Tuesday, 30 April 2013

உணர்வுச்சிதறல்கள்..


பெண்களின் கண்ணீருக்குக் காரணம் எதுவாயிருப்பினும்
எப்பொழுதும் பழிசுமக்கத் தயாராய் சமையலறைத் தோழியாய் வெங்காயமும், பச்சைமிளகாயும்.
குளியலறைக்குழாய்..காற்றின் தூசுகள்..:)
--
காரணமேயில்லாமல்
அலட்சியப்படுத்தப்படும் அன்பு...
வளியின் வேகத்தில்
வலியை கொடுக்கவே செய்கிறது
காரணத்தை புத்தியறியும் முன்......!!

Sunday, 28 April 2013

தமிழ்க்குடில் அறக்கட்டளை..785 அங்கத்தினர்களைக் கொண்ட தமிழ்க்குடில் குழுமம் துவங்கிய ஓராண்டில் தமிழ்க்குடில் அறக்கட்டளையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்க்குடில் அறக்கட்டளை மே மாதம் 21ந்தேதி 2012 அன்று பதிவு செய்யப்பட்டு, 2012 ஜுன் 10ந்தேதி சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்ற தமிழ்க்குடிலின் முதல் ஆண்டுவிழாவில் புலவர் திரு.புலமைப்பித்தன், ஐயா.சிலம்பொலி செல்லப்பா, கவிஞர். திரு.அறிவுமதி, கவிஞர்.திரு.இரவா.கபிலன் மற்றும் புதுச்சேரி மரபுக்கவிஞர் திரு.இராஜ.தியாகராஜன் அவர்கள் பங்கேற்க சிறப்பாக நடைபெற்றது. தமிழ்க்குடில் அறக்கட்டளையின் துவக்கமாக, விழா மேடையில் ஐயா திரு.சிலம்பொலி செல்லப்பா அவர்கள் தமிழ்க்குடில் அறக்கட்டளை சார்பாக சுமார் 20 பள்ளிக்குழந்தைகளுக்கு உதவிகளை வழங்கினார்


தமிழ்க்குடில் அறக்கட்டளை துவங்கி ஆறு மாதத்தில் இதுவரை சுமார் 60 குழந்தைகளுக்கு பள்ளிப்படிப்பிற்குத் தேவையான உதவிகளை வழங்கி உள்ளது. 

செப்டம்பார் மாதம் 2012இல், உண்ணாமலைக் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணிற்கு தேர்வுக்கட்டணத்திற்கென ரூ.12000/- வழங்கியுள்ளது.

டிசம்பர் மாதம் திருப்பூரில் இருக்கும் மூன்று அரசுப்பள்ளிகளுக்கு ஒலி உள்வாங்கி, பள்ளி நூலகத்திற்கு அகராதிகள்  மற்றும் பள்ளிக்குத் தேவையான இதர பொருட்கள் வாங்கிக்கொடுத்து மூன்று  பள்ளிகளிலும் நூறு மரக்கன்றுகளையும் வழங்கி குழந்தைகள் மூலம் நடப்பட்டது.தமிழ்க்குடில் அறக்கட்டளை அடுத்த முயற்சியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தையடுத்த சிலம்பூர் கிராமத்தில் இணைய வசதியுடன் கூடிய ஒரு நூலகத்தை உருவாக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. 

தோழமைகளின் ஆதரவும்ஒத்துழைப்பும் இல்லையெனில் இவையனைத்தும் எங்களால் சாத்தியமாகி இருக்காது. அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.

நன்கொடையாக நிதிவழங்க  விருப்பம் உடைய தோழமைகள் வங்கி விவரங்களுக்கு நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளவும்.

https://www.facebook.com/kayathrivaithyanathan

கிராமத்தில் முன்மாதிரியான நூலகத்தை உருவாக்கும் தமிழ்க்குடிலின் இந்த முயற்சிக்குத் தங்கள் அனைவருடைய தொடர்ந்த ஆதரவினை வேண்டுகிறோம். நூலகத்தின் கட்டிடப்பணி முடிவுறும் தருவாயில் இருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  விரைவில் நூலகத்தின் திறப்புவிழா செய்யவிருக்கிறோம். நூலகத்திற்கான நூல்களை  வழங்க விருப்பம் உடையவர்கள் அரிய வகைத் தமிழ் நூல்கள் (இலக்கியம், இலக்கணம், மருத்துவம், ஓலைச்சுவடி, 64 கலைகள், ஆய்வுக்கட்டுரைகள் போன்ற நூல்கள்,அறிஞர்களின் சுயசரிதைகள்) கணினி மற்றும் நூல்கள் வைக்கும் அலமாரி, மின்விசிறி இவைகளை அவரவர் விருப்பமும், வசதிக்குமேற்ப வழங்கலாம்.

தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இதுவரையிலான செயல்பாடுகளை விவரமாகக் கண்டு அறியக் கீழ்க்கண்ட இணைப்பைப் பார்வையிடவும்.

தமிழ்க்குடில் அறக்கட்டளைக்குத் தங்களது தொடர்ந்த ஆதரவை வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

நட்புடன்,
தமிழ்க்குடில் அறக்கட்டளைக்காக

காயத்ரி வைத்தியநாதன்
(பொருளாளர்)


அகத்தின் வலி...!!!


அகத்தின் வலிகளை
முகத்தில் புன்னகையேந்தி
மறைக்கும் முயற்சியை
முறியடித்து
எள்ளிநகையாடி எட்டப்பனாய்
காட்டிக்கொடுக்கிறது
நெகிழும் குரல்..!!
****
அன்புக்குரியவர் வழங்கும் பரிசு
வலியாக இருப்பினும்
மகிழ்வுடன் ஏற்கவே விரும்புகிறது மனம் ...
***
ஒருவரின் நம்பிக்கையை காப்பாற்றும்போது,
ஒருவரின் நம்பிக்கையை இழக்க வேண்டிய கட்டாயத்திற்கு
ஆளாக்கப்படும் நேரத்தில் இருதலைக்கொள்ளி எறும்பாய் மனம்...
 ****


Thursday, 25 April 2013

மனச்சிதறல்...அன்பாக நடிப்பதை விடுத்து
அன்பாகப் பழக
அன்பின் ஆழம் புரியும்..

உழைப்பாளியாய் நடிக்காமல்
உண்மையாய் உழைக்க
வியர்வையின் மணம் புரியும்..!

நேர்மையானவனாய் நடிப்பதைவிட
நேர்மையானவனாய் நடக்க
நேர்மையின் வலிமை புரியும்.

காதலிப்பதாய் ஏமாற்றாமல்
காதலுடன்
காதலை உணர்ந்து காதலிக்க
காதலின் சுகம் புரியும்..!!

தேசப்பற்றுடையவனாய்
தோற்றமளிக்காமல்
தேசத்தின்மீது பற்றுவைக்க
தேசம் வளர்ச்சியடையும்..

*****

Tuesday, 23 April 2013

எழுத்து...!!

எண்ணத்தில் தோன்றுவதை
எதிரே காண்பதை
எடுத்துரைக்கப்பட்டதை
பந்தங்களால் பகிரப்பட்டதை
தோழமைகளின் தோல்விகள் - துயரங்கள்
அன்பானவர்களின் அன்பு
ஆசையுடையோர்களின் பேராசை
தன்னக்காரர்களின் சுயநலச்சிந்தனை
மோசக்காரர்களின் மோசடிகள்
காதல்..
காமம்..
துக்கம்
மகிழ்ச்சி
கண்ணீர்..
எழுச்சி,
தன்னம்பிக்கை
தத்துவம்..
வெற்றி
தோல்வி..
ஏமாற்றம்..
மரணம்
என அனைத்தையும்
அறிந்ததையும், உணர்ந்ததையும்,
பார்த்ததையும், கேட்டதையும்...
பதிவாய் இங்குப்பகிர..
அனைத்தும் எழுத்தாளனுக்கு ஏற்பட்டதோ..??!!
கற்பனையில் மூழ்காது..

எழுத்தை எழுத்தாய்க் கண்டு
குறையிருப்பின் எடுத்துரைத்து
நிறையிருப்பின் ஊக்குவிப்போம்
நிரந்தர எழுத்தாளனாய் வலம் வர
நித்தமும் உதவிடுவோம்..:)

Saturday, 20 April 2013

காதல் யுத்தம்...!!!

நித்தமும் யுத்தம் செய்கிறேன்..
இதய சிம்மாசனத்தில்
கம்பீரமாய் அமர்ந்து
எனை உறங்கவிடாத
உன் தோற்றத்துடன்...!!

செவியில் வீணையாய் ஒலிக்கும்
உந்தன் குரல்தவிர்த்து
ஏனைய குரலுக்கு
செவிடாய் இருக்கவிரும்பும்
என் செவியுடன்...!!

கண்மலரில் காதல் கசிய
எனை மயக்கும்
உந்தன் விழியினால்
உறக்கம் துறக்கும்
எந்தன் விழியுடன்...!!

சத்தமில்லாது முத்தமிட்டு
காதலில் மூழ்கச்செய்யும்
உந்தன் இதழுடன்...!!

சிலநேரம்
கண்ணா மூச்சியாடி
என் மனதை தவிக்கவைக்கும்
உன் மனதுடன்...!!

உன் மீதான கோபத்தில்
உணவைப் புறக்கணித்து
பசியுணர்த்தும் என் வயிற்றுடன்...!!

உன்மீதான காதலில்
உனையே நினைத்து நெக்குறுகி
எனை வலுவிழக்கச்செய்யும்
என் உணர்வுகளுடன்...!!

என் சிந்தையில்
நிரந்தரமாய் குடிகொண்டு
நித்தமும் தொடரும்
உந்தன் நினைவுடன்...!!

உன் வெற்றிக்கு
அஸ்திவாரமாய் அமைய
விரும்பித்தவிக்கும்
என் உள்ளத்துடன்...!!

உன் மகிழ்ச்சிக்கு
வித்திட்டு ஆணிவேராய்
அமைந்துவிடத்துடிக்கும்
என் இதயத்துடிப்புடன்...!!

என்காதல் உணர்ந்து
காதலுக்குக்
காதலை
காதலுடன் வழங்கும்
நின்காதலில் நெகிழும்
என் இதயத்துடன்...!!

சிலநேரம்
காதலை உணர்ந்தும் உணராதுபோல்
மௌனமொழி பேசும் உன் மனதுடன்...!!

உன்முன்னே
உயிரும் துச்சமென
உயிர்துறக்கத் துணியும் துணிச்சலுடன்..
உனக்கானவள்
உனக்காக
உணர்வுகளுடன்
உணர்வோடு நித்தமும்
புரிகிறேன் காதல்யுத்தம்...!!சிரி(கடி)ப்பு...

நபர் 1: அக்கவுண்ட்ஸே தெரியாதவனா அக்கவுண்டன்டாப் போட்டு இம்சை பண்றாங்க..

நபர் 2: ஏன் என்னாச்சு..??

நபர் 1: ஃபைனான்ஸியல் ரிப்போர்ட் ரெடியான்னு கேட்டா....யார்மேல ரிப்போர்ட் பண்றதுன்னே தெரியல சார் ..அதான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன்னு சொல்றான்..!!

நபர் 2: ??

சிதறிவை...

ஒற்றைக்கை மட்டுமே
காதல் இசைமீட்ட....
மற்றொரு கை
மடித்தபடி மறுக்க...
காதல் இசை
மௌனராகத்தில்
தனிஆவர்த்தனம் செய்கிறது
இணைந்திசைத்து
இன்னிசை வழங்காதாவென
ஏக்கமுடன் காத்திருக்கிறது
இதயம் ...!!  

Monday, 15 April 2013

தாயின் தவிப்பு..!!


ஒருதுளி விந்து 
அண்டம் பிளந்து 
உள் விழுந்த நாள் முதலாய்...
உன் வரவிற்காய் தவமிருந்து..
மருத்துவர் முடிவறிவித்த 
நாள்முதலாய்
மனம் முழுதும் நீ வியாபித்திருக்க...
உற்றவனுக்கு
வெட்கியபடியே உரைக்க..
அவன் ஆசையில் அள்ளியணைத்து
முத்தமழைப் பொழிந்து
பாசம் பகிர்ந்து
பாதுகாக்கிறான்
உரைத்த நாள் முதலாய்..

மாங்காயும் இனித்து;
சாம்பலும் சுவைக்கிறது..
உனைச்சுமைக்கும் வேளையிலே...

உனைப்பற்றிய 
சிந்தனையில் சிறகடித்துப்பறக்க..
நீ 
உருவம் கொள்ளும் முன்னர்
உனக்கோர் உருவமளித்து
உள்ளத்துள் பூரிக்க...

ஆஸ்திக்கு வாரிசாய்
ஆணாகப்பிறப்பாயோ...?
ஆசைக்கான வாரிசாய்
பெண்ணாப் பிறப்பாயோ..?!
கற்பனையில் நாட்கள் செல்ல..

மனதாள்பவனை 
உன்னுருவில் காண
ஒவ்வொருநாளும்
அவனையே மனதில் நினைத்திருக்க....

உன் நலன் கருதியே 
விரும்பா மருந்தை விரும்பியேற்று
விரும்பிய உணவை 
ஒவ்வாதென உள்ளம் தவிர்க்க...

நீ 
மெல்ல மெல்ல உருவம் கொள்ள
உள்ளம் உவகை கொண்டு
உடலும் தளர..
உண்ணும் உணவும் ஒவ்வாது
வெளியேற...
ஊண் உறக்கம் தவிர்த்து உனைச்சுமக்க..

என்னவன் பாசத்தில்
வலிகளும்
வளியில் கரைந்திடவே...

நீ
வயிற்றிலே  எட்டிஉதைக்க
உள்ளம் குளிர
நீ அயர்ந்து உறங்கும் வேளையில்
அச்சமுற்று..

படுக்கமுடியாமல் படுத்து..
உறங்காமல் உறங்கி..

சுகப்பிரசவமாய் இருக்குமோ...
தாயும்,சேயும் தரணியில்
இருப்பாரோ...
தகனத்திற்கு செல்வாரோ...?
தாயை விடுத்துத்
தனித்து செல்வாயோ..
தாயை அனுப்பி
நீ மட்டும் வருவாயோ...

தாய்மாமனைக்  கொள்வாயோ...
கொடிசுற்றி
மாமனைக்கொல்வாயோ..?
எத்தனையெத்தனையோ
கவலைகளை
சுமக்கச்செய்து...

நீ
தரணி பார்க்கும் நாளும் வந்திடவே..
கைகால் நடுங்க..
வியர்த்து விறுவிறுக்க
மேனி சிலிர்க்க
குடல் மேலேற..
இடுப்பு வலியில் இவ்வுலகம்
துறப்பேனோவென எண்ணியபடியே.
மூச்சுத்திணற..
முக்கிமுனகி பிரசவிக்கிறேன்..

உன் முதல் குரல் கேட்டு
குதூகளிக்கிறேன்..
மன்னவன் அவனும் உன்முகம் கண்டு
உச்சிகுளிர   நெற்றியில் முத்தமிட..
உன் முகம் பார்த்து
உள்ளம் மகிழ்ந்து
மேனி தடவி
வலிதுறக்கிறேன் நானும்....
.
மனதாள்பவனின் கருசுமக்க
நித்தமும்
நான் ஏற்கும் கர்ப்பிணி வேடத்தில்
கற்பனையில் பிறந்த குழந்தைக்கு
காலம் மறக்கமுடியா வண்ணம்
கவிநயமாய் பெயர் தேடுகிறேன்..

தாயாகமுடியாதவள்
தாயாகத்துடித்தபடியே...!!!


Saturday, 13 April 2013

உன்னோடு நான்...!!!

குழந்தை நீயும்...
கொங்கைசுவைத்திட்ட வேளையிலே
”ம்ம்” என்றெழுப்பிய குரல்..
இன்றும் இன்னிசையாய்
காதினில் ஒலிக்கிறது...!!

கண்ணாடி பார்த்து
முகப்பூச்சு பூசி, மீசை வரைந்(ளைத்)து
உன்னழகு காண்பதைக்
கண்டு ரசித்த காட்சிகள்
கண்முன்னே காட்சியளிக்கிறது நித்தமும்..!!

பசித்த உனக்கு உணவளித்து
நீ
உணவருந்திய
அழகை நினைத்து ரசிக்கிறேன்
அணுதினமும்....!!

உன்கரம் பிடித்து சுற்றித்திரிந்த
இடங்கள் உன்னோடு கழித்த நாட்களை..
நித்தமும் நினைவூட்டுகின்றன..!!

ஓடிக்களைத்து
நீ
ஓய்ந்து கண்மூடிக் களைத்திருக்க..
எண்ணெய்த் தேய்த்து
உனை உறங்கவைத்து
நீ உணரா நேரத்திலும்
முகத்தினில் முத்தமிட்டு
அகமகிழ்ந்தது நெஞ்சினில் நிலைத்திருக்க...

தூரத்தில் நீயிருப்பினும்..
இதயத்துள்ளிருக்க
உன்னோடான நாட்களை
உள்ளத்துள் எண்ணியெண்ணியே
இன்புற்றிருக்கிறேன் இன்று...!!

உனைப்பிரிந்திடும் நேரத்திலே
உனையணைத்து
உச்சிமுகர்ந்து மனம்குளிர முத்தமிட
மனதும் ஏங்க..
அலையெனத் திரளவிருந்தக்
கண்ணீரைக் கட்டுப்படுத்த அன்று
மௌன ஆபரணம் அணிந்திட்டேன் நானும்...!!

நீ
வெற்றிக்கனியை சுவைத்து
அமராகாவியமாய் அகிலத்தில் விளங்கிட..
உயிரையும் துறக்க
உறுதிபூண்டிருக்கும் - என்
பிரார்த்தனைகள் தொடரும்
ஒவ்வொரு நாளுமே...!!

உள்ளத்தில் குடிகொண்ட
நீ
வலியில் துடிக்கும் நேரத்தில்
அழுகைக்குக் காரணம் விளங்கிடாமல்
பரிதவிக்கும்
என்
உணர்வின் உணர்வறியாயோ....??

மரணத்தை வென்றிட
விரும்பிடினும்..;
நீ
தவிர்க்கவியலா மரணத்தைத் தழுவுமுன்
உனக்கென உன்னத இடம் பிடிக்க
முன் சென்று காத்திருப்பேன்...!!

மரணம்
உனை வென்றிடின்
எனை வந்தடைவாய்...
மரணத்தை
நீ வென்றிடின்
இன்னொரு பிறவியெடுக்கிறேன்
என் கரம் பிடித்து அழைத்துச் செல்.
உன் மடிமீது
குழந்தையாய் உறங்கக்காத்திருக்கிறேன்...!!Thursday, 11 April 2013

உள்ளச் சிதறல்...

உனையேப்படிக்கிறேன் நிதமும்
உன் நினைவினில் மூழ்கி
உன்னில் கரைந்து மறைவதை
உணர்கிறேன்..

உணர்ந்ததை..
கவியாய் வடிக்கத்
தோற்றுப்போகிறேன்..

எண்ணத்தில் இருப்பவன்
எழுத்தினில் வரமறுக்க

கவிசமைக்கும் முயற்சி
காற்றோடு கலக்கிறது..
வார்த்தையில் அடங்காதவனை
வர்ணிப்பதெங்கனம்..?!!