முகப்பு...

Wednesday 29 February 2012

அறிந்து கொள்கிறேன்....



உன் புறக்கணிப்பில்
அறிந்துகொள்கிறேன்...

உனை அருகில் கொணரமுடியா
என்னன்பு பொய்த்ததை
அறிந்துகொள்கிறேன்...

அழைக்கும்போது பேசாமல்
அனுதினமும் உரையாட விரும்பும்
பக்குவமற்ற மனதை
அறிந்துகொள்கிறேன்...



நீ கொண்ட பக்குவம்
நானும் பெற
அளிக்கும் பயிற்சியென
அறிந்துகொள்கிறேன்...

உனையறியாமலேயே
அறிந்ததாய் அறிந்தது
அறியாததுவென
அறிந்துகொள்கிறேன்...

அனைத்துமறிந்ததாய்
நான் கொண்டது
அகந்தையென
அறிந்துகொள்கிறேன்.....

உன் புறக்கணிப்பில்
கற்பதற்காயிர மிருப்பதை
அறிந்துகொள்கிறேன்...

உன் காலடித் தொடர்ந்து
அறியாததை
அறிந்துகொள்ள
ஆர்வமாயிருக்கிறேன்...
நீ புறக்கணித்துக் கொண்டேயிரு.....!!!

Tuesday 28 February 2012

பிச்சைக்காரன்......


உழைக்க மனமில்லாமல்
அவனும் உற்சாகமாய்
கை நீட்டுகிறானே...

ஒரு பிடி சோற்றுக்காக
ஓடி ஓடி இரைஞ்சி நிற்க..


வகை வகையாய் வசை கேட்டும்
வயிற்றின்  குரல் வளமாய் ஒலிக்க..
வறுமையோடு  வாழ்வதா...?
வசை கேட்டு வாழ்வதா...??

எவனோ பிழைப்புக்காக கடத்த
ஏந்துகிறானே அவனும் கையை...!!

கறுப்புப் பணமு மங்கே..
கல்லாய் வீற்றிருக்க..
இவனும் கையேந்துகிறானே 
காசுக்காக...!!


கல்வியாளனும் கல்விச்சாலையிலே
கைநீட்டுகிறானே...!!

அரசாங்க அதிகாரியுமே
சொத்துக்காக கையேந்துகிறானே...!!

அரசியல்வாதியுமே
நிதிகளுக்காக கையேந்துகிறானே...!!


தனவானிவனுமே 
கருப்புப்பணத்திற்காக 
அண்டை நாட்டிடமே 
அடைக்கலத்திற்காக கையேந்துகிறானே...!!

அனைவருமே கையேந்த..
அவனுமே
அன்றாட உணவுக்காக 
கையேந்துகிறானே....!!!

ஒரு வேலை சோற்றுக்காக....
ஓயாமல் வசைவாங்கி..
இப்படியும் வாழ வேண்டுமா...??
மனம் வருந்த..
மனதிற்கும்வயிற்றுக்கும் போட்டி..

வயிற்றின் வெற்றியை வசை கேட்டு
கொண்டாடுகிறான் அவனு மங்கே....!!!!:(:(






















நந்தவனப்பூக்கள்..!!

நந்தவனமாய் இறைகொடுத்த இப்பிறவி..!!
நறுமணம் வீசும் வாழ்வில்..
வண்ண மலர்கள் பூத்துக் குலுங்க..
கண்ணைக் கவரும் கனகாம்பரம்..

மந்தகாசத்தைத்தூண்டும்
மல்லிகை, மரிக்கொழுந்து......

வெண்மேகமாய் காட்சியளிக்கும்
நந்தியாவட்டை...
வெண்மையும், இளஞ்சிவப்புமாய்

பூமித்தாய்க்கு புகழாரம்
சூட்டியபடி பவழமல்லி...

சந்தன முல்லை, சாதிமல்லி..
வெண்மை, நீல சங்குப் பூவென..

வண்ண,வண்ண பூக்கள்
வரிசையாய் வீற்றிருக்க...

ஒய்யாரமாய் வீற்றிருக்கும்
பூவையவளின் கார்குழலை
அழகூட்டும் ரோசா..
மணமூட்டியபடி மல்லி...

ஈசனின் திருவடி சேர்ந்த

செம்பருத்தி..., செவ்வரளி...

குடும்பத்தைக் கண்ணீரில்
ஆழ்த்திச் சென்றவனின் கல்லறையில்
அலங்கரிக்கும் கல்லறைப் பூக்கள்...

அழகாய் காட்சியளித்து..
நறுமணத்தால் சுண்டியிழுத்து....

எதையும் அலங்கரிக்க முடியா சோகத்தில்
சந்தன முல்லையும், சாதிமல்லியும்
உதிர்ந்து கிடக்க......
கூந்தலில் குடியேறுவதா..??
இறையடி சேர்வதா..??
இல்லத்தையும்,
கல்லறையையும் அலங்கரிப்பதா..??
உபயோகமற்று உதிர்ந்து போவதா....??

இறையையும்,இயற்கையையும்
அறிவதெப்போது...?? அறிவதெங்ஙனம்..?? 





Sunday 26 February 2012

கருப்பு பணம்.....

 
உடன்பிறந்தோர்
உணவுக்காக  ஏங்கியிருக்க
ஊருக்கு அன்னதானமாம்...!!
கோடி கோடியாய் கொள்ளையடித்தாலும்...  



உண்பது ஒரு சாண் வயிற்றுக்கு..
உடுப்பது  எண்சாண் உடம்பிற்கு..
படுத்தால் ஆறடி..
இறந்தால் ஓர் பிடி சாம்பல்..

காந்தியையும் கைதியாக்கி...
அண்டைநாட்டில் அடகுவைக்கும்
அரசியல்வாதிகள்...

நாட்டின் பொருளாதாரத்தை
நாடுகடத்தும்..
நடிகர்கள்..

வாழ்க்கையை வணிகமாக்கும்
வியாபாரிகள்...
தனத்தை எல்லைகடத்தும் தனவான்கள்...

ஏழையின் வயிற்றிலோ ஈரத்துணி..
தனவானிவன் வீட்டிலோ...
கோணியில் கோடி கோடியாய்...
கோடானுகோடி..

பசிக்குதவா உணவை
பாதுகாத்து என்ன பயன்..??

பணத்தை மெத்தையாய் விரித்தாலும்
உறங்குவதற்கான  நிம்மதி
உன்னிடமுள்ளதா...??

வறுமையில் வாடுவோருக்குதவாமல்
நீ
வாரிச்சுருட்டி சேமிக்கிறாய்
வேற்றுநாட்டவனிடம்.....!!!

உலகவங்கியில் உறங்கும் பணத்தால்
உனக்கென்ன பயன்..??

எவனோ அடையும் இலாபத்திற்கா
நீ இரவும் பகலும் உழைக்கின்றாய்...??

உடன்பிறவா சகோதரன்
உணவிற்காக வாடுகிறான்..
நீ 
உலக வங்கியை வளமாக்குகிறாய்..!!!


எஞ்சியதை கொடுத்தாலே
எளியவனும் இன்புறுவானே...!!
நீ
மிதமிஞ்சியதை கொடுக்கவும்
மெத்தனம் காட்டுவது ஏனோ...?? 




நாய் பசிக்குதவா தேங்காயாய்
உற்றார் உறவினர்க்குதவா பணத்தை
நீயும்
மாற்றான்தேசத்துக்கு  உதவவா
பாடுபட்டாய்....??

பணத்தையும்
கல் அறையில் மறைத்தே
நீயும்
கல்லறை எழுப்பி..
கருப்பென முத்திரையிட்டு
காலாவதியாக்குவதேனோ...??

இந்தியாவும்
உலக வங்கியிடம் கடனாகியிருக்க,
குடிமகனாம் நீயுமே
கோடி கோடியாய்
உலகவங்கியில் பதுக்கிவைக்கிறாய்....

எவரும் அறியாமல்
எங்கோ சேர்க்கும் பணத்தை
நீ
எமனிடம் சென்றால்.,
அடைவது யாரோ...??

அதிகமான அமிர்தமும் நஞ்சாக..
நஞ்சை அமிர்தமாய் நினைப்பதேனோ...??















மௌனமாய்.....!!!!

உறங்கா விழியும்
உனை நோக்க...

செவியில் ஒலிக்கும் உந்தன் குரல்
சிந்தையைத் தூண்ட..

நடுநிசியும் நண்பகலாக
குழம்பி யருந்தியபடி குழம்ப....

விழித்தபடி கண்ட கனவு
உறங்காமல் தடுக்க..

உறங்கியபடி விழித்து
விழித்தபடி உறங்கி....

உறங்கியது போதுமென
உணர்வு விழிக்க
விழியும்  உறக்கம் துறக்க...

விழித்தபடி உறங்கியது தவறா..??
உறக்கத்தில் விழித்தது தவறா..??
உணர்த்துவது எதை..??
உணரவேண்டியது எதை..??

உறங்கியது சத்தியமா...?
விழிப்பது சாத்தியமா..??

நீயும்
மௌனமாய், மௌனத்தை உணர்த்த...
நானும்
மௌனத்தை விரும்பியே மௌனமாய்
மௌனத்தை மௌனிக்க
மௌனத்தைக் கையிலெடுக்கிறேன்.....!!!!















காவியத் தலை(வி)வன்...


நாம்..
உல்லாசமாய்
ஓடியாடித் திரிந்ததென்ன...??
ஊஞ்சல் கட்டி விளையாடியதென்ன..??



ஓய்வில்லாமல் மகிழ்ந்ததென்ன..??
ஆடிப்பாடி ஆர்ப்பரித்து.
ஆண்டு பல காதலித்தும்..
விதி செய்த சதியோ இல்லை..
உன் வீரமிழந்த செயலோ....??

மனத்திலுள்ளவனை
மறந்தாற்போல்..
மங்கையவள்
மங்கள நாண் பூட்டி
மணாளனுடன் சென்றுவிட...


இதயத்திலிருப்பவளே
என்னைத் தன்னந்தனியாய்
தவிக்கவிட்டு
உன் நினைவலையால்
கட்டுண்ட எனை
இருதலைக் கொள்ளியாய்
இம்சிப்பதேனோ..?



மங்கள நாண் பூண்டாலும்
மங்கையிவள் மனம்
வரண்ட பாலையாய்....
நீறுபூத்த நெருப்பாய்
உன் காதல் கனலில் தகிக்கும் என்னை..
அந்தக் காலனும் 
காதலிக்கத் தொடங்க.,

அவன் கொண்ட பசலைக்கு 
எனை வதைக்க..
மரணத்தை எதிர்நோக்கியே நானும்..
காலனவன் கைபிடிக்கும் நேரத்தில்
காதலை கற்பித்தக் காவியத் தலைவன்,உன் தோள் சாய விரும்பும் மனம்..
மனசாட்சிப் பேசும் நேரமிது..
மரணிக்கும் தருவாயில் உன்
மடியில் உயிர் நீக்க மகேசனை வேண்டுகிறேன்..
உனைத் தன்னந்தனியே தவிக்க விட்டு வந்த என்னை
மன்னிக்க வேண்டியே
மன்றாடி வேண்டுகிறேன்...
என்னவனே என்னுயிரை எமனிடம் தருவாய் நீயே...



கண்மனியே...!!
காதலித்த எனைக் கைவிட்டாலும்
காலனவன் கைபிடிக்கும் நேரத்தில்
காண விழைந்து நீயும்
காவியம் படைத்தாயே..

காலனவன் பாதத்தை என்
கண்ணீரால் துடைக்க..


துணைவி உனை
திருப்பியும் தருவானா....??
என்னவளே..
என் சக்தி உனை இழந்து
நான் சவமாய் வாழ்வதும்
சாத்தியமா....??