Sunday, 30 December 2012

சொல்லத்தான் நினைக்கிறேன்..


மனசெல்லாம் நிறஞ்சிருக்கும்
மவராசன ஓங்கிட்ட
மனம் திறந்து பேசத்தான்
மாசக்கணக்கா துடிக்கிறனே..
மனந்திறக்க நினைக்கையில
மனசு நடுங்குதய்யா..
யே  நெஞ்சுக்குள்ள நெறஞ்ச ஒன 
நேர்ல எப்படி காட்டிடுவேன்...

அதிகாலை கோழிகூவையிலே
அத்தான் ஓன் நினைப்பு..

வாசக்கூட்டி கோலம்போடயிலே
மையப்புள்ளியா நிக்கறியே..!!

காப்பித்தண்ணி வக்கயிலே
சிரிக்கும் உம்முகந்தான்
பால்ல பொங்குதய்யா...

ஆத்துல குளிக்கையில
குளிரும் நீரா எனத்தீண்டறியே..

சோறு உங்கயிலே
நான் தானா சிரிக்கறனே...

உம்முகம் நெனச்சு நெனச்சு
உறக்கம் தொலச்சேனே
உம்மனசு தெரியத்தான் துடிச்சனே...

பாக்கும் பொருளெல்லாம்
நீயாத் தெரியறியே..

மனசு நெறஞ்ச மவராசன்
நீயே ஏமனச படிச்சுப்பாருமய்யா..!!

பாவிமனசு ஒனநினைச்சே
பயித்தியம் பிடிக்குதய்யா..

ஏமனசு பாறையாகிப் போகுமுன்னே
நா உசிரா நினப்போனே
ஒம்மனச சொல்லுமய்யா...

Monday, 24 December 2012

உணர்வின் சிதறல்கள்...


விளையாட்டாய் நீ புகட்டிய
விசவார்த்தைகளை
விழுங்கி ஜீரணிக்க எத்தனிக்கிறேன்..
விழுங்கமும் முடியாமல்
துப்பவும் விரும்பாமல்
துவள்கிறேன்...
ஊட்டியது நீயென்பதால்...!!!

----------
வருத்தமும், கோபமும் கூடிப்பேசி 
ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது 
உண்ணாவிரதம் இருப்பதென...
-----------

Sunday, 16 December 2012

பயனற்றது...!!!

உணரப்படாத இடத்தில்
செலுத்தப்படும் அன்பு...

கடைபிடிக்கப்படாத இடத்தில்
கூறப்படும் அறிவுரை..

ஏற்கப்படாத இடத்தில்
பகிரப்படும் ஆலோசனை...

வார்த்தைகளின் வலிமை(வாசம்) அறியாதவர்களிடம்
பேசப்படும் வார்த்தைகள்...

உழைப்பின் உன்னதம் அறியா இடத்தில்
சிந்தப்படும் வியர்வைத்துளிகள்..

விளையா நிலத்தில்
பாய்ச்சப்படும் நீர்...

ரசிக்கத்தெரியாதவர்களிடம்
கூறப்படும் கவிதை..

சுவைக்கத்தெரியாதவர்களுக்குப்
பரிமாறப்படும் அறுசுவை உணவு..
பயனற்றுப் போனாலும்..

பயனுள்ளவைகளின் பயன் அறிந்து
பயன்...
பயனுள்ளதாகும் என்றநம்பிக்கையில்
பகிர்வுகள் தொடர்கின்றன...:)

Tuesday, 11 December 2012

புதுமைப்பெண்..!!??


மஹாகவி சுப்பிரமணிய
பாரதியாரின் 130வது பிறந்த தினமான இன்று எமக்கு எழும் சந்தேகம்..

புதுமைப்பெண் என்பவள் யார்.....?
புதுமையென எதைக்குறிப்பிடுகிறோம்..
பாரதிவிரும்பிய புதுமைப்பெண் எப்படியிருக்கவேண்டும்
அதற்கான இலக்கணம்.....?

இதைப்பற்றி சற்று விளக்கமளிக்கவும்..தோழமைகளே..

ஒருபுறம் இன்றும் செக்குமாடாய் வீடேய் கதியெனவும், அதைத்தாண்டி சிந்திப்பதே பாவம் எனவும் அடிமைப்பட்டுக்கிடக்கும் பெண்கள்...
அதைத்தாண்டி சிந்திப்பவர்களை நிந்திக்கும் ஆண்கள்..

ஒருபுறம் புதுமை,புரட்சி என உலகமே வீடென
வீட்டைத்துறக்கும் பெண்கள்...

ஒருபுறம் நாகரீகமோகத்தில் அரைகுறை ஆடையே புரட்சியென நினைக்கும் பெண்கள்...

ஒருபுறம் விண்ணிற்கு செல்லும் பெண்கள்..
ஒருபுறம் செய்யும்வேலை ஒன்றேயெனினும் ஆணைவிடக் குறைந்தகூலி வாங்கும் பெண்கள்..

வார்த்தை சாட்டையால் சாடும் சமூகத்தில் சாதிக்கத் துடிக்கும் பெண்கள்...

ஒருபுறம் சாதனையாயிரம் படைத்திடினும் சாடலை மட்டுமே பரிசாய்ப்பெறும் பெண்கள்...

ஒருபுறம் சாதித்ததற்கு சங்கேதபாசையில் விமர்சிக்கப்படும் பெண்கள்...

பல்வேறு வேடமேற்கும் இவர்களில் பாரதி விரும்பிய புதுமைப்பெண் யாரோ...??

புதுமைப்பெண்ணைக்
கண்டிடத்துடித்தவனே
புதுமைப்பெண் யாரென அறியாமலே
புரட்சி பேசித்திரியும் பேதையிவளின்
பேதமையைக்காணாயோ...??!!!


Tuesday, 4 December 2012

மறுஜென்மம்...

கணவனை அலுவலகத்திற்கு வழியனுப்பிய சஞ்சனா..காலை உணவு சாப்பிடக்கூடத் தோன்றாமல் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கத்துவங்க, மனம் தொடரில் லயிக்காமல், காலை நடந்த சலசலப்பில் சென்றது. இது வழக்கமான ஒன்றுதான் இருப்பினும் ஏனோ அவ்வப்பொழுது மனம் இப்படி சோர்வடைகிறது. முன்பு எல்லாவற்றையும் ஏற்கும் மனம் இருந்தது. அவமானங்களையும், இழிசொல்லையும் ஏற்று ஏற்று மரத்துப்போன மனம், சில காலமாக தான் ஏன் மரக்கட்டையாய் இருக்கவேண்டும்..? தனக்கென இறை வழங்கிய வாழ்க்கையிது. மகிழ்ச்சியாக கழிக்கலாம் என்று தோன்றவே பாட்டு, கதை, நட்பு என தன்னை மாற்றிக்கொண்டதன் விளைவு. தன்னுடைய உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டுமென எதிர்பார்க்க வைக்கிறது. 

கடந்தசில தினங்களாகவே கணவன், மனைவிக்குள் ஒரு சில மனக்கசப்பு நிகழ்ந்துவர, எல்லாவற்றையும் சாதாரணமாக நினைக்கும் சஞ்சனாவிற்கு சில தினங்களாக அப்படி எடுத்துக்கொள்ள முடிவதில்லை. எவ்வளவு நாட்கள்தாம் மரக்கட்டை போல் இருப்பது..?

கணவன் முரளி விற்பனைப் பிரதிநிதியாக இருப்பதால் நேரத்திற்கு உணவு உண்பது, வீடு திரும்புவது கிடையாது. பெரிதாக வாழ்வில் பிடிப்பு என்பதும் இல்லை. தன் உடல்நலம் பற்றிய அக்கரையும் இல்லாமல் வேலைக்கு போகனும், சம்பாதிக்கனும், சாப்பிடனும் என்ற ஒரு சிறு வட்டத்திற்குள் தன்னை உள்ளடக்கிக்கொண்டு, சராசரி வாழ்க்கைக் கூட இல்லாமல் பணம் சம்பாதித்து கொடுத்துவிட்டால் போதும் என இருப்பவன்.

தனக்குப் பிறகு தனது இரு மகன்கள், மனைவியின் நிலை என்ன என்றுகூட சிந்திப்பது இல்லை. கேட்டால் நான் சம்பாதிக்கவில்லை எனில் எப்படி சாப்பிடுவது என்பான்.

இவளும் கூறி அலுத்துவிட்டாள். பணம் தேவைதான், பணம் மட்டுமே வாழ்க்கையில்லை. சம்பாதித்த வரை போதும், கிராமத்திற்கு போய் இருக்கும் பணத்தில் நிம்மதியாக காலம் கழிக்கலாம் என பலமுறை கூறிவிட்டாள். அவன் காதில் வாங்கிக்கொள்வதே கிடையாது. ஒரு இயந்திரத்தனமான வாழ்வில் தன்னை பழக்கப்படுத்திக்கொள்ள முடியாமலும், தன்னைப்போல் வாழ்வை அனுபவிக்க அவனை மாற்ற முடியாமலும் இருதலைக்கொள்ளி எறும்பாய் மனம் தவித்து வருபவளுக்கு, அவ்வப்பொழுது அழையா விருந்தாளியாய் இப்படியான வெறுமை மனதில் வந்து செல்லும். பெண்களுக்கே உரிய ஒரு சில எதிர்பார்ப்புகள் நிராசையாகவேப் போக, வெளியில் மனம் பகிரக்கூட முடியாமல் ஒரு சில நேரம் இறந்துவிடலாம் என்றுகூடத் தோன்றும். மகன்களின் வாழ்வை நினைத்துப்பார்த்து தன்னை அவ்வப்பொழுது சமாதானம் செய்துகொள்வாள்.

மனதிற்குள்ளேயே புழுங்கித் தவித்து கணவனின் உடல்நலம் பற்றிய கவலை, குழந்தையின் எதிர்காலம், இயந்திரத்தனமாக சமைத்தல், துவைத்தல், சுத்தம் செய்தல்னு செக்குமாடான வாழ்க்கை ஒரு புறம்..மனம் விட்டுப் பேசினால் அந்த நேரத்திற்கு கேட்பவர்களுக்கு பொழுதுபோக்கு அவ்வளவே. நம் நிலை உணர நம் வீட்டாரே முன்வராதபோது வெளி ஆட்கள் உணர்வைப் புரிந்துகொள்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்.?

அன்றும் தற்கொலைக்குத் தூண்டும்படியான ஒரு உணர்வு உந்தித்தள்ள...

போன் அடிக்கும் சப்தம் அவளை உணர்வுக்குக் கொண்டுவந்தது. போனில் அவள் தோழி சீமா.”சஞ்சனா உனக்கு விசயம் தெரியுமா.. நம்ம ரேஷ்மா தூக்கு மாட்டி இறந்து விட்டாளாம்..??”

அதிர்ச்சியிலிருந்து மீளாமல் என்னாச்சு சீமா...முந்தாநாள்கூட நல்லாத்தான பேசிக்கிட்டிருந்தா..நேற்றுதான் பார்க்கல எப்ப நடந்தது இது என்றேன்..”ம்ம்..தெரியல வரியா போய் பார்க்கலாம்..என்றவளிடம், இரு பத்து நிமிடத்தில் வரேன் என போன் துண்டித்து வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்ப, அதே காலனியில் வசிக்கும் ரேஷ்மா வீட்டின் முன் அக்கம்பக்கத்தினர் கூடியிருந்தனர். கூட்டத்தில் விசாரிக்க...போலீசு இப்பதான் போஸ்ட்மார்ட்டத்திற்கு எடுத்துச்சென்றுள்ளனர்..மாலைதான் கிடைக்குமாம் பிணம்.

”அவளுக்கும், கணவனுக்கும் ஏதோ சண்டையாம் அதான் தற்கொலை செய்துகொண்டாள்.”

”இல்ல இல்ல அவளுக்கு ஏற்கனவே மனவியாதியாம் அதிகப்படியான மாத்திரை எடுத்துக்கொண்டதில் மனம் பேதலித்து இப்படி செய்துவிட்டாள்.”

ஆளாளுக்கு மனிதர்களுக்கே உரிய குணத்தில் அவரவர்களுக்குத் தோன்றியதை பேசிக்கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் அவளுக்கு கள்ளக்காதல் உண்டு அதனால இருக்கும் என ஒருத்தி தன் பங்கிற்கு எடுத்துவிட..

”அட எனக்கு அப்பவே தெரியும், எப்பவும் அவ அலங்காரம் என்ன, சிரிப்பு என்ன நான் அப்பவே நினைச்சேன், இப்படி ஏதாவது இருக்குமென கூட்டத்தில் ஒரு பெண்மணி வாய் கூசாமல் கூறினாள்...”

ரேஷ்மாவின் இல்லத்தாரோ, மருத்துவமனைக்கும், அங்குமிங்கும் அல்லாடிக்கொண்டிருக்க, அவளுடைய 15 வயது மகளைக் காண பரிதாபமாக இருந்தது.. இந்தப்பெண்ணிற்கு இப்படிப்பட்ட ஒரு தண்டனை இந்த வயதில் தேவைதானா..? வருந்திய சஞ்சனாவிற்கு கண்முன்னே தன் மகனின் முகம் வந்து வந்து செல்ல...பீதியடைந்தாள். வீட்டிற்கு வந்தவள் மனம் எதிலும் ஈடுபடாமல் செய்யவேண்டுமே என ஒருவழியா வீட்டு வேலைகளை முடித்துவிட்டு மாலை சற்று உலாவி வரலாமே என்று குடியிருப்பில் அமைந்திருக்கும் மையப்பூங்காவிற்கு செல்ல...ரேஷ்மா வீட்டின் முன் வெறிச்சோடியிருந்தது..

ஒரு நிமிடம் தன்னை யாரோ அழைப்பதுபோல் உணர்ந்தவளுக்கு கண்முன்னே ரேஷ்மா நிற்கும் காட்சி தோன்ற.. “சஞ்சனா, பார்த்தியா..ஏதோ ஒரு வேகத்தில் பிரச்சினையிலிருந்து விடுபட எண்ணி நான் எடுத்த அவசர முடிவால என் மகள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது..என்னையும் வாய்க்கு வந்தபடி பேசுகின்றனரே...?!!”

நீ செய்தது முட்டாள்தனம் தான் ரேஷ்மா..அப்படி என்னதான் நடந்தது.?

“எனக்கும் கணவருக்கும் சின்ன மனவருத்தம். மாமியார் வீட்டினர் பேச்சைக்கேட்டு என்னை மதிக்காமல் ஏளனமாகப் பேச, என்னால் அவமானத்தைத் தாங்க முடியவில்லை...இறந்துவிடுவதாகக் கூற, இந்த ப்ளாக்மெயில் பண்றவேல வச்சிக்காத என்று கணவன் அலட்சியமாகக் கூறவே...இதிலும் அலட்சியமா என்ற ஆவேசம், நான் சும்மா பேச்சுக்கு சொல்ல்லனு நிரூபிக்க அப்படி செய்துட்டேன். ஆனா சிறுபிள்ளைத்தனமா யாரோ என்ன மதிக்கல என்பதற்காக என் வாழ்வை நானே முடித்துக்கொண்டு என் உணர்வை நானே மதிக்கலியோனு தோனுது சஞ்சனா..”

”தன் உணர்வைப் படம் பிடித்துக்காட்டியதுபோலவே கூறுகிறாளே..இதே நிலையில்தானே இன்று காலையில் நானும் இருந்தேன். நானும் இந்த முடிவுக்கு வந்திருந்தால், என் குழந்தைகளின் கதியும் இப்படித்தானே இருந்திருக்கும்..? என்னையும் இப்படித்தானே தரக்குறைவாக பேசியிருப்பார்கள்...?!” சிந்தனையிலிருந்து விடுபட்டவள் எதிரில் ரேஷ்மா இல்லை. பௌர்ணமி நிலவு அவளைப் பார்த்து சிரித்தது. ”என்னை எனக்கு புரிய வைக்க இறை நடத்தும் நாடகமா இது..?” ரேஷ்மாவின் ஆத்துமா சாந்தியடைய வேண்டியதோடு, அவளுடைய இறப்பு தன்னைத் தற்கொலை உணர்விலிருந்து காப்பாற்றி மறுஜென்மம் வழங்கியதை எண்ணி, ரேஷ்மாவிற்கும் மானசீக நன்றியைத் தெரிவித்து வீட்டிற்கு திரும்பினாள் சஞ்சனா....!!