முகப்பு...

Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Friday, 17 April 2015

மரணத்தை வேண்டி....!!



பூசை  முடித்து வெளியே வந்த வனிதாவிடம்,. அம்மா உங்களுக்கு போன் என்றபடி வேலைக்காரப்பெண் கனகம் ரிசீவரை கொடுக்க, “ ஹலோ, ஆமா வனிதாதான் பேசறேன்.. ஓ அப்படியா...?? எப்போ...!!  ம்ம் என்றவாறே போனை வைத்தவள்,அப்பா கடவுள் கண்ணைத் திறந்திட்டார்..... என நிம்மதிப்பெருமூச்சு விட்டாள்.

என்னம்மா யாரு போன்ல..? ஒரு நிமிசம் அதிர்ச்சியானீங்க, பிறகு கடவுளுக்கு நன்றின்னு சொன்னீங்க என்னமா விசயம்.?  நடப்பதை அறிந்துகொள்ளும் ஆவலில் கனகா கேட்க, என் ஃப்ரண்ட் சுஜா காலையில் இறந்துட்டாளாம் அவளோட கணவர்தான் போன் செய்தார்.”  அதிர்ந்தாள் கனகா..!!! ஃப்ரண்டு சொல்றீங்க இப்படி நிம்மதிப்பெருமூச்சு விடறீங்களே வனிதாவை சற்றே வித்தியாசமாக உற்றுநோக்க... அவளின் பார்வையைப்புரிந்த வனிதா.. ஏய் என்ன அப்படி பார்க்கற.. தோழியோட சாவுக்கு சந்தோசப்படறேன்னா..??

ம்ம்..

அதுக்குக்காரணம் இருக்கு கனகா என்றவள் தன் தோழி சுஜா பற்றி கூறத்தொடங்கினாள். 

சுஜா ஒரு கிராமத்தில் பிறந்திருந்தாலும் வளர்ந்தது எல்லாம் பெங்களூரில்.  அம்மா,அப்பாவிற்கு ஒரே பெண்.  நல்ல வசதியான குடும்பம்.  தாய் உமா வெளி உலகம் அறியாதவள்.    சுஜாவிற்கு  பிறப்பிலேயெ முதுகு சற்றே புடைத்திருப்பதை உமா கவனிக்கவே இல்லை. எடுத்துக்கூற பெரியவரும் இல்லை. சுஜா அனைவரையும்போல் பள்ளிப்படிப்பு  முடித்து, கல்லூரிக்கு செல்லும்பொழுது  கூண் அதிகம் தெரியவே மருத்துவரிடம் கேட்க சிறு வயதிலேயே சரி செய்திருக்க வேண்டும் இப்ப ஒன்னும் செய்யவியலாது என்று கைவிரித்து விட்டனர்.  அப்பப்ப எல்லாரும் நிமிந்து நட சுஜா என்பார்கள் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு சென்றுவிடுவாள்.  வயது வந்த காரணத்தினால் வெட்கத்தில் கூண் போடுவதாக அனைவரும் நினைத்து  அதைக்கண்டு கொள்ளவில்லை.  சுஜா இருக்கான்னு அந்தத் தெருவுக்கு வரும்போதே தெரியும் எப்பவும் ஒரே சிரிப்பு சத்தம் கேட்கும் அப்படி ஒரு கலகலப்பு.  தன்னைச்சுற்றி அனைவரும் எப்பவும் மகிழ்ச்சியா இருக்கனும் என்பதில் கவனமா இருப்பா. தன் கவலை, உடல்நிலை ஒருபோதும் பகிரமாட்டாள்.

சில காலங்களில் பணிக்கு சென்று விட்டாள்.  அனைவரிடமும் அன்பாகப் பழகும் அவளுக்கு.  பெற்றோர்கள் நிச்சயித்தபடி திருமணமும் நிகழ்ந்து ஊரை விட்டே சென்றுவிட்டாள்.  அப்பப்போ போனில் பேசுவோம்.  குழந்தை பிறந்த பொழுதுகூட சென்றுபார்க்க முடியவில்லை.  கணவன் அரவிந்த நல்ல அனுசரனையானவன். அதிகம் பேசாவிட்டாலும் கூடமாட ஒத்தாசை செய்வது என உதவியாக இருப்பான். அடிக்கடி கணவர் பற்றி என்னிடம் பெருமைபட்டுக்கொள்வாள். மாமியார் மாமனார் உடன் இல்லை எனினும் அவ்வப்போது அந்த பதவிக்கே உரித்தான முறையில் அலைபேசியிலேயே அனைத்து வில்லங்கமும் வந்துசெல்லும். 2 வருடத்தில் ஒரு மகனும் பிறக்க மகிழ்ச்சியாகவே இருந்தாள் சுஜாதா. குழந்தைக்கு 10 வயது இருக்கும்போது திடீரென நெஞ்சுவலிக்க துடித்துப்போனாள்.  மருத்துவரிடம் காண்பித்து அனைத்து பரிசோதனையும் செய்ய, ஒன்றுமே இல்லை ஆன்சைட்டிதான் காரணம் கவலையில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என மருத்துவர்கள் கூறி அப்போதைக்கு மருந்துகள் பரிந்துரைத்தனர்.
இப்படி அடிக்கடி நெஞ்சுவலி வருவதைக்கண்ட அவள்   கணவன் அர்விந்த் அப்படி என்னதான் வியாதியோ கவலைபட காரணம்  எதுவுமில்லை…டாக்டரும்ஒன்றுமில்லையென சொல்லிட்டார்… .ஆனால் இந்த நெஞ்சுவலி உனக்கு எதனாலதான் வருதோவென ஒருநிலநேரம் சலித்துக்கொள்வான். அதன்பிறகு நெஞ்சுவலிச்சாகூட யாரிடமும் சொல்லாமல் தனக்குத்தானே வலியை அனுபவிக்கத் தொடங்கினாள்.  10 முறை வலிச்சா ஒருமுறை மட்டும் சொல்லுவா.  ஒருநாள் வேற ஒரு பிரச்சினைக்காக முழு செக் அப் செய்ய,எக்ஸ்ரேவில் முதுகுத்தண்டு பெண்ட் ஆகி ஒரு பக்க லங்க்ஸ் கம்ப்ரஸ் ஆகி இருப்பதாகவும், தற்போதைக்கு பிரச்சினை இல்லை ஆனா வயதாக வயதாக மூச்சு விடுவதே சிரமமாக இருக்கும் என்றும்  மருத்துவர்கள் கூறிவிட்டதை சுஜா என்கிட்ட போன்ல சொல்லி வருத்தப்பட்டாள். நானும் ஆறுதல் சொன்னேன்.

அதைப்பெரிதும் பொருட்படுத்தாதவர்கள் அந்த நேர மருத்துவ உதவி பெற்று சரியானதும் மறந்தேபோயினர்.  மகிழ்ச்சியாய் காலங்கள்  உருண்டோட ஒருநாள் வழக்கமான நெஞ்சுவலி அதிகரிக்க மூச்சுவிடவே சிரமப்பட்டவளை மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்ய,  டாக்டர்கள் இனி இப்படித்தான் இருக்கும் எனக்கூறிஏதேதோ மருந்துகள் பரிந்துரைத்து அனுப்பிவிட்டார்.

இரண்டுமாதத்திற்கு முன் ஒருநாள் திடீரென  சுஜா போனில் அழைத்து, ”வனீ  நா உன்ன பார்க்கனும் உடனே வா என்றாள்.” நானும்  அவளை சென்று சந்தித்தேன். படுக்கையில் இருந்த சுஜா, என் கையைப்பற்றிக்கொண்டவள், ”வனிதா எனக்கு இப்ப எல்லாம் ரொம்ப முடியல இதுவரை உன்னத்தவிர யார்கிட்டயும் மனம் பகிர்ந்தது இல்ல.  என் வாழ்க்கை இனி இப்படித்தானு டாக்டர் சொல்லிட்டாரு.  ஆனா எனக்கு இதில விருப்பம் இல்ல.  கணவரும், குழந்தையும் என்னைப் பரிதாபமா பார்க்கறமாதிரி ஒரு ஃபீல்.   நான் தான் வலில கஷ்டப்படறேன்னா என்னப்பார்த்து அவங்க வருத்தப்படறது இன்னும் அதிகமா வலிக்குது. இப்படி அடிக்கடி மூச்சு விட சிரமப்பட்டு நானும் வலி அனுபவித்து மற்றவர்களுக்கும் ஒரு சலிப்பு ஏற்படுத்தி என்மேல் ஒரு வெறுப்பும், பச்சாதாபமும் வருவதற்குள் நல்லமுறையில் என் மரணம் நிகழனும்.  ”படுத்தபடுக்கையா அதுவும் ஒரு பெண் எல்லா நேரத்திலும் பிறரின் உதவியை எதிர்நோக்கியிருப்பது எவ்வளவு கொடிதுன்னு உனக்கு நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை.” வனிதா, ”எப்பவும்போல வீடே அதிர சிரித்து மகிழ்ந்து என் சாவு இருக்கனுமே தவிர நோயாளியா படுக்கையிலேயே இருக்கக்கூடாது” என்றவளின் கரம்பிடித்து, ”உன் மனசுபோல அமையும் கவலைப்படாத” என்று ஆறுதல்படுத்த.. ”இல்ல நீ சும்மா என்ன சமாதானம் செய்யாத எனக்கு ஒரு வாக்கு கொடு என்றவளிடம், என்ன என்பதுபோல் நெற்றி சுருக்க...”ஒவ்வொரு நாளும் நீ எனக்காக என் மரணத்தைவேண்டி பிரார்த்திக்கனும்.” சுயநலமற்ற வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.  என்மீதான உன் அன்பு எனக்குத்தெரியும். நான் வலியில் துடிப்பதை உன்னால் தாங்க முடியாது.உன்னாலதான் இது முடியும்” என்றவளிடம் மனதை திடப்படுத்திக்கொண்டு சத்தியம் செய்துட்டு வந்தேன்.

அவள் மீதான அன்பும், அவள் வேண்டலில் இருந்த உண்மையும் புரிய தோழியிடம் செய்த சத்தியத்தைக் காப்பாற்ற அவளின் வலியற்ற மரணத்திற்கு  நித்தமும் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு செய்தி.  தோழியின் கதையைக்கூறி முடித்தாள் வனிதா.

இறப்பு நிச்சயம்.  அதை மாற்றவோமறுக்கவோ இயலாது.  ஆனா, என் தோழி அதிகம் துன்பப்படாமல் இறக்கவேண்டும் என எண்ணியதில் என்ன தவறு..?மகிழ்ச்சிதானே கனகா..?  அதான் கடவுள் கண்ணைத் திறந்துவிட்டார்னு சொன்னேன் என்ற வனிதாவை வியப்பாய் பார்த்தாள் கனகா.

சரி சரி நேரமாச்சு நான் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கனும்.  சார் வந்தா நீ விசயத்த சொல்லிடு. அவர் போன் ஆஃப்ல இருக்கு. முக்கியமான வேலையில இருப்பார். வந்தவுடன் சொல்லு என்றுகூறிச்செல்லும் வனிதாவையே பார்த்துக்கொண்டிருந்தாள் கனகா.

சுஜா வீட்டில் அனைவரும் இவளுக்காக காத்திருக்க கடைசி யாத்திரைக்கு தோழிக்கு மாலை அணிவித்து அவளை  முத்தமிட்ட வனிதா, சுஜாவின் சிரிப்பு சத்தத்தை உணர்ந்தாள்...!!

Thursday, 23 January 2014

மௌனமாய்...!!


என்ன பொன்னாத்தா.. நான் வாரதக்கூட கண்டுக்காம போற..?

குரல் கேட்டுத் திரும்பிய பொன்னாத்தா எதிரே முனிம்மா நிற்பதைக்கண்டாள்.  கவனிக்கல முனிம்மா...ஏதோ விசனம்.

“என்னாச்சு இன்னிக்கு ரொம்ப கவலையா இருக்கறியே..?!”

உனக்கே தெரியும் எங்க மொதலாளியம்மாவ பத்தி, அவங்க எவ்ளோ அன்பா எங்கிட்ட இருப்பாங்கனு. எதாயிருந்தாலும் எங்கிட்ட சொல்லுவாங்க. நல்லது கெட்டது அவுக ஆஃபீசு விசயம் இப்படி யாரப்பார்க்கறாங்க...எப்ப வருவாங்க எல்லாம் சொல்வாங்க.

எனக்கும் அந்தவீட்டில வேலை செய்யறோம்ன்ற நினப்பே இல்லாம  நம்ம வீடுமாதிரியே இருக்கும்.  அந்த உரிமையில சிலநேரம் எங்க போறீங்க எப்ப வருவீங்க.. நேரத்துக்கு வாங்கன்னு சொல்வேன். முன்னெல்லாம் அத சந்தோசமா ஏத்துக்கிட்ட அந்தம்மா, இப்ப கொஞ்ச நாளா அவங்க சுதந்திரத்துக்கு இடைஞ்சலா நினைச்சுட்டாங்க போல.

இப்பல்லாம் அதிகம் அப்படி உரிமையா அன்பா பேசறது இல்ல. எதும் வேலைன்னா சொல்வாங்க..நானும் செஞ்சுட்டு வந்திடறேன்.  இருந்தாலும் என்ன அறியாமையே ஏதோ என் மனச சஞ்சலப்படுத்துது. எங்கனா கொஞ்ச நாள் அமைதியா போயிடமாட்டமானுகூட தோணுது.

ம்ம்.. அதுக்கு என்ன செய்யறது.  உன்ன யாரு வேல செய்ற வூட்ல எல்லாம் அன்பா இருக்க சொன்னது..போனமா வேலைய முடிச்சமா சம்பளத்த வாங்கினமானு இல்லாம..தேவையா இது..??

”சரி நாளைக்கு கோயிலுக்கு வாரியா...? அங்க ஒரு சாமியார் வந்திருக்காராம்.  எப்பவும் மவுனத்துலதான் இருப்பாராம். எப்பனாச்சுந்தான் பேசுவாராம். ஆனா நம்ம குறைய சொன்னா கொஞ்சம் பாரம் குறையும்...போலாமா..?”

ம்ம் வா, நானும் கோயிலு குளமுன்னு போயி ரொம்ப நாள் ஆச்சு. நாளைக்கு காலைல வெள்ளென வரேன் போவோம்  பொயிட்டு வந்தா மனசுல பாரம் கொறஞ்சமாதிரி இருக்குமுல்ல.  ராத்திரி சாப்பாட்டை  முடித்து படுத்தவள், நீண்ட நேரம்  புரண்டு புரண்டு படுத்து பின் தூங்கிப்போனாள்.

கோயிலில் கூட்டம் இல்லாமல் சற்றே அமைதியாக இருக்க. சாமியார் முன்பு அமைதியாக உட்கார தன்னையறியாமல் வரும் கண்ணீரை கட்டுப்படுத்த சிரமப்பட்டாள் பொன்னாத்தா.

இப்ப எதுக்கு கண்ணீர் வடிக்கிற அமைதியா உட்காரு என்று அதட்டிய முனிம்மாவை பார்த்து  மௌனமாய் சிரித்த பொன்னாத்தா கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

தொடர்ந்து இதையே கடைபிடி ..கண்ணீரே வராது அசரீரி மாதிரி குரல் கேட்டு பொன்னாத்தா நிமிர,  எதிரே மௌனச்சாமியார் புன்னகைத்தபடி.“ எல்லாம் உன்னால, உனக்காக, உன்னோடதுன்னு நினைக்காம, உனக்கான பணி மட்டும் செய்துட்டு மற்ற விசயங்களில் தலையிடாம உன்பாட்டுக்கு மௌனமா கடந்துபோகப்பழகு.  கண்ணீரே வராது. கவலையும் இருக்காது”

திடுக்கிட்டு கண்விழித்த பொன்னாத்தா கனவில் கண்ட சாமியாரின் வார்த்தைகளில் தெளிந்தவளாய் மனம் இப்பொழுது இலேசாகி இருப்பதை உணர்ந்தவள், வீட்டு வேலைக்கு செல்ல தயாரானாள்..:)

Thursday, 28 March 2013

தபால் காரர்....


கணவன் மாணிக்கத்திற்கு படையல் படைத்த மீனாட்சி கொல்லப்பக்கத்துல காக்காவுக்கு சோறுவக்க, பக்கத்து வீட்டு மரகதம் என்ன மீனாட்சியண்ணி அண்ணனுக்கு படையல் வச்சாச்சா..? “இப்பதான் முடிச்சேன் மரகதம், வேல முடிச்சாச்சா..இதாரு ஓஞ்சம்பந்தி ராசாத்திதான..?
ஆமாண்ணி...இப்பதான் வந்தாங்க...அதான் சும்மா தோட்டத்துல உட்காந்து பேசலாம்னு வந்தோம்..சரிண்ணி நீங்க போயி சாப்பிடுங்க பொறவு வூட்டுக்கு வாரேன் பேசுவோம் சரி மரகதம் நான் வாரேன். மீனாட்சி தலை மறையும்வரை அமைதியா இருந்த சுந்தரி..என்ன அண்ணி இது கொடுமையா இருக்கு, புருசனுக்கு திவசம் படையல்னு சொல்றீங்க..ஆனா மகராசி மஞ்சளும், பூவும், பொட்டுமா திரியறா..இது என்ன அக்கிரமால்ல இருக்கு..?

அண்ணி மெதுவா பேசுங்க...அவங்க காதுல விழுந்துடப்போகுது.  நல்லா விழட்டும். நான் என்ன இல்லாததயா பேசறேன்..? இங்க நடக்கிற கொடுமையத்தான சொல்றேன்,,
உங்களுக்கு நம்ம மீனாட்சியண்ணி, மாணிக்கம் அண்ணன் பத்தி விவரம் தெரியாது அதான் இப்படி பேசுறீங்க..அவுங்க கதைய கேட்டா இப்புடி பேசமாட்டீங்க என்ற மரகதத்திடம், அப்புடி என்ன அண்ணி பெரிய இதிகாசக்கதைய சொல்லப்போறீங்க என்றாள் எளக்காரமா.

25 வருசத்துக்கு முந்தி இந்த மீனாட்சி இதே வூட்லதான் அம்மா, அப்பா கூட இருந்திச்சு. நான் அப்பத்தான் உங்க அண்ணன கல்யாணம் கட்டிக்கிட்டு இந்த ஊருக்கு வந்தேன். மாணிக்கம் அண்ணன் இந்த ஊருக்கு புதுசா வந்த தபால்காரர். நல்ல செவப்பா, நெடுநெடுன்னு ராசா மாதிரி இருக்கும் பார்க்க. ஊர்ல உள்ள பொம்பளபுள்ளங்க எல்லாம் அவரத்தான் ஓரக்கண்ணால பாப்பாளுக.

ஆனாலும் எல்லாரையும் தாயாப்புள்ளையாத்தான் பார்த்துச்சு மாணிக்கம் அண்ண. ஊர்ல பெரியவங்ககிட்ட அம்புட்டு மருவாத அதுக்கு.  அப்பு, சித்தப்பு, அண்ணன், தங்கச்சினு யல்லாரையும் முறவச்சி கூப்பிட்டு  வந்த கொஞ்சநாள்ளயே யல்லார் மனசிலயும் இடம் பிடிச்சிடுச்சு. அதிகம் வெளியதெருவ போகாத மீனாட்சியண்ணி தபால்னு சத்தம் கேட்டா மட்டும் அப்பப்ப வெளிய எட்டிப்பார்க்கும். வூட்டுக்கு ஒரே பொண்ணு செல்லம் வேற, வசதிக்கும் குறைவில்ல. போஸ்ட்மேன் தம்பி ஊர்ல யாருக்கு என்ன உதவின்னாலும் எந்த நேரத்துல கூப்பிட்டாலும் ஓடி வந்திடும். கொஞ்சம்கூட அலுத்துக்காது அம்புட்டு வெள்ள மனசு.
ஒருநா ராத்திரி திடீர்னு மீனாட்சியோட அப்பனுக்கு நெஞ்சுவலி. அந்த நேரம் பாத்து வண்டி ஏதும் இல்ல. இந்த அண்ணந்தான் தன்னோட சைக்கில்ல வச்சு டாக்டருகிட்ட நேரத்துக்கு கூப்பிட்டு போய் உசிரக்காப்பாத்திச்சு. அன்னிலேர்ந்து மீனாட்சிக்கு மாணிக்கம் அண்ணன் மேல பிரியம் அதிகமாச்சு. பேசிகிட்டதே இல்லாட்டியும் அப்பப்போ பார்வையிலேயே பாத்துக்குவாங்க.

துரைசாமி சித்தப்பா மகன் பட்டாளத்துல வேலக்கு சேர்ந்ததுல இருந்து அப்பப்ப மணியார்டர் அனுப்பும்.  அதோட லெட்டர படிச்சுக்காண்பிச்சு ஆசயா நாலு வார்த்த பேசிட்டுதான் போகும் இந்த மாணிக்கமண்ண. ஒரு நா திடீர்னு ஒரு தந்தி. துரைசாமி மகன் பட்டாளத்துல செத்துப்போயிட்டதாவும், பாடி மறுநா வரும்னு.. மாணிக்கந்தான் முதல்ல ஊர் பெரிய மனுசனான மீனாட்சியோட அப்பாகிட்ட விசயத்த சொல்லிட்டு துரசாமி சித்தப்புக்கு தகிரியம் சொல்லி மகன் இறந்த விசயத்த பக்குவமா சொல்லிச்சு. அன்னிக்கு சித்தப்பு கதறினத நினைச்சா இன்னிக்கும் வவுத்த கலக்குது.  நம்ம மாணிக்க அண்ணா இல்லாட்டி அவரும் உசிர விட்டுருப்பார். பெஞ்சாதியும் இல்லாம புள்ளயும் செத்துப்போய் தனிச்ச ஆளாயிட்டன்னு கதறினப்போ நான் 
இருக்கேன்னு ஆதரவா நின்னுச்சு இந்த அண்ணன்.

ஜம்புலிங்கம் வாத்தியாரோட பொண்ணு கல்யாணத்துல இப்படித்தான் ஒரு சிக்கலு. முத நா வரைக்கும் வரவேண்டிய காசு வரல.. வாத்தியார் ஐயாவுக்கும், அம்மாவுக்கும் என்ன செய்யறதுன்னு தெரியாம கையப்பிசஞ்சு நின்னப்ப, இந்த அண்ணந்தான் தன்கிட்ட இருந்த பணத்த கொடுத்து கல்யாணம் தடப்படாம நடக்க உதவிச்சு. இப்படி அண்ணன் செஞ்ச உதவி கணக்கில அடங்காது. 

ஒருநா மீனாட்சியோட அப்பாவுக்கு மக மாணிக்கத்த விரும்பறது தெரிஞ்சு அவரக்கூப்பிட்டு விருப்பம் இருக்கா கேட்க., எனக்கும் மீனாட்சிய பிடிக்கும்..ஆனா பெரியவங்க சம்மதிச்சா கட்டிக்கிறேன்னு பட்டுன்னு சொன்னதும், இம்புட்டு மரியாதையான புள்ளயான்னு,  ஊர் பெரிய மனுசனுக்கு சந்தோசமாச்சுது. சரி ஒரு நா உங்க அம்மா, அப்பாவ கூட்டியா சம்மந்தம் பேசுவோம்னு சொல்ல, ஒரு நா என்ன இப்பவே  அப்பாவ இட்டாரேன்னு சொல்லிட்டு போயி நம்ம துரசாமி சித்தப்புவ கூட்டியாரவும் யாருக்கும் ஒன்னும் விளங்கல.
என்ன தம்பி இதுன்னு கேட்க, எனக்கு அம்மா, அப்பா உறவுன்னு யாரும் கிடையாது. பட்டணத்துல ஒரு அனாத ஆசிரமத்துலதான் வளந்தேன்.  என்னால முடிஞ்ச ஒத்தாசைய கிராமத்து மக்களுக்கு செஞ்சு, சொந்தம்பந்தமா நினைக்கிற மக்களுக்கு மத்திலதான் என்னோட உசிரு போகனும்னு ஆசை.  அதான் இந்த கிராமத்துக்கு வந்தேன்.

இவ்ளோநாளா எங்ககிட்ட எல்லாம் இதபத்தி ஏன் சொல்லலனு துரசாமி சித்தப்பு கேட்டதும்,“ நான் சொன்னா என்மேல ஒரு இரக்கம் தான் வரும் உங்களுக்கு, எனக்கு என்மேல இரக்கப்படாம உங்க எல்லாரோட உண்மையான அன்பு மட்டும் போதும்னு நினைச்சுதான் சொல்லல என்ன மன்னிச்சிடுங்க இதக்கேட்ட மீனாட்சி அப்பனுக்கு ஒருவிதத்தில சந்தோசம். ஒத்த பொண்ணு, செல்லமா வேற வளர்த்துப்புட்டாக அவள பிரிய வேணாமேனு சந்தோசம். ஒருவழியா ஊரார் முன்னாடி துரசாமி சித்தப்புவோட மவனா மீனாட்சி கைய பிடிச்சுது இந்த அண்ணன்.

இப்படியே ஒவ்வொருத்தருக்கும் என்ன செய்யமுடியுமோ அம்புட்டு உதவி, காசு பணத்தால, உடம்பாலன்னு நேரம் காலம் பாக்காம செய்யும். மீனாட்சி அண்ணியும் ஒரு குறையும் சொல்லாம அண்ணனோட விருப்பத்துக்குத் துணையா இருந்துச்சி.  ஒரு நா அண்ணனுக்கு திடீர்னு மயக்கம் வர டவுனாசுபத்திரிக்கு கூட்டிப்போய் காட்டினப்ப மாரடைப்பு சொல்லிட்டாங்க. அண்ண என்னோட உசிரு ஊர்லதான் போகனும் ஆசுபத்திரில இருக்கமாட்டேனு சொல்லி வூட்டுக்கு பிடிவாதமா வந்துடுச்சு. மீனாட்சி அப்பனும் மாப்பிள்ளையோட ஆசய கேட்டு ஒரு நர்ச வூட்டுக்கு கூட்டியாந்திட்டாரு. அண்ணன் ஊர்ல உள்ள எல்லார்கிட்டயும் பேசனும்னு ஆசப்பட ஊர் மக்கள் எல்லாம் மீனாட்சி வூட்ல ஒன்னு கூடிட்டாங்க சோகமா.  எல்லார்கிட்டயும் யாரும் வருத்தப்படக்கூடாது.  என்னோட அண்ணன், தங்கச்சி, சித்தப்பு, பெரியப்பு, பெரியம்ம, சின்னம்மா எல்லாம் எப்பவும்போல இருங்க.  எனக்கு ஒன்னும் இல்ல. சாவ யாரால வெல்ல முடியும். ஆனா செத்தப்பொறவும் நான் உங்கள்ள வாழ விரும்பறேன். அதுக்கு உங்க உதவி தேவைன்னதும், உனக்காக எது வேணா செய்வோம் சொல்லு தம்பி கூட்டமே கதற, நாஞ்செத்த பொறவும், என் மீனாட்சி பூவும், பொட்டுமா எப்பவும் சந்தோசமா உங்க முன்னாடி வரனும். அவ சந்தோசத்துல, அவ உருவுல நான் இருப்பேன். அவ மூலமா நான் உங்கஎல்லார் கூடவும் எப்பவும் நல்லது கெட்டதுல இருப்பேன். என் மீனாட்சிய எதுலயும் ஒதுக்கி வக்கக்கூடாதுன்னு கேட்க, ஊர் அம்புட்டு சனங்களும் ஒட்டுமொத்தமா மாணிக்கம் அண்ணனுக்கு சத்தியம் செய்துச்சு. இந்த மீனாட்சிய பார்த்து வருங்கால சந்ததிங்க பொண்ணுங்கள மதிக்கிறது எப்படின்னு பார்த்து கத்துக்கட்டும்னு சொல்லி சிரிச்சிகிட்டே உசிர விட்டுச்சு. 

அந்தக்காலத்துலயே பகுத்தறிவ பேசறதோட நிறுத்தாம பெண்ண மதிக்கிறது எப்படின்னு உதாரணமா விளங்கிச்சு எங்க மாணிக்கம் அண்ணன். இன்னிக்கும் மீனாட்சி இல்லாம எங்க ஊர்லஎந்த விசேசமும் நடக்காது. ஏன் நம்ம பிள்ளைங்க கல்யாணத்துக்கூட மீனாட்சி அக்காதான தாலி எடுத்துக்கொடுத்துச்சி.. இன்னிக்கு நம்ம புள்ளைய நல்லாத்தான இருக்கு.? மறந்திட்டு பேசறீங்களே அண்ணி என்ற மரகதம், போன் சத்தம் கேட்க, போன் வந்திருக்கு வாங்க உங்க மருமவனாத்தான் இருக்கும் ஹூம்ம்.. இப்ப எல்லாம், போனு, ஈமெயிலுனு என்னென்னமோ சொல்றாக யார் நம்ம ஊர் போஸ்ட்மேனுனு கூட தெரியமாட்டேங்குது என்று தனக்குத்தான் பேசியபடியே உள்ளே சென்றாள். மீனாட்சி வச்ச சோறை காக்கா சாப்பிடுவதயே பாத்துக் கொண்டிருந்தாள், ராசாத்தி....!!





Wednesday, 20 February 2013

இறைமை...


விஜி தொலைக்காட்சித் தொடர் பார்த்துக்கொண்டிருக்க, கணவர் பரமேசுவரன் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார்.  என்னங்க சீக்கிரம் பேப்பர படிச்சிட்டு வாங்க..சாப்பாடு ஆறிப்போயிடும்.. ஒரு வரி விடாம படிச்சிக்கிட்டு.. காலைலதான் பேப்பர்னா மாலையிலுமா..அப்படி என்னத்தான் இருக்கோ அந்த பேப்பர்ல?? புன்னகைத்த பரமேஷ்வரன் அந்த தொடர்ல என்ன இருக்கோ அதேதான் என்று பதிலளித்தார். 

"அண்ணீ...". என எதிர்வீட்டு சங்கரியின் குரல் கேட்க, 'ஒரு சீரியல் கூட ஒழுங்காப் பார்க்க விடமாட்டாங்களே... சை' என்று சிடுசிடுத்தபடியே வெளியே சென்றவள்.. 'வா சங்கரி' சிடுசிடுப்பை முகத்தில் மறைத்து அவளை அழைத்தாள். 

"என்ன பாட்டியும் பேரனும் எங்க கிளம்பிட்டீங்க.." சங்கரியிடம் கேட்டாள் விஜி.

மருமவ மகனோட கொஞ்சம் கடை வரைக்கும் போயிருக்கா அண்ணி.  அவங்க வரதுக்குள்ள நான்  சமைக்கனும்.  இன்னிக்குனு பார்த்து சபரி ஒரே அழுகை இருக்கமாட்டேங்கிறான். கொஞ்சம் பார்த்துக்கறீங்களா" என்றாள் சங்கரி.

"அதுக்கென்ன..." என்றபடி பேப்பரை வைத்துவிட்டு எழுந்தார் பரமேசுவரன், வேறு வழியில்லாமல் விஜி பையனை வாங்கிக்கொண்டாள்.

பாட்டியைப்பிரிந்த குழந்தை சிறிது நேரம் மூக்கொழுக அழுதது. அதைப் பார்த்த விஜி முகத்தை சுளித்தபடி தள்ளி அமர்ந்தாள்.

இந்த வருடம் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பரமேசுவரனுக்கு இரண்டு பெண்கள்.. இரண்டுபேரும் சென்னை, பெங்களூர் என குடியேறிவிட்டனர். அவ்வப்பொழுது விடுமுறைக்கு வருவதுண்டு. இருவருக்குமே ஒரு ஆண்பிள்ளை மட்டுமே. விடுமுறையில் வரும்போது அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பதுண்டு.  அந்த சில நாட்களின் நினைவுகளில் அடுத்த விடுமுறையை எதிர்நோக்கி பரமேசுவரன், விஜியின் நாட்கள் செல்லும். குழந்தை சபரியைப் பார்த்தவுடன் தம் பேரன்களின் நினைவு வர குழந்தையைப்பார்த்து புன்னகைத்து விளையாடத்துவங்கினார் பரமேசுவரன்..

அப்பவே சாப்பிட கூப்பிட்டேன் நீங்கதான் நேரம் கடத்திட்டீங்க..இப்ப சங்கரி குழந்தைய அழைச்சிட்டுப்போனாத்தான் சாப்பிட முடியும் என்று அங்கலாய்த்தாள் விஜி. குழந்தை சபரி ஓரிடத்தில் இல்லாமல் துறு துறுவென இங்கும் அங்கும் ஓட..ஏய் ஏய் அத எடுக்காத உடைஞ்சிடும் இதை கிழிச்சிடாத என குழந்தையின் பின்னே சென்றவள் குழந்தை எதையும் எடுக்குமுன்பே சென்று தடுத்தாள்.  இதையெல்லாம் மௌனமாய் பார்த்துக்கொண்டிருந்தார் பரமேசுவரன்.  குழந்தை சிறுநீர் கழித்துவிட..அடடா  வீடு முழுவதும் துடைச்சேன்..அதுக்குள்ள இப்படி செய்துட்டான் என்றவாறு துணி எடுத்து துடைக்கையில்...

"ரொம்ப படுத்தினானா அண்ணி" என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்த சங்கரி, "அச்சச்சோ ஒன்னுக்கு போயிட்டானா" என்று பதறினாள்.

"அதனால என்னம்மா எங்க பேரன் போனா துடைக்கமாட்டோமா" என்று சிரித்தார் பரமேசுவரன்.  

"ரொம்ப நன்றி அண்ணி.  நீங்க சாப்பிடும் நேரம் ஆச்சு இல்ல... அதான் வேகமா வேலைய முடிச்சிட்டு வந்தேன்... சரி நாங்க கிளம்பறோம்... தாத்தா பாட்டிக்கு பை சொல்லு..." என்றபடி சங்கரி சென்றவுடன் கதவை தாளிட்டு விட்டு 
"சரி... சாப்பிட வாங்க ஏற்கனவே நேரம் ஆச்சு "என்றவாறே தட்டை வைத்து சாப்பாடு போட ஆரம்பித்தாள்.

சாப்பிட்டு முடித்து வேலைகளை செய்து முடித்து சற்று இளைப்பாற, பரமேசுவரன் தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக்கொண்டிருந்தார்.  ஏங்க ரிமோட்ட இப்படி கொடுங்க..கிருஷ்ணா வரப்போகுது..எனக்குப் பார்க்கனும் என்று ரிமோட்டைப் பிடுங்கியவள் கிருஷ்ணா தொடர் பார்க்கத்துவங்கினாள். 

இடையிடையே 'என்னமா இருக்கு பாருங்க. அது செய்யற ஒவ்வொன்னும் கண்கொள்ளாக் காட்சியா இருக்கே. அரைமணியில் தொடர் முடிஞ்சிடுமேனு இருக்கு.  அந்தக்குழந்தையின் குறும்புத்தனமும், மற்றவர்கள் கண்ணனைக் கொஞ்சுவதையும் பார்க்க நம்ம வீட்லயும் இப்படி ஒரு குழந்தை வலம்வராதானு இருக்கு.  யசோதா ரொம்ப கொடுத்து வைத்தவள்' என்ற விஜியை நோக்கி அர்த்தமாய் சிரித்தார் பரமேசுவரன். 

"என்ன சிரிப்பு"

"கொஞ்ச நேரம் முன்பு கண்ணனாய் சபரி இங்க வந்தப்ப அதத் தொடாத இத செய்யாதன்னு குழந்தைய சொன்ன.. அதை கொஞ்சக்கூட தோனல உனக்கு. ஆனா இப்ப கிருஷ்ணன் செய்யும்போது கண்கொள்ளாக் காட்சியாத் தெரியுது.  எதுவுமே அருகில் இருக்கும்போது அதனருமைத் தெரியாது.  எல்லா வீட்டிற்கும் கண்ணனே வரமுடியாது.  ஆனா வர குழந்தைய கண்ணனா நினைச்சு ஏற்கலாம்.  யசோதாவிற்கு ஒரு கண்ணனே.  நம்மைப் போன்றவர்களுக்கு ஒவ்வொரு குழந்தையும் கண்ணனே.  இறைமையும், தாய்மையும் உள்ளத்தில் இருக்கனும்.  தொடர் பார்க்கும்போது, பூசை செய்யும்போது மட்டும் பக்தி, பாசம் இருந்தா போதாது.   நம்மைச் சுற்றியிருக்கும் ஒவ்வொருவரிடமும் அதைக் காட்டவேண்டும்" என்ற கணவரை பிரமிப்பாய் பார்த்தாள் விஜி.  

'எவ்வளவு பெரிய விசயத்தை யதார்த்தமா கடைபிடிப்பதோடு மட்டுமல்லாமல் மனம் வருந்தாமல் சுட்டிக்காட்டி என்னையும் உணர வைத்துள்ளார்' என்று நினைத்தவள் தனது செயல் குறித்து வெட்கியவளாய், ''என்னை மன்னிச்சிடுங்க.. எனக்கு உண்மைய புரியவச்சிட்டீங்க' என்ற விஜியின் முகத்தில் சற்று கூடுதலாய் அழகு மிளிர்வதாய் உணர்ந்தார் பரமேசுவரன்..:)

https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif

Tuesday, 4 December 2012

மறுஜென்மம்...

கணவனை அலுவலகத்திற்கு வழியனுப்பிய சஞ்சனா..காலை உணவு சாப்பிடக்கூடத் தோன்றாமல் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கத்துவங்க, மனம் தொடரில் லயிக்காமல், காலை நடந்த சலசலப்பில் சென்றது. இது வழக்கமான ஒன்றுதான் இருப்பினும் ஏனோ அவ்வப்பொழுது மனம் இப்படி சோர்வடைகிறது. முன்பு எல்லாவற்றையும் ஏற்கும் மனம் இருந்தது. அவமானங்களையும், இழிசொல்லையும் ஏற்று ஏற்று மரத்துப்போன மனம், சில காலமாக தான் ஏன் மரக்கட்டையாய் இருக்கவேண்டும்..? தனக்கென இறை வழங்கிய வாழ்க்கையிது. மகிழ்ச்சியாக கழிக்கலாம் என்று தோன்றவே பாட்டு, கதை, நட்பு என தன்னை மாற்றிக்கொண்டதன் விளைவு. தன்னுடைய உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டுமென எதிர்பார்க்க வைக்கிறது. 

கடந்தசில தினங்களாகவே கணவன், மனைவிக்குள் ஒரு சில மனக்கசப்பு நிகழ்ந்துவர, எல்லாவற்றையும் சாதாரணமாக நினைக்கும் சஞ்சனாவிற்கு சில தினங்களாக அப்படி எடுத்துக்கொள்ள முடிவதில்லை. எவ்வளவு நாட்கள்தாம் மரக்கட்டை போல் இருப்பது..?

கணவன் முரளி விற்பனைப் பிரதிநிதியாக இருப்பதால் நேரத்திற்கு உணவு உண்பது, வீடு திரும்புவது கிடையாது. பெரிதாக வாழ்வில் பிடிப்பு என்பதும் இல்லை. தன் உடல்நலம் பற்றிய அக்கரையும் இல்லாமல் வேலைக்கு போகனும், சம்பாதிக்கனும், சாப்பிடனும் என்ற ஒரு சிறு வட்டத்திற்குள் தன்னை உள்ளடக்கிக்கொண்டு, சராசரி வாழ்க்கைக் கூட இல்லாமல் பணம் சம்பாதித்து கொடுத்துவிட்டால் போதும் என இருப்பவன்.

தனக்குப் பிறகு தனது இரு மகன்கள், மனைவியின் நிலை என்ன என்றுகூட சிந்திப்பது இல்லை. கேட்டால் நான் சம்பாதிக்கவில்லை எனில் எப்படி சாப்பிடுவது என்பான்.

இவளும் கூறி அலுத்துவிட்டாள். பணம் தேவைதான், பணம் மட்டுமே வாழ்க்கையில்லை. சம்பாதித்த வரை போதும், கிராமத்திற்கு போய் இருக்கும் பணத்தில் நிம்மதியாக காலம் கழிக்கலாம் என பலமுறை கூறிவிட்டாள். அவன் காதில் வாங்கிக்கொள்வதே கிடையாது. ஒரு இயந்திரத்தனமான வாழ்வில் தன்னை பழக்கப்படுத்திக்கொள்ள முடியாமலும், தன்னைப்போல் வாழ்வை அனுபவிக்க அவனை மாற்ற முடியாமலும் இருதலைக்கொள்ளி எறும்பாய் மனம் தவித்து வருபவளுக்கு, அவ்வப்பொழுது அழையா விருந்தாளியாய் இப்படியான வெறுமை மனதில் வந்து செல்லும். பெண்களுக்கே உரிய ஒரு சில எதிர்பார்ப்புகள் நிராசையாகவேப் போக, வெளியில் மனம் பகிரக்கூட முடியாமல் ஒரு சில நேரம் இறந்துவிடலாம் என்றுகூடத் தோன்றும். மகன்களின் வாழ்வை நினைத்துப்பார்த்து தன்னை அவ்வப்பொழுது சமாதானம் செய்துகொள்வாள்.

மனதிற்குள்ளேயே புழுங்கித் தவித்து கணவனின் உடல்நலம் பற்றிய கவலை, குழந்தையின் எதிர்காலம், இயந்திரத்தனமாக சமைத்தல், துவைத்தல், சுத்தம் செய்தல்னு செக்குமாடான வாழ்க்கை ஒரு புறம்..மனம் விட்டுப் பேசினால் அந்த நேரத்திற்கு கேட்பவர்களுக்கு பொழுதுபோக்கு அவ்வளவே. நம் நிலை உணர நம் வீட்டாரே முன்வராதபோது வெளி ஆட்கள் உணர்வைப் புரிந்துகொள்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்.?

அன்றும் தற்கொலைக்குத் தூண்டும்படியான ஒரு உணர்வு உந்தித்தள்ள...

போன் அடிக்கும் சப்தம் அவளை உணர்வுக்குக் கொண்டுவந்தது. போனில் அவள் தோழி சீமா.”சஞ்சனா உனக்கு விசயம் தெரியுமா.. நம்ம ரேஷ்மா தூக்கு மாட்டி இறந்து விட்டாளாம்..??”

அதிர்ச்சியிலிருந்து மீளாமல் என்னாச்சு சீமா...முந்தாநாள்கூட நல்லாத்தான பேசிக்கிட்டிருந்தா..நேற்றுதான் பார்க்கல எப்ப நடந்தது இது என்றேன்..”ம்ம்..தெரியல வரியா போய் பார்க்கலாம்..என்றவளிடம், இரு பத்து நிமிடத்தில் வரேன் என போன் துண்டித்து வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்ப, அதே காலனியில் வசிக்கும் ரேஷ்மா வீட்டின் முன் அக்கம்பக்கத்தினர் கூடியிருந்தனர். கூட்டத்தில் விசாரிக்க...போலீசு இப்பதான் போஸ்ட்மார்ட்டத்திற்கு எடுத்துச்சென்றுள்ளனர்..மாலைதான் கிடைக்குமாம் பிணம்.

”அவளுக்கும், கணவனுக்கும் ஏதோ சண்டையாம் அதான் தற்கொலை செய்துகொண்டாள்.”

”இல்ல இல்ல அவளுக்கு ஏற்கனவே மனவியாதியாம் அதிகப்படியான மாத்திரை எடுத்துக்கொண்டதில் மனம் பேதலித்து இப்படி செய்துவிட்டாள்.”

ஆளாளுக்கு மனிதர்களுக்கே உரிய குணத்தில் அவரவர்களுக்குத் தோன்றியதை பேசிக்கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் அவளுக்கு கள்ளக்காதல் உண்டு அதனால இருக்கும் என ஒருத்தி தன் பங்கிற்கு எடுத்துவிட..

”அட எனக்கு அப்பவே தெரியும், எப்பவும் அவ அலங்காரம் என்ன, சிரிப்பு என்ன நான் அப்பவே நினைச்சேன், இப்படி ஏதாவது இருக்குமென கூட்டத்தில் ஒரு பெண்மணி வாய் கூசாமல் கூறினாள்...”

ரேஷ்மாவின் இல்லத்தாரோ, மருத்துவமனைக்கும், அங்குமிங்கும் அல்லாடிக்கொண்டிருக்க, அவளுடைய 15 வயது மகளைக் காண பரிதாபமாக இருந்தது.. இந்தப்பெண்ணிற்கு இப்படிப்பட்ட ஒரு தண்டனை இந்த வயதில் தேவைதானா..? வருந்திய சஞ்சனாவிற்கு கண்முன்னே தன் மகனின் முகம் வந்து வந்து செல்ல...பீதியடைந்தாள். வீட்டிற்கு வந்தவள் மனம் எதிலும் ஈடுபடாமல் செய்யவேண்டுமே என ஒருவழியா வீட்டு வேலைகளை முடித்துவிட்டு மாலை சற்று உலாவி வரலாமே என்று குடியிருப்பில் அமைந்திருக்கும் மையப்பூங்காவிற்கு செல்ல...ரேஷ்மா வீட்டின் முன் வெறிச்சோடியிருந்தது..

ஒரு நிமிடம் தன்னை யாரோ அழைப்பதுபோல் உணர்ந்தவளுக்கு கண்முன்னே ரேஷ்மா நிற்கும் காட்சி தோன்ற.. “சஞ்சனா, பார்த்தியா..ஏதோ ஒரு வேகத்தில் பிரச்சினையிலிருந்து விடுபட எண்ணி நான் எடுத்த அவசர முடிவால என் மகள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது..என்னையும் வாய்க்கு வந்தபடி பேசுகின்றனரே...?!!”

நீ செய்தது முட்டாள்தனம் தான் ரேஷ்மா..அப்படி என்னதான் நடந்தது.?

“எனக்கும் கணவருக்கும் சின்ன மனவருத்தம். மாமியார் வீட்டினர் பேச்சைக்கேட்டு என்னை மதிக்காமல் ஏளனமாகப் பேச, என்னால் அவமானத்தைத் தாங்க முடியவில்லை...இறந்துவிடுவதாகக் கூற, இந்த ப்ளாக்மெயில் பண்றவேல வச்சிக்காத என்று கணவன் அலட்சியமாகக் கூறவே...இதிலும் அலட்சியமா என்ற ஆவேசம், நான் சும்மா பேச்சுக்கு சொல்ல்லனு நிரூபிக்க அப்படி செய்துட்டேன். ஆனா சிறுபிள்ளைத்தனமா யாரோ என்ன மதிக்கல என்பதற்காக என் வாழ்வை நானே முடித்துக்கொண்டு என் உணர்வை நானே மதிக்கலியோனு தோனுது சஞ்சனா..”

”தன் உணர்வைப் படம் பிடித்துக்காட்டியதுபோலவே கூறுகிறாளே..இதே நிலையில்தானே இன்று காலையில் நானும் இருந்தேன். நானும் இந்த முடிவுக்கு வந்திருந்தால், என் குழந்தைகளின் கதியும் இப்படித்தானே இருந்திருக்கும்..? என்னையும் இப்படித்தானே தரக்குறைவாக பேசியிருப்பார்கள்...?!” சிந்தனையிலிருந்து விடுபட்டவள் எதிரில் ரேஷ்மா இல்லை. பௌர்ணமி நிலவு அவளைப் பார்த்து சிரித்தது. ”என்னை எனக்கு புரிய வைக்க இறை நடத்தும் நாடகமா இது..?” ரேஷ்மாவின் ஆத்துமா சாந்தியடைய வேண்டியதோடு, அவளுடைய இறப்பு தன்னைத் தற்கொலை உணர்விலிருந்து காப்பாற்றி மறுஜென்மம் வழங்கியதை எண்ணி, ரேஷ்மாவிற்கும் மானசீக நன்றியைத் தெரிவித்து வீட்டிற்கு திரும்பினாள் சஞ்சனா....!!

Wednesday, 28 November 2012

லட்சுமி...



வசுமதிக்கு இரண்டு நாட்களாகவே லட்சுமி பற்றிய கவலைதான். லட்சுமி இவர்கள் வீட்டில் 20 வருடங்களுக்கும் மேலாக குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக இருந்து வரும் பசுமாடு.  சில ஆண்டுகளா கறவை மறத்துப்போச்சு.

நேற்று காலை கணவன் வசந்தன் வசு, லட்சுமிய இன்னும் இரண்டு நாட்கள்ல வந்து அழைச்சிக்கிட்டு போயிடுவாங்க.”  ”ஏங்க இப்ப எதுக்கு இப்படி ஒரு முடிவு எடுத்தீங்க..? வேற என்ன செய்ய சொல்ற..கறவையும் நின்னு போச்சுவிக்கற விலைவாசில அதுக்கு புல், வைக்கோல், புண்ணாக்கு பார்த்துக்க ஆளு கூலி இதெல்லாம் தேவையா..??அதான் எனக்குத் தெரிஞ்ச ஒரு நண்பன்கிட்ட சொல்லி அவன் மாட்டை விற்ற அதே இடத்தில் இதையும் அனுப்பிடறதா முடிவு செய்து வர திங்கட்கிழமை வரச்சொல்லியிருக்கேன்..

அதற்கு மேல் அவரிடம் பேசி எந்தப்பிரயோசனமும் இல்லை எனப்படவே செய்வதறியாது உள்ளுக்குள்ளேயே வேதனைப்படத் துவங்கினாள்.

நினைவுகள் பின்னோக்கிச் செல்ல... 20 வருடங்களுக்கு முன்பு வீட்டில் குடும்பத்தில் ஒன்றாய் அங்கம் வகிக்கத் துவங்கியது லட்சுமி.  வசு, லட்சுமி கத்துது பாரு..அதுக்கு சாப்பிடக்கொடுத்தியா..என்று பார்த்து பார்த்து உணவு வழங்கிய வசந்தனா இன்று லட்சுமியை அடிமாட்டிற்கு அனுப்பிவைக்கத் துணிந்தார் நம்ப முடியவில்லை அவளால்.. அத்தை பார்வதியும் தினமும் மாட்டுத்தொழுவத்தில் கோலமிட்டு சாம்பிராணி போட்டு அகத்திக்கீரை கொடுக்காமல் காபி கூட சாப்பிடமாட்டாள். அவ்வளவு பாசம். அழகோடு சாந்தமும் நிறைந்து பார்க்கவே பெயருக்கு ஏற்ப லட்சுமிகரமாக காட்சியளித்தது.  

அதன் முகத்தில் விழித்து சென்றால்  காரியம் கைகூடும் என்ற நம்பிக்கை கொண்டனர்.  அனைவரும் தினமும் அதைக்கொஞ்சி, பூசித்து வந்தனர். குழந்தைகளும் அதனோடு சரிக்கு சமமா விளையாடும்.  குழந்தைகளைக்கூட முட்டாது.அவ்வளவு சாது.  தினமும் 6 படி பால்கறந்த லட்சுமி எவ்வளவு வருமானமும், மகிழ்ச்சியும் ஈட்டிக்கொடுத்தது..??  இன்று அதையெல்லாம் மறந்து எப்படி இந்த மனிதரால் சகஜமாக இருக்க முடிகிறது, லட்சுமியைத் தடவிகொடுத்தவாரே கண்ணீர் வடிக்க, அதுவும் முகத்தை ஆட்டி ஆட்டி ஏதோ சொல்வதுபோல் தோன்றியது வசுவிற்கு.

வசு, அம்மா வசு...அத்தையின் குரல் ஈனஸ்வரமாய் ஒலிக்க, வந்துட்டேன் அத்த குரல் கொடுத்தவாறு உள்ளே சென்றாள்.  சாப்பிட்டியா வசு..? பார்வதி வசுவிற்கு மாமியாராக என்றுமே இருந்தது இல்லை..பெற்ற தாயைப்போன்றே அன்பைப்பொழிபவள்.

இல்ல அத்தை பிடிக்கல.ஏம்மா..ஒத்த ஆளா இந்தக்குடும்பத்த கவனிக்கிற. நீ நேரத்திற்கு சாப்பிட வேணாமா..?உடம்பு என்னத்துக்கு ஆவறது..? ம்ம்... இந்தக்கடவுள் என்னத்தான் இப்படி முடமாக்கி நடமாட விடாம வச்சிருக்கான்.  நீதான உன்ன கவனிக்கனும் விழிகளில் நீர் கோர்த்துக்கொள்ள பார்வதி மருமகளைக் கடிந்தாள்.  மனசே சரியில்ல அத்த...என்னாச்சு வசு..?? நான் ஒருத்தி 2 வருடமா உங்க யாருக்கும் பிரயோசனம் இல்லாம போயிட்டன் இல்ல..?

ஏன் அத்த அப்படி சொல்றீங்க..நாங்க எப்பவாச்சும் உங்க கிட்ட அப்படி நடந்திருக்கமா..? வசு கண்ணீர்மல்க வினவ...பின்ன என்னம்மா நீ சாப்பிடாம மனசு சரியில்லைன்னு இருக்க..அப்ப என்னமோ இங்க நடந்திருக்கு எனக்கு சொல்லனும்னு உங்களுக்குத் தோனலைதான..?” அத்த நீங்களே உடம்பு முடியாம இருக்கீங்க..சொன்னா நீங்க வருத்தப்படுவீங்கன்னுதான் சொல்லவேண்டாம்னு இருந்துட்டேனே தவிர உங்கமேல உள்ள மரியாதை என்றைக்கும் குறையவில்லை..நம்ம லட்சுமி 2 வருடமா சும்மா இருக்காம்.. தெண்டச்செலவாம். அதான் வந்தவிலைக்கு அடிமாட்டுக்கு அனுப்பறதா உங்க பிள்ளை சொல்லியிருக்கார்..நான் எவ்வளவோ மறுத்தும் பிடிவாதமா இருக்கார் அத்த..அதான் கவலையா இருக்கு.

அடிப்பாவி பெண்ணே, எவ்வளவு பெரிய கொடுமை நடக்கவிருக்கு இதைப்போய் நான் வருத்தப்படுவேன்னு மறைக்கப்பாத்தியே.. நீ ஒன்னு செய்..உம்புருசனுக்கு போனப்போட்டு நான் ரொம்ப சீரியசா இருக்கிறதா சொல்லி வர வை..அய்யோ எதுக்கு அத்த இப்படி சொல்ல சொல்றீங்க..ஒரு நேரம் போல இல்லாம பலிச்சுடப்போவுது. அதெல்லாம் ஒன்னும் ஆவாது சொல்லு...சரி அத்த என்றவள் கணவனுக்கு போன் செய்து..என்னங்க அத்தைக்கு ரொம்ப சீரியசா ஆயிடுச்சு, நீங்க உடனே வாங்க..நம்ம டாக்டருக்கும் போன் செய்துட்டேன்..அவரும் கிளம்பிட்டார்..இதோ வரேன் வசு, அம்மாவை கவனமாப் பார்த்துக்க.

போன் செய்த அரைமணியில் வீட்டிற்குள் நுழைந்தவன்..என்னாச்சு அம்மாவிற்கு காலை கூட நல்லாத்தானே இருந்தாங்க என்றவாறே அம்மாவின் அறைக்குள் சென்றான்.  பார்வதியை பரிசோதிக்கும் மருத்துவரிடம், டாக்டர் என்ன ஆச்சு..?.  இரண்டு வருடமா பெட்லயே இருந்ததால பெட்சோர் அதிகமாயிடுச்சு.  இனி அவங்களால இயல்பா இருப்பது கஷ்டம்..என்னதான் நீங்க நல்லா பார்த்துக்கிட்டாலும் 24 மணிநேரமும் கூட இருக்கும்படி ஒருத்தர நியமிக்கனும்.  தினமும் இந்த ஊசி போடனும், லோசன் தடவனும்..அதுக்கு நிறைய சிலவாகும்.  பக்கவாதம் பலமா தாக்கினதால இனி இவங்களால எழுந்து நடமாட முடியாதுன்னு உங்களுக்கு தெரிஞ்சவிசயம்தான் இருப்பினும், பெட் சோர் வராம, அவங்கள பார்த்துக்கனும்னா நிறைய சிலவாகும்..என்ற டாக்டர் என்கிட்ட ஒரு யோசனை, என்ன டாக்டர் சொல்லுங்க அம்மா நலனுக்காக எதுவும் செய்யத் தயாரா இருக்கோம்.

அம்மாவை கருணைக்கொலை செய்திடறதுதான் நல்லதுன்னு எனக்குத் தோனுது.  இனி இவங்களால எதுவும் பிரயோசனம் இல்லை. அதோடு இவங்கள பார்த்துக்க சிலவு, நேரம், உடல் உழைப்புன்னு தேவையா யோசிச்சு சொல்லுங்க என்ற டாக்டரின் சட்டையை ஆவேசமாகப்பிடித்தான் வசந்தன்.

நிறுத்துடா..அம்மாவின் குரல் கேட்க அதிர்ச்சியுடன் திரும்பிய வசந்தன் அம்மா நீயா பேசின என்றான் ஆச்சரியத்துடன்..ஆமாண்டா நான் தான். அவர ஏண்டா சட்டைய பிடிச்சுக் கத்தற..? உன்ன உன்னப்போயி விக்கினான்..நான் தான் அப்படி சொல்லச்சொன்னேன்..

நீயா..? ஏன்மா..? உன் மகன் அவ்வளவு சுயநலக்காரன்னு நினைச்சியா..?

பின்ன என்னடா, உன்னோட அம்மா இரண்டு வருடமா பக்கவாதத்தில படுத்திருக்கேன்..என்னால எந்த பிரயோசனமும் இல்லைன்னு தெரிஞ்சும் இவ்வளவு செலவு செய்து அன்பா பாத்துக்கறியே.. நம்ம லட்சுமியும் என்ன மாதிரி ஒரு உசிர்தானடா..?அதுவும் நம்ம குடும்பத்தில ஒன்னாத்தான இவ்வளவு ஆண்டுகாலமா இருந்து வருது.. எப்ப அத அடிமாட்டுக்கு அனுப்ப துணிஞ்சிட்டியோ, என்னையும் கருணைக்கொலை கொல்லவேண்டியதுதானே..ஏன்யோசனை..??

அம்மாவின் இந்த வார்த்தைகள் அவனை பளார் பளாரென அறைந்தது போல் இருக்க, வருந்தியவன்,” மன்னிச்சுக்கோம்மா, ஏதோ அவசரப்பட்டு புத்தியிழந்துட்டேன்..இனி அப்படி யோசிக்க மாட்டேன். “  வசு,நீயும் என்னை மன்னிச்சிடும்மா.  தன் நண்பனை அழைத்து லட்சுமியை விற்கப்போவதில்லை  என்ற தங்கள் முடிவைத் தெரிவித்து, மாட்டு வியாபாரியை வரவேண்டாம் எனக்கூறினான். 

வசுமதி அத்தை பார்வதியின் கரம் பிடித்து கண்ணீர் விட, அதில் இருந்த நன்றியை உணர்ந்தாள் பார்வதி.