முகப்பு...

Showing posts with label சிதறல்கள். Show all posts
Showing posts with label சிதறல்கள். Show all posts

Saturday, 23 May 2020

மனமும், உடலும்...

மனமடையும் உற்சாகத்தில்
புத்துயிர் பெரும் உடல்..
உடலின் ஆரோக்கியத்தில்
புத்துணர்வு பெரும் மனம்..
 
மனதை  சோர்வடையச் செய்யும் உடல்...
  உடலை  சோர்வடையச் செய்யும் மனம்...
 
இரண்டும் போட்டி போட்டு
ஒன்றுக்கொன்று சளைக்காமல்
தத்தம் பணியினை
தவறாமல் செய்கிறது
அதற்கென வழங்கப்படும் அவகாசத்தில். :)

Wednesday, 6 June 2018

அவனதிகாரம்...

#அவனதிகாரம்... 

அவனுக்களிக்க மானசீகமாய் முத்த ஒத்திகை பார்ப்பவளின் மனம் படித்தவனாய், இதழுக்கு ஓய்வளிக்க தன் கன்னத்தில் இடமளிக்கிறான்.   

Thursday, 26 February 2015

அவனதிகாரம்...

வார்த்தைகளை விதைத்து, நம்பிக்கை நீரூற்றி ஆயுளை அதிகரிக்கச் செய்து, மரணம் எனை அண்டவிடாது காக்கும் மருத்துவன்.
***
மரணித்த மனதையும் அன்பு மழை பொழிந்து புன்னகை மலர்களை மலரச்செய்யும் அற்புதன்.
***
மனதாளும் மன்னவனை மனதிற்குள் எண்ணும் நொடி, எதிரே தோன்றி தன் மரணமில்லாக் காதலை மனதிற்கு உணர்த்திச்செல்பவன்.
***
அவன் என் மௌனத்தையும், மொழிபெயர்க்கும் வித்தகன்.
***
அவன் என் எண்ணங்களுக்கு உயிர் கொடுக்கும் பிரம்மா.
***
அவனை நெஞ்சினில் சுமக்கும் என்னை நித்தமும் கர்ப்பிணியாய் உணரச்செய்பவன்.
***

Monday, 19 January 2015

அவனதிகாரம்...

என் மரணத்தை ஒத்திவைக்கும் அருமருந்து அவனுடைய அன்பு குரல் ..:) ;)
***
யாதுமாய் யாவற்றிலும் தோன்றி எனை ஆட்கொள்ளும் யாதுமானவன்.<3 <smile emoticon<
**
மௌனத்தால் கொன்று, வார்த்தைகளால் கொள்பவன். :P
***
அவன், வாழ்வியலின் அழகியலை இரசிக்க கற்றுக்கொடுப்பவன். :D
***
அவன் தன் கோபத்திலும் அன்பை வெளிப்படுத்தும் அற்புதன். :) 
**
அவன் தன் கொந்தளிக்கும் கோபத்தையும் மௌனத்தில் வெளிப்படுத்தும் அழகியல் கற்றவன். :)
**
அவன் என் மௌனத்தையும், மொழிபெயர்க்கும் வித்தகன். :) <3

***

Tuesday, 16 December 2014

அன்பெனப்படுவது...

என் மரணத்தை ஒத்திவைக்கும் மருந்து அவனுடைய அன்பு குரல்..:)

****
நம் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தையின்றித் தடுமாறும்(தோற்றுப்போகும்) தருணம், நமக்கான வார்த்தைகளை மனதாள்பவன் உதிர்க்க... மகிழ்ச்சியில் மௌனமாய் இரசித்து அமைதிப்புன்னகை சிந்துவது. :)

****
உலகத்தில் உள்ள இன்பங்கள் அனைத்தும் ஒருபுறம் நிற்க அன்புக்குரியவர் ஒருபுறமிருக்க அவனே(ளே)  அனைத்துமென அவன்(ள்)பக்கம் நிற்பது...:)
****

Tuesday, 9 December 2014

அன்புச்சிதறல்கள்...



அவனை 
சிந்திக்கையில்
சூல்கொள்ளும் 
சிந்தனை முட்டைகளனைத்தும்
வார்த்தை குழந்தைகளை 
பிரசவிப்பதில்லை
சந்திக்கும் வேளையில்..:)
***
சிந்தனை 
சிறைபிடிக்கப்பட்டு
மனக்கூட்டுக்குள்...
மகிழ்ச்சி விருந்தளிக்கப்படுகிறது..
உனை 
சந்தித்த வேளையை
சிந்திக்கையில்...:)

*******
அவனை 
சிந்திக்கும் வேளையில்
சிலையாகிப்போகிறேன்...
சந்திக்கும் வேளையில்
சிறகடித்துப் பறக்கிறேன்..!!

****

Monday, 6 October 2014

ஓவியம்...

அதர காகிதத்தில்
அன்பு மை கொண்டு 
இதழ் தூரிகையால் எழுதிய 
முத்த ஓவியத்தை...
மனத்திரையில் 
காட்சிக்கு வைத்து
அகக்கண்ணால் அழகுபார்க்க...
அழியாத ஓவியத்திற்கு
அணுதினமும் அழகு கூடுகிறது ...! 

Sunday, 31 August 2014

இறுதி சுவாசம்


ஒவ்வொரு இரவும் 
உனையடையும் 
என் வெற்றுக்குறுந்தகவல்..
என் ஆசைகளையும், காயங்களையும்
கூறாவிடினும்..
உறங்கச்செல்லும் நான்
மீளா உறக்கம் தழுவிடின்
என் இறுதி மூச்சும்
உனையே நேசித்து சுவாசித்ததை
நான் இறந்தபின்(னே)னும்
நீயறியவே...!! 

*****
நினைவென்னும் 
கூறிய நகங்களால் கீறப்பட்டு 
வெளிப்படும் கண்ணீர் முத்துக்கள்
அறிவிக்கும்...
ஆறிவிட்டதாக நினைக்கும் 

காயங்கள் புரையோடிவிட்டதை...!
*****

Tuesday, 21 January 2014

எண்ணச்சிதறல்...

அன்றைய தினத்தை சூன்யமாக்கவும், மகிழ்ச்சிப்பூவை மலரச்செய்யவும் அன்புடையவரின் அலட்சியமான/அன்பான ஒற்றை சொல் போதுமானதாகிறது.
***
உறவு வண்டியில் 
நம்பிக்கை எரிபொருளூற்றி 
இலட்சிய நிறுத்தம் நோக்கிப் பயணிக்க
கசியும் எரிபொருள்
வேகத்தை குறைக்குமா..?
விபத்தையடைந்து
பயணம் தடைப்படுமா..?
கவலைகள் தோன்றிடினும்
நிறுத்தத்தை சென்றடைய
குறையும் எரிபொருளை நிரப்பியவண்ணம் 
நாளும் தொடர்கிறது 
முயற்சிகள்..:)
***
எங்கோ விழுங்கப்பட்டு, ஜீரணிக்கப்படாத விடவார்த்தைகளின் எச்சம் விரும்பியவரையும் விடமாய்த் தீண்டுகிறது நம்மையறியாமலேயே..
***
சிந்தையில் தோன்றுவதை 
என் மனம் உணருமுன்னே
வார்த்தையாகி 
உன்செவியைச் சென்றடைகிறது
நீ விரும்பியோ
விரும்பாமலோ...!!

Friday, 17 January 2014

மௌனச்சிதறல்கள்...

மௌனமாய் கடந்துசெல்லும் நொடிகள் அனைத்தும் மனதிற்கு பிடித்தமானது என்பதாகாது.
****
இதுவும் கடந்துபோகுமென, அனைத்து நிகழ்வுகளும் கடக்க(முடி)ப்படுவதில்லை பலநேரம்.
****

துள்ளிக்குதித்தோடும் மனக்குதிரையின் வேகத்தின் தன்மையறிந்து, மட்டுப்படுத்த மௌனச்சாட்டை தேவைப்படுகிறது சிலநேரம்..

****

உற்சாகத்திடலில் ஓடி மகிழும் மனக்குதிரையை உணர்விழக்கச் செய்ய வார்த்தை சாட்டை போதுமானதாகிறது..

****

Monday, 16 December 2013

எண்ணச்சிதறல்...


பொம்மையடுக்கி
விளையாடும் குழந்தைபோல்
எண்ணத்தை எழுத்தாய்
அடுக்குகிறேன்...!

குழந்தைகட்டிய வீட்டை
குதூகலத்துடன் கண்டு இரசிக்கும்
பெற்றோராய்...
எழுத்தால் நானெழுப்பிய இல்லத்திற்கு
கவிதையெனப் பெயர்சூட்டி
அன்பால் அள்ளியெடுத்து
மகி(ழும்)ழ்விக்கும் நட்புகள்...!!
*******************
தீர்ப்பு...!!!
எழுதப்பட்ட தீர்ப்பிற்கு 
வாதிடும் வழக்கறிஞர்களாய் 
பணமே வாழ்வென
தீர்ப்பெழுதி;
வாதிட்டு;
தண்டனையேற்கும்(வாழும்)
மானுடம்...!!



Wednesday, 4 December 2013

எண்ணச்சிதறல்..

ஒவ்வொரு புறக்கணிப்பிலும் ஒரு பாடம் கற்பிக்கப் படுகிறது.
பாடத்தைப் படிக்கத்தவறியும், படிக்க விரும்பாமலும், படிக்க மறுத்தும், படித்தும் படிக்காததுமாயும் புறக்கணிப்புகள் வாழ்வில் தொடர்ந்து அனுமதிக்கப் படுகின்றன விரும்பியோ விரும்பாமலோ....!
****
பகிரப்படாத உணர்வுகளின்
கண்ணீர் முத்துக்கள்
விரயமாகாது
மனப்பெட்டகத்திற்கு
பலம் சேர்க்கிறது...!!
****
அலட்சியத்தை
அலட்சியப்படுத்த..
அலட்சியப்படுத்தப்படும்
அலட்சியமே மற்றொரு
அலட்சியத்திற்கு 
அடித்தளம் அமைக்கிறது..!!
****
நீயமைத்துக்கொடுத்த பாதையில் 
உன் 
காலடித்தடம் நான் தொடர..

புதியபாதை உருவாக்கு

எனக்கூறியே 

காணாமல் போகிறாய்....!!

****

Thursday, 28 November 2013

சிதறல்கள்...

நிர்வாகத்தின்

வளர்ச்சியிலும்,
வீழ்ச்சியிலும்
தன் பங்கை திறம்பட
வகிக்கிறது
”தகவல் பரிமாற்றம்...”
----
உணர்த்தாமல் 
உணரவேண்டியதை
உணர்த்தி 
உணரவைப்பதைவிட
உணர்த்தாதிருப்பதும்,
உணராதிருப்பதும் மேல்....!
---
சந்தேக விதைகளை 

மனதுள் விதைத்து 
நம்பிக்கை கனிகளை 
அறுவடை செய்ய முயற்சிக்கிறோம் 
பலநேரம்..!
----
இரு(று)க்கும் 

நினைவுகளை 
இறக்(கி)க வைக்க முயற்சிக்கிறேன்..
இறக்க விரும்பாமல் பறக்கிறது
உனை நோக்கியே...!
----

Wednesday, 27 November 2013

கண்ணீர்...


கண்ணீர் கரிக்குமென 
கதை சொன்னது யார்..?
நீயறிந்த 
என் கண்ணீரின்
சுவையினை உனையன்றி யாரறிவார்..??
நித்தமும்
என் கண்ணீரை
சுவைத்திட
நீயெடுக்கும் முயற்சிகளை
எனையன்றி யாரறிவார்..?
முயற்சிகள் பலசெய்தே
நீ கொணர்ந்த
என் கண்ணீருக்கு
சுவை அதிகம்தான்..!!

Monday, 25 November 2013

குழந்தைகள்...:)

உலகத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் தன் 

கண்களிடத்தே தேக்கிவைத்து, தம் குறுஞ்சிரிப்பால் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி சொர்க்கம் இதுவென உணர்த்தும் வல்லமை குழந்தைகளிடத்தே இருக்கிறது. 


விளையாடுவதற்கு ஆடம்பர பொருட்கள் வேண்டும், அமர்ந்திருக்க விலை உயர்வான சோஃபா வேண்டும் அங்கேதான் உள்ளது மகிழ்ச்சியென தத்தம் மகிழ்ச்சிதனை வட்டத்திற்குள் சுறுக்கிக்கொள்ளாமல், கீழே கிடந்த பொம்மையினை, தூக்கியெறியப்பட்ட பூச்சரத்தை உதிர்த்து அலங்கரித்து விளையாடும்போது கூட… விலை கொடுத்து வாங்கமுடியா மகிழ்ச்சிதனை தன் பிஞ்சு முகத்தில் தேக்கிவைத்திருக்கும் குழந்தைகள், மனமிருந்தால் எந்த சூழலிலும் மகிழ்ச்சியினை அடையமுடியும் என எடுத்துரைக்கும் ஆசான்களாய் தோற்றமளிக்கின்றனர்....!!

Thursday, 21 November 2013

மகிழச்செய்யும் மழலைகள்...


குழந்தைகள் எத்துனை பெரியவர்களானும் அவர்களின் சிறு சிறு உரையாடல் என்றும் மனதின் ஓரிடத்தில் நீங்கா இடம்பிடித்து மகிழ்வித்துக்கொண்டேயிருக்கின்றன. ...:) 

1. ஜன்னலோரப்பயணத்தில் தென்றல் தனைத் தழுவியபொழுது, காத்துல மூஞ்சி பறக்குது(மூஞ்சியில் காற்று அடிக்குது)  என்ற மகளின் சொல்லாடல்....:)

2. தீபாவளிக்கு பூஜை செய்யும்போது (இங்கு திராட்சை, வால்நட், பாதாம், முந்திரி இப்படி உலர்பழ வகைகள் வைத்து கும்பிடுவது வழக்கம் ) வால்நட் அதிகம் வை...சாமிக்கு அறிவு நல்லா வளரும் என்ற யதேச்சையான நகைச்சுவை..:)

3. கோவிலுக்கு செல்லும் தந்தையிடம்...நான் முருகனை விசாரித்ததா சொல்லு..என்னுடைய ஆசீர்வாதம் என்னிக்கும் முருகனுக்கு உண்டு.. :) 

இப்படி மனதில் பட்டதை யாரும் எதும் சொல்வார்களோ என்ன நினைப்பார்களோ என உள்ளொன்று வைத்து புறமொன்றுப் பேசாது யதார்த்தமாய் பேசி மகிழ்ச்சியில் ஆழ்த்தி அவர்களைப்பற்றி நினைக்கும்போதே உதட்டோரம் ஒரு புன்னகையை வரவழைக்கும் சிறப்பு மலருக்கும், மழலைக்குமே சாத்தியமாகிறது.  குழந்தைகள் என்றுமே ரசனைக்குரியவர்கள். குழந்தைகள் வளர்ந்தாலும், குழந்தை மனம் அப்படியே இருக்கட்டும்..:)

Monday, 21 October 2013

மரண ஒத்திகை


வாழ்க்கை நாடகத்தில்
மரண கதாபாத்திரத்தை
கச்சிதமாய் நடித்துமுடிக்க
ஒத்திகை பார்க்கப்படுகிறது
மருத்துவமனையில்..!

தேர்ச்சியடைந்தவர்
இடுகாடு செல்ல...
தேராதவர்கள் 
இல்லம் திரும்புகின்றனர்
ஒத்திகையைத் தொடரவே...!!

Wednesday, 4 September 2013

ஆசிரியர் தினவாழ்த்துகள்..


அனைவருக்கும் முதல் ஆசானாய் விளங்கும் அன்னைக்கும்,
அகரம் கற்பித்த ஆசானுக்கும்...
நாளும் ஒரு பாடம் கற்றுகொடுக்கும் நட்புகளுக்கும்..
அன்றாட அனுபவமே பாடம் என கற்று கொடுத்துவரும் அனைத்து அன்புள்ளங்களுக்கும்...
ஏகலைவனுக்கு கிடைத்த துரோணராய், எங்கோ இருந்துகொண்டு நம் எண்ணங்களை சீர்தூக்கிப்பார்க்க உதவிசெய்து ஆசானாய் விளங்கிவரும் எழுத்தாளர்களுக்கும்..
வாழ்க்கையெனும் வரைபடத்தில் ஏற்றமும், இறக்கமும் இயல்பு என எடுத்துரைக்கும் காலத்திற்கும் இந்த ஆசிரியர் தினத்தில் வாழ்த்துகளைப் பகிர்வதோடு எமது மனமார்ந்த மனமார்ந்த நன்றியினையும் காணிக்கையாக்குகிறேன்... _/\_

Monday, 12 August 2013

சிந்தனைச்சிதறல்கள்...






பொசுக்கப்பட்ட
உணர்வுகளின் சாம்பலில்
கண்ணீர் சேர்த்து
உள்ளத்தூரிகையால்
என் எண்ணங்களை எழுத
கவிதையாய் உன் பெயர்
ஓவியமாய் உந்தன் முகம்..!!
கவிதை படித்து, ஓவியம் ரசித்து
உள்ளம் மகிழ்ந்து
உணர்வுகளை
உயிர்ப்பித்துக்கொள்கிறேன்
ஒவ்வொருமுறை
பொசுக்கப்படும்பொழுதும்.....!

Saturday, 10 August 2013

திரும்பும் குழந்தைப்பருவம்...!!


மழைக்காலத்தை வரவேற்கும் விதத்தில் தீஜ் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது(டெல்லி). இந்த நாள் மாதந்தோறும் அமாவாசைக்கு மூன்றாம் நாள் வருகிறது. ஆடி(ஷ்ரவண அல்லது சாவன்)மாதத்தில் வரும் தீஜ் நாளுக்கு சிறப்பு உண்டு. மழைக்காலத்தில் வரும் தீஜ் பண்டிகை ஷ்ரவண தீஜ் என்றும், பசுமை தீஜ்(ஹரியாலி தீஜ்) என்றும் கூறுகின்றனர்.

ஹரியாணா, ராஜஸ்தான், பஞ்சாப், பிகார், உத்தர பிரதேசம் மாநிலங்களில் தீஜ் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருமண வாழ்வு சிறக்கவும், வாழ்க்கைத் துணைவி, குழந்தைகள் நலம் பெறவும் தீஜ் கொண்டாட்ட நாளில் சிறப்பு பூஜை செய்வது வழக்கம்.

தீஜ் அன்று பெண்கள் பச்சை நிற உடையணிந்து, தோட்டத்தில் உள்ள மரங்களில் ஊஞ்சல் அமைத்து ஊஞ்சலை மலர்களாலும், பசுமைக்கொடிகளாலும் அலங்கரித்து அனைவரும் ஊஞ்சல் ஆடி, நாட்டியமாடி மகிழ்கின்றனர்.

வயதுவித்தியாசமின்றி குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள்(ஆண்கள் கிடையாது) வரை நாட்டியமாடியும், ஊஞ்சல் ஆடியும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவதைக் காண்கையில் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளவே செய்கிறது. இவர்கள் எந்த ஒரு சிறு பண்டிகையானாலும், சரி ஒரு பூஜையானாலும் சரி ஈடுபாட்டுடன் கொண்டாடுவதில் இருந்து பண்டிகை என்பதே மகிழ்ச்சியாக இருப்பதற்காக என்பது தெரியவருகிறது.

நேற்று ஹரியாலி தீஜ் முன்னிட்டு குடியிருப்புப் பகுதியில் உள்ள தோட்டத்து வேப்ப மரத்தில் கட்டப்பட்ட கயிற்று ஊஞ்சலில் இங்கு உள்ள தோழமைகளோடு இணைந்து ஆடும் அனுபவம் எனக்கும் கிட்டியது. ஊஞ்சல் ஆடும்போது பள்ளிப்பருவத்தில் தோழிகளுடன் வீட்டு கருவேளமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடிய நெஞ்சைவிட்டு நீங்காத பல நினைவுகளும் வந்து என்னை பள்ளிப்பருவத்திற்கே அழைத்து சென்றது.

எந்த வயதிலும் நம்மைக் குழந்தையாய் உணரவைக்கும் எந்த ஒரு பண்டிகையும் வரவேற்கத்தக்கதே. தேவையில்லாத சர்ச்சைகள், இது தேவையா என்று இல்லாமல் பண்டிகை நம்மையும், நம்மை சுற்றியிருப்போரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும் எனில் எந்த ஒரு பண்டிகையையும் கொண்டாடுவதில் தவறில்லை என்பதை உணரவைத்தது நேற்றைய நிகழ்வுகள். முடிந்தவரை நாமும் மகிழ்ச்சியாக இருந்து நம்மை சுற்றியிருப்போரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்போம்..