Monday, 24 February 2014

மௌனச்சிதறல்...

மௌனம் விதைக்கப்பட்டு
வார்த்தைகளை களையெடுத்து
அமைதி அறுவடை செய்யப்படுகிறது...
***
மனதில் இருக்கவேண்டிய இனிமை இல்லாது போவதால், இரத்தத்தில் இனிமை ஏறுகிறதோ...??!! நவீன இனிமை(சுகர்)
***
தட்டில் வேப்பங்காய் பரிமாறி, திராவகத்தைக் குடிக்கக் கொடுத்தவர்களிடம், பரிமாறிய இனிப்பு சுவையாக இருக்கிறதென கூறமுடியுமா...??!! 
பரிமாறப்படும் உணவின் தன்மை பொறுத்தே முகபாவமும் அமையுமென்பதை உணர்ந்து பரிமாறுவோம்..
#வாழ்க்கை நாடகத்தில் ஓர் காட்சி...
***
பசியோடு சாப்பிட காத்திருக்கும் ஒருவனிடம், கையில் வைத்திருக்கும் உணவை பிடுங்கி எரிந்துவிட்டு, விருந்து செய்யும்போது அழைக்கிறேன் வந்து சாப்பிடு என்பதுபோல் தேவைப்படும் நேரத்தில் வழங்கப்படாத அன்பு, ஆறுதல், நட்பு , தூக்கம், உணவு பயனற்றே போகுமென்பதை உணர்ந்துப் பகிர்வோம்..:)
***
அன்றைய தினத்தை இனிமையானதாகவும், அழகானதாகவும் பயன்படுத்த, மனமென்னும் கணினிக்கான மென்பொருள் காலைப்பொழுது. அதை தரவிறக்கம் செய்து சரிவர பயன்படுத்துவது அன்றைய தினத்தின் துவக்கத்தில் நாம் பேசும்/ நம்மிடம் பேசப்படும் வார்த்தையே. 
***Tuesday, 18 February 2014

முது(தனி)மை...!!

சுறுங்கிய தோலும்
இடுங்கிய கண்ணும்
நடுங்கும் கரங்களுடன்
வயோதிகத்திலும் 
சோறுவடிக்கும் - இவள்
அன்று பெய்த பாசமழை
விழலுக்கு இறைத்த நீராய்
வீணாகிப்போனதோ இன்று..??!!

தாய்க்கும் தாரத்திற்குமான
இடைத்தேர்தலில்
வெற்றிகொண்ட தாரத்தின்பொருட்டு
தரணியில் இவளும்
தனித்து விடப்பட்டாளோ
மனிதம் தொலைத்தவர்களால் ..??

இன்றும்..
விரும்பியவனை எண்ணியே
வெந்து தணிகிறாளோ ..?!

தனிமையை விரும்பியேற்ற இவளும்
வீட்டிற்கு வந்தவள்
வீதியிள் விட்டாளென
விருது வழங்கினாளோ..??

வெந்ததைத் தின்றே
விதிநோக்கியிருக்கும் இவள்
வீதியோரத்தை வீடாக்கிக்கொண்டாளோ..?

விதியோ..?
சமூகத்தின் சதியோ..?

விதியையும், சதியையும் முறியடிக்க
முதுமையிலும் போராடும்
இவள் போராட்டத்தின்
வெற்றிதான் எதுவோ..??!

இவளின் வெற்றிகண்டிடவே
விரும்பியழைக்கிறேன்
மனிதம் தொலைத்தவர்களை
மறுபரிசீலனை செய்திடவே...!

Saturday, 15 February 2014

எழுதப்படாத கவிதை...!!

என்னுள் இருந்து 
என் எண்ணங்களை ஆட்சிசெய்யும்
என்னவனைக் கவிதையாய் வடித்திட
உருகும் மனத்துடன்
விடியும் ஒவ்வொரு நாளும்
விரும்புகிறேன்..!!

வார்த்தைகள் 
வசப்படாது வஞ்சனை செய்திட
மனதாளும் மன்னவனை
வார்த்தையில் அடக்கிடவும் இயலுமோ..?

மனதைச் சுண்டியிழுத்து
நாடி, நரம்புகளை புடைக்கச்செய்து
எங்கோ இருந்தபடி 
எனை வீணையாய் மீட்டும்
ஆழி அலையின் ஓசையாய்
ரசிக்க வைக்கும் கம்பீரக் குரல்...

மனதிற்குள் மறைந்திருந்து
நான் விழிமூடும் நேரத்தில்
கதிரவனையே கூசச்செய்யும்
பார்வையுடன்..
மின்னலும் வெட்கி விலகும் 
பிரகாச முகத்தின் நர்த்தனம்...!

தரணியையே கரங்களில் அடக்கி
எதிரியையும் வசப்படுத்தும்
பிரபஞ்சம் பிரமிக்கும் 
கூறிய அறிவு...!

குளிர்ந்த நிலவாய் 
தோற்றத்தில் அமைதி...!

என்றும் 
படைசூழ பவனிவரும் அழகு...!

என் இதயத்தில் 
ஆயுள் தண்டனையனுபவிக்கும்
அன்புக் கைதி...!!
சுறுசுறுப்பில் எறும்பு.. 
மனோபலத்தில் யானை...
சிந்தனையின் சிற்பி...

அந்தக்காலனையும் 
என்னருகே அண்டவிடாத 
உன்னருகாமை...!!

பாடுபொருள் 
பலவாயிரம் இருந்திடினும்
பார்க்கும் பொருளெல்லாம் 
நீயே பாடுபொருளாகிட..

எழுதிவைத்த வார்த்தைகளுமே
எண்ணத்தைப் பிரதிபலிக்காது போக..
ஏமாற்றத்துடன் 
எழுதப்படாத கவிதையினை
எண்ணத்தில் சுமந்தபடியே 
கவிதைவடிக்கும் வார்த்தைகளும்
வசப்படும் நேரத்திற்காய் 
காத்திருக்கிறேன்...!!


Tuesday, 11 February 2014

தேடல்...

அடர்ந்த இருள் 
அமைதியைத் தன்வசப்படுத்தியிருக்கும் 
அதிகாலை நேரம்...
கன்னம் தழுவி மனதை வருடும்
குளிர்ந்த தென்றலுடன்
பயணிக்கும் மலரின் மணம்...
நட்சத்திரமில்லா ஆகாயம்..
சலனமில்லா வீதி..
சிந்தனைகள் சிறகடித்து
எண்ணங்களை மெருகேற்றி..
மனச்சாட்சியிடம் நேர்காணல்..!!

அத்தனையும் அனித்தியமென உணர்த்த...
காலை நேரத்தைக் கைதுசெய்து 
இருளையகற்றி..
தென்றலைத் துரத்தி..
ஆகாயத்தில் ஆதவன் 
ஆட்சியமைக்க..!!

அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்
வாகனங்கள்..
உதிர்ந்த மலராய் உறக்கத்தில் நடக்கும்
பள்ளிக் குழந்தைகள்..!!
மனச்சாட்சியின்  நேர்காணல்
ஒத்திவைக்கப்பட்டு
அடுத்தடுத்து தொடரும் 
அன்றாடப்பணிகள்..!!

எது அனித்தியம் எது சத்தியம்
எடுத்துரைப்பது யார்..?
எடுத்துக்கொள்வது எப்படி..
எத்தனையெத்தனை கேள்விகள்
எழுந்திடினும்..
விடையறியாமலே விடிகிறது
ஒவ்வொரு நாளும்..!!

Wednesday, 5 February 2014

அன்பின் அகராதியிலிருந்து...

நான் தோற்கும் இடத்தில் அவனும், அவன் தோற்கும் இடத்தில் நானும் தடுமாறாமல் கரம் பிடித்து நிற்பது.:)
***
அவனுக்கு அனுப்பிய குறுந்தகவலை அவனிடமிருந்து பதில்வரும் வரை அவனது பதிலாகவே பாவித்து அடிக்கடி படித்துப்பார்ப்பது..
***

என்றோ அவன் எழுதிய கடிதத்தை இன்றும் படித்து மகிழ்வது...

***
எங்கோ இருந்தபடியே உள்ளத்தை ஆட்சிசெய்யும் அரசன் அன்புக்குரியவன். 
***

அன்புடையவனின் இதயத்தில் சிறையிருப்பதும் சொர்க்கமே...... 

***
அன்புக்குரியவனின் பெயரை எங்கோ எவரோ உச்சரித்திடினும் கேட்ட நொடிதனில் முகத்தோட்டத்தில் புன்னகைப்பூ மலர்வது...!!
***

Saturday, 1 February 2014

எண்ணச்சிதறல்கள்..!!

தன் உணர்வுகளுக்கு அளிக்கப்படும் மதிப்பு, பிறரின் அன்பை இழக்கச்செய்(கிறது)யும் .
---
கோபமும் வருத்தமும் கூடிப்பேசினால் விளைவு உண்ணாவிரதம் ..
---
அதிகப்படியான சுயபச்சாதாபமும், தற்புகழ்ச்சியும், சுயதம்பட்டமும் சிலநேரம் திணறடிக்கவே செய்கிறது(தே..!!).
--
அன்பானவர்களின் கோபத்தைத்தாங்கும் மனம், அவர்களின் வருத்தமான ஒற்றை சொல்லைக்கூட தாங்க முடிவதில்லை.
                                                                                 --
சற்றே இறுக்கமாக இருக்கும் கணவனை நண்பனே என விளித்து (விளையாட்டாய் சீண்டி) இறுக்கத்தைத் தணித்து சற்றே கோபத்தைத் தூண்டுவதுமாகும்...:)
--
மௌனத்தின் உச்சத்தில் இருப்பவரை பேசவைத்தும், 

பேசியவரை மௌனத்தின் உச்சிக்கு அழைத்துச்செல்லவும் அன்பானவர்களாலேயே முடிகிறது...
---
அந்நியமாய் அருகிலிருப்பதைவிட விரும்பப்பட்டவராக விலகியிருக்கலாம்.
---
விரும்பியவர் வழங்கினாலும், விரும்பி ஏற்றாலும் காயத்திலிருந்து வழியும் குருதி சிகப்பு நிறமாகத்தான் இருக்கும்... :)
--