முகப்பு...

Thursday 13 March 2014

புதிராட்டம்...!!


ஊருக்கு நேரணி
உள்ளுக்குள் எதிரணி...
உள்ளுக்குள் நேரணி,
ஊருக்கு எதிரணி..
எதிரணியும்,நேரணியும்
ஓரணியென...

நேரணியும், எதிரணியும்
ஓரணியுமாய்..
அன்றாட ஆட்டத்தை
அற்புதமாய் அறங்கேற்றுகிறது..
தம் தம் இடம் அறியாமலே..!!

நேரணியா, எதிரணியா
இவ்வணி எவ்வணியென
உள்ளம் எழுப்பும் கேள்விக்கு
உள்ளார்ந்து கிட்டாது
புதிராகக் கிட்டிடும் விடையுமே..!!

ஆடும் அணியினரே அறிந்திடாத
புதுமையான ஆட்டமிதில்...
வெற்றியும், தோல்வியும்
ஆட்டத்தையாடும் அணியினருக்கல்ல
ஆட்டுவிக்கும் படைத்தவனுக்கே..!!

இப்புதிராட்டம்
முடிக்க விரும்பிடினும்
தொடருகிறது
வாழ்க்கை மைதானத்தில் ..!!

Thursday 6 March 2014

விடியல்....


நேற்று(06.03.14)  தில்லி தமிழ்ச்சங்கத்தில் ”விடியல் பார்வையற்றோர் இசைக்குழு” நடத்திய மெல்லிசை நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. திருச்சியைச் சார்ந்த விடியல் இசைக்குழுமத்தில் அனைவரும் பார்வையற்றவர்கள். சகோதரர் வரதராசன் தமிழ் பட்டதாரி.(பி.ஏ.,பி.எட்., ).  ”சாகும் வரை தமிழ் படித்து சாக வேண்டும். என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்...” என்ற வாசகத்தைக்கொண்டுள்ளது இவர்களது முகப்பு பேனர்.  மகிழ்ச்சிக்கும், வெற்றிக்கும் பார்வை ஒரு தடையில்லை என்பதை நிரூபித்து வருகின்றனர் இந்த குழுவினர்.  சகோதரர் வரதராஜனின் தமிழ்ப்பற்றும், அவரது குரல்வளமும் வியக்கவைக்கிறது.  பார்வையில்லை என்ற எண்ணம் இருப்பதாகவேத் தெரியாமல் மிகவும் தன்னம்பிக்கையுடன் இவர்கள் நிகழ்ச்சி இருந்தது பிரமிப்பை ஏற்படுத்தியது.  பெரிய பெரிய இன்னிசைக்குழுவினரின் தேதிகள் கிடைக்கக் காத்திருக்கும் பலர் இவர்களின் இசைக்குழுவையும் நாடிப்பார்க்கலாமே..! பிரபலமான பாடகர்களும் தன் நிகழ்ச்சியில் தமக்கு முன்னே இருக்கும் பாட்டுப்புத்தகம் வைத்து பார்த்துப்பார்த்துப் பாடுவார்கள்.  இவர்கள் தங்கள் மனப்புத்தகத்தில் இருக்கும் வரிகளை அகக்கண்களால் பார்த்துப் பாடுகின்றனர்.

குழுவில் இருக்கும் அனைவரது குரல் வளமும் வரமாகவேத் தோன்றுகிறது.  சகோதரிகள் அருணா மற்றும் காந்திமதி அவர்களின் குரல்வளம், வழங்கியவிதம் அனைத்தும் அருமை என்ற ஒற்றை சொல்லோடு நிறுத்தக்கூடியதல்ல.  சகோதரி அருணா பாடிய முகுந்தா முகுந்தா பாடலில் அவர் குரல்மாற்றிப் பாடியவிதம் மனதைக்கவர்ந்தது.

சகோதரர் வரதராஜன் “காதோடுதான் நான் பேசுவேன் என்ற பாடலை” பெண் குரலில் பாடியபொழுது பாராட்ட வார்த்தைகளற்று பிரமிக்கவே முடிந்தது.  மனம்நெகிழ்ந்து வரும் கண்ணீர்முத்துக்களை உணர்வு இழையில் மாலையாக்கி பாராட்டுகிறேன். 

நிகழ்ச்சிகளுக்கிடையில் சகோதரர் வழங்கிய ஒரு செய்தி..”பார்வையற்றவர்களை சமீபகாலமாக மாற்றுத்திறனாளிகள் என அழைக்கின்றனர்.  மாற்றுத்திறன் என்பது பார்வையற்ற என்ற பொருளை கொடுக்காது.  எனவே பார்வையற்றவர்கள் என்று கூறுவது தவறாகாது...அப்படி அழைக்க சங்கடப்படவேண்டாம்” என்றுகூறினார். இப்படிப்பட்ட ஒரு நிகழ்சிக்கு ஏற்பாடு செய்திருந்த தில்லி தமிழ்சங்கத்தை பாராட்டுவதோடு விடியல் இசைக்குழுவிற்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு, என்றும் இளமையானவளாம் தமிழன்னையைப்போல் இவர்களும் என்றும் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியும், வெற்றியும் தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் வழங்கவேண்டுமென வேண்டி வாழ்த்துகிறேன்.  

Wednesday 5 March 2014

அறிந்தும் அறியாமல் சிதறியது..:)

கண்களை விற்று சித்திரம் வாங்கி இரசிக்க முடியாததைப்போல் வாழ்வதற்காக ஓடும் நேரத்தில் வாழ்க்கையை தொலைத்து வாழ்கிறோம்...
**
அறிந்தே முட்டாளாவது, குழந்தையிடத்தும், அன்புடையவர்களிடத்தும்..:)
**
காயப்படுத்தக்கூடாது என உறுதியெடுக்கும் அந்த நிமிடமே மற்றுமோர் ஆயுதம் கூர்தீட்டப்பட்டு நம்மையறியாமலேயே கையிலெடுக்கப்படுகிறது மௌனமாகவோ, வார்த்தையாகவோ ..

**
”ஒன்றுமில்லை” என்ற ஒற்றை வார்த்தையில் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் வெறுப்பு, கோபம், பொறாமை, வெளிக்காட்டப்படாத அன்பு, மருந்திடப்படாத உடை(த்து)ந்து நொறுக்கப்பட்ட மனம் மறைந்திருக்கலாம்.. :)
**
ஆறிய காயத்தின் வடுக்களை காண சகிக்காமல், காயம் உண்டாக்கியவர்களால் மீண்டும் கீறப்பட்டு இரத்தத்தால் அழகுபடுத்தப்படலாம் :)
**
இன்று எங்கோ யாருக்கோ ஏற்படும் ஏதோ ஒரு நிகழ்வு, என்றோ ஏற்(படுத்தப்)பட்ட காயத்தின் வடுக்களை கீறி இரத்தம் கசியச் செய்யலாம்..
**