முகப்பு...

Friday, 12 July 2013

காயமும்.. நானும்..!!!


இடம் : வீட்டு சமையலறை

சூழல் : காலை நேர பரபரப்பு. சட்டியில் கொதிக்கும் எண்ணெயில் கடுகுபோட வெடிக்கும் இசையை ரசித்தபடி கறிவேப்பிலை வெங்காயம் போட..இசையை நீமட்டுமா ரசிப்பாய் நானும் தான் துள்ளிக்குதித்தெழுந்து என் கரத்தினை முத்தமிட்டது சிறுதுளி கொதிக்கும் எண்ணெய். கடுகின் இசைக்கு ஆடிய எண்ணெயின் எதிரொளியாய் நானும் கரம் உதறினாலும் கடமை தவறாது சமையலை முடித்து ஆசுவாசமாய் அமர... எண்ணெயின் முத்தத்தில் சற்றே பூரிப்படைந்து உப்பிய கரம்.
 
நான் : அப்பொழுதுதான் கவனிக்கிறேன் எனக்கு ஏற்பட்டிருக்கும் காயத்தையும், எரிச்சலையும். தென்றல் அது தீண்டியபொழுதும், சுட்டெரிக்கும் கதிரவனின் வெப்பமாய் எரிகிறது....ஆ...ஹையோ..!!

கொப்புளம்: நகைக்கிறது என்னைப்பார்த்து.. 

நான் : என்ன நகைப்பு...என் வேதனை உனக்கு நகைப்பா இருக்கா..?

கொப்புளம்: அப்படியில்லை. இவ்வளவு நேரம் இந்த வலியை உணரவில்லையா..?

நான்: அகத்தில் அன்புடையவரை எண்ணிக்கொண்டிருக் கையில் வலி எதுவும் தெரிவதில்லை. லேசாக உணர ஆரம்பிக்கும்போது கடமை இருந்ததே எடுத்தபணி முடிக்கவேண்டும் அந்த உணர்வில் இது பெரிசாத் தெரியல..
 
கொப்புளம்: இப்ப பணி முடிந்ததா..?

நான்: முடிவில்லாப்பணியிது...இருப்பினும் தற்காலிகமாக முடிவடைந்தது. சற்றே ஓய்வு.. 
கொப்புளம்: ம்ம்..என்ன செய்யப்போகிறாய்....?

நான் : முதலில் வலி நீங்கவும், காயம் ஆறவும் மருந்திடவேண்டும்.

கொப்புளம்:  :):)

நான்: என்ன எப்பவும் நகைத்துக்கொண்டேயிருக்கிறாய்..? 
கொப்புளம்: ஒரு துளி கொதிக்கும் எண்ணெய் உன்மீது பட்டு சிலநாட்கள் நான் உன் கரங்களில் ஏற்படுத்தும் வலியை நினைத்தா இப்படித்துடிக்கிறாய்..?
நான்: சில நாட்கள் என்றாலும் சிறு துளி என்றாலும் வலி, வலிதானே..?

கொப்புளம்: உண்மைதான். இருந்தாலும், இது மருந்திட்டால் ஆறிடும் சிலதினங்களில். இதைவிட எவ்வளவோ வலிகள், வேதனைகள் பார்த்தவர்களுக்கு இது ஒரு பெரிய வலியா..? அதுக்காகவா என்னையும், எண்ணெயையும் இப்படி நிந்திக்கிறாய்..?

நான்: எந்த வலியும் அந்த நேரத்தில் பெரிதாகத்தானே தோன்றும். காரணம் என்ன என்பதைவிட, தன் வலிக்கு அடுத்தவரை நிந்திப்பது மனித இயல்புதானே..?

கொப்புளம்: அகமுடையவர் அன்புமறந்து அம்புபோல் பாய்ச்சும் வார்த்தைகள் வலி தருவதில்லையா..

நான் : நீ சொல்வது முற்றிலும் உண்மை. அன்புடையவர் வீசும் சொற்களை எண்ணிப்பார்த்தால் இந்தவலி ஒன்றுமே இல்லையென்றாகும். வலியின் வலியை வலியாக கொடுக்கும்போதும், அறிந்து வலி கொடுப்பது..அறியாது கொடுப்பது..அறிந்து அறியாததுபோல் கொடுப்பது என வகை வகையான வலிகளை வாரி வழங்கும்போது நீ கொடுக்கும் எரிச்சல் பரவாயில்லை எனத்தோன்றும். சிலநேரம் இன்னும் கூட அதிகவலி ஏற்படுத்திக்கொண்டால் அந்த வலி மறக்குமே எனவும் தோன்றும்..!!

கொப்புளம்: மனதின் மனம் மனதின் மனதை உணராதபோது...
உற்றதுணையாய் இருக்கவேண்டிய உறவுகள் வரவுக்காக வசைபாடும்போது...
பெற்ற பிள்ளைகள் பெற்றோர் மனம் உணராதபோது...
பிள்ளைகளின் உணர்வறியாது பெற்றோர்கள் முடிவெடுக்கும்போது....
நாட்டு மக்களின் நலம் கருதா தலைமைகள் கண்டு...
தன்னலமே பெரிதெனக்கருதும் சுயநலவாதிகளைப் பார்க்கும்போது...
கடமையுணரா அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளைக் காணும்போது வலிக்கவில்லையா..???!!!
 
நான்:ம்ம்.. நீ சொன்னது அனைத்தும் சரிதான்..!

கொப்புளம்: எகத்தாளமாய் நகைக்க..

நான் : கூறிய அனைத்தும் உண்மையாயிருக்க எள்ளி நகையாடும் கொப்புளத்திற்கு என்ன பதில் சொல்ல..??எடுத்துரைக்க ஏதுமின்றி எதிர்ப்புன்னகை ஒன்றை எடுத்துக்கொடுத்து மௌனமாய் மருந்திடுகிறேன் இல்லத்தரசியின் வலி மற(றைத்து)ந்து வெளிக்காயத்திற்கு...!!!

6 comments:

  1. கொப்புளத்துடன் வித்தியாசமான உரையாடல்... கொப்புளம் சொன்னவை உண்மை... மௌனமும் சிறந்த மருந்து என்று சொன்னதும் அருமை...

    ReplyDelete
  2. தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
    நாவினால் சுட்ட வடு... இதன் நீண்ட விளக்கமாக உங்கள் பதிவு....வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வாங்க...வாழ்த்திற்கு நன்றி..:)

    ReplyDelete
  4. அக்கா... அருமை.
    கொப்புளம் பேசும் ஒவ்வொரு வரிகளும் உண்மையானவை...
    அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__