முகப்பு...

Saturday, 10 August 2013

திரும்பும் குழந்தைப்பருவம்...!!


மழைக்காலத்தை வரவேற்கும் விதத்தில் தீஜ் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது(டெல்லி). இந்த நாள் மாதந்தோறும் அமாவாசைக்கு மூன்றாம் நாள் வருகிறது. ஆடி(ஷ்ரவண அல்லது சாவன்)மாதத்தில் வரும் தீஜ் நாளுக்கு சிறப்பு உண்டு. மழைக்காலத்தில் வரும் தீஜ் பண்டிகை ஷ்ரவண தீஜ் என்றும், பசுமை தீஜ்(ஹரியாலி தீஜ்) என்றும் கூறுகின்றனர்.

ஹரியாணா, ராஜஸ்தான், பஞ்சாப், பிகார், உத்தர பிரதேசம் மாநிலங்களில் தீஜ் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருமண வாழ்வு சிறக்கவும், வாழ்க்கைத் துணைவி, குழந்தைகள் நலம் பெறவும் தீஜ் கொண்டாட்ட நாளில் சிறப்பு பூஜை செய்வது வழக்கம்.

தீஜ் அன்று பெண்கள் பச்சை நிற உடையணிந்து, தோட்டத்தில் உள்ள மரங்களில் ஊஞ்சல் அமைத்து ஊஞ்சலை மலர்களாலும், பசுமைக்கொடிகளாலும் அலங்கரித்து அனைவரும் ஊஞ்சல் ஆடி, நாட்டியமாடி மகிழ்கின்றனர்.

வயதுவித்தியாசமின்றி குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள்(ஆண்கள் கிடையாது) வரை நாட்டியமாடியும், ஊஞ்சல் ஆடியும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவதைக் காண்கையில் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளவே செய்கிறது. இவர்கள் எந்த ஒரு சிறு பண்டிகையானாலும், சரி ஒரு பூஜையானாலும் சரி ஈடுபாட்டுடன் கொண்டாடுவதில் இருந்து பண்டிகை என்பதே மகிழ்ச்சியாக இருப்பதற்காக என்பது தெரியவருகிறது.

நேற்று ஹரியாலி தீஜ் முன்னிட்டு குடியிருப்புப் பகுதியில் உள்ள தோட்டத்து வேப்ப மரத்தில் கட்டப்பட்ட கயிற்று ஊஞ்சலில் இங்கு உள்ள தோழமைகளோடு இணைந்து ஆடும் அனுபவம் எனக்கும் கிட்டியது. ஊஞ்சல் ஆடும்போது பள்ளிப்பருவத்தில் தோழிகளுடன் வீட்டு கருவேளமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடிய நெஞ்சைவிட்டு நீங்காத பல நினைவுகளும் வந்து என்னை பள்ளிப்பருவத்திற்கே அழைத்து சென்றது.

எந்த வயதிலும் நம்மைக் குழந்தையாய் உணரவைக்கும் எந்த ஒரு பண்டிகையும் வரவேற்கத்தக்கதே. தேவையில்லாத சர்ச்சைகள், இது தேவையா என்று இல்லாமல் பண்டிகை நம்மையும், நம்மை சுற்றியிருப்போரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும் எனில் எந்த ஒரு பண்டிகையையும் கொண்டாடுவதில் தவறில்லை என்பதை உணரவைத்தது நேற்றைய நிகழ்வுகள். முடிந்தவரை நாமும் மகிழ்ச்சியாக இருந்து நம்மை சுற்றியிருப்போரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்போம்..

6 comments:

  1. //முடிந்தவரை நாமும் மகிழ்ச்சியாக இருந்து நம்மை சுற்றியிருப்போரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்போம்..// நிறைவான மகிழ்ச்சியான வரிகள்.. நல்ல பதிவு!.. வாழ்க!.. வளர்க!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழர்...வாழ்க வளமுடன். :)

      Delete
  2. சந்தோஷம் என்பது வயது வித்தியாசமின்றி நம்மை சந்தோஷிக்க வைப்பதே... மீண்டும் சின்ன வயது சந்தோஷத்தை அடைந்ததை மகிழ்வுடன் பகிர்ந்ததற்கு வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete
  3. தொடரட்டும் பண்டிகைக் கொண்டாட்டங்கள்.....

    மொத்தம் மூன்று தீஜ்..... இது முதலாவது.....

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__