Sunday, 30 September 2012

முரண்பட்ட சிந்தனைகள்...


அளவுகடந்த மகிழ்ச்சியிலும் உணவைத் தவிர்க்கும் மனம்.
அளவுகடந்த துன்பத்திலும்  உணவைத் தவிர்க்கும் மனம்.
*****
அன்புசெலுத்துபவர்களையும் வெறுப்புடன் நோக்கும் மனம்..
வெறுப்பவரையும் அன்புடன் ஏற்கும்  மனம் .
*****
மருமகன் தனக்கு மகனாக விளங்கும்போது
மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் தாயின் மனம்....
தன் மகன், இன்னொரு தாய்க்கு (மரு)மகனாக
விளங்கும்போது, ஏற்க மறுக்கும்  மனம்..
*****
மனைவி இறக்க மணமகன் வேடமேற்கும் ஆணின் மனம்.
கணவன் இறக்க கைம்பெண் வேடமணியும் பெண்ணின் மனம்..
*****


Thursday, 27 September 2012

விசுவும், நானும்...


ஒரு நகைச்சுவைக்காக முயற்சித்தது.. யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம்அல்ல..
@@@@@@@

காயத்ரி:       திருமண வாழ்க்கை சந்தோஷமா? சங்கடமா......???

விசு      :         சந்தோசம்னு நினைச்சா
                                சங்கடமும் சந்தோசம்.
சங்கடம்னு நினைச்சா
சந்தோசமும் சங்கடம்.

நீங்க
சங்கடத்த 
சங்கடமா நினைக்கிறதும்
சங்கடத்த
சந்தோசமா நினைக்கிறதும்,
சந்தோசத்த 
சந்தோசமா நினைக்கிறதும்
சந்தோசத்த
சங்கடமா நினைக்கிறதும்..
நம்ம நினைப்புலத்தான் இருக்கு..

சங்கடமான சந்தோசம்,
சந்தோசமான சங்கடம்..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சங்கடமா இருந்ததும் இல்ல..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சந்தோசமா இருந்ததும் இல்ல..

காயத்ரி:    ??

விசு    : இப்ப திருமண வாழ்க்கை சங்கடமா..?சந்தோசமா..?முடிவ நீங்களே எடுத்துக்கோங்க..

காயத்ரி   : கொஞ்சம் சங்கடம்போலத்தான் தெரியுது.பாவம்எவ்வளவு
சங்கடப்பட்டிருந்தா,இப்படி ஒரு பதிலை சொல்லியிருப்பீங்க. ஹீம்ம்..
*******
Wednesday, 26 September 2012

அன்புச்சிதறல்கள்...


அன்பினால்
மெழுகாய் உருகிய மனமும்
அலட்சியத்தினால்
இரும்பாய் இறுக...
நெகிழச்செய்ய
சாகாவரமான
சத்தியநெருப்பின் ஒளியை
தேடுகிறது மனம்...!!
*****
புன்னகைப்பூவில்
மறைந்திருக்கும்
கண்ணீர் மொட்டுக்கள்
கண்களுக்குத் தெரியாது...!!!
*****
புல்நுனி பனியாய்
கண்மலர் பூத்த
கண்ணீர்த் துளிகளையும்
ரசிக்கும் கலைஞன் ...!!
*****

Sunday, 23 September 2012

முரண்பட்ட சிந்தனை


உணர்வுகள் அலட்சியப் படுத்தப்படும்போதுதான் விவேகம் பிறக்கிறது.
*****
மகளாக தாயின் மனம் உணர மறுக்கும் மனம்..
தாயானதும்
மகள் தன்மனம் உணர விரும்பும் மனம்...
முரணான ஆசை...
*****
உறவுகளுக்கிடையில்
பணம் தடையில்லையென எண்ணும் மனம்..
பணத்திற்கு
உறவுகளைத் தடையாக எண்ணும் மனம்..
 *****
ஒருவர் கூறும் பொய் நம்மைக் காயப்படுத்துவதை உணரும் மனம்..


நாம்  கூறும் பொய் அவர் மனதையும் காயப்படுத்தும் என்பதை  உணர மறுக்கும் மனம்...
*****

மனம் பகிர மனிதர் இல்லாத நேரத்தில் பக்குவப்படுத்தும் கண்ணீர்,
மனம் பகிர மனிதர் இருப்பின் பலவீனப்படுத்தவும் செய்யும்..


              மனிதனின் முரண்பட்ட சிந்தனை தொடரும்..
*****


சின்ன சின்ன ஆசை - 2


தகப்பனாய் 
நீ தலைகோதிவிட
குழந்தையாய் உன்மடிமீது
நானுறங்க ஆசை...

தாயாய்
உன் ருசியறிந்து
பசியாற்றி...
உன் கவலைதுறந்து
உறங்கவைக்க ஆசை...

தோழியாய்
உன் தோள்சாய்ந்து
தோல்வி தொலைக்க ஆசை...

சகோதரியாய்
உன்னிடம்
சண்டைபிடிக்க ஆசை...

மாணவியாய்
நின் பெயர்
தழைக்கச் செய்ய ஆசை...

காதலியாய்
காதல்மொழி கேட்டு
நின் காதலில்
கசிந்துருக ஆசை...

மந்திரியாய்
ஆலோசனை
வழங்கிட ஆசை...

மனைவியாய்
உன் மனம் நிறைத்து
நின்கரு சுமக்க ஆசை...

பக்தையாய்
நின் பாதமலர்களை
கண்ணீர்முத்துக்களால்
அலங்கரிக்க ஆசை...

நின் கரம்கோர்த்து
சிகரம் தொட ஆசை...

இறக்கும் வரை
நம் கரங்கள்
இணைந்திருக்க ஆசை..

முதுமையிலும்
முன்னுதாரணமாய்
வாழ்ந்துவிட ஆசை...

மரணமில்லா
என் மன்னவன்
உன்மார் சாய்ந்து
உயிர்துறக்க ஆசை...!!!


Friday, 21 September 2012

தலைப்பு செய்தி...!!


சந்திரனின்
துணிகரச்செயல்..
வைர நட்சத்திரங்களைக்
கொள்ளையடித்து
தனது ஆகாயவீட்டில்
அழகுப்படுத்தியிருப்பதை
சுயநலமிக்க செயலென
பொதுமக்கள் கண்டித்தனர்...
எதிர்கட்சித்தலைவர்
கதிரவன் கடும் சினம்..
நிருபருக்களித்த பேட்டியில்
வரும் அமாவசையன்று
இவரது இந்த செயலைக்
கண்டித்து போராட்டம்...!!

Thursday, 20 September 2012

நானும், புறாவும்..
இடம்: சமையலறை சன்னல்.

நான்: புதிதாக குஞ்சு பொறித்த புறா,தன் குஞ்சுகளுடன் கொஞ்சி விளையாடுவதைப் பார்த்து வியக்க.

புறா: என்ன..??

நான்: இல்லை...எவ்வளவு சுதந்திரமா,எதைப்பற்றியும் கவலையின்றி கொஞ்சிக்கொண்டிருக்கிறாய்.

புறா: ஏன்,நீ அப்படி இருப்பதில்லையா..உன் குழந்தையை கொஞ்சுவதற்கென்ன தடை..?

நான்: இப்பொழுதுதான் உன்னைத் தனியாக பார்த்தமாதிரி இருந்தது. வீடுகட்ட சத்தைகள் சேகரித்தது தெரியும். இன்று பார்த்தால் உன் குழந்தையும்  நீயும்  என இருக்கிறாய்.

புறா: நீ....?

நான்: பத்து மாதம் சுமக்க வேண்டும்,..மருந்து,மாத்திரை,ஊசி..பத்தியம். இது செய்யக்கூடாது. அது செய்யக்கூடாது என பலவித கட்டுப்பாடுகள்.

புறா: அப்படியா..?

நான்: ம்ம். அதோடு கூடவே கவலையும்..

புறா: வாரிசு சுமப்பதில் கவலையெதற்கு..?

நான்: வாரிசு சுமப்பதற்கு கவலையில்லை..அதை நல்லமுறையில் பெற்றெடுக்கவேண்டும்..சுகப்பிரசவமா..?சிசேரியனா...??என்ற கவலைதான்.

புறா: இயற்கை நியதி மாற்றுவதேன்...??

நான்:விரும்பி மாற்றவில்லை..நவீன வாழ்க்கை முறை..வணிகமாக்கப்பட்ட மருத்துவம் என எத்துனையோ காரணங்கள்.

புறா: சரி தவிர்க்கமுடியாதபொழுது சரிதான்..அதனாலென்ன..இந்த நவீன உலகில் மருத்துவம் ஒரு பெரிய விசயமில்லையே உங்களுக்கெல்லாம்..?

நான்: உண்மைதான்.அதோடு விட்டதா..??குளிர்சாதன அறையிருக்கிறதா என சிலர்..இந்த மருத்துவமனையில் ஏன் சேர்த்தீர்கள் என சிலர்..குழந்தைப் பிறந்ததும் எனக்கு ஏன் முதலில் சொல்லவில்லை என சண்டையிடும் உறவுகள் என அடுத்தடுத்து எத்தனையோ..உணர்வைவிட உறவையும்,உரிமையையும் கொண்டாடும் சிலர் என இவர்களுக்கு மத்தியில் குழந்தை பெற்று...ஹூம்ம்..

புறா: ஏன் இந்த சலிப்பு..?

நான்: இது சலிப்பல்ல.. பலருக்கும் உள்ளுக்குள் இருக்கும் ஒரு விதமான ஏக்கம்.என் குழந்தை,நான் என கொஞ்சி சுதந்திரமாய் மகிழ்கிறாயே. உன்னைப்போல் எந்த சஞ்சலமும் இன்றி  இல்லாமல் வெளித்தோற்றத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து,உணர்வை மதிக்கத் தவறுகிறோமேநாங்கள் அனைவரும்என்ற ஏக்கம்.

புறா: ம்ம்...உனக்கு அப்படித்தோன்றும். எங்களுக்கு...

நான்: ஏன் உங்களுக்கென்ன..?எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்.. நினைத்த போது நினைத்த மாதிரி இருக்கும் ஒரு சுதந்திரம். யாருக்கும் கட்டுப்பட வேண்டியதோ..யாருடைய எண்ணத்திற்கு செயல்படும் வாய்ப்போ இல்லாமல் நீ நீயாக சுயமாக இருக்கிறாயே..அது வரம்தானே..அப்படிப்பட்ட வரத்தில் மகிழ்வில்லையா..??

புறா: எல்லாம் சரிதான்.ஒருவித்த்தில் மகிழ்ந்தாலும்,நம்முடைய உணர்வை வார்த்தையால் வெளிப்படுத்தி அடுத்தவர்களின் உணர்வையும் கேட்டு கலந்துபேசி சுகம்,துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் வரம் எங்களுக்கு இல்லையே..?பாசத்தைப் பகிரும் எங்களால் தகுந்த பாதுகாப்பை வழங்கமுடிவதில்லையே எங்கள் குஞ்சுகளுக்கு..??

நான்: ஓ...இக்கரைக்கு அக்கரை பசுமையாகத் தோன்றும் என்பார்களே அது இதுதானோ..?எனக்கு உன் நிலை பிடித்திருக்கிறது. உனக்கு என்னிலை பிடித்திருக்கிறது. இதில் எது வரம்..எது சாபம்..எனக்குப் புரியல..உங்களுக்குப் புரிஞ்சா சொல்லுங்களேன்.

வரமாக நினைத்தது வரமா..
வரமில்லையென நினைத்தது வரமா..
வரமானது
வரமில்லாமல் தோன்றுவது வரமா..
வரமில்லாதது
வரமாகத் தோன்றுவது வரமா..?
வரமென்பதென்ன..
வரத்தை வரமெனவும்,
வரமில்லாததை வரமற்றதெனவும் உணரும்
வரமும் கிட்டுமோ...??
Wednesday, 19 September 2012

உணவும், உணர்வும்....
பெண்கள் தினமும் மூன்று வேளையும் சமைத்து, பரிமாறுவதால் சிலநேரம் சாப்பாடு பார்த்தாலே முகத்தில் அடித்தாற்போல் சாப்பிட பிடிக்காமல் போய்விடும். இதை பலரும் உணர்ந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். சிலர் உணர்ந்தாலும் வேறு வழியில்லை என பசி பொறுக்காமல் சாப்பிடுவதும், சிலர் பசி பொறுத்து சாப்பிடாமல் இருப்பதும், சிலர் மாற்று ஏற்பாடு செய்வதுமாக இருப்பர். சிலருக்கு மாறுதலுக்காக யாராவது சமைத்துப் போடமாட்டார்களா என இருக்கும்.

திடீரென ஒரு சிந்தனை. சிலர் வீட்டில் சமையலுக்கு ஆட்கள் வைத்திருப்பார்கள்.  அவர்களிடம் இது இது தேவையென வேளா வேளைக்கு வகை, வகையாக கேட்டு சாப்பிடுவோம்.  ஆனால் தினமும் நமக்கு சமைத்துப்போடும் அவர்களுக்கும் இப்படித்தானே ஒரு உணர்வு இருக்கும் என என்றாவது அவர்கள் நிலையில் இருந்து சிந்தித்து பார்த்திருப்போமா..??  அவர்களுக்கும் சில விருப்பங்கள் இருக்கும் என எண்ணி அவர்களையும் அமரவைத்து சாப்பிட்த்தான்  வைத்திருப்போமா..? ஒரு மாறுதலுக்காக ஒரு குறிப்பிட்ட நாள் அவர்களுக்கு தேவையானவற்றை கேட்டறிந்து சாப்பிட வைத்தால் எப்படி மகிழ்வார்கள். (எங்க வீட்ல வேலைக்கு ஆட்கள் வைக்கவில்லை. இது சிந்தனை மட்டுமே).

உணவு விடுதியில் அனைவருக்கும் சாப்பாடு பரிமாறுபவர் சாப்பிடுவதைப் பார்த்தால் சற்று  பரிதாபமாக இருக்கும்.  ஏதோ சாப்பிடவேண்டுமே என ஒரு தட்டில் எடுத்துவைத்து ஒரு ஓரமாக அமர்ந்து சாப்பிடுவார்.

தமிழ்நாட்டில் ஏதோ ஒரு உணவு விடுதியில்(சரியாக நினைவில்லை..) காலை உணவு சமைத்தவுடன் அந்த உணவு விடுதியின் உரிமையாளர் அனைத்து ஊழியர்களையும் சாப்பிடவைத்தபிறகே வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்குவது வழக்கமாம்.  படித்த நினைவு.   எவ்வளவு நல்ல மனம் அந்த உரிமையாளருக்கு. ஊழியர்கள் மன நிறைவோடும், வயிறு நிறைவோடும் இருக்க அவர்களது உழைப்பு உள்ளப்பூர்வமாக கிடைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.   நாமும் சிந்திப்போமே.   நமக்குமே வீட்டில் அதிகப்படியான வேலை, ஒரே மாதிரியான வேலையினால் வரும் சலிப்பில் சிலநேரம் சிடுசிடுவென நடந்துகொள்வது வழக்கம்தானே.  அதே உணர்வு அவர்களிடமும் இருப்பதில் தவறில்லையே.   அவர்களது நிலையில் இருந்து சிந்திந்துப்பார்த்தால் மட்டுமே சில நபர்கள் ஏன் சிடுசிடுன்னு இருக்காங்கன்னு நமக்கே புரியவரும். நாமும் சிந்திப்போமா...
??