Wednesday, 20 February 2013

இறைமை...


விஜி தொலைக்காட்சித் தொடர் பார்த்துக்கொண்டிருக்க, கணவர் பரமேசுவரன் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார்.  என்னங்க சீக்கிரம் பேப்பர படிச்சிட்டு வாங்க..சாப்பாடு ஆறிப்போயிடும்.. ஒரு வரி விடாம படிச்சிக்கிட்டு.. காலைலதான் பேப்பர்னா மாலையிலுமா..அப்படி என்னத்தான் இருக்கோ அந்த பேப்பர்ல?? புன்னகைத்த பரமேஷ்வரன் அந்த தொடர்ல என்ன இருக்கோ அதேதான் என்று பதிலளித்தார். 

"அண்ணீ...". என எதிர்வீட்டு சங்கரியின் குரல் கேட்க, 'ஒரு சீரியல் கூட ஒழுங்காப் பார்க்க விடமாட்டாங்களே... சை' என்று சிடுசிடுத்தபடியே வெளியே சென்றவள்.. 'வா சங்கரி' சிடுசிடுப்பை முகத்தில் மறைத்து அவளை அழைத்தாள். 

"என்ன பாட்டியும் பேரனும் எங்க கிளம்பிட்டீங்க.." சங்கரியிடம் கேட்டாள் விஜி.

மருமவ மகனோட கொஞ்சம் கடை வரைக்கும் போயிருக்கா அண்ணி.  அவங்க வரதுக்குள்ள நான்  சமைக்கனும்.  இன்னிக்குனு பார்த்து சபரி ஒரே அழுகை இருக்கமாட்டேங்கிறான். கொஞ்சம் பார்த்துக்கறீங்களா" என்றாள் சங்கரி.

"அதுக்கென்ன..." என்றபடி பேப்பரை வைத்துவிட்டு எழுந்தார் பரமேசுவரன், வேறு வழியில்லாமல் விஜி பையனை வாங்கிக்கொண்டாள்.

பாட்டியைப்பிரிந்த குழந்தை சிறிது நேரம் மூக்கொழுக அழுதது. அதைப் பார்த்த விஜி முகத்தை சுளித்தபடி தள்ளி அமர்ந்தாள்.

இந்த வருடம் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பரமேசுவரனுக்கு இரண்டு பெண்கள்.. இரண்டுபேரும் சென்னை, பெங்களூர் என குடியேறிவிட்டனர். அவ்வப்பொழுது விடுமுறைக்கு வருவதுண்டு. இருவருக்குமே ஒரு ஆண்பிள்ளை மட்டுமே. விடுமுறையில் வரும்போது அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பதுண்டு.  அந்த சில நாட்களின் நினைவுகளில் அடுத்த விடுமுறையை எதிர்நோக்கி பரமேசுவரன், விஜியின் நாட்கள் செல்லும். குழந்தை சபரியைப் பார்த்தவுடன் தம் பேரன்களின் நினைவு வர குழந்தையைப்பார்த்து புன்னகைத்து விளையாடத்துவங்கினார் பரமேசுவரன்..

அப்பவே சாப்பிட கூப்பிட்டேன் நீங்கதான் நேரம் கடத்திட்டீங்க..இப்ப சங்கரி குழந்தைய அழைச்சிட்டுப்போனாத்தான் சாப்பிட முடியும் என்று அங்கலாய்த்தாள் விஜி. குழந்தை சபரி ஓரிடத்தில் இல்லாமல் துறு துறுவென இங்கும் அங்கும் ஓட..ஏய் ஏய் அத எடுக்காத உடைஞ்சிடும் இதை கிழிச்சிடாத என குழந்தையின் பின்னே சென்றவள் குழந்தை எதையும் எடுக்குமுன்பே சென்று தடுத்தாள்.  இதையெல்லாம் மௌனமாய் பார்த்துக்கொண்டிருந்தார் பரமேசுவரன்.  குழந்தை சிறுநீர் கழித்துவிட..அடடா  வீடு முழுவதும் துடைச்சேன்..அதுக்குள்ள இப்படி செய்துட்டான் என்றவாறு துணி எடுத்து துடைக்கையில்...

"ரொம்ப படுத்தினானா அண்ணி" என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்த சங்கரி, "அச்சச்சோ ஒன்னுக்கு போயிட்டானா" என்று பதறினாள்.

"அதனால என்னம்மா எங்க பேரன் போனா துடைக்கமாட்டோமா" என்று சிரித்தார் பரமேசுவரன்.  

"ரொம்ப நன்றி அண்ணி.  நீங்க சாப்பிடும் நேரம் ஆச்சு இல்ல... அதான் வேகமா வேலைய முடிச்சிட்டு வந்தேன்... சரி நாங்க கிளம்பறோம்... தாத்தா பாட்டிக்கு பை சொல்லு..." என்றபடி சங்கரி சென்றவுடன் கதவை தாளிட்டு விட்டு 
"சரி... சாப்பிட வாங்க ஏற்கனவே நேரம் ஆச்சு "என்றவாறே தட்டை வைத்து சாப்பாடு போட ஆரம்பித்தாள்.

சாப்பிட்டு முடித்து வேலைகளை செய்து முடித்து சற்று இளைப்பாற, பரமேசுவரன் தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக்கொண்டிருந்தார்.  ஏங்க ரிமோட்ட இப்படி கொடுங்க..கிருஷ்ணா வரப்போகுது..எனக்குப் பார்க்கனும் என்று ரிமோட்டைப் பிடுங்கியவள் கிருஷ்ணா தொடர் பார்க்கத்துவங்கினாள். 

இடையிடையே 'என்னமா இருக்கு பாருங்க. அது செய்யற ஒவ்வொன்னும் கண்கொள்ளாக் காட்சியா இருக்கே. அரைமணியில் தொடர் முடிஞ்சிடுமேனு இருக்கு.  அந்தக்குழந்தையின் குறும்புத்தனமும், மற்றவர்கள் கண்ணனைக் கொஞ்சுவதையும் பார்க்க நம்ம வீட்லயும் இப்படி ஒரு குழந்தை வலம்வராதானு இருக்கு.  யசோதா ரொம்ப கொடுத்து வைத்தவள்' என்ற விஜியை நோக்கி அர்த்தமாய் சிரித்தார் பரமேசுவரன். 

"என்ன சிரிப்பு"

"கொஞ்ச நேரம் முன்பு கண்ணனாய் சபரி இங்க வந்தப்ப அதத் தொடாத இத செய்யாதன்னு குழந்தைய சொன்ன.. அதை கொஞ்சக்கூட தோனல உனக்கு. ஆனா இப்ப கிருஷ்ணன் செய்யும்போது கண்கொள்ளாக் காட்சியாத் தெரியுது.  எதுவுமே அருகில் இருக்கும்போது அதனருமைத் தெரியாது.  எல்லா வீட்டிற்கும் கண்ணனே வரமுடியாது.  ஆனா வர குழந்தைய கண்ணனா நினைச்சு ஏற்கலாம்.  யசோதாவிற்கு ஒரு கண்ணனே.  நம்மைப் போன்றவர்களுக்கு ஒவ்வொரு குழந்தையும் கண்ணனே.  இறைமையும், தாய்மையும் உள்ளத்தில் இருக்கனும்.  தொடர் பார்க்கும்போது, பூசை செய்யும்போது மட்டும் பக்தி, பாசம் இருந்தா போதாது.   நம்மைச் சுற்றியிருக்கும் ஒவ்வொருவரிடமும் அதைக் காட்டவேண்டும்" என்ற கணவரை பிரமிப்பாய் பார்த்தாள் விஜி.  

'எவ்வளவு பெரிய விசயத்தை யதார்த்தமா கடைபிடிப்பதோடு மட்டுமல்லாமல் மனம் வருந்தாமல் சுட்டிக்காட்டி என்னையும் உணர வைத்துள்ளார்' என்று நினைத்தவள் தனது செயல் குறித்து வெட்கியவளாய், ''என்னை மன்னிச்சிடுங்க.. எனக்கு உண்மைய புரியவச்சிட்டீங்க' என்ற விஜியின் முகத்தில் சற்று கூடுதலாய் அழகு மிளிர்வதாய் உணர்ந்தார் பரமேசுவரன்..:)

https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif

2 comments:

  1. அழகான உண்மை! சிறப்பான கதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழர்...:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__