Sunday, 9 September 2012

குழந்தைத் தொழிலாளி..


சிவகாசி சிறுவர்களின்.,
வாழ்க்கை சீரழியக் காரணம்தான் என்ன?
விதியா.....??
இறை செய்த சதியா....?

இல்லாதவர்களுக்குப் பிறந்தது..
இவர்கள் செய்த குற்றமா?
பால்குடி மாறா பச்சிளங்குழந்தை
பட்டாசுச் சுற்றி பசியாற்றும்..
பரிதாபமும் ஏன்...?

பேராசைப் பிடித்த பெரும்பணக்காரனின்
சுயநலமோ...?
இலட்சத்தைக் கோடியாக்கும்
இலட்சியமோ...?

இல்லாதவனின் இயலாமையை.,
சாதகமாய் மாற்றியது
தனவானிவனின் சூழ்ச்சியோ....?

ஏழைக்குப் பிறந்ததினால் இவன்
இலட்சியமும் கருகியதோ...?

காசுக்குப் பதில் காயங்களை
கொடுத்ததுதான் யார்...?

கலைமகளும் கல்விக்குப் பதில்
கந்தகத்தை கொடுத்தாளே...?

தரைச் சக்கரத்தில்.,
இவன்
தன்னம்பிக்கையும் தகர்ந்து
எதிர்காலமும் 
எரிமலையாய் வெடித்துச் சிதறுகிறதே...!!

வண்ண வண்ணக் கனவுகளும்
வான வேடிக்கையோடு கரைந்ததே...!!

சிதறிக் கிடக்கும் காகிதத்தில்.
இவன் வாழ்க்கையும் சிரிக்கிறதே..!!

ஆண்டுதோறும் அடிமைப்பட்டு,
தன் வாழ்வை அடமானம் வைப்பது
நாமும் ஆண்டுக்கொரு முறை
ஆனந்தமாய் இருக்கத்தானா....???

மணிநேர மகிழ்ச்சிக்காய்
மரணத்தை வழங்கும்
வள்ளலோ நாம்....??

அந்நியனாய் நினைப்பதாலே
அவன் அடிமைப்பட்டுக்கிடக்கிறான்..
அண்ணன் தம்பியாய் நினைத்து.,
அவனையும் வாழ விட
நம்மைத் தடுப்பதுதெதுவோ..??

உயிரையே அர்ப்பணித்து
இவர்கள்
நித்தமும் நடத்தும் யாகத்தில்
கலைமகளும், திருமகளும்
வரமளிக்காமல் போனதன் மாயம்தான் என்ன..??16 comments:

 1. உணர்ச்சிகரமான வரிகள்! பண ஆசைதான் பலிகளுக்கு காரணம்! நல்லதொரு பகிர்வு!

  இன்று என் தளத்தில்
  ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_9.html
  நூறாவது பாலோவரும்! கொன்றைவானத் தம்பிரானும்!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6325.html


  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு நன்றி தோழரே..:)

   Delete
 2. ஆதங்கம் வெளிப்படும் கவிதை.மாற்றம் வரவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. வாங்க தோழரே..தங்கள் வருகைக்கு நன்றி..

   Delete
 3. மணிநேர மகிழ்ச்சிக்காய்
  மரணத்தை வழங்கும்
  வள்ளலோ நாம்.//

  அருமையான வரிகள்
  மனத்தை கொளுத்திப்போகும் அற்புதக் கவிதை
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி தோழரே தங்களது வருகைக்கும், வாழ்த்திற்கும்..:)

   Delete
 4. //அவனையும் வாழ விட
  நம்மைத் தடுப்பதுதெதுவோ..??//
  வேறென்ன. சாதிதான்.

  இதற்கு முன்னரும் இதைப்போல பல விபத்துக்கள் நடந்துள்ளன. பலியாகிறவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்தாம். தன் இனத்தை அழித்த கொடுமையைத் தானே கொண்டாடும் சூழ்ச்சி புரியாத விட்டில் பூச்சிகள். அவர்களாக விழித்துக்கொண்டால்தான் விடிவு உண்டாகும்.

  ReplyDelete
  Replies
  1. நாமும் ஒருமித்து பட்டாசுகளின் பயன்பாட்டை புறக்கணிக்கத் தொடங்கி மாற்றத்தைத் துவங்கலாம்..

   Delete
 5. ஆதங்கத்தை அள்ளி வீசியிருக்கும் உணர்வுப் பூர்வமான கவிதை.
  வாழ்த்துக்கள் கவிதாயினி அக்கா.

  ReplyDelete
 6. அவ்வப்போது இதுபோன்ற விபத்துக்கள் நடப்பதும்... அப்போது மட்டும் அரசு இயந்திரமும், மீடியாக்களும் அதைப்பற்றிப்பேசி மறப்பதும் ஆண்டாண்டு காலமாய் தொடர்ந்து வரும் வேதனை... பணமுதலைகளின் பாக்கெட்டுக்குள் அரசு இயந்திரம் அகப்பட்டுக் கிடக்கும் வரை ஏழையின் வாழ்வில் விடிவுக்கான வாய்ப்பேயில்லை என்பதுதான் நிதர்சனமான நிஜம்... ம்ம்ம்... நம்மைப்போன்றவர்கள் வேதனை மட்டும்தான் படமுடியுமே ஒழிய நாமொரு இந்தியன் தாத்தாவாகவோ... இல்லை அந்நியனாகவோ ஆகவா முடியும்?... நம்மால் முடிந்தது ஒன்றுதான்... நமது அடுத்த தலைமுறையை நம் ஒவ்வொருவர் வீட்டிலும் செதுக்கி வளர்ப்பதுதான் நமக்கிருக்கும் ஒரேவழி... ''ஏழைக்குப் பிறந்ததினால் இவன்
  இலட்சியமும் கருகியதோ...?''
  கலைமகளும் கல்விக்குப் பதில்
  கந்தகத்தை கொடுத்தாளே...?
  சிதறிக் கிடக்கும் காகிதத்தில்.
  இவன் வாழ்க்கையும் சிரிக்கிறதே..!!
  மிகச்சிறந்த வரிகள் தோழி... என்னை மிகவும் கவர்ந்தது.

  உயிரையே அர்ப்பணித்து
  இவர்கள்
  நித்தமும் நடத்தும் யாகத்தில்
  கலைமகளும், திருமகளும்
  வரமளிக்காமல் போனதன் மாயம்தான் என்ன..??

  Really super finishing... Hats off friend...

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி தோழரே..//நமது அடுத்த தலைமுறையை நம் ஒவ்வொருவர் வீட்டிலும் செதுக்கி வளர்ப்பதுதான் நமக்கிருக்கும் ஒரேவழி...//உண்மைதான்..குறைந்தபட்சம் எதிர்கால சந்ததியாவது இவற்றிலிருந்து தப்பிக்கட்டும்..

   எமது தனிப்பட்ட கருத்து நாம் ஒவ்வொருவரும் பட்டாசு உபயோகிப்பதை புறக்கணிக்கத் துவங்கினால் என்ன.?எமது இல்லத்தில் நிறுத்தி 6 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது..

   Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__