முகப்பு...

Tuesday 30 October 2012

சிதறும் மனம்...

கோபத்தில் எழும்
கேள்விக்கணைகளை
தொடுக்க நினைக்கும்
புத்தியை
மனம் கட்டிப்போடுகிறது..
அன்புக்குரியவரை
காயப்படுத்திவிடாதே என..!!
***
தவறுசெய்யாமலே
சமாதானக்கொடியை
ஏந்தும்போது சிலநேரம்
வெள்ளைக்கொடி கணக்கவே செய்கிறது..
***
https://www.facebook.com/groups/thamizhkkudil/

https://www.facebook.com/ThamizhkkudilTrust

Monday 29 October 2012

மனம்..




நிழலாய்த் தொடரும்
நினைவுகளை
நினைவு கூர்ந்து நிசமென
நெகிழ்கிறேன்..
விலகியிருப்பினும்
நீ உடன் வருவதாய்
உள்ளம் ஏமாற்றி
உல்லாசமாய் பவனிவந்து
கற்பனையில் காலம் கழிக்கிறேன்...
காதலின் துணையோ(நினைவோ)டு..!

*************

நித்தமும் கர்ப்பிணியாய்
உணர்கிறேன்..
மனம்
ஒவ்வொரு நொடியும்
உனையே நாடுவதால்..!!



Saturday 27 October 2012

உணர்வு...!!!



அன்புக்குரியவனே
நின் இதயத்தில் அமர்ந்து
சிந்தையில் சிறகடித்து
எண்ணத்தில் கருவாகி
கவிதையாய் உருவாகி
காலமெல்லாம் காதல் கொண்டு
வெற்றிக்கு வித்தாகி..
விருட்சத்தின் வேராகி
வாழ்வில் பங்கேற்று
சுகங்களை சொந்தமாக்கி
சுகந்தமாய் மணம் வீசி
சொர்க்கமாய் உன் வாழ்வமை(க்க)ய
விரும்புகிறேன்...!!
*****
உன்னிடம் பேச ஓராயிரம்
விசயம் ஒத்திகை பார்த்திருக்க
ஊடுறுவிய உந்தன் குரல்
எனை மௌனிக்கச் செய்ய
மௌனம் பேசுகிறேன்
நீ
என் மௌனத்தையும் அறிவாய் என்பதால்..
*****


Thursday 25 October 2012

நகரமும், நாகரீகமும்..




நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் காணப்படும் காட்சிகளில் ஒரு சில தங்கள் பார்வைக்கு.  அடுக்குமாடிக்குடியிருப்பில் ஒரு அறை, இரண்டு அறை கொண்ட கட்டிடங்களில் மனிதர்கள் வசிப்பதே இன்று கடினமாக இருக்கிறது..தேவைக்கு என தேவைக்கு அதிகமான வீட்டு உபயோகப்பொருட்கள். மனிதர்களைவிட உபயோகப் பொருட்கள் அதிகமாகிவிட்ட நகர வாழ்க்கையில்...பொழுது போக்கு, நாகரீகம் என செல்லப்பிராணிகளாக வீட்டில் நாய்கள்.  நம் வீட்டில் பேசினாலே பக்கத்துவீட்டிற்கு கேட்கும் அளவு நெருக்கமான வீடுகள். அதில் விடாது குரைக்கும் நாய்கள்..நம் வீட்டில் கூட தொலைபேசியில் பேசமுடியாதவாறு உதவிகள்  செய்கிறது.  வீட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்ளும் இவர்கள் நாய்களை பொதுவான நடைபாதையில்(ஒரு வீட்டிற்கும், மற்றுமொரு வீட்டிற்கும் செல்லும் பொது இடம்) நாயைக் கட்டி வைத்து அதற்கான உணவுகள் எறும்பும், மொய்த்துக்கொண்டு, சில நேரம் நாய் தட்டி கொட்டி மிக அழகாய்த் தூய்மையாய் காட்சியளிக்கிறது. 

தினம் காலை குடியிருப்போர் தம் தம் வீட்டு செல்லப்பிராணியான நாய்களை மலம் கழிக்க செய்ய வெளியில் கூட்டிச்செல்வது.  நேரமின்மை, அவசர உலகம் என நம் முன்னோர்கள் கூறியவற்றைக் கடைபிடிக்க தடை சொல்லும் நாம் நாய்களை காலை அழைத்துச் செல்ல தவறுவதில்லை.  அதிலேயும் மிக முக்கியமா கவனிக்கப்படவேண்டிய நாம் கற்ற நாகரீகம் என்னவெனில்நான் பார்த்தவரை தெருவோர நாய்கள் நடுவீதியில் ஆங்காங்கே மலம் கழித்துப்பதில்லை.  ஓரமாக, பூங்கா, மரத்தடி என்றே செல்கின்றன.  வீட்டு உரிமையாளர்கள் கையில் சங்கிலியால்  பிடித்து அழைத்து வரப்படும் செல்லப்பிராணிகள் நடுவீதியில் மலம் கழிக்கின்றன.  உடல் ஆரோக்கியத்திற்காக காலை நேர நடைப்பயிற்சி செல்லும் பொழுது ஆரோக்கியத்திற்குப் பதிலாக அதிக நோய்களையே அழைத்துவர உதவுகிறது.  ஒருபுறம் குடியிருப்போர் ஆங்காங்கே முறையற்று நிறுத்தியிருக்கும்  வாகனங்கள், மறுபுறம் காலை பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் என காலை நேர நடைப்பயிற்சியே கடினமாகி வருகிறது.அதுமட்டுமன்றி செல்லப்பிராணிகளின் செயல்களால் நடப்பதற்கே சற்று யோசிக்கவேண்டியுள்ளது.  நாகரீகம் எனக் கருதி நடுவீதியில் மலம் கழிக்கச் செய்யும் நாகரீக நகரவாசிகளாகிய நாம்..இயற்கை வாழ்வைத் தொலைத்துவரும் இந்த நேரத்தில் இதுபோன்ற சுகாதாரமற்ற செயல்களை செய்யத் தவறுவதில்லை.

அதுமட்டுமன்றி அடுக்குமாடிக்குடியிருப்பில் கீழ்த்தளத்தில் வசிப்பவர்களின் ஒத்துழைப்பு இன்னும் சற்று அதிகமாகவே இருக்கும்.  தனது வீட்டிற்கு முன் இருப்பதால் சாலையும் தனக்கே சொந்தமென ஆக்கிரமித்து தேவையோ தேவையில்லையோ சில, பல செடிகளைபேருக்கு பயிருட்டு முறையாகப் பராமரிப்பதுகூட கிடையாது.  அவர்களது நோக்கம், யாரும் வீட்டின் முன் வண்டி நிறுத்தி அந்த இடத்தை உபயோகித்துவிடக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கின்றனர்.  சாலையோரம் இரண்டு கீழ்த்தள வீட்டு உரிமையாளரும் இப்படி ஆக்கிரமிக்க சாலையில் வரும் வாகனத்தில் இருந்து ஒதுங்கி செல்லக்கூட சிலநேரம் இடம் இருக்காத வகையிலான ஒத்துழைப்பு.  வீட்டை மிகத் தூய்மையாகவும், அழகாகவும் வைத்திருக்கும் இவர்கள் வீட்டிற்கு வெளியே எப்படியிருப்பினும் கவலை கொள்வதில்லை..தம் வீட்டுக்குப்பைகளை வீட்டுக்கு வெளியே வைக்க தெருவோர நாய்கள் அவற்றை சுத்தம் செய்து தெருவில் வீசி விளையாடி மிகவும் அழகாகக் காட்சியளிக்கும் நெகிழிப்பைகள், உணவு வாங்கி வந்த ப்ளாஸ்டிக் டப்பாக்கள் மற்றும் ஒரு பெண்ணாக இருந்து சொல்ல வெட்கமாக இருப்பினும் இதைப் படிக்கும் யாரேனும் ஒருவர் இப்படிச்செய்திருந்தாலும் தம்மை மாற்றிக்கொள்ள மாட்டார்களா என்ற ஆதங்கத்திலேயே கூறுகிறேன். பெண்கள் மாதவிடாய்க் காலங்களில் உபயோகிக்கும் சானிடரி நாப்கின்...அதைக்கூட நடுவீதியில் வீசியெறியும் அளவிற்கு நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கிறோம். குடியிருப்பின் மையப்பூங்காவில் திருமணம், பிறந்தநாள் போன்றநிகழ்வுகள் நடத்துவார்கள். குடியிருப்போர் நலச்சங்கத்தின் அனுமதியுடன்.  தவறில்லை.. குடியிருப்போருக்கான இடமே அது.  ஆனால், விழா முடிந்தவுடன் நம் வீட்டை சுத்தம் செய்வது போல் சுத்தம் செய்துவிட்டுப் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாளை நமது குழந்தைகளும் அங்கு விளையாட நேரிடும், நாமும் அங்கு உட்கார்ந்து கதை பேசுவோம் என்ற உணர்வே இல்லாமல்,மிச்சம் மீதி உணவு வகைகள், உணவு தயாரிக்க உபயோகித்த ஒரு சில வேண்டாத பொருட்கள், சாப்பிட்ட காகித தட்டுக்கள், நெகிழிப்பைகள், தண்ணீர் குவளைகள் என அனைத்தும் ஆங்காங்கே வீசப்பட்டு மிக மிக அழகாக நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள உதவி வருகின்றனர். தண்ணீர் தொட்டி நிரம்பி வழிந்து அது எங்கும் சென்று நீர்த்தேக்கம் ஏற்படுத்தும். பார்த்து மோட்டாரை நிறுத்த மாட்டார்கள்.  நான் தானே மின்சாரத்திற்கு பணம் கட்டுகிறேன் உங்களுக்கென்ன எனக் கேட்கும் நல்லோர்கள்.  தன் வீட்டைத் தூய்மைப்படுத்தி அந்தத் தண்ணீரை நடு வீதியில் வீசி அழகுபடுத்துபவர்கள் என அடுக்குமாடிக்குடியிருப்பில் மனதை வலிக்கச்செய்யும் இதுபோன்ற பல காட்சிகள்  நித்தமும் பார்க்க நேரிடுகிறது.  இந்த வளர்ச்சி பெருமை கொள்ளக்கூடியதா..?? என சற்றே சிந்திப்போம்.

இதை ஏன் இங்கு கூறுகிறேன் எனக்கேட்கலாம்.  நம்மில் யாரேனும் இதுபோன்ற செயல்கள் செய்பவராக இருப்பின் இதைப்படிக்கும்போது இப்படியெல்லாம் இருக்கிறதா என எண்ணிப்பார்த்து இனி அதுபோல் செய்யாமல் தவிர்க்கலாமே என்றுதான் இந்தப்பகிர்வு. நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் சாதாரணச் செயலாகவேத் தோன்றும்.  ஆனால் அதன் பக்கவிளைவுகளும், அதனால பிறருக்குத் தோன்றும் சங்கடங்களும் நாம் அந்த இடத்தில் இருந்து உணர்ந்து பார்க்கவே புரிய வரும். எனவே அந்த இடத்தில் நீங்கள் இருந்தால் தங்கள் மனநிலை எப்படி இருக்கும் என சற்றே சிந்தித்து இதுவரை அப்படி செய்திருந்தால் யாரேனும் ஒருவர் தம்மை மாற்றிக்கொண்டாலும் மகிழ்ச்சியே.  தங்கள் குடியிருப்புகளில் இதுபோன்ற நிகழ்வுகள் கண்டீர்கள் எனில் சற்றே புரியவைக்க முயற்சி செய்யுங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு.  நல்லவை நோக்கி பயணிப்போம்.  ஆரோக்கியமான, முன்னோர் காட்டிய யார் மனதும் புண்படாத அனைவருக்கும் மகிழ்ச்சி வழங்கிய நாகரீகத்தைப் பின்பற்றத் துவங்குவோம்.  

Wednesday 24 October 2012

வானவில்..


சோப்புநுரையில்
குழந்தைகள் ஊதிய
சோப்புக் குமிழி...


வட்ட வட்ட வானவில்லாய்
என் கன்னமும்,
எண்ணமும் வருடிச்செல்ல


உள்ளம் பூரித்து
முத்தமிட
கையில் அள்ளியெடுக்க..


அடிமைப்பட்டிருந்த வானவில்
தன்னுயிர்த் துறக்கிறது..
மற்றுமோர் வானவில்லுக்கு
மறுஜென்மம் கொடுக்கும் முயற்சியில்
குழந்தை...!!!


Tuesday 23 October 2012

நவராத்திரியும், பிண்ணனியும்...



நவராத்திரியின் பிண்ணனியில் நிகழும் நான் கண்ட சில சம்பவங்களை இங்கு உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.இந்தப்பதிவு யாருடைய நம்பிக்கையையும்,உணர்வுகளையும் குறை கூறுவதற்காக அல்ல.  சற்று மாற்றி யோசிக்கலாமே என்ற எண்ணத்தில் பகிர்கிறேன்.

*****

நவராத்திரி என்றவுடன் அழகிய பொம்மைகள் நம் வீட்டை அலங்கரிக்கும் கொலுவும், வண்ண வண்ண புத்தாடைகள், வகை வகையான சுண்டல் மற்றும் பலதரப்பட்ட நண்பர்களின் சந்திப்பு என நம்மை பல வகையிலும் மகிழ்விக்கும் நினைவுகள்தாம் நம் நினைவிற்கு வரும்.இதன் பின்னணியில் இருக்கும் சில விசயங்களை பார்ப்போம்.

வட இந்திய நவராத்திரி:  வட இந்தியாவிலும்  நவராத்திரி சிறப்பாக கொண்டாடுவார்கள். கொலுவைப்பதில்லை.  நவராத்திரியின் இறுதி 4 நாட்கள் குடியிருப்பின் பகுதிகளில் கலைநிகழ்ச்சிகள்  நடைபெறும்.  குடியிருப்பில் இருக்கும் குழந்தைகளின் நடனம், பாட்டு, ஓவியம் என பல நிகழ்ச்சிகள்  இடம்பெறும்.  மகிழ்வான விசயம்தான்..எனினும், துர்க்கா பூசையில் குழந்தைகளின் வயதிற்கு மீறிய சினிமாப்பாடல்களின் நடனம், பாட்டு இவை அவசியம்தானா... இசைக்குழுவினரை அழைத்து இசை நிகழ்ச்சி.  அவர்களாலும் அதே சினிமா பாடல்களே இசைக்கப்படும்.  கலை நிகழ்ச்சி என்றாலே சினிமா பாட்டு மட்டும்தானா..?? நவராத்திரி ஏன் கொண்டாடுகிறோம் என்பதை விளக்கும் வகையில் ஒரு நாடகமாக அரங்கேற்றம் செய்யலாம். கருத்தாலோசனை, குழந்தைகளுக்கிடையே சிறு சிறு தலைப்பில் அவரவர் வயதுக்கேற்ப பட்டிமன்றம் என பல நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தலாம்.  அதோடு ஒரு சம்பிரதாயம் கடைபிடிக்கும்பொழுது அது ஏன் கடைபிடிக்கப்படுகிறது என்பதை வரும் சந்ததியினர் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவுபடுத்தி அவர்களை பின்பற்ற செய்யலாம். பல நிகழ்வுகள் சம்பிரதாயத்திற்கு பின்பற்றப்படுகிறதே தவிர ஏன் என்று அறியாமலேயே பின்பற்றப்படுகிறது.  எனவே அதன் பிண்ணனியில் விரயமாகும் பொருட்களையோ, மனித உணர்வுகளையோ கருத்தில் கொள்ள மறந்து விடுகிறோம்.

அடுத்து, நவராத்திரியின் துவக்கநாள் முதல்  பெண்கள் விரதம் இருந்து அஷ்டமி திதி சிலரும்,நவமி அன்று சிலரும் விரதம் முடிப்பார்கள்.  முடிக்கும் சமயம் ஒன்பது கன்னியாக்குழந்தைகளை(கஞ்சக் என இங்கு அழைப்பது வழக்கம்) அழைத்து அவர்களுக்கு உணவு அளித்து பிறகு தம் தம் விரதம் துறப்பார்கள்.  நல்ல விசயம். ஆனால்சில நெருடலான சம்பிரதாயங்களை மாற்றிக்கொண்டால் நன்றாக இருக்கும்.  விரதம் முடிப்பவர்கள் அனைவரும் ஒன்பது குழந்தைகளை அழைப்பார்கள்.  எனக்குத் தெரிந்தவரை அவர்கள் ஒன்பது குழந்தைகளுக்கு உணவளிப்பது என்பது தேவிக்கு உணவளித்து பிறகு தாங்கள் அருந்துவதாக சம்பிரதாயம்.  ஒரு குடியிருப்பில் உதாரணத்திற்கு கன்னியாக்குழந்தை (அதாவது பருவமடையாத பெண் குழந்தைகள்) 40 குழந்தைகள் இருப்பின் அனைவரும் தம் குழந்தைகளை அனைத்து வீட்டிற்கும் அனுப்ப மாட்டார்கள். 50 வீட்டில் இன்று விரதம் முடிக்கிறார்கள் எனில் அத்துனை வீட்டிற்கும் 40 குழந்தைகளில் 25 குழந்தைகளே திரும்ப திரும்ப செல்லவேண்டும்.  அனைவரது வீட்டிலும் பூரி, கேசரி(இங்கு அல்வா என சொல்வார்கள் வண்ணம் சேர்க்காத ரவை கேசரி), கொத்துக்கடலை சுண்டல். இதுவே பிரசாதமாக குழந்தைகளுக்கு வழங்கப்படும். கூடவே 10 ரூபாய், அல்லது 5 ரூபாய்..ஒரு சிலர் சிறிய பரிசுப்பொருட்கள் வழங்குவார்கள். ஹேர்பின், பென்சில் போன்று.  10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எவ்வளவு சாப்பிடுவார்கள்..??  அதிகபட்சம் 2 வீட்டு பிரசாதம்..மற்றவை அனைத்தும் மொட்டை மாடியிலும், மரத்தடியில் மாடு சாப்பிடும் என போடப்பட்டு ஆங்காங்கே உணவுப்பொருட்கள் சிதறியிருக்கும்.  சக மனிதனுக்குக் கிடைக்கவேண்டிய உணவு சம்பிரதாயம் என்ற முறையில் குப்பையிலும், மரத்தடியிலும் கிடப்பதைக்காண ரத்தக்கண்ணீர் வராத குறைதான்.  குழந்தைகள் அனைவரது வீட்டிற்கும் செல்வதற்கான காரணம் அவர்கள் கொடுக்கும் 5, 10 ரூபாய் மற்றும் தோழிகளுடன் பேசிக்கொண்டு அங்குமிங்கும் சென்று விடுமுறை கழிப்பது அவர்களுக்கு அது ஒரு பொழுதுபோக்கு போன்றே..இதன் ஆழம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.  ஆனால் பெரியவர்களாகிய நாம் அறிந்தவர்கள்தானே.  அனைவரும் ஒரே உணவை பலமுறை ஒரே நேரத்தில் வழங்க அவர்களால் சாப்பிட இயலுமா..?? சாப்பிட மாட்டார்கள் என அறிந்தும் வழங்குவதன் காரணம் என்ன. தேவிக்கு உணவளிப்பதாக எண்ணுபவர்கள் இதை சிந்திக்காமல் இன்னும் சம்பிரதாயமாக தொடர்வது ஏன்..? இன்னுமொரு வருத்தம் என்னவெனில் அந்தக்குழந்தைகளை தட்டு எடுத்து வா என கூறி அனுப்புவார்கள் சிலர்.  தேவி வீடு வீடாக தட்டு ஏந்திச் செல்கிறாளா..?? 

சில யோசனைகள்: அனைவரும் ஒரே நாளில் விரதம் முடிக்கும் காரணத்தினால், குழந்தைகளை அழைத்து தங்கள் சம்பிரதாயப்படி பூசை முடித்து பிரசாதமாக ஒரு ஸ்பூன் மட்டும் குழந்தைக்கு சாப்பிட அங்கேயே கொடுத்து வீட்டிற்கு பிஸ்கட், பழம், உலர்ந்த பழம், அல்லது பரிசுப்பொருட்கள் என கொடுக்கலாம். விரயமும் ஆகாது அதே சமயம் தங்கள் வீட்டு பிரசாதத்தை குழந்தைகள் சாப்பிட்ட மன திருப்தியும் இல்லத்தாருக்கு கிடைக்கும்.  அல்லது ஒவ்வொரு குழந்தைக்கும் குறைந்த பட்சம் 20 ரூபாய் செலவாகும். மொத்தம் 180/- ரூபாய் செலவழிப்பதற்கு பதில் வீட்டிற்கு ஒரு குழந்தை அழைத்து ஒரே குழந்தைக்கு நல்ல ஆடை அல்லது அதற்கு தேவையான ஒரு பொருளை வாங்கிக் கொடுக்க குழந்தையும் மகிழும்.  உணவுப்பொருட்களும் விரயமாகாமல் இருக்கும். அல்லது அனைவரும் கலந்து பேசி தம் தம் வீட்டு பிரசாதத்தை கலந்து தெருவோரம் யாசிப்பவர்களுக்கு, ஆதரவற்றவர்களுக்கு என ஒரு இடத்தில் வழங்க ஏற்பாடு செய்யலாம்.  சம்பிரதாயம்,பக்தி என்ற பெயரில் சக மனிதனுக்கு கிடைக்கவேண்டிய உணவுப்பொருட்கள் விரயமாக்கப்பட்டு வீதியில் கொட்டப்படுவது மனதை வலிக்கச் செய்கிறது.  இவற்றை என் தோழிகளிடம் பேசி புரியவைத்து தற்சமயம் ஒரு சிலர் உணவாக வழங்காமல் பிஸ்கட், பழம் என்றே குழந்தைகளுக்கு வழங்குகிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவரவர் சம்பிரதாயத்தையும், பக்தியையும், நம்பிக்கையையும் குறை கூறவில்லை.  அதை சற்றே மாற்று வழியில் யோசித்து விரயமாகாமல் பயன்பெரும் வகையில் செயல்படுத்த முயற்சிக்கலாமே என்றே இந்தப் பதிவு.

தென் இந்திய நவராத்திரி: தென் இந்தியாவின் நவராத்திரியில்,  நவராத்திரி துவங்கியது முதல் அழகழகான பொம்மைகளை படிகளமைத்து அழகு படுத்தி தம் வீட்டிற்கு அனைவரையும் அழைத்து, வரும் நண்பர்கள், உறவினர்களுக்கு நித்தமும் விதவித உணவு வகைகளை வழங்கி உபசரித்து ஒருசில பரிசுப்பொருட்கள் வழங்கி மகிழ்வது பழக்கம்.  எந்த சம்பிரதாயத்திற்காக ஏற்படுத்தப்பட்டது என்பதை ஆராயவிரும்பவில்லை.அது அவரவர் நம்பிக்கை, பக்தி சார்ந்த விசயம் என்பதால் அந்தப்பக்கம் போகவேண்டாம்.  இன்றைய சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்க அனைவரும் ஒருசேர சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது என்பதாலும்,இயந்திரத்தனமான நகர வாழ்வில் சற்றே மன மாறுதலைக் கொடுக்கிறது என்பதாலும்,இன்றளவும் கடைபிடிக்கப்படுவது அனைவருக்கும் மகிழ்ச்சியையே அளிக்கிறது.  வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகளை குழந்தைகள் கண்டு களித்தும், நண்பர்கள் வீட்டிற்கு சென்றும், நண்பர்களை தம் தம் வீட்டிற்கு அழைத்தும் தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருகின்றனர்.மிகவும் நல்ல விசயமே.

வட இந்தியாவில் குழந்தைகளை அழைத்து பரிசுப்பொருள் கொடுத்து மகிழ்விப்பதுபோலவே இங்கும், திருமணமான பெண்கள், பருவமடையாத கன்னிகளை அழைத்து பூசித்து அவர்களுக்கு உடை, மற்ற பொருட்கள் வாங்கிக்கொடுப்பது வழக்கம்.  தன் இல்லத்துக்கு வரும் மங்கையர்க்கு மஞ்சள், குங்குமம் வெற்றிலைப் பாக்குடன், வசதியிருந்தால் புடைவையும் வைத்து வழங்கிச் சிறப்பிப்பார்கள். அதன் நோக்கம் இல்லாதவர்களுக்கு இதை காரணமாக வைத்து தம்மால் இயன்றதை மற்றவர்களுக்கு வாங்கிக்கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கலாம், காரணம் எதுவாக இருப்பினும் நல்ல செயல் என்பதால் அதை கடைபிடிப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.

இருப்பினும், இங்கும் ஒரு சில நெருடலான விசயங்கள் கண்களுக்குப்படத்தான் செய்கின்றன.  வேற்றுமை மறந்து மகிழ்ச்சியாக இருப்பதற்காக கடைபிடிக்கப்படும் இதுபோன்ற சில பண்டிகைகளிலும் வேற்றுமையை காட்டத்தான் செய்கின்றனர்.  கொடுக்கப்படும் பரிசுப்பொருட்கள், உடைகள் வசதி இல்லாதவர்களாக பார்த்து வழங்கினால் கொடுப்பவர்களுக்கும் மகிழ்ச்சி, பெற்றுக்கொள்பவர்களுக்கும் மகிழ்ச்சி.  ஆனால் நடப்பதோ வேறு.  யாரிடம் அதிகம் வசதிகள் இருக்கின்றனவோ அவர்களையே திரும்பத் திரும்ப அழைத்து உடை வாங்கி உபசரித்து அனுப்புகின்றனர் பலர்.  இல்லாதவர்களை ஏளனமாக பார்க்கவும் செய்கின்றனர்.  ஒருவேளை அந்த நேரத்தில் வசதி குறைந்தவர்களும் வர நேரிடின் தனி தனி பரிசுப்பொருட்கள் உடைகள் வைத்திருப்பார்கள் தர வாரியாக தருவதற்கு.  எதன் அடிப்படையில் இப்படி தரம் பிரித்து தம் தரம் தாழ்த்திக்கொள்கின்றனர் தெரியவில்லை.  இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்வதே உண்மையான மகிழ்ச்சியாக இருக்கும். இல்லாதவர்களுக்கு வழங்கினால், நீங்கள் கொடுத்ததை உபயோகிக்கும் ஒவ்வொரு முறையும்  தங்களை நினைவுகூறுவார்கள்.  அதே வசதியானவர்களுக்கு மட்டும் பார்த்து பார்த்து உங்களால்  வழங்கப்படும் உடையும், பரிசுப்பொருட்களும் உங்கள் வீட்டு கொலு பொம்மைபோல் அவர்களது அலமாரியில்  கொலுவீற்றிருக்கும் என்பதை மறவாதீர்கள். சம்பிரதாயத்தை மதிக்கத் தெரிந்த நாம் இனியாவது சக மனிதனது உணர்வையும் மதித்து மனிதம் வளர்க்க இதுபோன்ற பண்டிகைகளை பயன்படுத்திக்கொள்வோம்.