முகப்பு...

Showing posts with label உரையாடல். Show all posts
Showing posts with label உரையாடல். Show all posts

Friday, 21 November 2014

கனவில் வந்த காந்தி - 'பரிவை' சே.குமார். தொடர் பதிவு.

உறக்கம் தழுவாது வலைப்பூவை வலம் வர பரிவைபாரதிராஜா வலைப்பூ தொடர் பதிவில் நம்மையும் சிக்கவைத்தது தெரியவர... வலைத்தள பிரபலங்கள் எல்லாம் எழுதி முடிச்ச கேள்விக்கு அகரம் பயிலும் நான் பதில் எழுதவா...? காந்திக்கு வந்த சோதனையேனு நினைக்க.... யப்பா... இப்பவே கண்ணைச் செருகுதே.... காயத்ரி தூங்கிடாத..  பாவம் தூரிகையின் வாசகர்கள். ஏதோ நீ பாட்டுக்கு விசுவோட பேசறியேனு அவுக எல்லாம் படிச்சிட்டு பயத்த வெளில காண்பிக்காம போயிட்டாங்க.. இப்ப காந்தியோட பேசின அவ்ளோதான் புள்ள சூதனமா தூங்காம இரு.... தூங்கினாத்தான காந்திவருவாரு கனவுல கேள்வி கேட்பாரு... நமக்கு திருவிளையாடல் தருமி மாதிரி கேள்வி கேட்டுத்தான் பழக்கம்.  நாம என்னிக்குப் பதில் சொல்லியிருக்கோம்...? 
அட ஆண்டவா...? விசுவோட பேசிட்டிருந்த என்ன இப்படி தூங்கவிடாம தனக்குத்தானே பேசவச்சிட்டதே இந்தத்தம்பி பரிவை பாரதிராஜா... :) பேசிக்கொண்டிருக்கும்போதே தூக்கம் கண்களைத் தழுவ.... பாவம் காந்தி....!

காந்தி: என்னம்மா, என் கேள்வியில் இருந்து தப்பிக்க ரொம்ப சிரமப்பட்டு முயற்சி செய்த போல இருக்கு..?

நான்: அட...வாங்க வாங்க....அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை...(ம்ம்... ஆமான்னு சொன்னா கேள்வி கேட்காம போயிடுவாறா...?!! :) )

1. மறுபிறவியில் நீ எங்கு பிறக்க வேண்டும் என விரும்புகின்றாய்?
(நல்லவேளை எதுவாகன்னு கேட்கல... ) எங்க ஊர்லதான்... 
அண்ணல்.: எந்த ஊரும்மா...
நான்: நான் பிறந்த ஊருதான்.
அண்ணல்.. முதல் கேள்வியே இப்படியா..

2. ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்து விட்டால்..?
ஹூம்... அப்படி ஒரு கொடுப்பினை இந்த நாட்டுக்கு இருக்கா...
அண்ணல் மைண்ட் வாய்ஸ்: (கொடுப்பினையா, சாபமான்னு மக்கள்தான் சொல்லனும்) 
ஒண்ணும் செய்யமாட்டேன்.
அண்ணல்.: என்னம்மா இப்புடி பட்டுனு சொல்லிட்ட...அதத்தான இப்ப உள்ளவங்க செய்யறாங்க.
நான்: அட..! எதுக்கு இப்புடி படபடப்பாகறீங்க. அவுக செய்யறத ஒண்ணும் செய்யமாட்டேனு சொல்லவந்தேன்(அப்பா சமாளிச்சாச்சு. ஆனா என்ன செய்வேன்னு சொல்லனுமே..!! )
கல்வித்திட்டதில மாற்றங்கள் இல்ல கல்வித்திட்டத்தையே மாத்துவேன்.. :) (ஐ...பிள்ளைங்க ஓட்டு எனக்குத்தான் எனக்கே எனக்குதான்)

3. இதற்கு வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் என்ன செய்வாய்?
என்ற நாட்டுல கொண்டுவர மாற்றத்துக்கு வெளிநாட்டவர் எதிர்ப்பு தெரிவிக்க விட்டுடுவோமா...? (வருங்கால சந்ததி பூரா எங்க பக்கம்..:) வெளிநாட்டுல வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கனும்னா புதிய கல்வித்திட்டத்தில படிச்சு பாஸ் செய்துட்டுதான் கேள்வி கேட்கனும்னு ஒரு வரி சேர்த்திடுவோம்ல..

4. முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?
அப்படி ஒரு திட்டம் வந்தா முதல்ல நீங்க அதில் வருவீங்க பரவாயில்லையா...
(இந்தப்பொண்ணு என்ன விவகாரமா தி(ச)ட்டம் போடுமோ தெரியலியே எதுக்கு வம்பு...)
அண்ணல்: அதெல்லாம் செல்லாது செல்லாது...
சரி தப்பிச்சீங்கன்னு சொல்லி நீங்க பெருமூச்சு விடற அளவெல்லாம் எந்த திட்டமும் இல்லை.  இவ்ளோ வருடம் பிள்ளை, பேரன்,பேத்தினு கடமைய செய்து களைச்சிபோனவங்களுக்கு என்ன ஐயா திட்டம் சட்டம் எல்லாம். இருக்கும் வரை சந்தோசமா இருந்துட்டு போகட்டும். அவுங்க சந்தோசமும் அவங்க சுதந்திரமும் அவங்க கையில.. 
அண்ணல்: மைண்ட் வாய்ஸ் (நல்லவேளை முதியோர்கள் இந்தப்பொண்ணுகிட்ட சிக்கல..)
நான்.: இப்படியே மைண்ட்வாய்ஸ் எல்லார்க்கும் கேட்கும்படியா பேசி என்னை வில்லி அளவுக்கு எடுத்துட்டுப்போங்க...
அண்ணல் : ஹி ஹி...

5. அரசியல்வாதிகளுக்கு என்று புதிய திட்டம் ஏதாவது?
(இதை முதல் கேள்வியா கேட்டிருக்கனும்.. என்னமோ போங்க இப்படியா மறதிவரும்..?)
அண்ணல்: என் நேரம்தான் எல்லாம்.
நான்: தாத்தா உங்ககிட்ட விளையாடாம யாருகிட்ட விளையாடுவோம்...:)
இப்ப இருக்கிற அரசியல்வாதிங்களோ அவுக வாரிசுகளோ இன்னும் ஒரு நூறாண்டுக்கு அரசியலுக்கோ, அரசு அலுவலகப் பணிக்கோ தகுதியற்றவராய் அறிவித்துவிடுவேன்.
அண்ணல்: அப்புடி என்னம்மா இவ்ளோ கோவம் அரசியல்வாதிகளிடம்.. 
நான்: அரசியல்வாதிகளிடம் எனக்குக் கோபமா.. ஹி ஹி இல்லையே.. நம்ம மக்களின் மீது பாசம் அதிகம் அவ்ளோதான்.

6. மதிப்பெண்கள் தவறென மேல் நீதி மன்றங்களுக்குப் போனால்?
மதிப்பெண்கள் இடுவதே தவறென சட்டம் இயற்றிவிடுவேன்.  (எப்படியும் மதிப்பெண்ணுக்கு முன்னுரிமை கிடையாது. சிவாரிசு, லஞ்சம், ஜாதிச்சான்றிதழ்...இப்படி எத்தனையெத்தனையோ குறுக்கிடும் அதுக்கு எதுக்கு பிள்ளைங்க படிச்சு மதிப்பெண் வாங்கி அதில் தவறென நீதிமன்றம் போயி.....) 

அண்ணல் இழுக்காதம்மா மூச்சு நின்னுடப்போகுது..
நான்: அதுக்கென்ன காயத்ரி கனவில் கேட்ட கேள்விகள்னு ஒரு தொடர் எழுதவச்சிடுவோம்.
அண்ணல்: நீ பதில் சொல்லும்போதே கண்ண கட்டும்…கேள்வி கேட்டு தொடர்பதிவா வந்தா நம்ம எழுத்தாளர்களின் நிலைமையை மனதில் கொண்டு இப்போதைக்கு உனக்கு மூச்சு நிக்கக்கூடாதுன்னு வேண்டிக்கறேன் தாயி.

7. விஞ்ஞானிகளுக்கு என்று ஏதும் இருக்கின்றதா?
ஒரு ஆய்வு செய்ய ஆசைதான்... அகத்தின் அழகு முகத்தில்னு சொல்வாங்க..இப்ப அந்த முகத்தில்கூட அகம் பிரதிபலிப்பதில்லை. முகமூடியணிந்து விடுகின்றனர். முகமூடி நீக்கி அகமறிய அறிவியலின் உதவியை நாடுவேன்... :)

அண்ணல்.: என்ன இந்தப்பெண்ணை கேள்வி கேட்க சொல்லி சிக்க வைத்த அந்தக் குமார என்ன செய்யலாம்...?

நான்: நம்பியார் ரேஞ்சுக்கு யோசிக்காதீங்க...தம்பி  நல்லபையன் தான் இப்புடி யோசிக்கிற அளவு நான் உங்கள எந்தக்கேள்வியும் கேட்கவே இல்லையே இன்னிக்கு..?

8. இதை - உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்களும் செய்வார்களா?

இதை இதைன்னு நீங்க சொல்றது இந்திய ஆட்சியாளனா நான் கொண்டுவரும் மாற்றத்தைதானே..?

அண்ணல்: கடவுளே..!

நான்: உங்களுக்கு நம்ம இந்தியா விட்டு மேலோகத்துக்குப்போனதும் பொறுமை கொஞ்சம் குறைஞ்சமாதிரி இருக்கே அப்படியா..?

அண்ணல்: ஏம்மா கேட்கமாட்டே... உன்னமாதிரி 40 பேர்கிட்ட கேட்ட கேள்வியவே திரும்பத் திரும்ப, திரும்பத்திரும்ப கேட்டு அவுங்க ஒவ்வொருத்தரும் வில்லங்கமாவும், விளையாட்டாவும் மாத்தி மாத்தி பதில் சொல்லி என்னை சுத்தவிட்ட பிறகும் உன்கிட்ட கேட்டுக்கிட்டு பொறுமையா இருக்கிறனே என்னையப்பார்த்தா பொறுமை குறைஞ்சிருக்கு சொன்ன..?

நான்: சரி சரி  விடுங்க. நீங்க இன்னும் தெளிவாத்தான் இருக்கீங்க போல..எனக்குத்தான் இன்னும் விவரம் பத்தல.. 8 கேள்விக்கு பதில் சொல்லியும் எதிர இருப்பவர் குழம்பாம ஒன்பதாவது கேள்வி கேட்கும் அளவு தெளிவா இருக்கும்படி பதில் சொல்லியிருக்கேன்னா நான் இன்னும் என்னை வளர்த்துக்கனும்... இப்படி எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிட்டிருந்தா நான் ஆட்சிக்கு வந்து எப்படி திட்டங்கள் செயல்படுத்துறது...? பதில் சொல்லத்தான் நேரம் இருக்கும். :)

9. மற்ற நாடுகளில் இல்லாத புதுமையாக?

இப்பவே நாம புதுமைதானே.. ( பக்கத்துவீட்டுக்காரன் ஏழையா இருந்தா ஏளனமா பார்ப்போம் உதவமாட்டோம். பணக்காரனா இருந்தா பொறாமைப்படுவோம். அதே பக்கத்து நாட்டுக்காரன் பணக்காரனா இருந்தா அன்னாந்து பார்த்து அவன் வசப்படுவோம். ஏழையா இருந்தா இரக்கப்படுவோம். ) எட்டு கேள்விக்குப் பதில் சொல்லியும் மற்ற நாடுகளில் இல்லாத புதுமைன்னு கேள்வி கேட்டு இருக்கீங்களே இதுவே புதுமைதான்… நான் சொன்ன பதில்களை நிறைவேற்றினால் எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியாத்தான் இருக்கும்… (விடமாட்டாறு போல இருக்கே)

10. எல்லாமே சரியாக சொல்வது போல இருக்கின்றது. ஆனால் - நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச் செய்து விட்டாய். உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது. ஆகவே வேறு என்ன பிறவி வேண்டும்? -  என இறைவன் கேட்டால்..?
அது எப்படிங்க….. கேள்வி ஒன்றாக இருந்தாலும் வேற வேற மாதிரி 40 பேரும் 40 விதமா சொல்லியிருக்க அனைவருக்கும் நீங்க கேட்ட கேள்விமாதிரியே // எல்லாமே சரியாக சொல்வது போல இருக்கின்றது. ஆனால் - நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச் செய்து விட்டாய்.// ஒரே பதிலை 40 பேருக்கும் சொல்றீங்க. 40 பேரும் பாவம் செய்தவங்களா..?

பாவம்னா என்ன புண்ணியம்னா என்ன…?
புண்ணியம் செய்யாம இருப்பது பாவமா..
பாவம் செய்யாம இருப்பதே புண்ணியம்தானா..? பாவம் செய்யாம இருப்பதே புண்ணியம்னா புண்ணியம் எதுக்கு தனியா செய்யனும்.. மானிடப்பிறவிக்குத்தான் புண்ணியம் செய்யனும்னா ஒவ்வொரு பிறவிக்கும் ஒவ்வொன்றா பிறந்து புதிய அனுபவத்தை அனுபவிக்க எண்ணி பாவத்தை மட்டும் செய்யலாமா..?

அண்ணல்: நிறுத்துமா நிறுத்துமா…? ஏம்மா இப்புடி…

அய்யோ நான் இன்னும் கேட்க நினைச்சத கேட்டு முடிக்கவே இல்லை..
அண்ணல் அதெல்லாம் நீ முடிக்கவேண்டாம்.. பாரு..உன் பதிவை படிக்கவந்தவங்க முடிக்கும் முன்பே ஓடுறதை… சரி உனக்கு என்ன பிறவி வேண்டும் சொல்.

மானிடப்பிறவி கொடுக்கமுடியாதுன்னா அதை உருவாக்கும் பிரம்மாவோட பிறவி கொடுத்திடுங்க போதும்.  எங்க நாட்டுக்கு ஏற்றார்போல நாங்களே டிசைன் செய்துக்கறோம்.

அண்ணல் : மறைந்துவிடுகிறார்.

நான் : நான் தான் பிரம்மா, நான் தான் பிரம்மா…

குமார்: இப்படியே சொல்லி காந்தித் தாத்தாவ ஓட வச்சிட்டீங்க. அடுத்தது பிரம்மாவா…??!! பாவம் பிரம்மா…J

குறிப்பு:  பிரபலங்கள் எல்லாம் எழுதின தொடர்பதிவுக்கு என்னையும் எழுத அழைப்பு விடுத்த தம்பி ”பரிவை” குமாரருக்கும் இத்துனை நேரம் பொறுமையாக படித்து வழக்கம்போலவே என்னை வாழ்த்தி எழுத ஊக்கமளிக்கும் அனைவருக்கும் அன்புகலந்த நன்றிகள். வாழ்க வளமுடன். 




Thursday, 7 November 2013

விசுவும், நானும் - 2


காயத்ரி : வணக்கம் விசு சார்...

விசு      : என்னம்மா, கொஞ்சநாளா ஆளக்காணோமேனு பார்த்தேன் வந்துட்டியா..? மறந்திட்டியோ நினைச்சேன்.

காயத்ரி : அது எப்படி சார் உங்கள மறக்கமுடியும்..?!!

விசு      : சொல்லும்மா இன்னிக்கு என்ன தீர்மானத்தோட வந்திருக்க..?

காயத்ரி : ஒரு தீர்மானத்தோடவும் வரல ஐயா..சும்மா ஒரு சந்தேகம் அவ்ளோதான்..

விசு      : சின்னதா சந்தேகம்...? சந்தேகமே இப்படி வேற இருக்கா..முடிவோட வந்துட்ட கேளும்மா .

காயத்ரி : எழுத்தும் எழுத்தாளனும் இதப்பத்தி தான் சார்..

விசு      : ஏதோ சிக்கல்ல சிக்கவைக்கிறமாதிரி தோனுதே..

காயத்ரி : சிக்கல் இல்லாததகூட சிக்கலாக்கி சிக்கல நீக்க எல்லாரையும் சிக்கவைக்கிற உங்கள சிக்கல்ல சிக்க வைக்க முடியுமா.. ?

விசு     : ஆரம்பமே சிக்கலாச்சே சொல்லுமா.

காயத்ரி: எழுத்தும், எழுத்தாளனும் ஒன்றுதானா..? எழுத்த வச்சி எழுத்தாளன எடைபோடமுடியுமா..? எழுத்தாளனின் பிரதிபலிப்புதான் எழுத்தா...??

விசு     : சின்ன சந்தேகம்னு இத்தன எழுத்த எழுதியிருக்கியேம்மா

காயத்ரி : :)

விசு     : எழுத்தாளனோட
             எண்ணம் எழுத்தாவதும்
             எழுத்தே எண்ணமாவதும்..
             எண்ணத்திலிருப்பது அனைத்தும்
             எழுத்தாகாமல் போவதும்..
             எழுத்தில் வந்ததெல்லாம்
             எழுத்தாளனோட  எண்ணமா
             இல்லாமல் போவதும் உண்டு..

காயத்ரி : இப்படி தெளிவா சொல்வீங்கன்னுதான் உங்கள கேட்டேன் மேல சொல்லுங்க சார்.

விசு      :சந்தோசமா எழுதறவன் எல்லாம்
              சந்தோசமா இருக்கான்னோ,
              சோகமா எழுதறவன் எல்லாம்
              சோகமா இருக்கான்னோ,
              சமூக அக்கறையா எழுதறவன் எல்லாம்
              சமூக ஆர்வலன்னோ
              ஆன்மீகத்தை எதிர்ப்பவன் எல்லாம்                                          
              பகுத்தறிவாளன்னோ
              பகுத்தறிவு பேசறவன் எல்லாம்
              ஆன்மீகத்துக்கு எதிரானவன்னோ
              பெண்ணீயம் பேசறவன்
              பெண்களைப் போற்றுபவனோ
              பெண்களுக்கு எதிரா எழுதுபவன்
              பெண்களை வெறுப்பவனோ..
              இரக்கம் சொட்ட சொட்ட எழுதுபவன்
              மனிதாபிமானம் உடையவன்னோ
              யதார்த்தத்த யதார்த்தமா எழுதறவன்
              கல்மனசுக்காரன்னோ இல்ல..

              சந்தோசமா எழுதறவன் சோகத்தை மறைத்தும்
              சோகமா எழுதறவன் சந்தோசத்தை அனுபவித்தும்
              சமூகம் பற்றி எழுதறவன் அதன்மீது             
              அக்கறையின்றியும்
              ஆன்மீகத்தைப் பேசுபவன் நாத்திகனாகவும்
              பகுத்தறிவு பேசறவன் பக்தியாளனாகவும்
              பெண்ணீயம் பேசறவன்                                                        
              பெண்களுக்கெதிரானவனாவும்..
              இரக்கமா எழுதறவன் கொலைபாதகனாகவும்
              யதார்தமா எழுதறவன் இரக்ககுணமுடையவனாவும்
              இருந்ததில்லையா...?
              இருக்கக்கூடாதா...
              இருக்கமாட்டாங்களா..? என்னம்மா சொல்ற..??

காயத்ரி : சார்...நான் அப்படி சொல்லல...அப்படியும் நினைக்க வாய்ப்பு இருக்கே அதான் உங்ககிட்ட சந்தேகம் கேட்கறேன்..

விசு      :குழப்பமா பேசறவங்க எல்லாம்
              குழப்பவாதியோ
              தெளிவா பேசறவங்க எல்லாம்
              தெளிந்த சிந்தனையுடையவங்களாவோ                                 
              இருக்கனுமா என்ன..
              குழப்பமா பேசி தெளிவா இருப்பதுமுண்டு
              தெளிவா பேசி குழம்பினவங்களும் உண்டு..
              குழப்பமும், தெளிவும்
              கொடுக்கறவங்களவிட
              எடுக்கறவங்ககிட்டதான் இருக்கு..
              அப்படித்தான் எழுத்தும் எழுத்தாளனும்..
              அவன் பொதுவாத்தான் கொடுக்கறான்                                   
              எடுக்கறவங்க
              எடுக்கறத வச்சிதான்
              கொடுக்கிறது கணிக்கப்படுது..
              கொடுக்கறதுல
              எடுக்கறது தப்பாயிருந்தா
              கொடுக்கறதும் தப்பாயிடும்..
              என்னமா புரிஞ்சுதா..உன் சந்தேகம் தீர்ந்துச்சா...

காயத்ரி : நீங்க இவ்வளவு தெளிவா குழப்பமா கொடுத்தாலும் குழம்பாம தெளிவா கொடுக்கும்போது குழம்பினமாதிரி இருந்தாலும் தெளிவா புரியுது சார்..

குழப்பித்தெளியவைக்க உங்களவிட்டா யாரு இருக்கா..ரொம்ப நன்றி சார்...என் சந்தேகத்தை தீர்த்துவச்சதுக்கு...:)

விசு      : நல்லதும்மா..உன் குழப்பத்த தீர்த்ததுல எனக்கும் மகிழ்ச்சினு குழப்பமில்லாம தெளிவா சொல்லிக்கிறேன்..பிறகு சந்திப்போம்..

காயத்ரி : எண்ண ஓட்டம்.. எல்லாம் தெளிவா ஆச்சு..ஆனா இப்ப எழுத்துன்னா என்னன்னுதான் மறந்துட்டேன்.. தெளிஞ்சிடும்..:)

Thursday, 19 September 2013

ரோஜாவும், நானும்...

இடம்: ரோஜாவும், மல்லிகையும் நிறைந்த வீட்டுத்தோட்டம்.

சூழல்: மலர்ச்செடிகளை பார்வையிட்டு புதிதாக ஒரு மரக்கன்று நட முயற்சிக்கும் தோட்டக்காரனிடம்(என்னிடம்) ரோஜா தன் எண்ணங்களைப் பகிர்தல்.

பாத்திரங்கள்: ரோஜா, தோட்டக்காரன்(ரி) மற்றும் மல்லி.
                    *****
ரோஜா: என்ன செய்துகொண்டிருக்கிறாய்..?

நான்: மரக்கன்று நடுகிறேன்..

ரோஜா: ஓ...அப்படியா..? நல்லது என்ன கன்று அது..?

நான்: நிழல்தரும் மருத்துவகுணம் வாய்ந்த வேம்புமரம்

ரோஜா: ஓ..!! ----------

நான்: என்ன அமைதியா இருக்க..? ஏன்.?

ரோஜா: ஒன்றுமில்லை...அழகுசேர்க்கும் பல வண்ண வண்ண ரோஜா மலர்களும், மணம்தரும் மல்லிகையும் நிறைந்த இந்த நம்வீட்டுத்தோட்டத்தில் வேம்பு மரமா..?

நான்: ம்ம்..அதனால் என்ன..? இதன்காற்று உடலுக்கு மிகவும் நல்லது.  மருத்துவகுணம் நிறைந்தது...

ரோஜா:  இருக்கலாம்,..மறுக்கவில்லை.  ஆனால், மலர்தோட்டத்தில் நிழல்தரும் இந்த மரம்...சிறுசெடிகளுக்கு இடையூறாக இருக்கலாம்..அதோடு இந்தத்தோட்டத்திற்கு ஏற்றதாகத் தெரியவில்லை.  குப்பை அதிகம் சேரவும் வாய்ப்பு இருக்கே..

நான்: ம்ம்...ஆம்... யாரிடத்தில்தான் குறை இல்லை..? ஒரு குறை இருப்பதாலேயே ஒதுக்கிவிட முடியுமா என்ன..?  ஏன் உன்னிடத்தில் இல்லையா..?

ரோஜா: உண்மைதான்...மல்லிகையும், ரோஜாவும் மட்டும் தோட்டமாகாது..மறுக்கவில்லை.  அதற்காக ஒதுக்கிவிடவும் சொல்லவில்லை.. அதற்கான இடத்தில் அதற்கான நேரத்தில் வைக்கலாமே என்றுதான் சொன்னேன்.  என்னிடத்தில் குறையா..?

நான்: ம்ம்...ஆம் உன்னிடத்தில்தான்..ஏன் உனக்குத்தெரியாதா..? முதலில் அடுத்தவரிடத்தில் குறை காண்பதை நிறுத்து.

ரோஜா: என்னகுறை என நீயே சொல்லவேண்டியதுதானே..? நான் யாரிடத்தும் குறைகாணவில்லை.  இந்த இடத்தில் இந்த மரத்தேர்வு சரியில்லை என்றே கூறினேன்..மரத்தையோ, மரத்தின் குணத்தையோ குறை கூறவில்லை. சரி, தவறென்று பேசுவது குறையாகுமா..?
நான்: எனக்குத்தெரியும்...எப்பொழுது எதை வைப்பது, எங்கே வைப்பது என்று.  உனக்கான பணியை மட்டும் செய்.

ரோஜா: ஏன். என் பணியில் என்ன குறை..? நான் எதுவும் உபயோகமாக செய்யவில்லையா அல்லது கேட்கும் தகுதி இல்லையா..?

நான்: என்ன செய்துவிட்டாய்...பெரிதாக..?

ரோஜா: J  நீ கூறுவதும் ஒருவகையில் உண்மைதான்.  நானாக தனித்து என்ன செய்தேன்..?? முதன்முதலாய், எங்கோ இருந்த என்னை உன் தோட்டத்தில் நீரூற்றி, உரம் சேர்த்து, மகிழ்ச்சியுடன் உன்னுடைய நேரத்தை செலவழித்து, நித்தமும் பாடுபட்டு வளர்த்தாய்.  உன் உழைப்பு விரயமாகிவிடக்கூடாதே என்றும் உன்மீதான அன்பிலும் வெறும் செடியாகமட்டுமிராது, உணர்வுகளையும் கூட்டி மணம் வீசும் அழகிய மலர்களை வழங்கி அனைவரையும் மகிழச்செய்து, தோட்டத்தை நிரப்ப பல மலர்ச்செடிகளை உருவாக்கிக்கொடுத்து....,

நான்: இல்லையென்று கூறவில்லையே...!! 

ரோஜா: என்னைப் பார்த்து,பார்த்து வளர்த்ததுபோல், நானும், இந்தத்தோட்டத்து வளர்ச்சியில் என்னை முழுமனதுடன் ஈடுபடுத்திக்கொள்ளத் துவங்கிவிட்டேன்.  தோட்டக்காரியான நீ என்மீது அன்பும், அக்கறையும் கொண்டதுபோலவே இந்தத்தோட்டம் என்னுடையது என்ற உரிமை என்னையறியாமல் ஏற்படத்துவங்கிவிட்டது.  என் ஆலோசனைகளையும் ஏற்பாய் என்று கருதிவிட்டேன்.   

ஒரு தோட்டத்து செடிகளுக்கு பூத்துக்குலுங்கி தன் மணம்வீசும் குணத்தால்  மகிழ்வித்து  பதியங்கள் பல கொடுத்து தோட்டம் நிறைத்து செடிகள் பலவளர வழிவகுப்பதோடு  எல்லை முடிந்தது என்பதை உணர்ந்தேன்.  தோட்டத்தில் வளரும் செடிகள் தங்களைக் கலைந்துசெல்லும் மேகமெனக் கருதாமல் தன்னையே வானமாய் சிந்தித்துத் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கின்றன.  நானும் அப்படியே மடமையில் இருந்துவிட்டேன். சுடுகாட்டில் அடுத்த பிணம் வரும்வரைதானே எரியும் பிணத்திற்கு இடம்...? எரியும் பிணம் எனக்கான இடம் என்ற எண்ணத்திலா எரிகிறது..?? அப்படித்தான் இதுவும். 

நான்: உனக்கு விருப்பமில்லையெனில் இந்த மரக்கன்றை எடுத்துவிடவா..? நீ விரும்பும் செடிகளை நடலாம்...?!

ரோஜா: எதற்காக..??!! நட்டபிறகு ஒரு மரக்கன்றை பிடுங்கி அதன் இயல்புகுணம் மாற நான் காரணமாக இருக்கவிரும்பவில்லை.  நடுவதற்கு முன் யோசிக்கவில்லை. நட்டபிறகு யோசித்து பிரயோசனம் இல்லை.  இனி என் எல்லையறிந்துகொண்டேன்.

நான்: பதிலேதும் உரைக்காமல் நகர...

மல்லி: உனை நீயே உயர்த்திக்கொண்டாயோ...? ரோஜாவைக்கண்டு நகைத்த மல்லி தொடர்ந்து, இதற்குத்தான் நான் உண்டு என் வேலை உண்டு என மலர்வதும், மரிப்பதுமாய் இருக்கிறேன்.
  .
ரோஜா: புன்னகை கலையாது...அதனால் என்ன..? சில உண்மைகள் சிலநேரம் உணரப்படுவதில்லை.  உணர்த்தப்படுகின்றன அவ்வளவே.  உணர்ந்தாலும், உணர்த்தப்பட்டாலும் உண்மையை ஏற்கத்தானே செய்யவேண்டும்...?!! அதில் என்ன தவறு..? அறியாமல் கொண்ட எண்ணங்களுக்கு அவரவர்களே பொறுப்பாவார்கள். 

மல்லி: இனி உன் வழி செல்...அனாவசியமாக தோட்டமே என்னுடையது என்றில்லாமல் மலர்வதும், உதிர்வதுமாய் இருந்துவிடு.

ரோஜா: இறைவனிடம் பக்தி கொள்கிறோம்.  கண்முன்னே காட்சி கொடுப்பதில்லை என்பதற்காக வழிபாடுகளை நிறுத்துவதில்லையே.?  அர்ப்பணிப்பில் சுயநலமான எதிர்பார்ப்பு இருக்காது. மலர்தலும், மரித்தலும் வெறும் செயலாக இராமல் வழக்கமான நம் தோட்டம், நம் தோட்டக்காரி(ரன்) என்ற உரிமை மாறாது எதிர்பார்ப்பு இன்றித் தொடருவோம். அதற்காக ஏன் நம் இயல்பை மாற்றிக்கொள்ள வேண்டும்.? மணம் வீசி மனதைக் கவரும் தன்மையுடைய நீயும், அழகுசேர்த்து பார்ப்பவர் முகத்தில் புன்னகை தவழச்செய்யும் நானும் கடமைக்கென மலர்ந்து மரிப்பதற்காக மட்டும் தோன்றவில்லையே..??

இந்தத்தோட்டத்தில் தொடர்ந்து மலர்ந்து மணம்வீசி, அழகுசேர்த்து, பதியம் கொடுத்து தோட்டத்திற்கு வருகை தருபவர்களுக்கும், நம்மை பராமரிப்பவருக்கும் மகிழ்ச்சியளித்து புன்னகை சிந்தி வரவேற்போம்.

மல்லி:----- J


Friday, 12 July 2013

காயமும்.. நானும்..!!!


இடம் : வீட்டு சமையலறை

சூழல் : காலை நேர பரபரப்பு. சட்டியில் கொதிக்கும் எண்ணெயில் கடுகுபோட வெடிக்கும் இசையை ரசித்தபடி கறிவேப்பிலை வெங்காயம் போட..இசையை நீமட்டுமா ரசிப்பாய் நானும் தான் துள்ளிக்குதித்தெழுந்து என் கரத்தினை முத்தமிட்டது சிறுதுளி கொதிக்கும் எண்ணெய். கடுகின் இசைக்கு ஆடிய எண்ணெயின் எதிரொளியாய் நானும் கரம் உதறினாலும் கடமை தவறாது சமையலை முடித்து ஆசுவாசமாய் அமர... எண்ணெயின் முத்தத்தில் சற்றே பூரிப்படைந்து உப்பிய கரம்.
 
நான் : அப்பொழுதுதான் கவனிக்கிறேன் எனக்கு ஏற்பட்டிருக்கும் காயத்தையும், எரிச்சலையும். தென்றல் அது தீண்டியபொழுதும், சுட்டெரிக்கும் கதிரவனின் வெப்பமாய் எரிகிறது....ஆ...ஹையோ..!!

கொப்புளம்: நகைக்கிறது என்னைப்பார்த்து.. 

நான் : என்ன நகைப்பு...என் வேதனை உனக்கு நகைப்பா இருக்கா..?

கொப்புளம்: அப்படியில்லை. இவ்வளவு நேரம் இந்த வலியை உணரவில்லையா..?

நான்: அகத்தில் அன்புடையவரை எண்ணிக்கொண்டிருக் கையில் வலி எதுவும் தெரிவதில்லை. லேசாக உணர ஆரம்பிக்கும்போது கடமை இருந்ததே எடுத்தபணி முடிக்கவேண்டும் அந்த உணர்வில் இது பெரிசாத் தெரியல..
 
கொப்புளம்: இப்ப பணி முடிந்ததா..?

நான்: முடிவில்லாப்பணியிது...இருப்பினும் தற்காலிகமாக முடிவடைந்தது. சற்றே ஓய்வு.. 
கொப்புளம்: ம்ம்..என்ன செய்யப்போகிறாய்....?

நான் : முதலில் வலி நீங்கவும், காயம் ஆறவும் மருந்திடவேண்டும்.

கொப்புளம்:  :):)

நான்: என்ன எப்பவும் நகைத்துக்கொண்டேயிருக்கிறாய்..? 
கொப்புளம்: ஒரு துளி கொதிக்கும் எண்ணெய் உன்மீது பட்டு சிலநாட்கள் நான் உன் கரங்களில் ஏற்படுத்தும் வலியை நினைத்தா இப்படித்துடிக்கிறாய்..?
நான்: சில நாட்கள் என்றாலும் சிறு துளி என்றாலும் வலி, வலிதானே..?

கொப்புளம்: உண்மைதான். இருந்தாலும், இது மருந்திட்டால் ஆறிடும் சிலதினங்களில். இதைவிட எவ்வளவோ வலிகள், வேதனைகள் பார்த்தவர்களுக்கு இது ஒரு பெரிய வலியா..? அதுக்காகவா என்னையும், எண்ணெயையும் இப்படி நிந்திக்கிறாய்..?

நான்: எந்த வலியும் அந்த நேரத்தில் பெரிதாகத்தானே தோன்றும். காரணம் என்ன என்பதைவிட, தன் வலிக்கு அடுத்தவரை நிந்திப்பது மனித இயல்புதானே..?

கொப்புளம்: அகமுடையவர் அன்புமறந்து அம்புபோல் பாய்ச்சும் வார்த்தைகள் வலி தருவதில்லையா..

நான் : நீ சொல்வது முற்றிலும் உண்மை. அன்புடையவர் வீசும் சொற்களை எண்ணிப்பார்த்தால் இந்தவலி ஒன்றுமே இல்லையென்றாகும். வலியின் வலியை வலியாக கொடுக்கும்போதும், அறிந்து வலி கொடுப்பது..அறியாது கொடுப்பது..அறிந்து அறியாததுபோல் கொடுப்பது என வகை வகையான வலிகளை வாரி வழங்கும்போது நீ கொடுக்கும் எரிச்சல் பரவாயில்லை எனத்தோன்றும். சிலநேரம் இன்னும் கூட அதிகவலி ஏற்படுத்திக்கொண்டால் அந்த வலி மறக்குமே எனவும் தோன்றும்..!!

கொப்புளம்: மனதின் மனம் மனதின் மனதை உணராதபோது...
உற்றதுணையாய் இருக்கவேண்டிய உறவுகள் வரவுக்காக வசைபாடும்போது...
பெற்ற பிள்ளைகள் பெற்றோர் மனம் உணராதபோது...
பிள்ளைகளின் உணர்வறியாது பெற்றோர்கள் முடிவெடுக்கும்போது....
நாட்டு மக்களின் நலம் கருதா தலைமைகள் கண்டு...
தன்னலமே பெரிதெனக்கருதும் சுயநலவாதிகளைப் பார்க்கும்போது...
கடமையுணரா அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளைக் காணும்போது வலிக்கவில்லையா..???!!!
 
நான்:ம்ம்.. நீ சொன்னது அனைத்தும் சரிதான்..!

கொப்புளம்: எகத்தாளமாய் நகைக்க..

நான் : கூறிய அனைத்தும் உண்மையாயிருக்க எள்ளி நகையாடும் கொப்புளத்திற்கு என்ன பதில் சொல்ல..??எடுத்துரைக்க ஏதுமின்றி எதிர்ப்புன்னகை ஒன்றை எடுத்துக்கொடுத்து மௌனமாய் மருந்திடுகிறேன் இல்லத்தரசியின் வலி மற(றைத்து)ந்து வெளிக்காயத்திற்கு...!!!