Thursday, 26 April 2012

ஆறுதல் கொள்வாயோ...??என்னுள்ளத்தில் குடிகொண்டவனே..
உடைந்த உந்தன் குரல்
செவியில் திராவகமாய்ப் பாய்ந்து
எனை செயலிழக்கச்செய்த
உன் சோகத்தை என் தோளிறக்கி
சுகத்தை உனக்கு சொந்தமாக்கிக்கொள்......

தகப்பன்சாமியிழந்த
நீயுமங்கே த(னி)வித்திருக்க
உமக்கு தைரியந்தான் சொல்வதெப்படி..??

ஒளி வீசும் உன் கண்களுக்கு
கண்ணீரும் திரைபோட...
உனைக் காணும் தைரியந்தான்
எனக்கேது..??
முந்திவரும் கண்ணீரை
முந்தியிலே ஏந்துகிறேன்...

கம்பீரமாய் ஒலித்த குரலும்
கரகரத்து எனைக் கலங்கடிக்க...
கேட்கும் திறனில்லா
வரமும் கேட்டேனே....!!

விதியின் விளையாட்டினை
வேடிக்கைக் கண்ட நானும்..
இன்று
விரும்பியவன்
விதிக்கு விளையாட்டாக..
வெதும்பும் என் மனம்
வேதனையில் துடிக்கிறதே...!!

காலனைக் காண
கணந்தோரும்
கணக்கிலடங்கார் காத்திருக்க
அழையாக் காலனுமே
அவசரமாய் அங்கு வந்து சென்றதேனோ...??

என்னவனே எழுந்துவா...
இடரினை எதிர்த்து வா...
சாபம் பெற்றவனல்ல...
நீ
சாதிக்கப்பிறந்தவன்..!!!

சாதனை படைத்து
உனை சரித்திரம் பேசவே
சக்தியனைத்தையும் மீட்டு வா...

நீ கவலைமறந்து
காலமெல்லாம் பயணிக்க...
காத்திருக்கிறேன் காதலோடு..!!! Wednesday, 18 April 2012

விரும்புகிறேன்....!!

என்னவனே...
உள்ளத்து உணர்வுகளை
உணர்த்த வார்த்தையற்ற எனை
ஐயிரண்டு விரல்களால்
ஆரத்தழுவி..
என்னிதயத் துடிப்பை
உன்னிதயத்தால் உணர்ந்துகொள்...

துவண்ட உள்ளம்
உன் தோள் சாய..

கன்னம் வருடி
கண்களை இளைப்பாற்றி
மூச்சு தகிக்க
நீ இடும் ஒற்றை முத்தம்
மின்சாரமாய் என்னுடலில் பாய்ந்து தகிக்க
என் மடிமீது உன்தலைசாய்த்து..
என் விரலுக்கு சொடுக்கெடுக்க..
நானும்
உன் தலைகோதி....
உறங்கா உனை உறங்கவைத்து...

வறண்ட உன்னிதழை
என்னிதழால் ஈரப்படுத்தி...
தளர்ந்த உன்னுணர்வை
உயிர்ப்பூட்டி...
என்னிடத்தே உன் கவலையிறக்கி..
சுகமனைத்தையும் உனக்கு சொந்தமாக்கி..

உன் சிந்தனையில் சிறகடித்து
பாரதியின் கண்ணம்மாவாய்
சிம்மாசனமிட்டு...
வெற்றிப்பயணத்திற்கு
மலர்ப்பாதையமைத்து..

மனதின் மனம் அறிந்தவள்

ஐயிரண்டு மாதம்
உன்னுயிரை சுமந்து
உயிரின் உயிரான உயிருக்கு
உயிராக பரிசளிக்க..

நீ என்றும் இன்புற்று...
இறுதிவரை எனைப் பிரியாமல்
இணைந்திருக்க விரும்புகிறேன்..!

Monday, 16 April 2012

வசந்தத்தை நோக்கி....!!சூரியனும் எனை சுட்டெரிக்க..
வருணனும் வஞ்சிக்கிறான்..

பசிக்கு வறண்ட மார்பை நோக்கும்
குழந்தையாய்..வறண்ட நாவுடன்
பூமித்தாயின் வெடித்த இதயத்தை
நோக்கியபடியே நானும்.....!!
நிற்கயியலா நடுக்கமுடன்
துவண்ட எனை சாய்க்க
தோள் தேட.....

படைத்தவனும்
பாராமுகம் காட்ட..
வளர்ப்பவனோ வாஞ்சையற்றுப்போக..

ஒரு துளி நீரில் உயிர் பெறவே
நானும் ஓயாமல் காத்திருக்க...
உயிர்கொடுக்கும் நீரையுமே
விரயமாக்கும் வினோதமிங்கே....!!!

வருங்கால சந்ததிக்கே
வண்ணமலரும்..
கனியுங் கொடுத்து
வசந்தத்தை அளித்திடவே
விரும்பிய என் கனவும்
விருப்பமின்றிக் கருகியதே...!!

வாடிய எனக்கு வாழ்வளிக்க
வள்ளலாரும் வரவேண்டுமோ..??


Thursday, 12 April 2012நீ
கேட்காத நேரத்தில்
கொடுக்க விரும்பிய மனம்..
நீ கேட்டவுடன்
கொடுக்க மறுக்கும் மனம்..
எனைத் தடுப்பது எது...??

நினைக்கும் மனம்,
மறுக்கும் மனம்...
நினைப்பதை தடுக்கும் மனம்..
தடுப்பதை மறுக்கும் மனம்...
தடுக்கும் மனத்தைத் தவிர்ப்பது எப்படி...??
தடுப்பதை தடுத்துவிடின்..
கொடுப்பதை கொடுக்கலாமே..

கொடுப்பதைத் தடுப்பதை தடுப்பதற்கான
கால இடைவெளி குறைவெதெப்படி....???
குறைப்பதெப்படி...??Monday, 9 April 2012

இறுதிவரை....ஐந்து வயதில்
அகமகிழ ஆடிப்பாடி விளையாட

பள்ளியிலும் தொடர்ந்த நட்பு...
பருவத்தே காதலாய் மலரபால்ய நட்பே காதலாய் மாற..
விரும்பிய காதலும்
விவாகத்தில் முடிய....
வியக்கும்வகையில்
ஆதர்ச தம்பதியாய் விளங்கி...

வயோதிகத்திலும்
வாலிபமாய் நம் காதல் தொடர..

எவரும் நுழையமுடியா நம் வாழ்வில்
எமன் மட்டும் நுழைந்ததென்ன..?

நீ
எனைமட்டும் தனியே
தவிக்கவிட்டு சென்றதென்ன..??

நீயில்லா
நொடிப்பொழுதும்.,
நரகமாய் காட்சியளிக்க..
நானும் வந்தடைந்தேன்
என் நாயகி உனைத்தேடியே...:(:(

Sunday, 8 April 2012

புன்னகை.....பொன்னகை வெறுத்து...
வினவா வினாக்களையும்.,
விரக்தியையும்.,
ஐயத்தையும்..
மனிதர்களிடம் கிட்டா மனிதத்தையும்..
விடத்தையும் தேனாய் கொடுக்கும்
மனிதர்களையும்..


ம(றை)றக்கத் தறித்த பூவையின் புன்னகையே
புதிராய் விளங்கி வினாயெழுப்ப...

ஒற்றைப் புன்னகையில் மறைந்திருக்கும்
உண்மைகளை விளக்கமுடியாப்
பாவை யவளோ..!!!
புன்னகையையும் தவிர்த்துப் பயணிக்க
எத்தனிக்கிறாள்....
புதியதோர் பாதையில்....!!!          


***************************************************************

விளக்கு....உன்மீதான காதலில்...
இதயத்தை அகலாக்கி...
கண்ணீரை எண்ணெய் ஆக்கி...
நினைவுகளைத் திரியாக்கி....
உடம்பை எரித்துக்கொண்டிருக்கிறேன்...
உன் மனமென்னும் வெளிச்சத்திற்காக...!!


**************************************************************************


Saturday, 7 April 2012

மனம்.....ஐந்து வயதில்
அழகிய  பொம்மைக்காய் ஏங்கிய மனம்..
அப்பா வாங்கிக்கொடுத்ததும்
அதிசயமாய்ப் பார்த்த மனம்..ஆறு வயதில்
ஆற்றில் நீந்த ஆசைபட்ட மனம்..
நீரின் ஆழத்தைக் கண்டு
அஞ்சிய  மனம்...

ஏழு வயதில் மிதிவண்டி ஓட்ட
நினைத்த மனம்..
நெருங்கியவுடன் நடுங்கிய மனம்...

எட்டு வயதில் எட்டி நின்று..
வீர விளையாட்டை
வேடிக்கை பார்த்த மனம்..
விரும்பி சேர்ந்து விளையாட விரும்பா மனம்..

பள்ளிசெல்லுமுன்
பிரபஞ்சத்தையே அறிய விரும்பிய மனம்
பின் படிப்பே சுமையாய் உணர்ந்த மனம்..

பருவத்தில் காதலை தூரமாய் இரசித்த மனம்..
பயத்தால் நெருங்க மறுத்த மனம்..

பாதியிலே படிப்பை மறுத்து..
பணியை நாடிய மனம்..
படிப்பினருமை உணர்ந்து
படிக்க விரும்பிய மனம்...

உல்லாசமாய் சுற்றித்திரிந்த மனம்..
விவாகத்தால்...,
ஓரிடத்தில் அமைதியாய் ஆன மனம்...

உறவுகளை நோக்கி பயணித்த மனம்..
வரவே உறவென்பவர்களிடையே வாழும் மனம்...

கட்டுக்கடங்கா கோபத்தைக்
கொண்ட மனம்....
கணவனுக்காய் கோபத்தைக் கட்டுக்குள்
வைத்த மனம்..

உலகமே வீடாய் எண்ணும் மனம்..
வீடே உலகமாய் கருதும் மனம்..

பேசும் கலையறிந்த  மனம்...
பிறர் பேசுவதை மட்டும் ரசிக்கும் மனம்...

தாயின் அன்பைச் சுமந்த மனம்..
தாயாய் ஆக விரும்பிய மனம்..
தலைச்சன் பிள்ளையிழந்து வருந்திய மனம்..
தனக்கென பிறந்தவளுக்காய் மாறிய மனம்...

ஆண்டுக்கொரு பிள்ளைப் பெற்று..
வளமாய் வாழ விரும்பிய மனம்..
ஒன்றே போதுமென ஒருமித்து
வாழத்தொடங்கிய மனம்...

வாரிசுக்காய் வாழும் மனம்..
வயோதிகத்தைக் கண்டு மருளும் மனம்..

பருவத்தே காதலுக்காய் பயந்த மனம்..
காலன் வரும் வேலையில் காதல் கொள்ளும் மனம்..
இச்சாமரணம் கிட்டாதோவென ஏங்கும் மனம்..
கிட்டும்போதே கிட்டும் மரணம்
என எண்ணும் மனம்..

ஓடும் மனத்தை
அடக்க நினைக்கும் மனம்..
அடங்க மறுக்கும் மனம்..
அடங்க மறுக்கும் மனத்தை அடக்கி
அமைதியடைய நினைக்கும் மனம்...

தாவும் மந்தியாய் மனம்..
இதையும்,அதையும் விரும்பும் மனம்.
நொடிக்கொரு விருப்பம் விரும்பும் மனம்..
மாற்றத்தை மட்டுமே கொண்டதுதான் மனமோ.....!!!
??

Wednesday, 4 April 2012

வளர்ச்சியா...?? வீழ்ச்சியா...??அன்று....
ஐந்து வயது வரை
அன்னையின் பாலருந்திய நீ.,
இன்று....
ஐந்து மாதத்தில்
அண்டை, அசலாரிடம்
புட்டிப் பால் குடிக்கிறாய்...


அன்று..  
துள்ளிக்குதித்து பள்ளி சென்ற நீ..
இன்று..
தூக்கம் கலையாமல் செல்கிறாய்..

அன்று..   
தலைவாரி, பொட்டிட்டு பூச்சூட்டி
அழகாய் காட்சியளித்த நீ..
இன்று..
விரித்த தலையும், வெறும் நெற்றியுமாய்
காட்சியளிக்கிறாய்..

அன்று..  
பள்ளிக்கு சென்று மனம் பண்பட்டு வந்தாய்..
இன்று..
பள்ளிக்கு சென்று மனம் புண்பட்டு வருகிறாய்..

அன்று..  
பொம்மை சுமந்த கைகள்
இன்று..
புத்தக மூட்டையைச் சுமக்கிறது..

அன்று
நீ விளையாட பட்டம்..
இன்று
உன் விளையாட்டிற்கு பட்டம்..
அன்று..  
பத்து வயதிலும் பால்மனம் மாறா
பச்சிளங்குழந்தையாய் நீ..
இன்று..
கணினியில் கருத்துப் பரிமாற்றம்

அன்று..  
பருவமாற்றத்தால் பள்ளிப் படிப்பை நிறுத்தினாய்..
இன்று..
பருவமடைந்தும் பட்டங்கள் பல வெல்கிறாய்..

அன்று..  
அந்நிய ஆணிடம் பேச அய்யப்பட்டாய்
இன்று..
அசாதாரணமாய் ஆண்களின் நட்பை
அளவின்றி கொள்கிறாய்..

அன்று..  
அந்திப் பொழுதில் வெளியேற
அனுமதி கேட்டாய்..
இன்று..
அதிகாலை வீடு திரும்பி
அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறாய்..

அன்று..  
அன்னை, தந்தை பார்த்தவனை
அவதாரப் புருசனாய் ஏற்றாய்,,
இன்று..
இணையத்தில் இணை தேடிக்கொள்கிறாய்..

அன்று..  
அகமுடையவன் பெயரை அழைக்க நாணினாய்..
இன்று..
அகமுடையவனை அனைவரும் அறிய
அடாஎன அழைக்கிறாய்..

அன்று..  
மகளாய், சகோதரியாய்..
மருமகளாய், மனைவியாய்
சிறப்புடன் பதவிவகித்தாய்..
இன்று..
நாடாளுகிறாய்..
நட்சத்திரத்திரமாய் விளங்குகிறாய்
விண்வெளியில் பயணிக்கிறாய்..

அன்று..  
மருமகளை மகளாய்க் கண்டாய்..
இன்று..
பணம் காய்க்கும் இயந்திரமாய் காண்கிறாய்..

அன்று..  
குழந்தைப் பேற்றை வரமாய் நினைத்தாய்..
இன்று..
குழந்தை வேறா என நினைக்கிறாய்..

அன்று..  
என்ன குழந்தையென எதிர்பார்த்து ஆவலாய்....
இன்று..
பெயரையும் பிறப்பிற்கு முன் முடிவுசெய்தபடி.....

அன்று..  
அன்னையின் வலியுணர்த்திப் பிரசவித்தாய்...,
வலியில்லா வாழ்வு பெற்றாய்..
இன்று..
உன் வலியறியாமலிருக்க
விரும்பியவாறு பெற்றெடுத்து..
அன்னைவலியுணரா பிள்ளையுடன்
வலியுடனே வாழ்கிறாய்..

அன்று..  
ஆயிரங்காலத்துப் பயிராய் இருந்த திருமணம்
இன்று..
கேள்விக்குறியாய்..
துரித உணவாய்...

அன்று..  
அடுத்தவர் நுழைய முடியா அந்தரங்கமாய் வாழ்வு..
இன்று..
அனைவரும் வேடிக்கை பார்க்கும் விதமாய்....

அன்று..  
அகமுடையவன் பற்றி
அன்னை கூட அறியமாட்டாள்
இன்று..
அவன்மேல் பக்கம் பக்கமாய் குற்றப்பத்திரிக்கை..

அன்று..  
எவரும் பிரிக்கமுடியா  இணையாய் இறுதிவரை...
இன்று..
எடுப்பார் கைப்பிள்ளையாய் நீ..
எதற்கும் துணிந்து எடுத்து வீசுகிறாய் தாலியை...!!!

பெண்ணே...
இதுதான் நீ கண்ட வளர்ச்சியா..??

நீ கண்டது..
வளர்ச்சியா...?? வீழ்ச்சியா...??