முகப்பு...

Friday 11 December 2015

“மகாகவி பாரதியின் 134 வது பிறந்தநாள் விழா - கவிதைப் போட்டி.”

தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் “மகாகவி பாரதியின் 
134 வது பிறந்தநாள் விழா கவிதைப் போட்டி.”


ன்புத் தோழமைகளுக்கு,


மிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கம். தாங்கள் அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ”மகாகவி பாரதியின் பிறந்தநாளை” முன்னிட்டு ”தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும்” கவிதைப் போட்டியினைத் தங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம். தோழமைகள் அனைவரும் பெருமளவில் பங்குகொண்டு போட்டியினை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
கவிதை போட்டி விதிமுறைகள்:
1. தலைப்பு : தாங்களே தங்களால் படைக்கப்படும் கவிதைக்குப் பெயரிட்டு அனுப்பலாம்.
2. கவிதையின் தன்மை: தங்களால் எழுதப்படும் கவிதை எந்தவகையினைச் சார்ந்தது என குறிப்பிடவும். (உ.ம்) புதுக்கவிதை, மரபுக்கவிதை,
3. 20 வரிகளுக்குக் குறையாமலும் 50 வரிகளுக்கு மிகாமலும் இருக்கவேண்டும்.
4. கவிதை வேறு எந்த போட்டிக்கோ, இதழுக்கோ அனுப்பப்பட்டதாகவோ அல்லது வேறு எங்கும் பதிவிடப்பட்டதாகவோ இல்லாமல், தமிழ்க்குடிலின் இந்தப்போட்டிக்காக மட்டுமே பிரத்தியேகமாக எழுதப்பட்டவையாக இருக்கவேண்டும்.
5. ஒரு கவிஞர் ஒரு கவிதை மட்டுமே அனுப்பவேண்டும்.
6. உங்களுடைய சொந்த படைப்பாக இருக்கவேண்டும்.
அனுப்பவேண்டிய முகவரி
படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 25.12.15
படைப்புகள் tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பிவைக்கப்படவேண்டும். குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது. முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்.
பரிசு விவரம்:
முதல் பரிசு: தமிழ்க்குடில் வழங்கும் நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்.
இரண்டாவது பரிசு: தமிழ்க்குடில் வழங்கும் நினைவுப்பரிசு
மற்றும் சான்றிதழ்.
மூன்றாவது பரிசு: நூல் மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்.
இதை போட்டி என்று மட்டுமே எண்ணாமல், நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கொள்ள வேண்டுகிறோம்.நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்ந்து அனைவரும்
ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் உங்களுடன்,
-தமிழ்க்குடில்.

Thursday 3 December 2015

கடலூர் நிவாரணப்பணியில் தமிழ்க்குடில் அறக்கட்டளை



அன்புத்தோழமைகளுக்கு தமிழ்க்குடிலின்அன்பான வணக்கம்.

இயற்கையின் விளையாட்டில் பாதிக்கப்பட்ட நம் மக்களுக்காக நம்மால் இயன்ற அளவு உதவிசெய்திட இருக்கிறோம். முதல் கட்டமாக கடலூர் மக்களுக்கு நம் கரங்களை நீட்டிட எண்ணி நம் பயணத்தைத் துவங்கியிருக்கிறோம். இச்செயலில் தங்களையும் இணைத்துக்கொள்ள விரும்பும் அன்புள்ளங்கள் தொடர்பு கொண்டு உதவிட வேண்டுகிறோம். உங்களின் ஒவ்வொரு சிறுதுளியும் எங்கோ இருக்கும் நம் சகோதர சகோதரிகளுக்குப் பயன்படும் என்பதால் தங்களுடைய ஒத்துழைப்பையும் வழங்கிட வேண்டுகிறோம்.  தமிழ்க்குடில் அன்பர்கள் இன்று நிவாரணப்பொருட்களோடு கடலூருக்கு சென்றுள்ளனர். 
நம் பயணத்தில் தொடர்ந்து கரம் கோர்த்து வரும் அனைவருக்கும் நன்றியும், மகிழ்ச்சியும்.
என்றென்றும் அன்புடன்,
தமிழ்க்குடில்

தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்திய ஜூலை மாத போட்டி முடிவுகள்


அன்புள்ளங்களுக்கு,
தமிழ்க்குடில் அறக்கட்டளை நிர்வாகியின் அன்பு வணக்கம்.
ஜூலை மாதம்’2015 மறைமலையடிகளாரின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்திய சொற்பொழிவு போட்டி மற்றும் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு கட்டுரைப்போட்டியின் முடிவுகளை தங்களிடம் பகிர்வதில் மகிழ்வடைகிறோம்.
போட்டியில் பங்குகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்துக்கொள்கிறோம். வெற்றிபெற்றவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளை நிர்வாகத்தின் சார்பாகவும், நடுவர் மறை. தி. தாயுமானவன்(தவத்திரு மறைமலையடிகளார் அவர்களின் பேரன்) அவர்களின் சார்பாகவும், நம் தமிழ்க்குடில் அங்கத்தினர்கள் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறோம்.
முடிவுகளை அறியும் முன்பு போட்டிகளின் வெற்றியாளர்களைத் தேர்வு செய்த நடுவர் அவர்களைப் பற்றி தங்களுக்காக சிலவரிகள்.
”உயர்திரு மறை. திரு. தாயுமானவன்” அவர்கள் தவத்திரு மறைமலையடிகளார் அவர்களின் பேரன் என்பதில் நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே. இவர் நடுவனரசு பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தில்((Combat Vehicles Research Development Establishment Min-of-Defence ) பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ் மொழி நலன்களைமுதன்மையாகக் கொண்டு பாடுபடும் தமிழ்த்தொண்டர். அடிகளாரின் கொள்கைகளில் பெரிதும் ஈர்க்கப்பட்டு எழுத்திலும், பேச்சிலும் தனித்தமிழை பயன்படுத்துபவர். ”மறைமலையடிகளாரின் நோக்கில்” உடல்நலம் என்னும் தலைப்பினை ஆய்வுப்பொருளாகக் கொண்டு ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர்(எம்.பில்) பட்டம் பெற்றுள்ளார். அடிகளாரது வாழ்வில் நடைபெற்றௌ இன்றியமையாத செய்திகள் கடிதங்கள் இவற்றை உள்ளடக்கி “தனித்தமிழ் இயக்கத்தந்தை மறைமலையடிகளார்” என்னும் நூலை எழுதியுள்ளார். இவரது சமூகப்பணி மற்றும் தமிழ்ப்பணிகளுக்கிடையில் நம் தமிழ்க்குடிலின் வேண்டுகோளை ஏற்று சிறந்த பரிசுக்குரிய படைப்புகளைத் தேர்வு செய்து தந்தமைக்கு மனமார்ந்த நன்றியினை நிர்வாகம் சார்பாகவும் உங்கள் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பரிசு பெற்றவர்கள் விவரம்
கட்டுரைப்போட்டி
முதல் பரிசு கி. மகாலட்சுமி - சேலம்
இரண்டாம் பரிசு ச. பொன்முத்து - சென்னை
மூன்றாம் பரிசு ’பரிவை’ சே. குமார்
மறைமலையடிகளார் சொற்பொழிவு போட்டி
முதல் பரிசு ஸ்டெல்லா தமிழரசி ர. - சென்னை
இரண்டாம் பரிசு ஸ்ரீ வித்யா - சென்னை
தமிழ்க்குடிலின் தொடர்ந்த செயல்பாடுகளில் தங்களை இணைத்துக்கொண்டு தங்கள் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் வழங்கிட வேண்டுகிறோம்.
டிசம்பர் மாதம் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு கவிதைப்போட்டி நடைபெறவுள்ளது. அனைவரும் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். விவரம் விரைவில் தெரியப்படுத்தவிருக்கிறோம். நன்றி
என்றென்றும் அன்புடன் தமிழ்க்குடில்

Wednesday 2 December 2015

மனதை_உலுக்கிய_சென்னை_மழை..




உணவை விழுங்கமுடியாமலும், இமைகளை மூட முடியாமலும் செய்த சில நிகழ்வுகளில் இந்த சென்னை,கடலூர் மழைக்கும் பெரும் பங்கு.

3 மாத சென்னை வாசத்திற்குப்பிறகு சென்றவாரம் தான் தில்லி திரும்பினேன். தில்லி வந்தவுடன் இப்படி ஒரு மழை.. அனைவரும், நீங்கள் நலமா என கேட்கும்பொழுது நான் இங்கு நலமாகவும், சென்னையில் உள்ள என் குடும்பத்தினர் அனைவரும் நலமாகவும் உள்ளனர் என மகிழ்ச்சியடைய மனம் வரவில்லை. நான் நன்றாக இருக்கும் அதேவேளையில் எம் மக்கள் இப்படி சொந்த ஊரிலேயே அந்நியனாய் இருக்கும் நிலைகண்டு மனம் கலங்குவதை எப்படி சரி செய்துகொள்வது எனத்தெரியவில்லை.

சென்னையில் இருந்திருப்பின் எம்மால் இயன்ற வரையில் ஏதேனும் உதவிகள் களம் இறங்கிச் செய்திருக்கலாம். அதற்கும் இயலாமல் இத்தனை தொலைவில் இருந்துகொண்டு அவர்கள் படும் இன்னல்களை உடனுக்குடன் அறிந்தும் ஏதும் செய்ய முடியாத நிலை மனதை கலங்கச்செய்கிறது. அவர்களுக்குக்காக பிரார்த்திப்பதைத் தவிர ஏதும் செய்யமுடியாது இருப்பது மனதை காயப்படுத்துகிறது.

முடிந்த அளவு அலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு சிறு சிறு உதவிகள் பெற்று எங்கு சேர்க்கவேண்டுமோ அதைச்செய்தாலும் நாமும் களம் இறங்கிச்செய்ய இயலவில்லையே என்ற உணர்வும் வந்துசெல்கிறது.

இயற்கையின் இந்த விளையாட்டில் ஒரு ஆறுதல் என்னவெனில் அனைவரிடத்திலும் இயற்கையாகவே இருக்கும் மனிதம் இந்த நிலையில் புத்துயிர் பெற்றிருப்பதைக்காண முடிகிறது. பிறப்பிலேயே மனிதம் நிறைந்தவர்கள்தாம் நாம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் எண்ணற்ற எம் சகோதர சகோதரிகள் முழுமூச்சாய் உதவிகள்புரிந்து வருவது மெய்சிலிர்க்க வைக்கிறது.

மனிதத்திற்கு சாதி,மதம், கட்சி எதுவும் தடையில்லை என நிரூபித்திருக்கின்றனர். இன்று புத்துயிர் பெற்ற எம் சகோதரர்களின் மனிதம் என்றென்றும் உயிர்ப்புடன் இருக்க வேண்டுகிறேன். மனிதத்திற்கு குறுக்கே எவற்றையும்,எவரையும் அண்டவிடாதீர்கள் உறவுகளே.

கரங்கள் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து உறவுகளுக்கும், நட்புகளுக்கும் மனமார்ந்த நன்றியும், வாழ்த்துகளும்.