முகப்பு...

Showing posts with label முரண்பட்ட சிந்தனைகள். Show all posts
Showing posts with label முரண்பட்ட சிந்தனைகள். Show all posts

Tuesday, 20 January 2015

முரண்....

விதைக்கப்படும் அன்பு 
அன்பாக சிலநேரமும், 
கோபமும், வெறுப்புமாக சிலநேரமும் 
அறுவடைசெய்யப்பட..

விதைக்கப்பட்ட வெறுப்பும், கோபமும் 
அன்பாக சிலநேரமும், 
வெறுப்பும், கோபமுமாகவே சிலநேரமும் 
அறுவடைசெய்யப்பட...
அறுவடை.. 
விதைக்கப்படும் 
விதையைப் பொறுத்தில்லாமல்
விதைக்கப்படும் 
நிலத்தின் தன்மைக்கேற்பவே அமை(யும்)கிறது...
‪#‎சிலபலநேரங்களில்‬..

Tuesday, 13 January 2015

சிந்தனை முரண்..

பிரசவிக்கப்படும் வார்த்தை குழந்தைகள் 
சில நேரங்களில் மட்டற்ற மகிழ்ச்சியையும், 
சில நேரங்களில் மரணவேதனையையும் அளித்து 
இறவாத்தன்மை பெறுகின்றன..!
********
சிந்தனைகள் துளிர்த்து தளிர்களாய் 
சிலநேரம்...
உதிர்ந்து மடியும் சருகுகளாய் 
சிலநேரம....:)
***
பிறரின் குறைகளை சுட்டிக்காட்டும் மனம் 
தன் குறைகளை யாரும் சுட்டிக்காட்ட விரும்பாத மனம்..:)
***
துரோகத்தின் வண்ணம் 
தெறிக்கப்பட்ட
முகமனைத்தையும்
நிராகரிக்கிறது மனம்...
முகத்திரை 
கிழித்தெறியப்பட்டு
நிரூபிக்கப்படுவதற்கு
காத்திராமலே...!!

********
மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் மனதை 
அலட்சிய வார்த்தைகளால்...
துவண்டு போகச் செய்யவும்., 
துவண்டிருக்கும் மனதை 
அன்பு வார்த்தைகளால் 
மகிழ்ச்சியில் மலரச்செய்யவும் 
அன்புடையவர்களுக்கே சாத்தியமாகிறது, 
****

Thursday, 8 August 2013

முரண்...

சிரிப்பில் ஒளிந்திருக்கும்
அழுகை..
அழுகையில் ஒளிந்திருக்கும்
சிரிப்பு..
அன்பில் ஒளிந்திருக்கும்
கயமை...
இரக்கத்தில் ஒளிந்திருக்கும்
ஏளனம்...
கோபத்தில் ஒளிந்திருக்கும்
அன்பு...
சகிப்புத்தன்மையில் ஒளிந்திருக்கும்
வெறுப்பு...

மகிழ்ச்சியில் ஒளிந்திருக்கும்
சோகம்..
பசியில் ஒளிந்திருக்கும்
வறுமை...
பணத்தில் ஒளிந்திருக்கும்
கருணை...
நட்பில் ஒளிந்திருக்கும்
விரோதம்..
பாசத்தில் ஒளிந்திருக்கும்
சூழ்ச்சி...
உறவில் ஒளிந்திருக்கும்
பகைமை...

உதவியில் ஒளிந்திருக்கும்
எதிர்பார்ப்பு...
நம்பிக்கையில் ஒளிந்திருக்கும்
சந்தேகம்...
முரண்கள் அனைத்தையும்
முடிவின்றி கற்கின்றோம்..!!

Sunday, 4 August 2013

முரண்பட்ட சிந்தனைகள் - தொடர்ச்சி...

வார்த்தைகளால் கொல்லும் மனம்..
வார்த்தைகளால் கொள்ளும் மனம்..

*****

வார்த்தையால் ஏற்படும் காயங்களுக்கு 
   மௌனத்தால் மருந்திடும் மனம்.

மௌனத்தால் ஏற்படும் காயங்களுக்கு 
   வார்த்தையால் மருந்திடும் மனம்.

*****

தன் உணர்விற்கு மதிப்பளித்து..

  பிறர் உணர்வை எரிக்கும் மனம்..


பிறர் உணர்விற்கு மதிப்பளித்து

  தன் உணர்வை எரித்துக்கொள்ளும் மனம்..

*****

அன்பை மறைத்து கோபத்தை வெளிக்காட்டும் மனம்..

கோபத்தை உள்ளடக்கி அன்பை வெளிக்காட்டும் மனம்..

*****

சோகத்திலும் மகிழ்ச்சியைப் பிரதிபளிக்கும்  மனம்..

மகிழ்ச்சியிலும் சோகத்தையே பிரதிபளிக்கும்  மனம்..

*****



Friday, 19 July 2013

முரண்பட்ட சிந்தனைகள்...!!



மனிதர்களைக் 
கொள்வதற்குப் பயன்படும் அன்பைக் 
கொல்வதற்கும் பயன்படுத்தி
கொண்டும், கொன்றும் ..
அன்பு கொள்ளக்கூடியதா..? கொல்லக்கூடியதா...?
அன்பை
அன்பே தன்னாய்வு செய்யும்படியாக
அன்பு கொள்ளப்பட்டும்
கொல்லப்பட்டும் வருகிறது..!!!
---
பற்றியதை விடாது
பற்றிக்கொண்டு
பற்று கொள்ளும் மனம்...

பற்றியதை
விட்டுவிட்டு
பற்றற்றிருக்க
பற்றுகொள்ளும் மனம்..!!
--
மனதை மகிழ்விக்கும்
ரோசாவின் மணம்
உணரும்வேளையில்
கிழித்துக்காயப்படுத்திய
முற்களும் நினைவுக்கு வருவதுதான்
ம(னித)னதின் இயல்போ...?!

Wednesday, 1 May 2013

முரண்பட்ட சிந்தனைகள்..


நிசங்களைக் கனவுகளாக்கிப் பார்க்க நினைக்கும் மனம்.!
கனவுகள் நிசங்களாகாதா என ஏங்கும் மனம்..!
****
நம்மிடம் இயல்பாய் இருந்த
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசா நட்பு,
சத்தியத்திற்கான மதிப்பு,
தூய்மையான அன்பு, மனிதநேயம்,
நம்பிக்கை அனைத்தும் இன்று
பேராசையாய்த் தோன்ற...

பேராசை எனக்கருதிய
செயற்கையான ஆடம்பர வாழ்வும்
வேண்டாதவையெனக் கூறப்பட்ட பொய்மையும், கபடமான அன்பு, இவையெல்லாம் இயல்பாய் யதார்த்தமாகிப் போக...
முரணானவற்றை செயலாக்குவதுதான் மனிதனோ...??
****
நாம் விரும்பியவர்  வெறுத்திடினும் விரும்பும்  மனம்..
வெறுப்பவர் நம்மை விரும்பிடினும் வெறுக்கும்  மனம்..
****

Monday, 25 February 2013

முரண்பட்ட சிந்தனைகள்....


அன்புக்குரியவர் உரிமையுடன் இருக்கவேண்டும் என ஏங்கும் மனம்...
உரிமையுடன் இருக்கும்போது ஆளுமை செய்வதாய் நினைக்கும் மனம்...
*****
தவறே செய்யாமல் சமாதானக்கொடி எடுக்கும் மனம்..
தவறே செய்தாலும் சமாதானக்கொடி எடுக்க மறுக்கும் மனம்..
*****
மரணத்தை விரும்பி நெருங்கிச்செல்ல நினைக்கும் மனம்..
நெருங்கிவரும் மரணத்தை வெறுத்து விலகிச்செல்லும் மனம்..
*****


Sunday, 30 September 2012

முரண்பட்ட சிந்தனைகள்...


அளவுகடந்த மகிழ்ச்சியிலும் உணவைத் தவிர்க்கும் மனம்.
அளவுகடந்த துன்பத்திலும்  உணவைத் தவிர்க்கும் மனம்.
*****
அன்புசெலுத்துபவர்களையும் வெறுப்புடன் நோக்கும் மனம்..
வெறுப்பவரையும் அன்புடன் ஏற்கும்  மனம் .
*****
மருமகன் தனக்கு மகனாக விளங்கும்போது
மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் தாயின் மனம்....
தன் மகன், இன்னொரு தாய்க்கு (மரு)மகனாக
விளங்கும்போது, ஏற்க மறுக்கும்  மனம்..
*****
மனைவி இறக்க மணமகன் வேடமேற்கும் ஆணின் மனம்.
கணவன் இறக்க கைம்பெண் வேடமணியும் பெண்ணின் மனம்..
*****






Sunday, 23 September 2012

முரண்பட்ட சிந்தனை


உணர்வுகள் அலட்சியப் படுத்தப்படும்போதுதான் விவேகம் பிறக்கிறது.
*****
மகளாக தாயின் மனம் உணர மறுக்கும் மனம்..
தாயானதும்
மகள் தன்மனம் உணர விரும்பும் மனம்...
முரணான ஆசை...
*****
உறவுகளுக்கிடையில்
பணம் தடையில்லையென எண்ணும் மனம்..
பணத்திற்கு
உறவுகளைத் தடையாக எண்ணும் மனம்..
 *****
ஒருவர் கூறும் பொய் நம்மைக் காயப்படுத்துவதை உணரும் மனம்..


நாம்  கூறும் பொய் அவர் மனதையும் காயப்படுத்தும் என்பதை  உணர மறுக்கும் மனம்...
*****

மனம் பகிர மனிதர் இல்லாத நேரத்தில் பக்குவப்படுத்தும் கண்ணீர்,
மனம் பகிர மனிதர் இருப்பின் பலவீனப்படுத்தவும் செய்யும்..


              மனிதனின் முரண்பட்ட சிந்தனை தொடரும்..
*****


Wednesday, 12 September 2012

முரண்பட்ட சிந்தனைகள்...


விலங்குகளிடத்தும் மனிதநேயத்தோடு நடந்துகொள்ளும் மனிதர்கள்..
மனிதனிடத்தும் விலங்குகளைப்போல் நடந்துகொள்ளும் மனிதர்கள்...

ஏன் இந்த முரண்..??

***************
நெருங்கியிருந்தும் மனதளவில் விலகி சிலர்..
விலகியிருந்தும் மனதளவில் நெருங்கி சிலர்..

***********
இறக்கைகள் படபடக்க,கொஞ்சு மொழியில் காதல் பேசி சுதந்திரமாய் பறந்து செல்லும் பறவைகளை ரசிக்காமல்,அதை சிறையில் அடைத்து கதறலை ரசிக்கும் நமது முரணான ரசனை. 

***********

சத்தியம் என கூறப்படும் வார்த்தையில் சத்தியம் இல்லை. சத்தியத்தை வாழ்வினில் கடைபிடிக்காமல், சத்தியத்தை வார்த்தையில் மட்டும் கடைபிடித்து அடுத்தவர் வாழ்வினில் கடைபிடிக்கவேண்டும் என எண்ணும் நம்முடைய முரண்பட்ட சிந்தனை.

சிந்தனைகள் தொடரும்....

***********