Sunday, 30 December 2012

சொல்லத்தான் நினைக்கிறேன்..


மனசெல்லாம் நிறஞ்சிருக்கும்
மவராசன ஓங்கிட்ட
மனம் திறந்து பேசத்தான்
மாசக்கணக்கா துடிக்கிறனே..
மனந்திறக்க நினைக்கையில
மனசு நடுங்குதய்யா..
யே  நெஞ்சுக்குள்ள நெறஞ்ச ஒன 
நேர்ல எப்படி காட்டிடுவேன்...

அதிகாலை கோழிகூவையிலே
அத்தான் ஓன் நினைப்பு..

வாசக்கூட்டி கோலம்போடயிலே
மையப்புள்ளியா நிக்கறியே..!!

காப்பித்தண்ணி வக்கயிலே
சிரிக்கும் உம்முகந்தான்
பால்ல பொங்குதய்யா...

ஆத்துல குளிக்கையில
குளிரும் நீரா எனத்தீண்டறியே..

சோறு உங்கயிலே
நான் தானா சிரிக்கறனே...

உம்முகம் நெனச்சு நெனச்சு
உறக்கம் தொலச்சேனே
உம்மனசு தெரியத்தான் துடிச்சனே...

பாக்கும் பொருளெல்லாம்
நீயாத் தெரியறியே..

மனசு நெறஞ்ச மவராசன்
நீயே ஏமனச படிச்சுப்பாருமய்யா..!!

பாவிமனசு ஒனநினைச்சே
பயித்தியம் பிடிக்குதய்யா..

ஏமனசு பாறையாகிப் போகுமுன்னே
நா உசிரா நினப்போனே
ஒம்மனச சொல்லுமய்யா...

Monday, 24 December 2012

உணர்வின் சிதறல்கள்...


விளையாட்டாய் நீ புகட்டிய
விசவார்த்தைகளை
விழுங்கி ஜீரணிக்க எத்தனிக்கிறேன்..
விழுங்கமும் முடியாமல்
துப்பவும் விரும்பாமல்
துவள்கிறேன்...
ஊட்டியது நீயென்பதால்...!!!

----------
வருத்தமும், கோபமும் கூடிப்பேசி 
ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது 
உண்ணாவிரதம் இருப்பதென...
-----------

Sunday, 16 December 2012

பயனற்றது...!!!

உணரப்படாத இடத்தில்
செலுத்தப்படும் அன்பு...

கடைபிடிக்கப்படாத இடத்தில்
கூறப்படும் அறிவுரை..

ஏற்கப்படாத இடத்தில்
பகிரப்படும் ஆலோசனை...

வார்த்தைகளின் வலிமை(வாசம்) அறியாதவர்களிடம்
பேசப்படும் வார்த்தைகள்...

உழைப்பின் உன்னதம் அறியா இடத்தில்
சிந்தப்படும் வியர்வைத்துளிகள்..

விளையா நிலத்தில்
பாய்ச்சப்படும் நீர்...

ரசிக்கத்தெரியாதவர்களிடம்
கூறப்படும் கவிதை..

சுவைக்கத்தெரியாதவர்களுக்குப்
பரிமாறப்படும் அறுசுவை உணவு..
பயனற்றுப் போனாலும்..

பயனுள்ளவைகளின் பயன் அறிந்து
பயன்...
பயனுள்ளதாகும் என்றநம்பிக்கையில்
பகிர்வுகள் தொடர்கின்றன...:)

Tuesday, 11 December 2012

புதுமைப்பெண்..!!??


மஹாகவி சுப்பிரமணிய
பாரதியாரின் 130வது பிறந்த தினமான இன்று எமக்கு எழும் சந்தேகம்..

புதுமைப்பெண் என்பவள் யார்.....?
புதுமையென எதைக்குறிப்பிடுகிறோம்..
பாரதிவிரும்பிய புதுமைப்பெண் எப்படியிருக்கவேண்டும்
அதற்கான இலக்கணம்.....?

இதைப்பற்றி சற்று விளக்கமளிக்கவும்..தோழமைகளே..

ஒருபுறம் இன்றும் செக்குமாடாய் வீடேய் கதியெனவும், அதைத்தாண்டி சிந்திப்பதே பாவம் எனவும் அடிமைப்பட்டுக்கிடக்கும் பெண்கள்...
அதைத்தாண்டி சிந்திப்பவர்களை நிந்திக்கும் ஆண்கள்..

ஒருபுறம் புதுமை,புரட்சி என உலகமே வீடென
வீட்டைத்துறக்கும் பெண்கள்...

ஒருபுறம் நாகரீகமோகத்தில் அரைகுறை ஆடையே புரட்சியென நினைக்கும் பெண்கள்...

ஒருபுறம் விண்ணிற்கு செல்லும் பெண்கள்..
ஒருபுறம் செய்யும்வேலை ஒன்றேயெனினும் ஆணைவிடக் குறைந்தகூலி வாங்கும் பெண்கள்..

வார்த்தை சாட்டையால் சாடும் சமூகத்தில் சாதிக்கத் துடிக்கும் பெண்கள்...

ஒருபுறம் சாதனையாயிரம் படைத்திடினும் சாடலை மட்டுமே பரிசாய்ப்பெறும் பெண்கள்...

ஒருபுறம் சாதித்ததற்கு சங்கேதபாசையில் விமர்சிக்கப்படும் பெண்கள்...

பல்வேறு வேடமேற்கும் இவர்களில் பாரதி விரும்பிய புதுமைப்பெண் யாரோ...??

புதுமைப்பெண்ணைக்
கண்டிடத்துடித்தவனே
புதுமைப்பெண் யாரென அறியாமலே
புரட்சி பேசித்திரியும் பேதையிவளின்
பேதமையைக்காணாயோ...??!!!


Tuesday, 4 December 2012

மறுஜென்மம்...

கணவனை அலுவலகத்திற்கு வழியனுப்பிய சஞ்சனா..காலை உணவு சாப்பிடக்கூடத் தோன்றாமல் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கத்துவங்க, மனம் தொடரில் லயிக்காமல், காலை நடந்த சலசலப்பில் சென்றது. இது வழக்கமான ஒன்றுதான் இருப்பினும் ஏனோ அவ்வப்பொழுது மனம் இப்படி சோர்வடைகிறது. முன்பு எல்லாவற்றையும் ஏற்கும் மனம் இருந்தது. அவமானங்களையும், இழிசொல்லையும் ஏற்று ஏற்று மரத்துப்போன மனம், சில காலமாக தான் ஏன் மரக்கட்டையாய் இருக்கவேண்டும்..? தனக்கென இறை வழங்கிய வாழ்க்கையிது. மகிழ்ச்சியாக கழிக்கலாம் என்று தோன்றவே பாட்டு, கதை, நட்பு என தன்னை மாற்றிக்கொண்டதன் விளைவு. தன்னுடைய உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டுமென எதிர்பார்க்க வைக்கிறது. 

கடந்தசில தினங்களாகவே கணவன், மனைவிக்குள் ஒரு சில மனக்கசப்பு நிகழ்ந்துவர, எல்லாவற்றையும் சாதாரணமாக நினைக்கும் சஞ்சனாவிற்கு சில தினங்களாக அப்படி எடுத்துக்கொள்ள முடிவதில்லை. எவ்வளவு நாட்கள்தாம் மரக்கட்டை போல் இருப்பது..?

கணவன் முரளி விற்பனைப் பிரதிநிதியாக இருப்பதால் நேரத்திற்கு உணவு உண்பது, வீடு திரும்புவது கிடையாது. பெரிதாக வாழ்வில் பிடிப்பு என்பதும் இல்லை. தன் உடல்நலம் பற்றிய அக்கரையும் இல்லாமல் வேலைக்கு போகனும், சம்பாதிக்கனும், சாப்பிடனும் என்ற ஒரு சிறு வட்டத்திற்குள் தன்னை உள்ளடக்கிக்கொண்டு, சராசரி வாழ்க்கைக் கூட இல்லாமல் பணம் சம்பாதித்து கொடுத்துவிட்டால் போதும் என இருப்பவன்.

தனக்குப் பிறகு தனது இரு மகன்கள், மனைவியின் நிலை என்ன என்றுகூட சிந்திப்பது இல்லை. கேட்டால் நான் சம்பாதிக்கவில்லை எனில் எப்படி சாப்பிடுவது என்பான்.

இவளும் கூறி அலுத்துவிட்டாள். பணம் தேவைதான், பணம் மட்டுமே வாழ்க்கையில்லை. சம்பாதித்த வரை போதும், கிராமத்திற்கு போய் இருக்கும் பணத்தில் நிம்மதியாக காலம் கழிக்கலாம் என பலமுறை கூறிவிட்டாள். அவன் காதில் வாங்கிக்கொள்வதே கிடையாது. ஒரு இயந்திரத்தனமான வாழ்வில் தன்னை பழக்கப்படுத்திக்கொள்ள முடியாமலும், தன்னைப்போல் வாழ்வை அனுபவிக்க அவனை மாற்ற முடியாமலும் இருதலைக்கொள்ளி எறும்பாய் மனம் தவித்து வருபவளுக்கு, அவ்வப்பொழுது அழையா விருந்தாளியாய் இப்படியான வெறுமை மனதில் வந்து செல்லும். பெண்களுக்கே உரிய ஒரு சில எதிர்பார்ப்புகள் நிராசையாகவேப் போக, வெளியில் மனம் பகிரக்கூட முடியாமல் ஒரு சில நேரம் இறந்துவிடலாம் என்றுகூடத் தோன்றும். மகன்களின் வாழ்வை நினைத்துப்பார்த்து தன்னை அவ்வப்பொழுது சமாதானம் செய்துகொள்வாள்.

மனதிற்குள்ளேயே புழுங்கித் தவித்து கணவனின் உடல்நலம் பற்றிய கவலை, குழந்தையின் எதிர்காலம், இயந்திரத்தனமாக சமைத்தல், துவைத்தல், சுத்தம் செய்தல்னு செக்குமாடான வாழ்க்கை ஒரு புறம்..மனம் விட்டுப் பேசினால் அந்த நேரத்திற்கு கேட்பவர்களுக்கு பொழுதுபோக்கு அவ்வளவே. நம் நிலை உணர நம் வீட்டாரே முன்வராதபோது வெளி ஆட்கள் உணர்வைப் புரிந்துகொள்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்.?

அன்றும் தற்கொலைக்குத் தூண்டும்படியான ஒரு உணர்வு உந்தித்தள்ள...

போன் அடிக்கும் சப்தம் அவளை உணர்வுக்குக் கொண்டுவந்தது. போனில் அவள் தோழி சீமா.”சஞ்சனா உனக்கு விசயம் தெரியுமா.. நம்ம ரேஷ்மா தூக்கு மாட்டி இறந்து விட்டாளாம்..??”

அதிர்ச்சியிலிருந்து மீளாமல் என்னாச்சு சீமா...முந்தாநாள்கூட நல்லாத்தான பேசிக்கிட்டிருந்தா..நேற்றுதான் பார்க்கல எப்ப நடந்தது இது என்றேன்..”ம்ம்..தெரியல வரியா போய் பார்க்கலாம்..என்றவளிடம், இரு பத்து நிமிடத்தில் வரேன் என போன் துண்டித்து வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்ப, அதே காலனியில் வசிக்கும் ரேஷ்மா வீட்டின் முன் அக்கம்பக்கத்தினர் கூடியிருந்தனர். கூட்டத்தில் விசாரிக்க...போலீசு இப்பதான் போஸ்ட்மார்ட்டத்திற்கு எடுத்துச்சென்றுள்ளனர்..மாலைதான் கிடைக்குமாம் பிணம்.

”அவளுக்கும், கணவனுக்கும் ஏதோ சண்டையாம் அதான் தற்கொலை செய்துகொண்டாள்.”

”இல்ல இல்ல அவளுக்கு ஏற்கனவே மனவியாதியாம் அதிகப்படியான மாத்திரை எடுத்துக்கொண்டதில் மனம் பேதலித்து இப்படி செய்துவிட்டாள்.”

ஆளாளுக்கு மனிதர்களுக்கே உரிய குணத்தில் அவரவர்களுக்குத் தோன்றியதை பேசிக்கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் அவளுக்கு கள்ளக்காதல் உண்டு அதனால இருக்கும் என ஒருத்தி தன் பங்கிற்கு எடுத்துவிட..

”அட எனக்கு அப்பவே தெரியும், எப்பவும் அவ அலங்காரம் என்ன, சிரிப்பு என்ன நான் அப்பவே நினைச்சேன், இப்படி ஏதாவது இருக்குமென கூட்டத்தில் ஒரு பெண்மணி வாய் கூசாமல் கூறினாள்...”

ரேஷ்மாவின் இல்லத்தாரோ, மருத்துவமனைக்கும், அங்குமிங்கும் அல்லாடிக்கொண்டிருக்க, அவளுடைய 15 வயது மகளைக் காண பரிதாபமாக இருந்தது.. இந்தப்பெண்ணிற்கு இப்படிப்பட்ட ஒரு தண்டனை இந்த வயதில் தேவைதானா..? வருந்திய சஞ்சனாவிற்கு கண்முன்னே தன் மகனின் முகம் வந்து வந்து செல்ல...பீதியடைந்தாள். வீட்டிற்கு வந்தவள் மனம் எதிலும் ஈடுபடாமல் செய்யவேண்டுமே என ஒருவழியா வீட்டு வேலைகளை முடித்துவிட்டு மாலை சற்று உலாவி வரலாமே என்று குடியிருப்பில் அமைந்திருக்கும் மையப்பூங்காவிற்கு செல்ல...ரேஷ்மா வீட்டின் முன் வெறிச்சோடியிருந்தது..

ஒரு நிமிடம் தன்னை யாரோ அழைப்பதுபோல் உணர்ந்தவளுக்கு கண்முன்னே ரேஷ்மா நிற்கும் காட்சி தோன்ற.. “சஞ்சனா, பார்த்தியா..ஏதோ ஒரு வேகத்தில் பிரச்சினையிலிருந்து விடுபட எண்ணி நான் எடுத்த அவசர முடிவால என் மகள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது..என்னையும் வாய்க்கு வந்தபடி பேசுகின்றனரே...?!!”

நீ செய்தது முட்டாள்தனம் தான் ரேஷ்மா..அப்படி என்னதான் நடந்தது.?

“எனக்கும் கணவருக்கும் சின்ன மனவருத்தம். மாமியார் வீட்டினர் பேச்சைக்கேட்டு என்னை மதிக்காமல் ஏளனமாகப் பேச, என்னால் அவமானத்தைத் தாங்க முடியவில்லை...இறந்துவிடுவதாகக் கூற, இந்த ப்ளாக்மெயில் பண்றவேல வச்சிக்காத என்று கணவன் அலட்சியமாகக் கூறவே...இதிலும் அலட்சியமா என்ற ஆவேசம், நான் சும்மா பேச்சுக்கு சொல்ல்லனு நிரூபிக்க அப்படி செய்துட்டேன். ஆனா சிறுபிள்ளைத்தனமா யாரோ என்ன மதிக்கல என்பதற்காக என் வாழ்வை நானே முடித்துக்கொண்டு என் உணர்வை நானே மதிக்கலியோனு தோனுது சஞ்சனா..”

”தன் உணர்வைப் படம் பிடித்துக்காட்டியதுபோலவே கூறுகிறாளே..இதே நிலையில்தானே இன்று காலையில் நானும் இருந்தேன். நானும் இந்த முடிவுக்கு வந்திருந்தால், என் குழந்தைகளின் கதியும் இப்படித்தானே இருந்திருக்கும்..? என்னையும் இப்படித்தானே தரக்குறைவாக பேசியிருப்பார்கள்...?!” சிந்தனையிலிருந்து விடுபட்டவள் எதிரில் ரேஷ்மா இல்லை. பௌர்ணமி நிலவு அவளைப் பார்த்து சிரித்தது. ”என்னை எனக்கு புரிய வைக்க இறை நடத்தும் நாடகமா இது..?” ரேஷ்மாவின் ஆத்துமா சாந்தியடைய வேண்டியதோடு, அவளுடைய இறப்பு தன்னைத் தற்கொலை உணர்விலிருந்து காப்பாற்றி மறுஜென்மம் வழங்கியதை எண்ணி, ரேஷ்மாவிற்கும் மானசீக நன்றியைத் தெரிவித்து வீட்டிற்கு திரும்பினாள் சஞ்சனா....!!

Wednesday, 28 November 2012

லட்சுமி...வசுமதிக்கு இரண்டு நாட்களாகவே லட்சுமி பற்றிய கவலைதான். லட்சுமி இவர்கள் வீட்டில் 20 வருடங்களுக்கும் மேலாக குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக இருந்து வரும் பசுமாடு.  சில ஆண்டுகளா கறவை மறத்துப்போச்சு.

நேற்று காலை கணவன் வசந்தன் வசு, லட்சுமிய இன்னும் இரண்டு நாட்கள்ல வந்து அழைச்சிக்கிட்டு போயிடுவாங்க.”  ”ஏங்க இப்ப எதுக்கு இப்படி ஒரு முடிவு எடுத்தீங்க..? வேற என்ன செய்ய சொல்ற..கறவையும் நின்னு போச்சுவிக்கற விலைவாசில அதுக்கு புல், வைக்கோல், புண்ணாக்கு பார்த்துக்க ஆளு கூலி இதெல்லாம் தேவையா..??அதான் எனக்குத் தெரிஞ்ச ஒரு நண்பன்கிட்ட சொல்லி அவன் மாட்டை விற்ற அதே இடத்தில் இதையும் அனுப்பிடறதா முடிவு செய்து வர திங்கட்கிழமை வரச்சொல்லியிருக்கேன்..

அதற்கு மேல் அவரிடம் பேசி எந்தப்பிரயோசனமும் இல்லை எனப்படவே செய்வதறியாது உள்ளுக்குள்ளேயே வேதனைப்படத் துவங்கினாள்.

நினைவுகள் பின்னோக்கிச் செல்ல... 20 வருடங்களுக்கு முன்பு வீட்டில் குடும்பத்தில் ஒன்றாய் அங்கம் வகிக்கத் துவங்கியது லட்சுமி.  வசு, லட்சுமி கத்துது பாரு..அதுக்கு சாப்பிடக்கொடுத்தியா..என்று பார்த்து பார்த்து உணவு வழங்கிய வசந்தனா இன்று லட்சுமியை அடிமாட்டிற்கு அனுப்பிவைக்கத் துணிந்தார் நம்ப முடியவில்லை அவளால்.. அத்தை பார்வதியும் தினமும் மாட்டுத்தொழுவத்தில் கோலமிட்டு சாம்பிராணி போட்டு அகத்திக்கீரை கொடுக்காமல் காபி கூட சாப்பிடமாட்டாள். அவ்வளவு பாசம். அழகோடு சாந்தமும் நிறைந்து பார்க்கவே பெயருக்கு ஏற்ப லட்சுமிகரமாக காட்சியளித்தது.  

அதன் முகத்தில் விழித்து சென்றால்  காரியம் கைகூடும் என்ற நம்பிக்கை கொண்டனர்.  அனைவரும் தினமும் அதைக்கொஞ்சி, பூசித்து வந்தனர். குழந்தைகளும் அதனோடு சரிக்கு சமமா விளையாடும்.  குழந்தைகளைக்கூட முட்டாது.அவ்வளவு சாது.  தினமும் 6 படி பால்கறந்த லட்சுமி எவ்வளவு வருமானமும், மகிழ்ச்சியும் ஈட்டிக்கொடுத்தது..??  இன்று அதையெல்லாம் மறந்து எப்படி இந்த மனிதரால் சகஜமாக இருக்க முடிகிறது, லட்சுமியைத் தடவிகொடுத்தவாரே கண்ணீர் வடிக்க, அதுவும் முகத்தை ஆட்டி ஆட்டி ஏதோ சொல்வதுபோல் தோன்றியது வசுவிற்கு.

வசு, அம்மா வசு...அத்தையின் குரல் ஈனஸ்வரமாய் ஒலிக்க, வந்துட்டேன் அத்த குரல் கொடுத்தவாறு உள்ளே சென்றாள்.  சாப்பிட்டியா வசு..? பார்வதி வசுவிற்கு மாமியாராக என்றுமே இருந்தது இல்லை..பெற்ற தாயைப்போன்றே அன்பைப்பொழிபவள்.

இல்ல அத்தை பிடிக்கல.ஏம்மா..ஒத்த ஆளா இந்தக்குடும்பத்த கவனிக்கிற. நீ நேரத்திற்கு சாப்பிட வேணாமா..?உடம்பு என்னத்துக்கு ஆவறது..? ம்ம்... இந்தக்கடவுள் என்னத்தான் இப்படி முடமாக்கி நடமாட விடாம வச்சிருக்கான்.  நீதான உன்ன கவனிக்கனும் விழிகளில் நீர் கோர்த்துக்கொள்ள பார்வதி மருமகளைக் கடிந்தாள்.  மனசே சரியில்ல அத்த...என்னாச்சு வசு..?? நான் ஒருத்தி 2 வருடமா உங்க யாருக்கும் பிரயோசனம் இல்லாம போயிட்டன் இல்ல..?

ஏன் அத்த அப்படி சொல்றீங்க..நாங்க எப்பவாச்சும் உங்க கிட்ட அப்படி நடந்திருக்கமா..? வசு கண்ணீர்மல்க வினவ...பின்ன என்னம்மா நீ சாப்பிடாம மனசு சரியில்லைன்னு இருக்க..அப்ப என்னமோ இங்க நடந்திருக்கு எனக்கு சொல்லனும்னு உங்களுக்குத் தோனலைதான..?” அத்த நீங்களே உடம்பு முடியாம இருக்கீங்க..சொன்னா நீங்க வருத்தப்படுவீங்கன்னுதான் சொல்லவேண்டாம்னு இருந்துட்டேனே தவிர உங்கமேல உள்ள மரியாதை என்றைக்கும் குறையவில்லை..நம்ம லட்சுமி 2 வருடமா சும்மா இருக்காம்.. தெண்டச்செலவாம். அதான் வந்தவிலைக்கு அடிமாட்டுக்கு அனுப்பறதா உங்க பிள்ளை சொல்லியிருக்கார்..நான் எவ்வளவோ மறுத்தும் பிடிவாதமா இருக்கார் அத்த..அதான் கவலையா இருக்கு.

அடிப்பாவி பெண்ணே, எவ்வளவு பெரிய கொடுமை நடக்கவிருக்கு இதைப்போய் நான் வருத்தப்படுவேன்னு மறைக்கப்பாத்தியே.. நீ ஒன்னு செய்..உம்புருசனுக்கு போனப்போட்டு நான் ரொம்ப சீரியசா இருக்கிறதா சொல்லி வர வை..அய்யோ எதுக்கு அத்த இப்படி சொல்ல சொல்றீங்க..ஒரு நேரம் போல இல்லாம பலிச்சுடப்போவுது. அதெல்லாம் ஒன்னும் ஆவாது சொல்லு...சரி அத்த என்றவள் கணவனுக்கு போன் செய்து..என்னங்க அத்தைக்கு ரொம்ப சீரியசா ஆயிடுச்சு, நீங்க உடனே வாங்க..நம்ம டாக்டருக்கும் போன் செய்துட்டேன்..அவரும் கிளம்பிட்டார்..இதோ வரேன் வசு, அம்மாவை கவனமாப் பார்த்துக்க.

போன் செய்த அரைமணியில் வீட்டிற்குள் நுழைந்தவன்..என்னாச்சு அம்மாவிற்கு காலை கூட நல்லாத்தானே இருந்தாங்க என்றவாறே அம்மாவின் அறைக்குள் சென்றான்.  பார்வதியை பரிசோதிக்கும் மருத்துவரிடம், டாக்டர் என்ன ஆச்சு..?.  இரண்டு வருடமா பெட்லயே இருந்ததால பெட்சோர் அதிகமாயிடுச்சு.  இனி அவங்களால இயல்பா இருப்பது கஷ்டம்..என்னதான் நீங்க நல்லா பார்த்துக்கிட்டாலும் 24 மணிநேரமும் கூட இருக்கும்படி ஒருத்தர நியமிக்கனும்.  தினமும் இந்த ஊசி போடனும், லோசன் தடவனும்..அதுக்கு நிறைய சிலவாகும்.  பக்கவாதம் பலமா தாக்கினதால இனி இவங்களால எழுந்து நடமாட முடியாதுன்னு உங்களுக்கு தெரிஞ்சவிசயம்தான் இருப்பினும், பெட் சோர் வராம, அவங்கள பார்த்துக்கனும்னா நிறைய சிலவாகும்..என்ற டாக்டர் என்கிட்ட ஒரு யோசனை, என்ன டாக்டர் சொல்லுங்க அம்மா நலனுக்காக எதுவும் செய்யத் தயாரா இருக்கோம்.

அம்மாவை கருணைக்கொலை செய்திடறதுதான் நல்லதுன்னு எனக்குத் தோனுது.  இனி இவங்களால எதுவும் பிரயோசனம் இல்லை. அதோடு இவங்கள பார்த்துக்க சிலவு, நேரம், உடல் உழைப்புன்னு தேவையா யோசிச்சு சொல்லுங்க என்ற டாக்டரின் சட்டையை ஆவேசமாகப்பிடித்தான் வசந்தன்.

நிறுத்துடா..அம்மாவின் குரல் கேட்க அதிர்ச்சியுடன் திரும்பிய வசந்தன் அம்மா நீயா பேசின என்றான் ஆச்சரியத்துடன்..ஆமாண்டா நான் தான். அவர ஏண்டா சட்டைய பிடிச்சுக் கத்தற..? உன்ன உன்னப்போயி விக்கினான்..நான் தான் அப்படி சொல்லச்சொன்னேன்..

நீயா..? ஏன்மா..? உன் மகன் அவ்வளவு சுயநலக்காரன்னு நினைச்சியா..?

பின்ன என்னடா, உன்னோட அம்மா இரண்டு வருடமா பக்கவாதத்தில படுத்திருக்கேன்..என்னால எந்த பிரயோசனமும் இல்லைன்னு தெரிஞ்சும் இவ்வளவு செலவு செய்து அன்பா பாத்துக்கறியே.. நம்ம லட்சுமியும் என்ன மாதிரி ஒரு உசிர்தானடா..?அதுவும் நம்ம குடும்பத்தில ஒன்னாத்தான இவ்வளவு ஆண்டுகாலமா இருந்து வருது.. எப்ப அத அடிமாட்டுக்கு அனுப்ப துணிஞ்சிட்டியோ, என்னையும் கருணைக்கொலை கொல்லவேண்டியதுதானே..ஏன்யோசனை..??

அம்மாவின் இந்த வார்த்தைகள் அவனை பளார் பளாரென அறைந்தது போல் இருக்க, வருந்தியவன்,” மன்னிச்சுக்கோம்மா, ஏதோ அவசரப்பட்டு புத்தியிழந்துட்டேன்..இனி அப்படி யோசிக்க மாட்டேன். “  வசு,நீயும் என்னை மன்னிச்சிடும்மா.  தன் நண்பனை அழைத்து லட்சுமியை விற்கப்போவதில்லை  என்ற தங்கள் முடிவைத் தெரிவித்து, மாட்டு வியாபாரியை வரவேண்டாம் எனக்கூறினான். 

வசுமதி அத்தை பார்வதியின் கரம் பிடித்து கண்ணீர் விட, அதில் இருந்த நன்றியை உணர்ந்தாள் பார்வதி.


Sunday, 25 November 2012

சிதறியவை...

எவரும் வரவிரும்பா
என் வீட்டில்
அழையா விருந்தாளியாய்
ஏழ்மையும், மழையும்..

விரும்பிய படிப்பை

தொடரத் தடைவிதிக்கும்
விரும்பா நேரத்து மழை..

எரியும்விளக்கை அணைக்க
எத்தனை ஆர்வமாய்
எட்டிப்பார்க்கிறது
என் வீட்டிற்குள்..??
*****
அன்புக்காற்றில்
இதயகோபுரத்தின் உச்சத்தில் 
சிலநாளும்
அலட்சியக்காற்றில்
குப்பையில் சிலநாளும் 
வீசப்படுகிறது
மனிதனின் மனம்...
*****

Tuesday, 20 November 2012

ஓவியக்கவிஞன்..

வர்ணங்களால்
எண்ணங்களைத் தீட்டி
வார்த்தையில்லா காவியம் படைத்து
கவிதையெழுதத் தூண்டி
கவிஞனை உருவாக்கும் ஓவியன்....!!!

எண்ணங்களில்
வர்ணம் தவிர்த்து
வார்த்தைஜாலம் சேர்த்து
கவிதை வடித்து
ஓவியம் தீட்டத்தூண்டி
ஓவியனை உருவாக்கும் கவிஞன்...!!!

கலைமகளின் புத்திரர்களாம்
கவிஞனும்,ஓவியனும்
கவலைதனை நீக்கும் வைத்தியர்கள்..!!!Sunday, 18 November 2012

சொர்க்கத்தின் வாசல்..விசுவநாதன், விசாலாட்சி தம்பதி கண் மூடி சிவன் சன்னிதியில் பிரார்த்திக்க யார் பேர்ல அர்ச்சனை..? அர்ச்சகரின் குரல் கேட்டு..சின்னவன் பேருக்கு சாமி. சிவா, பரணி நட்சத்திரம். அர்ச்சகர் சங்கல்பம் செய்தபடியே நகர. கடவுளே என் மகன், மருமகள் நல்லபடியா இருக்கனும். 
இந்தாங்கோ பிரசாதம்என்ன விசாலாட்சி அம்மா இன்னிக்கு என்ன விசேசம்? “

என் மகனும், மருமகளும் இன்னிக்கு அமெரிக்கா போறாங்க சாமி அதான் அர்ச்சனை பண்ணிட்டு போலாம்னு வந்தோம்.
அப்படியா ரொம்ப சந்தோசம்.  அவன் அருளால எல்லாம் நல்லபடியா நடக்கும் கவலைப்படாதீங்கோ..
சரி சாமி நேரமாச்சு நாங்க கிளம்பறோம்.” என்றபடி கோவிலில் இருந்து கிளம்பினர்.

மூத்தவன் ரவிக்கு படிப்பிற்கேற்றவாறு நல்ல உத்தியோகம் கிடைக்க மனைவி, குழந்தைகளுடன் சிங்கப்பூரில் வசிக்கத் துவங்கிவிட்டான்.  இரண்டாமவன் சந்துரு ஐந்து வருடமாக துபாயில் மனைவி, மகனுடன் வசிக்கிறான்.

மூன்றாமவன்தான் சிவா கடைக்குட்டி அம்மாவின் செல்லப்பிள்ளை.  காலேஜ் போனாலும் அம்மா அம்மா என சுற்றி சுற்றி வருவான்.  சென்ற மாதம்தான் சங்கரியோடு திருணம் நிகழ்ந்தது.  சங்கரி பணக்கார வீட்டு பெண், படித்தவள் இருப்பினும் கொஞ்சமும் அந்த பகட்டு இல்லாமல் அத்தை, மாமா என அனைவரிடமும் மிகவும் அன்பாகவே நடந்துகொள்பவள் இப்பொழுது சிவா வேலை பார்த்த நிறுவனமே அவனையும், மனைவியையும் அமெரிக்கா அனுப்புவதின் விளைவு இன்றைய பயணம் .

விஸ்வநாதனும், விசாலாட்சியும் ஆரம்பகாலத்தில் மிகவும் கஷ்டப்பட்டாலும், குழந்தைகள் படித்து வேலைக்கு செல்லத்துவங்கியதும் நல்ல நிலைக்கு வந்து விட்டனர். வசதிக்கு குறைவில்லை. மருமகள்களும் வந்துசெல்லும் நேரம் மட்டுமன்றி அவ்வப்பொழுது அழைத்துப்பேசி, இந்தியா வருபவர்களிடம்  அத்தை, மாமாவிற்கு தேவையானதை அனுப்பி வைத்தனர்.

மாலை..சிவா, சங்கரி கிளம்பும் நேரமும் வர..விசாலாட்சி தன் மனக்கவலையினை வெளியில் காட்டிக்கொள்ளாமல் வழியனுப்ப முயற்சித்தாள்.

அம்மா, அப்பா நாங்க கிளம்பறோம் எங்கள ஆசீர்வாதம் பண்ணுங்க..என இருவரும்  காலில் விழ நல்லபடியா போயிட்டு வாங்க என கண்ணீர் மல்க ஆசீர்வதித்தாள் விசாலம்.  உடம்ப கவனமா பார்த்துக்கோங்க.  எதுவா இருந்தாலும் எந்த நேரம்னாலும் போன் பண்ணுங்க.  பிரபுகிட்ட சொல்லியிருக்கேன் அவனும் அப்பப்போ வந்து பார்த்துப்பான். நான் தினம் போன் பண்றேன்.

மாமா, அத்தை நாங்க கிளம்பறோம் என்ற சங்கரியிடம் பிரியாவிடைகொடுத்தபடியே,
நாங்களும் ஏர்போர்ட் வரேன் சொன்னா ஏன் வேண்டாங்கிறே..??”
அப்படி இல்லேம்மா அங்க வந்து என்ன செய்யப்போறீங்க..வாசலோட திரும்பனும் எதுக்கு உங்களுக்கு வீண் சிரமம்ன்னுதான் வேண்டாம் சொல்றேன்.
சரிப்பா இரண்டு பேரும் கவனமா போயிட்டு வாங்க..கடவுள் என்னிக்கும் துணையிருப்பார்.

அன்றிரவு முழுவதும் மகனைப்பிரிந்த ஏக்கத்தில் விசாலம் உறங்காமல் விழித்திருந்தவள் அதிகாலை சற்றே கண்ணயர.. கணவனின் குரல் கேட்டு வேகமாக எழுந்தவள் அவர் யாருடனோ போனில் பேசுவதைக் கண்டு யாருங்க நம்ம சிவாவா..? என ஆவலாய் கேட்டாள். அவள் பக்கம் திரும்பி ம்....என்றவர் “இருப்பா அம்மாகிட்ட கொடுக்கறேன். என்றார்.
“சிவா,எப்படிப்பா இருக்க..நல்லபடியா போய் சேர்ந்தியா.வீடு நல்லா இருக்கா..யாரும் ஏர்போர்ட் வந்தாங்களா”என அடுக்க... “எல்லாம் வசதியா இருக்கும்மா.நீங்க கவலைப்படாதீங்க.”என்றதும் சரிப்பா என சங்கரியிடமும் விசாரித்தவள் சற்றே மனநிம்மதியுடன் காணப்பட்டாள்..

இவர்களது பாசம் இப்படியே போனில்  தொடர்ந்தது.  அவர்களது பரபரப்பான வாழ்வில் ஆறுமாதம் ஆறுவாரம்போல் கடந்தது. ஒரு நாள் இரவு திடீரென அப்பாவிடமிருந்து அழைப்பு....

“என்னப்பா இந்த நேரத்தில்...?”சற்றே திகிலுடன் சிவா வினவ.. “அம்மாவிற்கு மாலையில் இருந்து நெஞ்சு வலிப்பா. நம்ம டாக்டர் வந்து பார்த்துட்டு போயிருக்கார். நாளை ஹாஸ்பிடல் அழைத்துவர சொல்லியிருக்கார் ஏதோ டெஸ்ட்டெல்லாம் எடுக்கனுமாம்.”
“அய்யோ...இப்ப எப்படிப்பா இருக்காங்க...நாங்க பேசலாமா..?”

“இல்லப்பா மாத்திரை சாப்பிட்டு தூங்கறா.. நீ கவலைப்படுவே உன்கிட்ட சொல்லவேணாம்னு சொன்னா. எனக்குத்தான் பயமா இருந்திச்சு அதான் போன் பண்ணேன். சரி நீ வருந்தாத. நாளை ஹாஸ்பிடல் போயிட்டு அங்கிருந்து போன் பண்றேன்.”

சங்கரியிடம் அம்மாவின் உடல்நிலை குறித்து வெகுநேரம் கவலையுடன் பேசிக்கொண்டிருந்தவன் எப்பொழுது உறங்கினான் என்றே தெரியவில்லை..

போன் சத்தம் அலர..அதிர்ந்து எடுத்தவன் “என்னாச்சுப்பா.. பதற்றமாய் கேட்டான்.
“சிவா உங்க அம்மாவை ஹாஸ்பிடல்ல அட்மிட் செய்திருக்கேன். ரொம்ப சீரியஸாம்.உடனே எல்லார்க்கும் தெரிவிங்கன்னு சொல்லிட்டாருப்பா நம்ம டாக்டரு.எதிர் முனையில் அப்பாவின் குரல் உடைந்திருந்தது. “அய்யோ அம்மா.. என்னப்பா இது.. ஆமா அண்ணாக்கெல்லாம் சொல்லிட்டீங்களா..??”

“இப்பதான் பேசினேன்பா.. பெரியவன் வேல விசயமா ஜெர்மனி போயிருக்கானாம். தொடர்பு கொள்ள முடியல. அடுத்தவன் பிளைட் டிக்கட் எவ்வளவு முயற்சி செய்தும் கிடைக்கலன்னு ஒரே அழுகை.”

“அய்யோ... அப்பா இப்ப என்னாலயும் உடனே வரமுடியாதே. நாளை ஒரு அவசர மீட்டிங் இருக்கு. அதுக்கு போகலேன்னா கோடிக்கணக்கில் நாம நஷ்ட ஈடு தரமாதிரி இருக்குமே.. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலியே... கண்கள் குளம் கட்ட,“அப்பா... அங்க நம்ம டாக்டருகிட்ட கேட்டு கேமரா ஆன்பண்ண சொல்லுங்கப்பா. அம்மாவைப் பார்க்கனும் போல இருக்கு.” என்றான்.

“இல்லப்பா ஐ.சி.யுவில இருக்கிறதால அனுமதி இல்ல. மூன்று பசங்க இருந்தும் கடைசி நேரத்தில் ஒருத்தர்கூட பக்கத்தில் இருக்க கொடுப்பன இல்லாத பாவியாயிட்டோம் நாங்க...”என விசுவநாதன் கதற.

“அப்பா அழாதீங்க.. அதெல்லாம் ஒண்ணும் ஆகாது”என இவன் கதற...

“என்னாச்சுங்க”சங்கரி சிவாவை உலுக்கி எழுப்பினாள்.

திடுக்கிட்டு எழுந்தவன்.,நான் கண்டது கனவா..??என மணி பார்த்தான். காலை 6 மணி. அதிகாலை கனவு பலிக்கும் என்பார்களே என குழம்பியபடியே எழுந்து வழக்கம்போல் அலுவலகம் கிளம்பிச் சென்றான்.

அலுவலகம் சென்றவன்,மேலதிகாரியிடம் தனது ராஜினாமாக் கடிதத்தை கொடுக்க..
“என்னாச்சு சிவா,சொர்க்கம் மாதிரி வசதிகள் செய்து கொடுத்திருக்கோம்.. இன்னும் வேற என்ன வேணுமோ கேளு..அதுக்கு ஏன் ராஜினாமா செய்யனும்..??”என வினவ...

“சொர்க்கம் மாதிரி வசதிகளுக்கு அடிமையாகித்தான் அம்மா,அப்பாவுடன் சேர்ந்து வாழும் சொர்க்கத்தையே இழந்துட்டு நிக்கறோம். போதும் சொர்க்கத்தின் வாசலை அடைத்துவிட்டு சொர்க்கத்திற்கு போகும் வழி தேடறோம் நாங்க எல்லாம்.  கஷ்டப்பட்ட காலத்தில் காசுமேல ஆசை இருந்தது உண்மைதான்..ஆனா அப்பகூட சந்தோசமாத்தான் இருந்தோம். இப்ப காசு, வசதிகள் இருக்கு..ஆனா இந்த உலகுக்கு அழைத்துவந்த அம்மா, அப்பாவை தவிக்கவிட்டு அவங்க மரணப்படுக்கையில் இருக்கும்போதுகூட போன்ல அழற நரக வாழ்வு எனக்கு வேண்டாம் சார்... எனக்கூறி தன் இருக்கைக்குத் திரும்பியவனை மனைவி சங்கரி போனில் அழைக்க..  “என்னாச்சும்மா..?

மாமா போன் செய்தார்ங்க..அத்தைக்கு ஒன்றும் இல்லையாம். சாதாரண கேஸ்,அப்புறம் உங்களப்பிரிஞ்ச கவலை இரண்டும் சேர்ந்த்தாலத்தானு டாக்டர் சொல்லிட்டாராம். நீங்க கவலைப்பட வேணாம்னு மாமா சொல்லச்சொன்னார் என்றாள் சந்தோஷமாக.
நன்றி கடவுளே என்றவன்,தான் ராஜினாமாக் கடிதம் கொடுத்துவிட்டதையும்,அடுத்த வாரமே இந்தியாவோடு செல்ல முடிவெடுத்திருப்பதாகவும் மனைவியிடன் கூற,  ரொம்ப சந்தோசங்க.  உங்க முடிவு மிகவும் சரியானது.  எனக்கும் மகிழ்ச்சி என்றவள் தன் கணவனை நினைத்து பெருமிதப்பட்டவாறே இந்தியாப் புறப்பட என்ன என்ன செய்யவேண்டும் என திட்டமிடலானாள் மனதினுள்...!!!