Wednesday, 29 June 2011

இயற்கை சீற்றம்!!!பிள்ளையிடம் சினம் கொள்ளும்
அன்னையை,
இதுவரைக் கண்டதில்லை நம் பூமி.....
இயற்கை அன்னையே,
உனக்கு ஏன் இந்த கோவம்
எங்கள் மீது?


பால் அருந்தும் குழந்தை,
தன் தாயின் மார்பகத்தை
கடித்துவிட்டால் வலியை
பொருட்படுத்தாமல்,
குழந்தைக்கு பாலூட்டுவது
தாயின் குணம்.....
கடித்தது குற்றமில்லை.....
அறியாமல் செய்த பிழை.

மனிதர்கள் பூமித்தாயை மாசு படுத்தி
குற்றம் புரியவில்லை.....
விளைவு அறியாமல் விளையாட்டுத்தனமாய்
உன்னை மாசு படுத்தும்
உன் பிள்ளைகளை மன்னிக்கக் கூடாதா?

அவர்கள் நீர்நிலையை,
மாசுபடுத்துகிறார்கள்.....
மரங்களை வெட்டுகிறார்கள்.....
அதிக அளவில் வேதியப் பொருட்களை,
பயன்படுத்துகிறார்கள்......


அதற்காக.....
அவர்களை இப்படி
சூறாவளியாகவும்,
சுனாமியாகவும்,
வெள்ளமாகவும்,
எரிமலையாகவும் .....
உருவெடுத்துத் தாக்குவது
முறையா??அன்னையே!!!
சாந்தி அடைவாய்.....
அன்னையைக் காக்கும் பொறுப்பை
உன்  பிள்ளைகளும் உணர்ந்து விட்டார்கள்.....

எங்கும்
இயற்கை வளமுள்ள,
அமைதியான பூமித்தாயாக,
அமைதியுடன் காட்சியளிப்பாய்.....
Saturday, 25 June 2011

”இன்னும் எத்தனைக் காலம்..”பெண்களை...

இன்னும் எத்தனை காலம்தான்

ஒரே நாளில் வாடும் மலரோடும்,

பகலில் மறையும் நிலவோடும்,

எங்கோ சென்று சங்கமிக்கும் நதியோடும்,

எதையாவது பற்றி ஏறும் கொடியோடும்....

தண்ணீரை விட்டு வெளியேறினால் 
மரணிக்கும் மீன்களோடும்.....

அனைவரின் காலடி படும்  பூமியுமாய்...

தன்னை கொல்ல வரும் விலங்கினதைக் 
கண்டு மருண்டு போகும் மான்களோடும்
ஒப்பிடுவீர்கள்?

இனியாவது பெண்களை...,

தேசத்திற்கு வெளிச்சமளிக்கும் விளக்காய்...
அதை ஏற்ற பயன்படும் தீக்குச்சியாய்....
அதர்மத்தை அழிக்க வந்த அக்னியாய்.....
பொங்கியெழும் பூகம்பமாய் ....
அன்பு காட்டுவதில் சூறாவளியாய் .....
நியாயத்தை நிலை நாட்டுவதில் சுனாமியாய்....

ஒப்பிட்டுப் பாருங்கள்..!!!!!!!!!

Tuesday, 21 June 2011

வட்ட மேசை மாநாடு

வட்ட மேசை மாநாடாம்
நட்சத்திர விடுதியில்...

அலங்கார விளக்குகள்
ஆடம்பர மேசை, நாற்காலிகள்....

வண்ண வண்ண
ப் பூக்களால் 
அலங்காரம்...

அடுக்கடுக்காய் அலைபேசியின்
அழைப்புகள்...

கணினியில் கருத்துப் பரிமாற்றம்

ஒருவாய் நீரருந்த ஒரு பாட்டில் நீரை
விரயமடிக்கும் வினோதமான நாகரீகம்...
வித  விதமான உணவு வகைகள்
பேருக்கு சுவைக்கப் பட்டு 

கொட்டப்படுகிறது உண்பாரற்று....?!


விலை உயர்ந்த உணவும் 
வீணாகிறது வீதியில்...
வீதியோரக் குழந்தைக்கு
விதி உணவளிக்கிறதோ...?!


விரும்புவோருக்கு  இல்லாமல்,
குப்பைக்கு உணவளித்துக்
குளிரும்  மனப்பான்மை......

பலவிதமான மனிதர்கள்,
காலத்தின் அருமையறியாமல்,
காத்திருக்கும் கணவான்கள்...

காக்க வைத்தவரும் அறியவில்லை,
காத்திருப்பவரும் அறியவில்லை..
காலத்தின் அருமையினை..

காக்க வைப்பதும், காத்திருப்பதுமேதான்
நாகரீகமோ?!

Monday, 20 June 2011

முரண்பாடு

இங்கு...
அழும் குழந்தைக்கு பால் புகட்ட 
முடியாத நிலையில் ஏழைத்தாய்...

அங்கு...
இறைவனுக்கு 
பாலாபிஷேகம்...?!

இங்கு...
ஒரு வாய் சோறு இல்லாமல்
தெருவோர பிச்சைக்காரன்...

அங்கு...
இறைவனுக்கு அன்னாபிஷேகம்...?!

இங்கு...
தன் வாலிபத்தின் மானத்தை மறைக்க
வழியற்று சாலையோர பெண்.

அங்கு...
இறைவிக்கு பட்டுப் புடவையலங்காரம்..?!   

இங்கு... 
தாலி கூட வாங்க முடியாமல்
திருமண ஏக்கத்தில் முதிர் கன்னி...

அங்கு...
இறைவனுக்கும், இறைவிக்கும் 
ஆண்டுதோறும் திருமண வைபவம்...?!
இங்கு... 
மழைக்குக் கூட ஒதுங்க இடமில்லாமல்
ஏழை மக்கள்...

அங்கு,
இறைவனுக்கு கோடியில் கும்பாபிஷேகம்...

இங்கு,
நடக்க முடியாதவன் சக்கர நாற்காலி
வாங்க கூட வழியில்லாத எளியவன்...

அங்கு,
இறைவனுக்கு தங்கத்தேர்..

அபிஷேகம் செய்த பொருள், பிரசாதம்
என்ற பெயரில், சக மனிதனுக்கு கிடைக்க வேண்டிய
உணவுப்பொருட்களை வீணடிக்கும் 
சமூகம்.....

பக்தியையும், மூட நம்பிக்கையையும்
குழப்பிக்கொள்ளும் மனிதர்கள்..

இத்துணை முரண்பாடுகளையும் ஏற்படுத்தியது
கடவுளா? மனிதனா?

மனிதன் செய்யும் தவறுக்கு,
மனிதனிடம் வராத கோவம்...
கடவுளிடம் வருவது ஏன்..?

Thursday, 16 June 2011

தாய்மை...
செல்லமே ....!!!

கேட்டறிந்த 

தாய்மையினை

உனை கருவுற்றபின்

உணரவைத்தாய்...


புவனத்தில் 
நீ 
உதித்த நாளன்று
நான் கேட்டிராத
இசைதனைக் கேட்டுமகிழ்ந்தேன் 
உன் அழுகுரலில்....

உனைத் துணியில் சுற்றி

வாங்கிய வினாடியில்...   

பூவை விட மென்மை 
குழந்தையென உணர்ந்தேன்...

உன் 
சின்னஞ்சிறிய உதடுகளால்

எனை முத்தமிட்டபொழுது

தேமதுர சுவையை உணர்ந்தேன். 

நீ 
உறக்கத்தில் சிந்தும் புன்னகைக்கு

என் நகையும் இணையாகுமா?


உறங்கும் உன்முகத்தில் கிட்டிடும் அமைதி
இப்புவியில் வெறெங்கும் கிடைத்திடுமோ....?


சமாதானத்திற்கு வெண் புறாவை

தூது அனுப்பியவன்,

நீ 
உறங்கும் அழகைக் கண்டிருந்தால் 

உன்னையல்லவா தூது அனுப்பியிருப்பான்..??!!


உன் வெண்முத்துப் பற்கள் காட்டிச்

சிரிக்கும்அழகைக் காண
சிந்தனைப்பறவையும் சிறகடித்துப்பறக்குமே..
பற்களை மாதுளை முத்துக்களுடன் ஒப்பிட்ட 
கவிஞன் மேல் கோவம் கொண்டேன்...
உன் பற்களோடு ஒப்பிடாததால்..

நீ தத்தித் தத்தி நடக்கும் அழகுக்கு 

அன்னத்தின் நடையும் இணையாகுமா..??

இறைவன், இறைவிக்குக் கூட

கிடைக்காத இப்பேரின்பத்தை 

நீ 
எனக்கு இப்பிறவியில் வழங்கிய உனக்கு 
இப்பிறவி அன்றி எப்பிறவி 
நான் எடுப்பினும்...

அதற்கு ஈடு செய்ய முடியுமா...?.


"வாழ்த்துரை”


வேழ முகம் தாங்கி வீற்றிருப்போனே..! 
வேலன் துணைத் தாங்கி வாழ்வளித்தோனே..!

வால்மீகி வரலாறு படைக்க வண்ணமாய்
வந்தமர்ந்து எண்ணமாய் உதித்தோனே.

முன்னைவினை யாவும் வென்று முடித்தோனே..!
அன்னைத் தமிழுக்கு அழகு செய்தோனே..!
காலனை வென்ற வேலன் நின்ற
திசைபார்த்து வணங்கிப் பணிகிறேன்.

சத்தியும் சிவனுமாய் சத்தியம் பேசுகிறேன்
சங்கத் தமிழ் மூன்றும் சந்தமாய் வீசுகிறேன்
சொந்தத் தமிழினிலே பாசுரங்கள் பாடுகிறேன்
வங்கக் கடலினிலே வாரணன் போற்றுகிறேன்.

வளரும் பிறையாக வளரட்டும் தமிழ்
மலரும் மலராக மலரட்டும் அகம்
சூரியச் சுடரொளி மதியென வீசட்டும்
சுத்தத் தமிழால் பாரெங்கும் பேசட்டும்

மடைதிறந்த வெள்ளமாய் இன்று
மனம் திறக்கும் மயில் ஒன்று
வண்ணங்கள் காட்டி தன் எண்ணங்கள்
எழுதவரும் வேலை இது, - வாழ்த்துரைத்து

வரவேற்கிறேன் வடிவேலன் அருள் பெருக
வந்தமர்ந்த கணபதி தாள் பணிந்து
வருக..! வருக...!! வளர்க நாளும் தமிழில்
வாழ்த்துகிறேன் வளம் பெறுக.


என்றும் அன்புடன்,
-தமிழ்க்காதலன்.