Monday, 7 May 2012

விடியலை நோக்கி....
தமிழ்த்தாயின் ஆசிபெற்று
கலைமகளின் அருள்கொண்டவனை
அதிர்ஷ்டம் அணுகாதது ஏனோ...??
கல்லூரியில் இடம்கிடைக்க காலத்தால்
அலைக்கழிக்கப்பட்டு..
படிப்பில் முதலானவனை
பதவியும் பின்னுக்குத் தள்ளியதே....!!

என்மன அமைதிக்குதவா
மருத்துவத்தை
நானுமறிந்து பயனென்ன..??

அரிய கலைகள் பலகற்றும்
அவனியில் ஒளிரா விளக்காய்
விளங்காமல்
அண்டசராசரமும் வியக்கும்வண்ணம்
நானும் திகழ்வேனே......

ஆரூடம் கூறும் எனக்கு
ஆறுதல் கூறவும் ஆளில்லாமல்
நானறிந்த ஜாதகம்
எனக்கு சாதகமற்றுப்போனாலும்
சாதிக்காமல் விடுவேனோ.....??!

இரசிகனாய் இரசித்து
கவிஞனாய் திகழவிரும்பியவனை...
கலையுலகமும் அலட்சியப்படுத்த
என் கவித்திறனும் வலுமைகொண்டதே.....!

கர்ணனின் உயிர் காக்கா
கவசகுண்டலமாய்
வித்தைகள் பல கற்றும்..
காலதேவன் எனைக்கைவிட
கரைசேரா கப்பலாய் தவிக்காமல்
கலங்கரை விளக்காய் அமைவேன் நானும்...!!

நாலுபடி ஏறவே
எட்டுபடி இறங்குகிறேன்..
வெற்றிக்கு வித்தாகும் என் வீழ்ச்சியுமே.....!!

தோல்வியுமெனை
தோள்பிடித்துத் தூக்கியே
வெற்றிப்படியில் ஏற்றுகிறதே..........!!

அம்புப்படுக்கையில் அயர்ந்த பிதாமகனாய்
இளமையில் அமைந்த முள்படிக்கையை
விரும்பியே ஏற்றேன்....
முதுமையில் அமையும் மலர் படுக்கைக்காய்...!!!

அந்திநேர ஆதவனாய்
வெற்றித்திருமகளும் மறைந்திருக்க
கதிரவனைக் கண்ட பனித்துளியாய்
கரையுமே என் கவலைகளும்......

விடியும் நாளையென
விடியலுக்காய்  காத்திராமல்
விதிக்கும் விதிசெய்து
விடியலையும் வசப்படுத்தி
விடியச்செய்வேன்……..!!!


Saturday, 5 May 2012

காகித ஓடம்...!!!மனதில் மேடையமைத்து
மணமேடையேற மறுத்தாய்..!!

உள்ளத்தால் இணைந்து
உறவால் பிரிந்து
உள்ளத்தில் வந்து, சென்று
எனைக் கொள்ளாமல்
கொல்வதேனோ...??

அகத்தில் இருந்த எனை
புறம் தள்ளி..
அந்தஸ்துடையவனை
அகமுடையவனாக்கி
எனை அந்நியனாக்கினாய்...

காகித ஓடமாய்
நீ  கொண்ட காதலுமே
கரைசேராமல் காணாமல் போனதே...!!

அகமிருந்தவளை..,
அகமுடையவனோடு
சந்திக்க..
விதியின் விளையாட்டை
வினோதமாய்க் காண்கிறேன் நானும்...!!!

செடியேறா பறித்த மலராய்
நம் காதல் நினைவுகளால்
அனு, அனுவாய்
சித்திரவதையனுபவிக்க...

மனதையாண்ட
மங்கையின் மனம்
மனதை வருட...
மரணத்தை நாடச்செய்யுதே
மனமுமே...!!

மணமேடை துறந்த மங்கையவளுக்காய்
மரணத்தை நாடியே..
மசக்கையுற்று ஐயிரு மாதங்கள்
எனைச் சுமந்த அன்னையை
ஆயுளுக்கும் அவதிக்குள்ளாக்கவும் வேண்டுமா...??

அன்னையின் அன்பினில்
அகிலமே இயங்க..
அன்பு மகனின் துக்கமா
தூள் தூளாகிப்போகாது.....????!!!!


Friday, 4 May 2012

உனக்குள் நான்....!!

அகமுடையவனே...!!
அன்பு காட்டுவதில்,
அன்னையாய்....

வளர்ச்சிக்கு வித்திட்டு
ஆலோசனை கூறி வழிகாட்டும்போது,
தந்தையாய்.....நானறியா எனை
அறியவைக்கும்போது...
பரமஹம்சனாய்..

பாசம் காட்டி வழிநடத்தும்
சகோதரனாய்...

ரசிப்பதில் நல்ல ரசிகனாய்...
குழந்தையாய்…..

மனம் சோர்வடையும்போது
நட்பிற்சிறந்த கர்ணனாய்...

பாதுகாக்கும்போது
நல்ல தளபதியாய்..

மனதை ஆட்கொண்டிருக்கும்
இறைவனாய்...

யாதுமாய் எனை வியாபித்தவனே...
உனக்குள்
நான் யாராக இருக்கிறேன்...????


Wednesday, 2 May 2012

தெருவோர நட்சத்திரம்...


வாழ்வைத் தொலைத்த 
நட்சத்திரம்
வாழ்வதோ இருட்டினில்..

வீதிக்கு வாக்கப்பட்டோம் 

விதியின் விளையாட்டால்..!!

இரவு ராணி
,விபச்சாரி, 
விலைமாது
, வேசி
தெருவோர நட்சத்திரமென

பட்டங்கள் பல படிக்காமலேயே.....!

விரும்பா வாழ்வினில்..
விதியும் சதிசெய்ய...

விமர்சனத்திற்கு உள்ளாகும்...

மாதர்கள்..விலையாய்...!!


அறியாவயதில் ஆண்களுக்கிரையாய்...

ஆடம்பரத்திற்கு அடிமையான

வறுமையில் தேகத்தின் விலையாய்.

விலைமாந்தர்களாய்..!!


நட்சத்திரமாய் ஒளிர விரும்பியே

வீட்டைத்துறக்க நாள்தோறும்-
 
துறந்து மிளிரும்

தெருவோர நட்சத்திரமாய்..


பதவிக்கும்
, பேராசைக்காரனுக்கும்
பகடைக்காயாய்...

சோம்பேறிகளுக்குப்
 
பணம் காய்க்கும் மரமாய்..

உடல்பசித்தோருக்கு உணவகமாய்...


பழகிப்போன படுக்கைப்பகிர்வால்

கடவுளுக்கும்
,கல்லறைக்கும் 
செல்லாமல் கசக்கப்பட்ட மலர்கள்..

இவர்கள்......!!


இல்லத்தில் ஒளிவீசி
 
இன்பமயமாய் வாழவே
 
இன்றுவரை போராட
 
ஏமாற்றமே பரிசாய்...!!!


நிலவில்லா பவுர்ணமி...


விஞ்ஞானிகளையும்
வியக்க வைத்த
என்னவளே..!!

நீயில்லா
இப்பாரினிலே..
நிலவும் மறைந்து
நிரந்தரமாய் அமாவாசை
ஆகாயத்தில் ஆட்சிபிடிக்க....!!

பௌர்ணமி தொலைத்த
ஆகாயமோ
காலனை நிந்திக்க...
செய்வதறியாக் காலனும்...
கரம் கூப்பி உனை திருப்பியனுப்ப...

உலகம் காணா விந்தையாய்..
உள்ளத்தில் குடிகொண்ட
சொர்க்கத்தை சுற்றிப்பார்த்த சுந்தரி
இல்லாளாய் இல்லத்துள் புகுந்து
சொர்க்கத்தை கொடுத்தாளே..!!

கதிரவன் வந்தவழியே
வருணனும் வந்திறங்கி
கனவில் கண்ட சொர்க்கத்தைக்
காணாமல் செய்தானே.....!!!