முகப்பு...

Monday 15 April 2013

தாயின் தவிப்பு..!!


ஒருதுளி விந்து 
அண்டம் பிளந்து 
உள் விழுந்த நாள் முதலாய்...
உன் வரவிற்காய் தவமிருந்து..
மருத்துவர் முடிவறிவித்த 
நாள்முதலாய்
மனம் முழுதும் நீ வியாபித்திருக்க...
உற்றவனுக்கு
வெட்கியபடியே உரைக்க..
அவன் ஆசையில் அள்ளியணைத்து
முத்தமழைப் பொழிந்து
பாசம் பகிர்ந்து
பாதுகாக்கிறான்
உரைத்த நாள் முதலாய்..

மாங்காயும் இனித்து;
சாம்பலும் சுவைக்கிறது..
உனைச்சுமைக்கும் வேளையிலே...

உனைப்பற்றிய 
சிந்தனையில் சிறகடித்துப்பறக்க..
நீ 
உருவம் கொள்ளும் முன்னர்
உனக்கோர் உருவமளித்து
உள்ளத்துள் பூரிக்க...

ஆஸ்திக்கு வாரிசாய்
ஆணாகப்பிறப்பாயோ...?
ஆசைக்கான வாரிசாய்
பெண்ணாப் பிறப்பாயோ..?!
கற்பனையில் நாட்கள் செல்ல..

மனதாள்பவனை 
உன்னுருவில் காண
ஒவ்வொருநாளும்
அவனையே மனதில் நினைத்திருக்க....

உன் நலன் கருதியே 
விரும்பா மருந்தை விரும்பியேற்று
விரும்பிய உணவை 
ஒவ்வாதென உள்ளம் தவிர்க்க...

நீ 
மெல்ல மெல்ல உருவம் கொள்ள
உள்ளம் உவகை கொண்டு
உடலும் தளர..
உண்ணும் உணவும் ஒவ்வாது
வெளியேற...
ஊண் உறக்கம் தவிர்த்து உனைச்சுமக்க..

என்னவன் பாசத்தில்
வலிகளும்
வளியில் கரைந்திடவே...

நீ
வயிற்றிலே  எட்டிஉதைக்க
உள்ளம் குளிர
நீ அயர்ந்து உறங்கும் வேளையில்
அச்சமுற்று..

படுக்கமுடியாமல் படுத்து..
உறங்காமல் உறங்கி..

சுகப்பிரசவமாய் இருக்குமோ...
தாயும்,சேயும் தரணியில்
இருப்பாரோ...
தகனத்திற்கு செல்வாரோ...?
தாயை விடுத்துத்
தனித்து செல்வாயோ..
தாயை அனுப்பி
நீ மட்டும் வருவாயோ...

தாய்மாமனைக்  கொள்வாயோ...
கொடிசுற்றி
மாமனைக்கொல்வாயோ..?
எத்தனையெத்தனையோ
கவலைகளை
சுமக்கச்செய்து...

நீ
தரணி பார்க்கும் நாளும் வந்திடவே..
கைகால் நடுங்க..
வியர்த்து விறுவிறுக்க
மேனி சிலிர்க்க
குடல் மேலேற..
இடுப்பு வலியில் இவ்வுலகம்
துறப்பேனோவென எண்ணியபடியே.
மூச்சுத்திணற..
முக்கிமுனகி பிரசவிக்கிறேன்..

உன் முதல் குரல் கேட்டு
குதூகளிக்கிறேன்..
மன்னவன் அவனும் உன்முகம் கண்டு
உச்சிகுளிர   நெற்றியில் முத்தமிட..
உன் முகம் பார்த்து
உள்ளம் மகிழ்ந்து
மேனி தடவி
வலிதுறக்கிறேன் நானும்....
.
மனதாள்பவனின் கருசுமக்க
நித்தமும்
நான் ஏற்கும் கர்ப்பிணி வேடத்தில்
கற்பனையில் பிறந்த குழந்தைக்கு
காலம் மறக்கமுடியா வண்ணம்
கவிநயமாய் பெயர் தேடுகிறேன்..

தாயாகமுடியாதவள்
தாயாகத்துடித்தபடியே...!!!


7 comments:

  1. முடிவில் மனதை உலுக்கி விட்டீர்கள்...

    ReplyDelete
  2. முதல் வரிகளே பட்டாசு ....அருமை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை

    வாருங்கள் வந்து இணையுங்கள் நாடி கவிதையில்

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழர்...வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.._/\_

      Delete

  3. தாய்மை உணர்வைத் தரிசித்தேன்
    இறுதி வரிகள் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழர்...தங்கள் வாழ்த்து எம் எழுத்தை வளர்க்கட்டும்.

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__