Friday, 1 February 2019

அறிந்தும்_அறியாமலும்..

#வாழ்க்கைப்பயணத்தில்... மன்னிப்பை உணர்ந்தவர்களுக்கு அது தண்டனை.   உணராதவர்களுக்கு மன்னிப்பளித்தவன் ஏமாளி. 

*************

#வாழ்க்கைப்பயணத்தில்... நம்மை வெறுத்து ஒதுக்கியவர்கள், நம்மை உணரத்துவங்கும் நேரம் விருப்பிற்கும், வெறுப்பிற்கும் அப்பாற்பட்டு நிகழ்வை சலனமின்றி ஏற்கும்படி மனம் பக்குவப்பட்டிருக்கலாம்.  #அறிந்தும்_அறியாமலும் .
***************
#வாழ்க்கைப்பாதையில், நம்மை காயப்படுத்தியவர்களை, காயப்படுத்திவிடக் கூடாதென நம்மால் மௌன சிறைக்குள் வைக்கப்படும் வார்த்தைகள் ஏதோ ஒரு நொடியில் நம்மையறியாமல் விஷ வார்த்தைகளை பிரசவிக்க நேரிடலாம். #அறிந்தும்_அறியாமலும்
*************

Wednesday, 6 June 2018

அறிந்தும்-அறியாமலும்...

ஒருவர் செய்த ஏதோ ஒரு தவறுக்காகவோ அல்லது எண்ணற்ற தவறுகளுக்காகவோ சீ என உதறித்தள்ளி விலகிச்செல்ல ஒரு நொடிபோதுமானதாகவிருக்க., விலக்கிவைத்து விலகி நிற்பதால் சாதிக்கப்போவது என்னவென்று உள்ளெழும் கேள்வியால் வாழ்வின் யதார்த்தம் உணர்த்தப்படும் அந்த நொடி இறங்கிச்சென்று நெருங்கிச் செல்பவரை... வாழ்க்கைப்படிக்கட்டுகளில் ஏதோ ஒரு நேரத்தில்.. இயலாமையெனப் பார்க்கவைக்கலாம் காலம்.

******
#வாழ்க்கைப்பாதையில்.. இறங்கிவருதலை இயலாமை என நினைப்பவர்கள், அது அன்பின் காரணமாகவும் இருக்கலாம் என்பதை உணரத்தவறுகிறோமோ...!??  
#அறிந்தும்_அறியாமலும்...


********

அவனதிகாரம்...

#அவனதிகாரம்... 

அவனுக்களிக்க மானசீகமாய் முத்த ஒத்திகை பார்ப்பவளின் மனம் படித்தவனாய், இதழுக்கு ஓய்வளிக்க தன் கன்னத்தில் இடமளிக்கிறான்.   

Wednesday, 9 May 2018

யாதுமானவன்...என் 
அன்பு, பாசம், நேசமும் நீ..
கோவம், வெறுப்பும் நீ...!
மகிழ்ச்சியும் நீ..
வருத்தமும் நீ..!
வலியும் நீ..
ஆறுதலும் நீ..!
நோயும் நீ..
மருந்தும் நீ..!
பலமும் நீ,,
பலவீனமும் நீ..!
வெற்றியும் நீ..
தோல்வியும் நீ..!
படிக்கல்லும் நீ..
என் சொல்லும் நீ..!
மௌனமும் நீ..!
என் சிந்தையும் நீ..
செயலும் நீ...!
எண்ணமும் நீ...
எழுத்தும் நீ...!
என் பாடுபொருளும் நீ..
நான் பாடும்பொருளும் நீயென..
என் சிந்தையை சிறைபிடித்து
யாவ/ற்றிலும் நிறைந்து.,
யாதுமானவனாகிறாய்..!

Tuesday, 13 March 2018

#ஊட்டுவித்த_தமிழ்ப்பற்றை_ஊக்குவிக்கும்_விழா...”

#ஊட்டுவித்த_தமிழ்ப்பற்றை_ஊக்குவிக்கும்_விழா...”

அன்புத்தோழமைகளுக்கு,

தமிழ்க்குடில் நிர்வாகியின் அன்பு வணக்கம்.


நமது தமிழ்க்குடில் அறக்கட்டளை, சென்னை குரோம்பேட்டையில் இயங்கிவரும் தூய மாற்கு பதின்முறை மேல்நிலைப்பள்ளியில் மார்ச் மாதம் முதல் தேதியன்று பரிசளிப்பு விழா ஒன்றை நடத்தியது.

ஏதோ போட்டிக்காக ஒரு நாள் மட்டும் என்றில்லாமல் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள், தொடர்ந்து வகுப்பில் தமிழ் கையெழுத்தை செம்மையாக எழுதிவருவதைப் பாராட்டி தமிழ்க்குடில் அறக்கட்டளை நினைவுப்பரிசும், நூல்களும் வழங்கிப் பாராட்டியது.

மாணவர்களின் இச்செயலில் ஆசிரியர்களின் பங்கும் பெரிதென உணர்ந்து தமிழ்த்துறை ஆசிரியர்களுக்கும் நினைவுப்பரிசும், நூல்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.


பள்ளிக்கு நினைவுப்பரிசும், நூலகத்திற்கு தமிழ் சொல்லகராதியும் வழங்கப்பட்டது.

தவத்திரு மறைமலையடிகள் அவர்களின் பேரன் மறை தி. தாயுமானவன் அவர்கள் விழாவின் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
தமிழ்க்குடில் அறக்கட்டளையின் தலைவர் திரு. தமிழ்க்காதலன் அவர்கள் தமிழ்க்குடில் பற்றியும் மாணாக்கர்களின் திறமையையும் பாராட்டினார்.
பொருளாளர் காயத்ரி வைத்தியநாதன் நன்றியுரையாற்றினார்.

மறை. தி. தாயுமானவன் அவர்கள், அவரது துணைவியார் திருமதி வாசுகி அவர்கள், தமிழ்க்குடில் அறக்கட்டளையின் தலைவர் 
திரு, தமிழ்க்காதலன் அவர்கள், பொருளாளர் காயத்ரி வைத்தியநாதன் மற்றும் தமிழ்க்குடிலின் குடும்ப உறுப்பினரான சகோதரர் திரு.இராமச்சந்திரன் அவர்கள் மாணவர்களுக்கும், தமிழ்த்துறை ஆசிரியைகளுக்கும் தமிழ்க்குடில் சார்பாக கேடயங்களையும், நூல்களையும் வழங்கி சிறப்பித்தனர்.


விழா சிறப்பாக அமைய முழு ஒத்துழைப்பு வழங்கிய பள்ளி நிர்வாகத்திற்கும், விழா ஒருங்கிணைப்பில் பெரிதும் பங்குகொண்ட சகோதரர் திரு. இராமச்சந்திரன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்,

என்றென்றும் அன்புடன்,

தமிழ்க்குடில் நிர்வாகம். 

Friday, 21 April 2017

”எதுவும் நிரந்தரமில்லை..”

”எதுவும் நிரந்தரமில்லை..”

மரணத்திற்கு மரணமில்லையெனும்

யதார்த்தம் உணர்ந்தே...
ஆண்டாண்டு காலம் உடன் பயணித்தவர்
உலகம் துறக்கையில்...
மரணச்செய்தி கேட்டு மருண்டுவிடாது..,
கண்ணீர்விட்டுக் கதறியழுதிடாது.,
அடுத்தது என்ன என வினவியே
ஆகவேண்டியதைச் செய்திட 
அடுக்கடுக்காய் உத்தரவுகள் பிறப்பித்து..
அன்புக்குரியவரை “தீ”க்கு இரையாக்கி...
பிடி சாம்பலுக்காய் காத்து நிற்கும் வேளையில்..
உலக வாழிவினின்று விடுதலையடைந்தவருக்காய்,
சிலநொடி கண்மூடி பிரார்த்திக்க...

வாழ்க்கைப்பாதையில் நிரந்தரமில்லா வாழ்விதனில்..
காலன்விளையாடும் பகடைக்காயில்..
மரணத்தை சந்திக்காத உயிர்களும் உண்டோ இவ்வுலகினில்...
நிதர்சனத்தை உணர்ந்து நிகழ்வினை 
சலனமின்றிக் கடப்போரை....

உற்றவரும், மற்றவரும் - இவள்(ன்)
கல்நெஞ்சக்காரி(ரனோ)யோ...
மனப்பிறழ்ச்சி கொண்டவளோ(னோ).. என
முதுகுக்குப்பின்னே முத்தாய்ப்பாய் பட்டம் சூட்டப்பட...
மயானம் என்றும் பாராமல்..
சிறுபுன்னகை எட்டிப்பார்க்க...

உறவில்லாதவரும் கண்ணீர் பெருக்கெடுக்கக் கதறியழுது..
மூக்கில் நீர் ஒழுக, மூச்சுத்திணறி....
விம்மி, வெதும்பிட..
ஏதோ ஓர் நேரத்தில் இறந்தவரை ஏசியோரும்..
அவர் வளர்ச்சியில் பொறாமைக் கொண்டோரும்..
இன்று அவர் புகழ்பாடிட..
கூட்டமெல்லாம் கூறுகிறது..
ஆகச்சிறந்த அன்பு அதுவென...!!

நிதர்சனத்திற்கும்... - எதுவும் நிரந்தரமில்லா 
நித்தமும் வாழும் வாழ்க்கைக்கும்தான்
எத்தனையெத்தனை வித்தியாசம்...?

நிதர்சனம் மறுத்து...
நிழலை விரும்பிடும் மனித மனம்..!!
மாண்டவரும் மீளப்போவதில்லை...
மாண்டவருடன் நாமும் - உடன் 
மரணித்துப் பயணிக்கப் போவதில்லை..!..

அறிந்தும்... தொடர்கிறதோ.....
நிதர்சனத்தை வெறுத்து..
நிழலை விரும்பிடும் விருப்பங்கள்..??!


...........நட்புடன் காயத்ரி வைத்தியநாதன்.. :)

Wednesday, 22 March 2017

அறிந்தும்_அறியாமலும்...


#வாழ்க்கைப்பாதையில்... சிலபல_நேரங்களில்.. நம் இல்லாமையை உணராத இடத்திலும்கூட நம் இருத்தல் அவசியமாகலாம்... :)

#வாழ்க்கைப்பயணத்தில்.. மனவலிமை படைத்தவரையும் #சிலபல_நேரங்களில் வலுவிழக்கச் செய்யும் சக்தி அன்பின்மீது பூசப்பட்ட அரிதாரத்திற்கு இருக்கலாம். :)

வாழ்க்கைப் பயணத்தில்.. #சிலபல_நேரங்களில்... பேசவேண்டியதை, பேசவேண்டியவரிடம் பேசவேண்டிய நேரத்தில், பேசாது ஒத்திப்போடுவதால் ஒருவேளை பேசமுடியாமலேயே போகநேரிடலாம்...