Monday, 29 July 2013

வலைச்சரத்தில் - தூரிகையின் அறிமுகம்..

எனதன்பு வலைப்பூ தோழமைகளுக்கு எனது பணிவான வணக்கம்.  வலைச்சரத்தில் ஒரு மலராய் இருந்துவரும் எம்மையும் இந்த ஒரு வாரம் இங்கிருக்கும் மலர்களையெல்லாம் தொடுத்து மாலையாக்கி வலைச்சரத்தை அலங்கரித்து  மணம்வீசச் செய்வதற்காக அழைத்திருக்கும்  நண்பர் அன்பின்சீனா அவர்களுக்கு  எமது நன்றியினையும்மகிழ்ச்சியினையும் தெரிவித்துக்கொள்கிறேன். _/\_ 

பூமாலையின் அழகினை ரசித்தும், அதன் வாசம் சுவாசித்தும் மகிழும் அனைவருக்கும் மாலையினைத் தொடுக்கும்திறன் இருக்குமா..??! சந்தேகமே.... இருந்தும் தொடுத்துப்பார்க்க ஒரு வாய்ப்பினை வழங்கியிருக்கிறீர்கள். அழகாய தொடுத்து அலங்கரிக்க முடிந்த அளவு முயற்சிக்கிறேன் .  அனைத்து மலர்களையும் சரத்தில் இணைக்க இயலாவிடினும் நான் கண்டு ரசித்த மலர்களை சரத்தில் கோர்க்க முயல்கிறேன்.   யாம் தொடுக்கப்போகும் பூச்சரத்தில் சில மலர்கள் விடுபட்டுப்போயிருப்பின் விடுபட்ட அந்த மலர்கள்மணத்திலோ அழகிலோ குன்றியது இல்லை என்பதை அனைவரும் அறிவோம். அந்தமலர்களை எடுத்து அலங்கரிக்கத் தவறியதற்காக எம்மை  பொருத்தருளவும்.  

எம்மைப்பற்றி எடுத்துக்கூறுமளவு அதிகம் எதுவுமில்லை. எழுத்துப்பள்ளியில் ஆசிரியர்களாகவும்எழுத்துலகில் கல்லூரிப்படிப்பை முடித்தவர்களும்   வீற்றிருப்போர் மத்தியில்  எழுத்தாணியை கையில் எடுத்துக்கொண்டு அகரம் படிக்கத் துவங்கும் எண்ணத்தோடு   இப்பொழுதுதான் எழுத்துலகில் அடியெடுத்து வைத்திருக்கும் மாணவி நான்.:)

எமக்குள் எழுதவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்துநான் எழுத்துலகிற்கு வருவதற்குக் காரணமாயிருந்த நண்பர் கவிஞர்.திரு.தமிழ்க்காதலன்  அவர்களுக்கு இந்த நேரத்தில் எமது மனமார்ந்த நன்றியினை  தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். _/\_ அவரைப்பற்றியும்அவரது படைப்புகள் பற்றியும் எமது அடுத்துவரும் அறிமுகத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

எம்மைக் கவர்ந்த எழுத்தாளர் எழுத்து சித்தர் ஐயா.திரு.பாலகுமாரன் அவர்கள்.  அவரது நூல்களை விமர்சனம் செய்யும் அனுபவம் இல்லாத காரணத்தால் அவரது படைப்புக்களை இன்றளவும் பிரமிப்புடன் படித்துவரும் பல வாசகர்களில் ஒருவராய் இருந்துவருகிறேன்.  அவர் எழுதிய நூல்களை இது நன்றாக இருக்கிறது என சுட்டிக்காட்டும்படி இல்லாது அனைத்தும் மிக அற்புதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  இருப்பினும் எம்மை மிகவும் பிரமிக்க வைத்த நூல் உடையார்.  நமது சோழ வரலாற்றை அனைவரும் எளிமையாக படித்து மேற்கொண்டு அறிந்துகொள்ளும்படியான ஆவலைத் தூண்டும் படியாக அமைந்திருக்கிறது.  தூரிகையில் சிதறியிருக்கும் எமது சிந்தனைச்சிதறல்களில் எம் மனங்கவர்ந்த பதிவுகளில்  இருந்து சில தங்கள் பார்வைக்காக பகிர்கிறேன்.  படித்து எம் எழுத்துக்களை செம்மைப்படுத்திக்கொள்ள தங்கள் கருத்துக்களை வழங்கவும். 

கவிதைகள்: 

தான் மையல்கொண்ட மனதாளும் மன்னவனின் புகழ் என்றும் நீங்காது நிலைத்துபூமித்தாயும் தன்மீது பொறாமை கொள்ளும்படியான மகவை ஈன்றெடுக்க விரும்பும் காதலியின் சின்ன சின்னப்பேராசையாய் அவளது நாளைய நம்பிக்கை..
தன் அன்புக்குரியவரின் உள்ளத்தினை அவன் கண்களைக்கண்டறிய அவனை அருகே அழைக்கும் காதலியின் உணர்வுத்துளிகள்
அரியபல விசயங்களை அறிவித்திட முயற்சிக்கும் ஆசானின் எண்ணங்களைப் புரிந்துகொள்ளாது அறிவிளியாக இருக்கும் மாணவியின் மனதின் வெளிப்பாடாய்..
கதைகள்:
மறுஜென்மம் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டால் குடும்பத்தாரின் நிலை என்ன..?? இறந்தவளைப்பற்றி இந்த சமூகம் எப்படி பேசுகிறது என்பதை கண்டுணர்ந்து தற்கொலை முடிவிலிருந்து தன்னை மீட்டெடுக்கும் ஒரு பெண்ணின் மன உணர்வு..
கட்டுரை  பண்டிகையும்,தொலைக்காட்சியும்..!!   தொலைக்காட்சி தேர்ந்தெடுக்கும் புதுமுகக்கதாநாயகிகள் பிரபலங்களைப் பொறுத்து அந்த தொலைக்காட்சிகள்தான் முடிவு செய்கின்றன  இன்றைய பண்டிகைகளின் சிறப்பை.

முதல் நாள் சுய அறிமுகப்படலம் என்பதால் எமது தூரிகைத்தோட்டத்தில் பூத்த சில மலர்களை வலைச்சரத்தில் வழங்குகிறேன். வாருங்கள்... வாசித்து பூவின் மணம் பற்றித் தங்கள் மனம் திறந்து கருத்தை அளியுங்கள்... நாளை முதல் மற்ற தோட்டங்களில் பூத்திருக்கும் என் மனம் கவர்ந்த மணம் வீசும் மலர்களைக் கண்டு ரசித்து அவைகள் மூலம் வலைச்சரத்தை அலங்கரிக்கலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமென்பது போல் துறைக்கு சிலராய் உங்களுடன் பகிர்ந்து என்னால் முடிந்தளவு சிறப்பாக செய்கிறேன். அறிமுகமாகும் நண்பர்களுக்குஅனைவரும் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து படைப்பாளிகளின் எழுத்துக்கள் எண்ணற்று வெளிவர தொடர்ந்து உடன் இருப்போம் தோழமைகளே.

அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி... _/\_
வாழ்க வளமுடன்... J


No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__