முகப்பு...

Sunday, 26 February 2012

கருப்பு பணம்.....

 
உடன்பிறந்தோர்
உணவுக்காக  ஏங்கியிருக்க
ஊருக்கு அன்னதானமாம்...!!
கோடி கோடியாய் கொள்ளையடித்தாலும்...  



உண்பது ஒரு சாண் வயிற்றுக்கு..
உடுப்பது  எண்சாண் உடம்பிற்கு..
படுத்தால் ஆறடி..
இறந்தால் ஓர் பிடி சாம்பல்..

காந்தியையும் கைதியாக்கி...
அண்டைநாட்டில் அடகுவைக்கும்
அரசியல்வாதிகள்...

நாட்டின் பொருளாதாரத்தை
நாடுகடத்தும்..
நடிகர்கள்..

வாழ்க்கையை வணிகமாக்கும்
வியாபாரிகள்...
தனத்தை எல்லைகடத்தும் தனவான்கள்...

ஏழையின் வயிற்றிலோ ஈரத்துணி..
தனவானிவன் வீட்டிலோ...
கோணியில் கோடி கோடியாய்...
கோடானுகோடி..

பசிக்குதவா உணவை
பாதுகாத்து என்ன பயன்..??

பணத்தை மெத்தையாய் விரித்தாலும்
உறங்குவதற்கான  நிம்மதி
உன்னிடமுள்ளதா...??

வறுமையில் வாடுவோருக்குதவாமல்
நீ
வாரிச்சுருட்டி சேமிக்கிறாய்
வேற்றுநாட்டவனிடம்.....!!!

உலகவங்கியில் உறங்கும் பணத்தால்
உனக்கென்ன பயன்..??

எவனோ அடையும் இலாபத்திற்கா
நீ இரவும் பகலும் உழைக்கின்றாய்...??

உடன்பிறவா சகோதரன்
உணவிற்காக வாடுகிறான்..
நீ 
உலக வங்கியை வளமாக்குகிறாய்..!!!


எஞ்சியதை கொடுத்தாலே
எளியவனும் இன்புறுவானே...!!
நீ
மிதமிஞ்சியதை கொடுக்கவும்
மெத்தனம் காட்டுவது ஏனோ...?? 




நாய் பசிக்குதவா தேங்காயாய்
உற்றார் உறவினர்க்குதவா பணத்தை
நீயும்
மாற்றான்தேசத்துக்கு  உதவவா
பாடுபட்டாய்....??

பணத்தையும்
கல் அறையில் மறைத்தே
நீயும்
கல்லறை எழுப்பி..
கருப்பென முத்திரையிட்டு
காலாவதியாக்குவதேனோ...??

இந்தியாவும்
உலக வங்கியிடம் கடனாகியிருக்க,
குடிமகனாம் நீயுமே
கோடி கோடியாய்
உலகவங்கியில் பதுக்கிவைக்கிறாய்....

எவரும் அறியாமல்
எங்கோ சேர்க்கும் பணத்தை
நீ
எமனிடம் சென்றால்.,
அடைவது யாரோ...??

அதிகமான அமிர்தமும் நஞ்சாக..
நஞ்சை அமிர்தமாய் நினைப்பதேனோ...??















No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__