்சியுடன் பழகி பழகி தன்னையும் மரப்பொம்மையாய் நினைத்துக்கொள்ள சிறுவயதில் அவர்கள் கொடுத்த பயிற்சியோ..?? தானும் மரப்பாச்சியாகவே இருந்துவிட முடிவுசெய்த ரேணு மெல்ல உணர்விற்குத் திரும்ப,  நீயும் என்னுடன் வந்து உட்கார்ந்துகொள்ளேன் என மரப்பாச்சி ரேணுவை நோக்கி புன்னகைத்தது....!!!2 comments:

 1. பல பெண்கள் மரப்பாச்சி போல்தானே இருக்கிறார்கள்? //

  ஆம், அப்படி இருந்தால் தான் எல்லோருக்கும் பிடிக்கிறது.
  கதையும், படமும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க...உண்மைதான்..சுயம் மறைத்து, மறந்து வாழவேண்டும் என்பதே பெண்மையின் இலக்கணமோ...?? :)

   Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__