முகப்பு...

Friday 20 June 2014

இயற்கைக்கு எதிராகும் பக்தி..!!!

பக்தி.  இவற்றிற்கு அவரவர் பார்வையில் அர்த்தங்கள் பல. நான் பக்தி பற்றி அலசவோ, பகுத்தறிவு பற்றி தெரிவிக்கவோ இவற்றை எழுதவில்லை.  பக்தி என்ற பெயரில் நடக்கும் ஒரு சில நிகழ்வுகளை (பாதிப்புகளை) பகிர்ந்துகொள்ளவிரும்புகிறேன்.

ஆலயம்...  இறைவன் அனைவருக்கும் பொதுவானவன் எனக்கூறினாலும், பணம் கொடுப்போருக்கு பிரசாதம், பழம், பூ, இறைவனுக்கு போட்ட மாலை என வழங்கி சிறப்பாக கவனிக்கப்படுவார்கள்.  இங்குதான் உலகவிசயங்கள் அனைத்தும் அலசி ஆராய்ந்து, அவரவர் வீட்டு  இருப்புநகை புடவைகளின் அழகு பற்றிய அலசல், விருப்பு வெறுப்புகளை கலந்தாலோசிக்கும் இடமாக இருப்பது ஒருபுறமிருந்தாலும் இவற்றையெல்லாம் பற்றி தற்சமயம் ஆராயவேண்டாம். :) 
பொதுவாக ஆலயம் என்றவுடன் மனதை ஒருநிலை தியானத்தில் கொண்டு வர உதவும் ஓரிடமாகவே கருதத்தோன்றும்.

ஆனால் இன்று அப்படித்தோன்றுகிறதா....??!!? 

முன்பெல்லாம் ஆலயத்திற்கு செல்லும்பொழுது, வீட்டிலிருந்தே ஒரு கிண்ணத்தில் எண்ணெய், திரி எடுத்துச்சென்று கர்ப்பக்கிரஹத்தில் இருக்கும் விளக்கில் ஊற்றிவருவோம்.   இறைவனது சன்னதியில் நம்வீட்டு எண்ணெயும் சேர்ந்த மன திருப்தி.  வீட்டில் இருக்கும் மலரை தொடுத்து ஒரு பிரம்புக்கூடை அல்லது வாழையிலை இப்படி எடுத்துசென்று கொடுப்போம். கொஞ்சம் கொஞ்சமாக அந்த பழக்கம் மாறி கூடவே ஒரு அகல்விளக்கு தனித்து எடுத்து சென்று ஏற்றிவருவது கடைபிடிக்கப்பட்டது

அடுத்து ஆலயத்திலேயே சின்ன சின்ன அகல்விளக்குகளில் நெய்(நெய் என்ற பெயரில் அவர்கள் ஊற்றிவைத்திருப்பது என்னவாக இருக்கும் என்ற ஆய்விற்கு வரவேண்டாம்) திரி போட்டு விற்பனை துவங்க, இந்த பக்தியினால் வியாபாரம் இனிதே ஆலயங்களில் தொடர்ந்தது. நெகிழிகளின் ஆபத்துகளை இயற்கை ஆர்வளர்கள் பலரும் அறிவுறுத்தி வரும் இந்த வேளையில், சின்ன சின்ன ப்ளாஸ்டிக் குப்பிகளில் எண்ணெய் விற்பனை செய்வது ஒப்பந்தம் அளிக்கப்பட்டு ஆலயத்திற்கு முன்பு விற்பனை நடைபெற்றுவருவது நாம் அறிந்ததே. ஆலயத்தில் இருக்கும் ஒரு விளக்கில் எண்ணெய் ஊற்றினால் போதாது தனித்தனியாக அனைத்து சன்னதியிலும் தனித்து ஏற்றினால்தான் பக்தியா..? குறைகூறவில்லை. ஆலயத்தில் ஆங்காங்கே வீசப்படும் சிறு சிறு ப்ளாஸ்டிக் குப்பிகளும், அதன் மூடிகளுன் தூய்மையை கெடுக்கும் என்பதை பக்தி மறைத்ததா..?? ஒரு சூடத்திற்காக ஒரு ப்ளாஸ்டிக் பை. அந்த சூடத்தையும் வீட்டிலிருந்தே எடுத்துவந்தால், ஆங்காங்கு போடப்படும் குப்பைகள் குறையலாம்.

ஒவ்வொரு சன்னதியிலும் (சன்னதிக்கு எதிரே ஒரு மேசை வைத்திருப்பார்கள் இருப்பினும்) அவரவர் விரும்பிய இடங்களில் அகல்விளக்கு ஏற்றி ஆலயத்தில் வழுக்கும் வகையில் எண்ணெய் சிந்தி, கரிபடியச்செய்வது ஏன்..? 

வீட்டிற்கு காய்கறி வாங்குவதற்கே நெகிழிப்பைகள் தவிர்க்க அறிவுறுத்திவரும் இன்றைய காலகட்டத்தில், இறைவனுக்கு எடுத்து செல்லும் மலர்கள் நெகிழிப்பைகளில்தான் எடுத்துவரப்படுகின்றன. அந்த பைகள் ஆங்காங்கு பிரகாரத்தில் வீசப்பட்டு காலில் சிக்கிக்கொள்வதோடு மட்டுமல்லாமல், பலரும் புனிதமாக கருதப்படும் இறைவனது சன்னதியின் கோபுரத்தில் சொருகி வைக்கின்றனர்.  சென்னையில் ஒரு பிரசித்திபெற்ற ஆலயத்தில் நந்தி சன்னதியின் கோபுரத்தில் அடுக்கடுக்காக நெகிழிப்பைகள். (நானே ஓரிரு முறை அனைத்து நெகிழிப்பைகளையும் அப்புறப்படுத்தியிருக்கிறேன்.)  இருப்பினும் அடுத்தநேரம் செல்லும்பொழுது அதே இடத்தில் பைகள்.  

பக்தி என்ற பெயரில் ஆலயங்களை புகைபடியச்செய்வதும், தரைவழுக்கும்படியாக எண்ணெய் ஊற்றுவதும், ப்ளாஸ்டிக் குப்பிகளையும், சூடம், ஊதுபத்தி பிரித்தகுப்பைகளை ஆங்காங்கு வீசுவதும், நெகிழிப்பைகளை அங்கங்கே வீசியும், கோபுரத்தில் சொருகிவைப்பதும் தான் பக்தியா..??

தனிமனித உணர்வுகளை குறைகூறியோ, பக்தி வேண்டாம், இறைவனே இல்லை என்ற வாதத்தை முன்வைத்தோ இந்த பதிவை வழங்கவில்லை. அது தனிமனித உணர்வு சம்பந்தபட்ட விசயம். இருப்பினும், தங்கள் பக்தி பொது இடத்தில் இதுபோன்று சுற்றுப்புற சூழலை பாதிக்கும்படி இல்லாமல் பார்த்துக்கொள்ளலாமே...??

ஆலயத்தை அசுத்தப்படுத்திவருபவர்கள் சிந்தித்து செயல்பட்டால் மகிழ்ச்சியே.  அந்தந்த ஆலய நிர்வாகமும் இதுசார்ந்து நடவடிக்கை எடுப்பதோடு தாங்களும் ஆலயத்தை சுத்தமாக வைத்திட  பொதுமக்களோடு இணைந்து செயல்பட்டால் நல்லது.  சிந்திப்பா(பீ)ர்களா..??!!!