உணவை விழுங்கமுடியாமலும், இமைகளை மூட முடியாமலும் செய்த சில நிகழ்வுகளில் இந்த சென்னை,கடலூர் மழைக்கும் பெரும் பங்கு.
3 மாத சென்னை வாசத்திற்குப்பிறகு சென்றவாரம் தான் தில்லி திரும்பினேன். தில்லி வந்தவுடன் இப்படி ஒரு மழை.. அனைவரும், நீங்கள் நலமா என கேட்கும்பொழுது நான் இங்கு நலமாகவும், சென்னையில் உள்ள என் குடும்பத்தினர் அனைவரும் நலமாகவும் உள்ளனர் என மகிழ்ச்சியடைய மனம் வரவில்லை. நான் நன்றாக இருக்கும் அதேவேளையில் எம் மக்கள் இப்படி சொந்த ஊரிலேயே அந்நியனாய் இருக்கும் நிலைகண்டு மனம் கலங்குவதை எப்படி சரி செய்துகொள்வது எனத்தெரியவில்லை.
சென்னையில் இருந்திருப்பின் எம்மால் இயன்ற வரையில் ஏதேனும் உதவிகள் களம் இறங்கிச் செய்திருக்கலாம். அதற்கும் இயலாமல் இத்தனை தொலைவில் இருந்துகொண்டு அவர்கள் படும் இன்னல்களை உடனுக்குடன் அறிந்தும் ஏதும் செய்ய முடியாத நிலை மனதை கலங்கச்செய்கிறது. அவர்களுக்குக்காக பிரார்த்திப்பதைத் தவிர ஏதும் செய்யமுடியாது இருப்பது மனதை காயப்படுத்துகிறது.
முடிந்த அளவு அலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு சிறு சிறு உதவிகள் பெற்று எங்கு சேர்க்கவேண்டுமோ அதைச்செய்தாலும் நாமும் களம் இறங்கிச்செய்ய இயலவில்லையே என்ற உணர்வும் வந்துசெல்கிறது.
இயற்கையின் இந்த விளையாட்டில் ஒரு ஆறுதல் என்னவெனில் அனைவரிடத்திலும் இயற்கையாகவே இருக்கும் மனிதம் இந்த நிலையில் புத்துயிர் பெற்றிருப்பதைக்காண முடிகிறது. பிறப்பிலேயே மனிதம் நிறைந்தவர்கள்தாம் நாம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் எண்ணற்ற எம் சகோதர சகோதரிகள் முழுமூச்சாய் உதவிகள்புரிந்து வருவது மெய்சிலிர்க்க வைக்கிறது.
மனிதத்திற்கு சாதி,மதம், கட்சி எதுவும் தடையில்லை என நிரூபித்திருக்கின்றனர். இன்று புத்துயிர் பெற்ற எம் சகோதரர்களின் மனிதம் என்றென்றும் உயிர்ப்புடன் இருக்க வேண்டுகிறேன். மனிதத்திற்கு குறுக்கே எவற்றையும்,எவரையும் அண்டவிடாதீர்கள் உறவுகளே.
கரங்கள் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து உறவுகளுக்கும், நட்புகளுக்கும் மனமார்ந்த நன்றியும், வாழ்த்துகளும்.
மழை வெள்ளம் ஓய வேண்டும்..
ReplyDeleteமக்கள் துயரம் தீரவேண்டும்..