Monday, 19 August 2013

சுதந்திரதினக் கொண்டாட்டம் ஒரு பார்வை..


அனைவருக்கும் வணக்கம். என்னடா சுதந்திர தினம் முடிஞ்சு சுதந்திர தினம் பற்றிய பதிவுன்னு கேட்கறீங்க புரியுது. 

சுதந்திர தினம் என்றாலே குழந்தைகளைப் பொறுத்தவரை பள்ளிவிடுமுறை என்ற சந்தோசம. பெரியவர்களைப் பொறுத்தவரையும் விடுமுறை சற்றே சுதந்திரமாக செயல்படலாம் அதோடு தொலைக்காட்சிகளின் சிறப்பு நிகழ்ச்சிகள்.. ஆனா யாரும் சுதந்திர தினத்திற்கும் தொ(ல்)லைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கக்கூடாது.

சுதந்திர தினம் என நினைக்கும்போதே நம்மையறியாமல் ஒரு பெருமித உணர்வு ஏற்படுவது மறுக்கமுடியாத உண்மை. நமக்காக தங்களுடைய வாழ்வினையே தியாகம் செய்தவர்களின் வலிகளை எண்ணிப்பார்த்தால் நமக்கும் மனம் வலிக்கவே செய்கிறது. இது ஒருபுறமிருக்க.. திரும்புமிடமெல்லாம் தேசபக்தியைக் காணலாம். வண்ண வண்ணப் பட்டமாகவும், நெகிழியில் தயாரித்த மூவர்ணக்கொடிகளாகவும், ஊதுபைகளாகவும் மற்றும் மூவர்ணத்தில் கையில் அணிந்துகொள்ளும் வளையமாகவும்...!!

சுதந்திர தின கொண்டாத்திற்கு வருவோம். மற்ற இடங்களில் எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியவில்லை. கடந்தசிலவருடங்களாக நான் இருக்கும் இடத்தில் எப்படிக்கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்த்துவந்த அனுபவத்தில் அதை மட்டும் பகிர்கிறேன்.

சுதந்திர தினத்திற்கு சில தினங்கள் முன்பாகவே குழந்தைகளிடம் மூவர்ணத்தில் பேண்ட் (தலைப்பின்னலுக்குப்போடுவது. தற்சமயம் கையில் வளையல் போல் ஸ்போர்ட்ஸ் நேரத்தில் அணிவதற்கு), ஊதுபைகள்(பலூன்கள்), நெகிழியில்(ப்ளாஸ்டிக்) செய்திருக்கும் மூவர்ணக்கொடி. தெருவெங்கும் சிக்னலில் சுதந்திர தினத்தில் (சுதந்திரமாய்..??!!) ஒவ்வொரு வண்டியிலும் தன்னிடமுள்ள கொடியை விற்க ஓடும் சிறார்கள். பள்ளிகளில் மூவர்ணம் கலந்து வாங்கிவந்து பொருட்கள், மூவர்ண ஆடைகள் அணிந்து குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சுதந்திரத்திற்குப் பின் மறைந்திருக்கும் தியாகிகளின் வாழ்க்கை வரலாறு எத்தனை குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டது..?? எத்தனை பிள்ளைகள் இவற்றையெல்லாம் அறிவார்கள் என்பது தெரியாது. நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தில் மறைந்திருக்கும் பலரின் கண்ணீர், உயிர், வலிகள் தெரிவிக்கக் கூடாதா...? கொண்டாட்டம் எனில் ஆடிப்பாடி அன்றைய பொழுதை கழிப்பது மட்டும்தானா..??

அடுத்து குடியிருப்புப்பகுதியின் சுதந்திர தின நிகழ்வு...காலை குடியிருப்புப் பகுதியில் இருக்கும் சிறார்களோடு ஒரு பேரணி...சுதந்திர தின முழக்கத்தோடு பிறகு கொடியேற்றம், குழந்தைகளின் கலைநிகழ்ச்சி சிறிது நேரம். இறுதியாக இனிப்புப்பகிர்தல்.. 


அதன்பின் கொடியேற்றம் நடந்தவிடத்தைப் பார்த்தால் ரத்தக்கண்ணீர் வராத குறைதான். எங்கும் இனிப்பு உண்டதன் வெளிப்பாடாய் பேப்பர், டப்பா..இப்படி எறியப்பட்டிருக்கும். அதோடு கட்சிக்கொடிகள் போல் தற்சமயம் கிடைக்கும் நெகிழிகளில் செய்த போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய நம் மூவர்ணக்கொடிகள். (மூவர்ணக்கொடி துணியில் கொடிக்கம்பில் பறக்கவிடப்பட்டிருந்தால் மட்டும்தான் மதிப்பா அல்லது எந்தப்பொருளிலும் மூவர்ணத்தில் நம் கொடிபோல் செய்திருந்தாலும் அதே மதிப்புதானா(னே)....??!!) எங்கு திரும்பிடினும் கிழித்து கொடி அறுந்து கீழே கால்களில் மிதிப்பட்டுக்கொண்டிருக்கும். இதை கிழித்து எறிந்து மிதிப்பதற்கு எத்துனை பேரின் உழைப்பு..? அந்த உழைப்பு ஆக்கப்பூர்வமாக இருக்கலாமே..? இப்படி எங்கும் கட்சிக்கொடிபோல் கொடிகட்டித் தொங்கவிட்டு ஒவ்வொரு குழந்தை கையிலும் ஒரு கொடி பிடிக்கக்கொடுத்து கொடியேற்றம் முடிந்ததும் அதைத் தூக்கியெறிந்து விட்டு அவரவர் இல்லம் செல்வதுதான் கொண்டாட்டமா என்ற கேள்வியே எஞ்சி நிற்கிறது எண்ணத்தில்..!

சுதந்திர தினத்திற்கும், பட்டம் விடுவதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா...? உண்மையில் தெரிந்துகொள்ளத்தான் இந்தக் கேள்வி எழுப்புகிறேன். ஏனெனில் இங்கு சுதந்திர தினம் வருவதற்கு சில தினங்கள் முன்பிலிருந்தே வண்ண வண்ண பட்டங்களின் விற்பனை கலைகட்டத்துவங்கிவிடும். சிறுவயதில் பட்டம் விடுவதையும், பட்டம் விட்டும் மகிழ்ந்தவர்கள் தாம் இல்லையென்று கூறவில்லை. அப்பொழுது ஆற்றங்கரையில், விளையாட்டு மைதானம் போன்ற வெட்டவெளியில் காகிதத்தில் செய்து சாதாரண நூல்களில் கட்டி பறக்கவிடுவோம்.

நாகரீக வளர்ச்சியில் அனைத்தையும் ஏற்கும் நாம் இதிலும் மாற்றம் ஏற்பதில் தவறில்லை..வண்ண வண்ண பட்டங்கள் நீண்ட நூல்கள் ஏற்க வேண்டியதுதான் மறுக்கவில்லை. ஆனால் தற்பொழுது இங்கு நடப்பது என்ன..?? தடித்த நூல்..அதை அழுத்திப்பிடித்தாலே கையை அறுத்துவிடுகிறது. தெரிந்து எத்தனையோ பிள்ளைகள் பட்டத்தில் நூல் கையறுத்து விட்டதென தையல் போட்டுக் கண்டிருக்கிறேன். இதுதான் நாகரீகமா..தன் மகிழ்ச்சியில் எத்தனையோ நபர்களின் காயங்கள், மன உளைச்சல், பயம், விபத்து இத்தனையும் உள்ளடக்கியதுதான் மகிழ்ச்சியான கொண்டாட்டமா..? அறுந்த பட்டங்களின் நூல்கள் காலில் சிக்காமல் செல்பவர்கள் மிகக்குறைவு. ஏதோ அரையடி ஒரு அடி இருக்காது நூல்கள் குறைந்தது 5மீட்டர், 10 மீட்டர் காலில் பந்து பந்தாக சுற்றிக்கொள்ளும். அது கையையும் அறுத்துவிடாது, காலுக்கும் காயம் ஏற்படாது சிக்கலை விடுவிப்பதுதான் அன்றைய தினத்தின் சவாலாக அமையும். அனைவரும் சென்றுவரும் இல்லக்குடியிருப்பின் பிரதான சாலைகளில் விடப்படும் பட்டம் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கண்முன்னேயும் வந்துசெல்லும். தாழ்ந்திருக்கும் மரக்கிளைகளில் சிக்கிக்கொண்டு அவர்கள் செல்லும்பொழுது கழுத்திலும் உரசிச்செல்லும். இப்படிப்பட்ட ஆபத்தான விளையாட்டு பொழுதுபோக்கை சற்றே மாற்றிக்கொள்ள இயலாதா..? இதையெல்லாம் கற்பிக்கவேண்டியது யார் பெற்றோர்களா..? ஆசிரியர்களா..??
மாணவர்களாக(குழந்தைகளாக) உணர்வார்கள் என்றும் அப்படியே விட்டுவிடமுடியாது...மிக சொற்ப எண்ணிக்கையுடையவர்களே அப்படி தானாகக் கற்க நேரிடும்..

பெற்றோர்களைப் பொறுத்தவரை பிள்ளைகள் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட்டால் பொறுப்பு முடிந்தது என்றும், பள்ளிகளைப்பொறுத்தவரை படிப்புத் தவிர வேறு எதிலும் தலையிடுவது நம் கடமையில்லை என்றும் நினைத்துவரும் காலக்கட்டத்தில் இவர்களுக்கு உண்மையான கொண்டாட்டம் என்ன என்பதையும், ஏன் இந்தக்கொண்டாட்டம் கொண்டாடுகிறோம் என்பதையும், இந்த தினத்தின் சிறப்பையும் உணர்த்துவது யார்...??

பலருக்குள்ளும் இந்தக்கேள்விகள் எழுந்திருந்தாலும் கேள்வி மட்டும் கேட்டுவிடுவதால் என்ன நடந்துவிடப்போகிறது என்பதால் கேட்காது நமக்கென்ன என இருக்கிறோமா..? அல்லது விடையில்லா கேள்வி கேட்டு என்ன செய்வது என்பதாலா..? விடையறிந்தாலும் நம்மால் என்ன செய்துவிடமுடியும்..நம் பேச்சை யார் கேட்கப்போகிறார்கள் என்பதால் கேட்கப்படவேண்டியதும், உணர்த்தப்படவேண்டியதும் உணர்த்தப்படாமலே உணர்ந்தது உணர்வற்றதாய்ப்போகிறதா...???!!

8 comments:

 1. உண்மையாக சுதந்திர தினம் கொண்டாடுபவர்கள் அந்த ஏரியாவில் எதவாது தியாகி இருந்தால் அவரை கூப்பிட்டு கௌரவப்படுத்தாலம்... அது நடக்குமா என்றால் நடக்காது...

  ReplyDelete
  Replies
  1. ம்ம் உண்மைதான் தோழரே..:(

   Delete
 2. சிந்திக்க வேண்டிய கேள்விகள்... அவரவர் உணர வேண்டும்... இந்த விசயத்தில் சிறப்பை உணர்த்துவது முதலில் ஆசிரியர்களும் பிறகு பெற்றோர்களும்...

  ReplyDelete
  Replies
  1. உணர்த்தவேண்டியவர்கள் உணரும்படி உணர்த்தினால் நல்லது..நன்றி சகோ..:)

   Delete
 3. உணர்த்தப்பட வேண்டிய உண்மைகள் உணர்த்தப் படாமலேயே - உலர்ந்து போகின்றன!.. வண்ண மயமான கேளிக்கைகள் எந்தவிதத்தில் தேசப்பற்றினை வளர்க்கின்றன?...கேள்விக்குறிதான் மிச்சம்!..

  ReplyDelete
  Replies
  1. // வண்ண மயமான கேளிக்கைகள் எந்தவிதத்தில் தேசப்பற்றினை வளர்க்கின்றன?..// உண்மைதான் தோழர்...அனைவருக்குள்ளும் இருக்கும் ஆதங்கம்தான் இது..??! என்ன செய்வது..?

   Delete
 4. நல்லதொரு பார்வை அக்கா.... வாழ்த்துக்கள்.

  ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__