முகப்பு...

Sunday 30 June 2013

உறவெனும் நூல்...

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நம் கையில் கிடைத்(த)திருக்கும் நூல் நமக்கு விருப்பமான ஆசிரியர்களால் எழுதப்பட்டதாக இருந்துஅதில் இடையில் சிலபக்கங்கள்  கிழிந்துபோயிருப்பின் அதை அப்படியே விட்டுவிடாமல், அந்தப்பக்கத்தை விடுத்து தொடர்ந்து படித்து முடிப்பது போல்தான் மனித உறவுகளும்.  இயற்கையெனும் ஆசிரியர் எழுதிய மனிதஉறவெனும் மகத்தான நூல். நூல் நன்றாக இருப்பின் படித்து ரசிக்கவேண்டுமே தவிர, நாம் அந்த நூலை எவ்வாறெல்லாம் ரசித்துப்படித்தோமென ஆசிரியர் நம்மைப்பற்றி உணரவேண்டும் என எதிர்பார்ப்பது எங்ஙனம்..அதுபோல்  நாம் விரும்பும் பக்கங்கள் மட்டும் இருக்கவேண்டும் என எதிர்பார்க்காதுமனித உறவுகளில் படிக்கவிரும்பும் சில பக்கங்கள் காணாது போயிருப்பினும் பக்கங்கள் விடுத்துப்படிக்க பழகுவோம்.    விடுபட்ட பக்கங்களைவிட இருக்கும் பக்கங்கள் இன்னும் அதிக சுவாரசியமானதாக இருக்கலாம். இல்லாத பக்கத்தை எண்ணி இருக்கும் பக்கங்களையும் படிக்காது தவிர்த்து நல்ல நூலை படிக்காமல் இருந்துவிடும் தவறைச் செய்யாதிருப்போம். 

Saturday 29 June 2013

உணர்வுச்சிதறல்..

உணர்த்தவேண்டியதை
உணர்த்தவேண்டியவர்
உணரவைக்கத்தவறும்போது…;

உணரவேண்டியவர்
உணரவேண்டியதை உணரத்தவறுவதாக
உணர்த்தவேண்டியவர் உணர..

உணரவேண்டிவர் உணராது
உணர்த்தப்படவேண்டுமெனவும்..
உணர்த்தவேண்டியவர்
உணர்த்தாது
உணரவேண்டுமெனவும்
உணர்வதும், உணர்த்தப்படுவதும்
உணராமலும், உணர்த்தப்படாமலும்

உணர்வு
உணர்வதற்காகவும்,
உணர்த்தப்படுவதற்காகவும்
காத்திருக்கிறது...!!

Tuesday 25 June 2013

பிரமிக்க வைக்கும் இயற்கை..


நகர்ந்து செல்லும் மேகங்கள் தோற்றுவிக்கும் விதவிதமான பிம்பங்கள் எப்படி காண்கிறோமோ, அப்படித் தோற்றமளித்து நம் மனதை வெளிப் படுத்துகிறதோ..?!!
******
காலை நேரக்கதிரவனை சிலநிமிடங்கள் உற்றுநோக்கிப் பிறகு சிலநொடிகள் கண்மூடிப் பார்க்கையில் உள்ளேத் தோன்றி மறையும் பிம்பங்களும், நெருப்புப்பிழம்பெனத் தோற்றமளிக்கு நிறமும்...!!!
******
புத்துணர்வூட்டும் கஸ்தூரி மஞ்சளின் மணம் செயற்கையாக தயாரிக்கப்படும் சோப்புகளிலும், பெர்ஃப்யூம்களிலும் கிடைப்பதில்லை..!!!
******
குழந்தையின் அழுகுரலையொத்த பூனையின் குரல் பிரமிக்க வைக்கும் இயற்கை..!!
******

Saturday 22 June 2013

வனாந்தரத்தில் ஒரு நாள் - 200வது பதிவு

தூரிகையில் எமது  200வது பதிவு சிதறக்காரணமாயிருந்த என் வலைப்பூ நண்பர்களுக்கும், முகநூல் தோழமைகளுக்கும், குழந்தை கோடு போடும்போதே அப்படித்தான் அழகா இருக்கு எனக்கூறும் தாயின் பாராட்டைக்கேட்டு  மகிழ்ந்து தான் எழுதியது சரியெனத் தொடர்ந்து கோடுவரையும் குழந்தையைப் போல் என் தூரிகையிலிருந்து சிதறியவைகளை கவிதையெனப் பாராட்டி ஊக்கமளித்துவரும்  என் அன்புத்தோழமைகளுக்கும், ஒவ்வொரு முறை சந்தேகம் கேட்கும்போதும் விளக்கி என் எழுத்தை செம்மைப்படுத்திக்கொள்ள உறுதுணையாய் இருந்து வரும்  நட்புகளுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எத்துனை ஆசான்கள் இருப்பினும் முதன் முதலில்  பள்ளியில் அகரம் கற்பித்து நமக்கு கல்வியறிவு புகட்டி வழிகாட்டிய ஆசானை மறக்கவியலாதது போல்கவிதையுலகில் அகரம் கூட அறியாத எனக்கும் எழுதும் ஆசையை ஏற்படுத்தி  எம்மை எழுத்துலகிற்கு அறிமுகப்படுத்திய  நட்பிற்(குருவிற்)கு  என் பணிவான  வணக்கத்தினைத் தெரிவித்துக்கொள்வதோடு தொடர்ந்த ஆசியினை வேண்டி எமது கிறுக்கல்களைத் தொடர்கிறேன். _/\_

**************************************************************************

இடம்:  மணம்வீசும் மலர்களும், ஓங்கி உயர்ந்து அடர்ந்த மரங்களும் சுற்றித்திரியும் விலங்கினங்களும் நிறைந்த வனம்.

சூழல் : வாழ்க்கையெனும் வனாந்தரத்தில் மனமென்னும் குரங்கின் தாவல்களிலிருந்து சற்றே விலகியிருந்து வாழ்க்கையின் அர்த்தம் உணர  எண்ணி ப்ரியமானவர்களின் கரம்கோர்த்து  மேற்கொண்டப்  பயணத்தில், விதியெனும் வேடுவனின் சதியால்  கரங்கள் விடுத்துத் தனித்துவிடப்பட கவலையுடன் தொடரும் பயணம்.

அடர்ந்த வனாந்தரத்தில்  அமைதியாய் உட்கார்ந்திருக்கும்  சிங்கத்தையும் அதன் அருகில் துள்ளி விளையாடிக்கொண்டிருக்கும் மான்குட்டியையும் வியப்புடனும் சற்றே பயத்துடனும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

சிங்கம்: ஏன் அப்படிப்பார்க்கிற...??

நான்   : உன் பெயரைக்கேட்டாலே அனைவருக்கும் நடுக்கம் ஏற்படும்...ஆனால் இந்த மான்குட்டியோ எந்த பயமுமின்றி உன் எதிரேத் துள்ளி விளையாடுகிறதே...நான் கேள்விப்பட்டதெல்லாம் பொய்யா...?

சிங்கம்: நீ கேள்விப்பட்டதும் நிசம்..பார்ப்பதும் நிசம்...

நான்..:  ??

சிங்கம்: எனக்குப்பசியிருக்கும்போது எதிரே வருபவர்களை வேட்டையாடுவேன்இப்பொழுது என் வயிறு நிரம்பிவிட்டது அப்படியிருக்க எதற்காக வேட்டையாடனும் அதான்  உண்டதையெண்ணி அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் அமைதியாய்.

ஆச்சரியம் நீங்காமல்  நான்  அவ்விடத்தைவிட்டு அகன்று வனத்தைப்பார்வையிட...
அங்கே மணம்வீசித்தன் அழகால் அனைவரது மனத்தையும் கொள்ளை கொள்ளும் அழகுடன் காட்சியளிக்கும் மலர்களைப் புன்னகையுடன் நோக்க..

மலர்கள்: என்ன இதுவரை மலரைக்காணாததுபோல் காண்கிறாயே...? இந்த வனத்திற்குப் புதிதாய் வருகிறாயா..?

நான்: ஆம் புதியவள்தான்... புதிராக இருக்கும் வாழ்க்கைப்பயணத்தில் வனமும் ஒரு புதிராகவேத் தோன்றுகிறது. ஆள்நடமாட்டம் அதிகமில்லாத இந்த வனத்தில்  அற்புத அழகுடன் மணம் வீசிக்கொண்டிருக்கிறாய்.   உனை ரசிக்கவோ எடுத்து சூடவோ யாருமில்லாதது உனக்கு வருத்தமில்லையா...?!!

மலர் : தனக்கே உரித்தான புன்னகையுடன், எவரையும் எதிர்பார்த்து இயற்கை எனக்கு அழகையும், மணத்தையும் கொடுக்கவில்லையேஎன் கடமையை நான் செய்கிறேன்நம்மை ரசிக்கிறார்களா அனுபவிக்கிறார்களா எனப் பார்த்து சூரியனும், வருணனும்  வந்துசெல்வதில்லைஅப்படியிருக்க நான் மட்டும் ஏன்  பாராட்டை எதிர்பார்க்கனும்மலர்வதும், மணம் வீசுவதும் என் கடமைதானே அதைச் சரிவர செய்கிறேன்இதில் வியப்பென்ன..??

மலரின் கூற்று சரியெனப்பட மௌனமாய் மலரின் புன்னகையை நான் அணிந்து  இடம்பெயர, அடர்ந்து தன் கிளைகளை முடிந்த அளவு பரப்பி கனிகளைக் கொண்டிருக்கும் மாமரம் என்னை வியப்பில் ஆழ்த்தவே, வியப்பு மாறாமல் நான் அண்ணாந்து பார்ப்பதைக்கண்ட மாமரம்,  அவர்களிடம் கேட்ட அதே கேள்வியைத்தானே என்னிடமும் கேட்கப்போகிறாய் ...?

நான் : ஆம்...!!  உனக்கு வருத்தமே இருந்ததில்லையா...? இத்துனை பழங்கள் கனிந்து விரயமாகிறதுயாரும் சுவைக்கவில்லை நாம் ஏன் கனி கொடுக்கவேண்டும் என்று தோன்றவில்லையா..உன் கனி சுவைத்து நல்ல ருசியெனப் பாராட்டவேண்டும் என்று நினைத்ததில்லையா...??

மாமரம்: (நகைத்தபடி) இந்தப்பிரபஞ்சம் யார் பாராட்டை எதிர்பார்த்து இயங்குகிறது...? இரவில் குளுமையூட்டும் நிலவு எதை எதிர்பார்க்கிறது...ஆள் நடமாட்டம் அதிகமற்ற இங்கு இயற்கைவளத்தைக் கொடுத்தது யார்...நீரும், ஒளியும் கொடுக்கும் இயற்கை எங்களைக்கேட்டா கொடுக்கிறதுநாங்கள் நன்றிசொல்லவேண்டுமென்று எதிர்பார்க்கிறதா...? அப்படியிருக்க நாங்கள் மட்டும் ஏன் பாராட்டையோ நன்றியினையோ எதிர்பார்த்து  செயல்படவேண்டும்..??  எங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எனவே இயற்கையோடு இணைந்து எங்கள் கடமையைச் செய்கிறோம்.   

நான்ம்ம்...மனிதன் மட்டும்தான் தனக்குப்போதும் என்ற மனமின்றி எவ்வளவு கிடைத்தாலும் இன்னும் இன்னும் என்று சேர்க்கிறானோ...? கொடிய மிருகம் எனக்கருதப்படும் சிங்கம்கூட தன் தேவை முடிந்ததும் துள்ளும் மான்குட்டி எதிரே விளையாடியும் அமைதியுடன் அமர்ந்திருக்கிறதே..? மனிதனுக்கான தேவையின் எல்லைதான் என்ன...மனிதர்களுக்குத்தான் எத்துனை எத்துனை எதிர்பார்ப்புகள்...? போதுமென்றெண்ணாத அளவுக்கதிகமான ஆசைஎதிர்காலத்திற்கென நிகழ்காலத்தை அனுபவிக்காது எப்பொழுதும் எதையாவது எதிர்பார்த்தபடியான ஓட்டம்எதிர்பார்த்தது கிடைக்கவில்லையெனும்போது வலிவலி மிகும்போது  கோபம். பாராட்டை எதிர்பார்த்த செயல்பாராட்டு கிடைக்காதபோது எதிராளியின்மீது தேவையற்ற காழ்ப்புணர்ச்சிஅப்பப்பா.. மனிதனுக்கு வரமென இயற்கை வாரிவழங்கியிருக்கும் பொக்கிசத்தை உணர்ந்து அனுபவித்து கிடைத்திருக்கும் வாழ்வை வாழாது வீணடிக்கிறோமோ..?? தாவரங்கள், விலங்கினங்கள் போல் எதிர்பார்ப்பற்றுத் தன் கடமையினையும், பிறப்பிற்கான அர்த்தத்தையும் நிறைவேற்றாது இருக்கிறோமோ...யோசனையில் ஆழ்ந்திருக்க, மரத்தின் குரல் கேட்டு நினைவிற்கு வருகிறேன்.

மாமரம்: என்ன ஒரே சிந்தனை..?  நான் கூறியது குழப்பமாக உள்ளதா..?

நான் : இல்லையில்லைஇப்பொழுதுதான் தெளிவு கிடைத்தது.   உங்கள் அனைவருடனும் உரையாடியதில் மனம் அமைதியுற்றது மிக்க மகிழ்ச்சி.  விடைபெறுகிறேன். 

நான் செல்லவேண்டிய பாதையின் தடம் இதுதானோ  புரிந்திட்ட மகிழ்ச்சியில் பாதையை வந்தடைகிறேன்வனாந்தரத்தில் ஒரு நாள் வாழ்க்கையை சோலைவனமாய் அமைத்துக்கொள்வதற்கான ஒரு அனுபவமாய்  அமைந்திட்ட  மகிழ்ச்சியில் இல்லம் திரும்புகிறேன். வனத்திற்குள் பிரவேசிக்கும்போது இருந்த அச்சம் விலகி இன்னொரு முறை எப்பொழுது செல்வோம் என்ற எதிர்பார்ப்பே எச்சமாய்...!!

*************



Tuesday 18 June 2013

எண்ணச்சிதறல்கள்..

ஒவ்வொரு காலையும்
கதிரவன் கண்மலர்வது தனக்காகவென
மகிழ்ந்து மலர்ந்திடும்
சூரியகாந்தியாய்
நித்தமும் உனையே நினைத்து
மகிழ்கிறேன்
நீ எனக்கானவன் என்ற
நம்பிக்கையுடன்...!!!


*****
என் எண்ணங்களை
நான் உணருமுன்பே
எடுத்துரைத்து
உள்ளத்தில்
உணர்வுபூக்களை மலரச்செய்த
உன் வார்த்தைப்பூக்களின் வாசம்
இன்று
மனமற்று, மணமிழந்து
மனதைக் கொல்லாமல் கொல்கிறதே..?!!
கொள்வதையும் கொல்வதையும்
நிறைவேற்றும் சக்தி 

உன் சொற்களுக்கே சொந்தமோ..??
*****