கணவன்
மாணிக்கத்திற்கு படையல் படைத்த மீனாட்சி கொல்லப்பக்கத்துல காக்காவுக்கு சோறுவக்க, பக்கத்து வீட்டு மரகதம் என்ன
மீனாட்சியண்ணி அண்ணனுக்கு படையல் வச்சாச்சா..? “இப்பதான் முடிச்சேன் மரகதம், வேல
முடிச்சாச்சா..இதாரு ஓஞ்சம்பந்தி ராசாத்திதான..?”
ஆமாண்ணி...இப்பதான்
வந்தாங்க...அதான் சும்மா தோட்டத்துல உட்காந்து பேசலாம்னு வந்தோம்..சரிண்ணி நீங்க
போயி சாப்பிடுங்க பொறவு வூட்டுக்கு வாரேன் பேசுவோம்” சரி மரகதம் நான் வாரேன். மீனாட்சி தலை மறையும்வரை
அமைதியா இருந்த சுந்தரி..என்ன அண்ணி இது கொடுமையா இருக்கு, புருசனுக்கு திவசம்
படையல்னு சொல்றீங்க..ஆனா மகராசி மஞ்சளும், பூவும், பொட்டுமா திரியறா..இது என்ன
அக்கிரமால்ல இருக்கு..?
அண்ணி மெதுவா
பேசுங்க...அவங்க காதுல விழுந்துடப்போகுது.
நல்லா விழட்டும். நான் என்ன இல்லாததயா பேசறேன்..? இங்க நடக்கிற
கொடுமையத்தான சொல்றேன்,,
”உங்களுக்கு நம்ம மீனாட்சியண்ணி, மாணிக்கம் அண்ணன் பத்தி விவரம் தெரியாது அதான்
இப்படி பேசுறீங்க..அவுங்க கதைய கேட்டா இப்புடி பேசமாட்டீங்க என்ற மரகதத்திடம்,
அப்புடி என்ன அண்ணி பெரிய இதிகாசக்கதைய சொல்லப்போறீங்க என்றாள் எளக்காரமா.
25 வருசத்துக்கு
முந்தி இந்த மீனாட்சி இதே வூட்லதான் அம்மா, அப்பா கூட இருந்திச்சு. நான்
அப்பத்தான் உங்க அண்ணன கல்யாணம் கட்டிக்கிட்டு இந்த ஊருக்கு வந்தேன். மாணிக்கம்
அண்ணன் இந்த ஊருக்கு புதுசா வந்த தபால்காரர். நல்ல செவப்பா, நெடுநெடுன்னு ராசா
மாதிரி இருக்கும் பார்க்க. ஊர்ல உள்ள பொம்பளபுள்ளங்க எல்லாம் அவரத்தான் ஓரக்கண்ணால
பாப்பாளுக.
ஆனாலும்
எல்லாரையும் தாயாப்புள்ளையாத்தான் பார்த்துச்சு மாணிக்கம் அண்ண. ஊர்ல
பெரியவங்ககிட்ட அம்புட்டு மருவாத அதுக்கு.
அப்பு, சித்தப்பு, அண்ணன், தங்கச்சினு யல்லாரையும் முறவச்சி
கூப்பிட்டு வந்த கொஞ்சநாள்ளயே யல்லார்
மனசிலயும் இடம் பிடிச்சிடுச்சு. அதிகம் வெளியதெருவ போகாத மீனாட்சியண்ணி தபால்னு
சத்தம் கேட்டா மட்டும் அப்பப்ப வெளிய
எட்டிப்பார்க்கும். வூட்டுக்கு ஒரே பொண்ணு செல்லம் வேற, வசதிக்கும் குறைவில்ல.
போஸ்ட்மேன் தம்பி ஊர்ல யாருக்கு என்ன உதவின்னாலும் எந்த நேரத்துல கூப்பிட்டாலும்
ஓடி வந்திடும். கொஞ்சம்கூட அலுத்துக்காது அம்புட்டு வெள்ள மனசு.
ஒருநா ராத்திரி
திடீர்னு மீனாட்சியோட அப்பனுக்கு நெஞ்சுவலி. அந்த நேரம் பாத்து வண்டி ஏதும் இல்ல. இந்த
அண்ணந்தான் தன்னோட சைக்கில்ல வச்சு டாக்டருகிட்ட நேரத்துக்கு கூப்பிட்டு போய்
உசிரக்காப்பாத்திச்சு. அன்னிலேர்ந்து மீனாட்சிக்கு மாணிக்கம் அண்ணன் மேல பிரியம்
அதிகமாச்சு. பேசிகிட்டதே இல்லாட்டியும் அப்பப்போ பார்வையிலேயே பாத்துக்குவாங்க.
துரைசாமி
சித்தப்பா மகன் பட்டாளத்துல வேலக்கு சேர்ந்ததுல இருந்து அப்பப்ப மணியார்டர்
அனுப்பும். அதோட லெட்டர
படிச்சுக்காண்பிச்சு ஆசயா நாலு வார்த்த பேசிட்டுதான் போகும் இந்த மாணிக்கமண்ண. ஒரு
நா திடீர்னு ஒரு தந்தி. துரைசாமி மகன் பட்டாளத்துல செத்துப்போயிட்டதாவும், பாடி
மறுநா வரும்னு.. மாணிக்கந்தான் முதல்ல ஊர் பெரிய மனுசனான மீனாட்சியோட அப்பாகிட்ட
விசயத்த சொல்லிட்டு துரசாமி சித்தப்புக்கு தகிரியம் சொல்லி மகன் இறந்த விசயத்த
பக்குவமா சொல்லிச்சு. அன்னிக்கு சித்தப்பு கதறினத நினைச்சா இன்னிக்கும் வவுத்த
கலக்குது. நம்ம மாணிக்க அண்ணா இல்லாட்டி
அவரும் உசிர விட்டுருப்பார். பெஞ்சாதியும் இல்லாம புள்ளயும் செத்துப்போய் தனிச்ச
ஆளாயிட்டன்னு கதறினப்போ நான்
இருக்கேன்னு ஆதரவா நின்னுச்சு இந்த அண்ணன்.
ஜம்புலிங்கம்
வாத்தியாரோட பொண்ணு கல்யாணத்துல இப்படித்தான் ஒரு சிக்கலு. முத நா வரைக்கும்
வரவேண்டிய காசு வரல.. வாத்தியார் ஐயாவுக்கும், அம்மாவுக்கும் என்ன செய்யறதுன்னு
தெரியாம கையப்பிசஞ்சு நின்னப்ப, இந்த அண்ணந்தான் தன்கிட்ட இருந்த பணத்த கொடுத்து
கல்யாணம் தடப்படாம நடக்க உதவிச்சு. இப்படி அண்ணன் செஞ்ச உதவி கணக்கில
அடங்காது.
ஒருநா
மீனாட்சியோட அப்பாவுக்கு மக மாணிக்கத்த விரும்பறது தெரிஞ்சு அவரக்கூப்பிட்டு
விருப்பம் இருக்கா கேட்க., எனக்கும் மீனாட்சிய பிடிக்கும்..ஆனா பெரியவங்க சம்மதிச்சா
கட்டிக்கிறேன்னு பட்டுன்னு சொன்னதும், இம்புட்டு மரியாதையான புள்ளயான்னு, ஊர் பெரிய மனுசனுக்கு சந்தோசமாச்சுது. சரி ஒரு
நா உங்க அம்மா, அப்பாவ கூட்டியா சம்மந்தம் பேசுவோம்னு சொல்ல, ஒரு நா என்ன இப்பவே அப்பாவ இட்டாரேன்னு சொல்லிட்டு போயி நம்ம
துரசாமி சித்தப்புவ கூட்டியாரவும் யாருக்கும் ஒன்னும் விளங்கல.
என்ன தம்பி
இதுன்னு கேட்க, ”எனக்கு அம்மா, அப்பா
உறவுன்னு யாரும் கிடையாது. பட்டணத்துல ஒரு அனாத ஆசிரமத்துலதான் வளந்தேன். என்னால முடிஞ்ச ஒத்தாசைய கிராமத்து மக்களுக்கு
செஞ்சு, சொந்தம்பந்தமா நினைக்கிற மக்களுக்கு மத்திலதான் என்னோட உசிரு போகனும்னு
ஆசை. அதான் இந்த கிராமத்துக்கு வந்தேன்.”
இவ்ளோநாளா
எங்ககிட்ட எல்லாம் இதபத்தி ஏன் சொல்லலனு துரசாமி சித்தப்பு கேட்டதும்,“ நான்
சொன்னா என்மேல ஒரு இரக்கம் தான் வரும் உங்களுக்கு, எனக்கு என்மேல இரக்கப்படாம உங்க
எல்லாரோட உண்மையான அன்பு மட்டும் போதும்னு நினைச்சுதான் சொல்லல என்ன
மன்னிச்சிடுங்க” இதக்கேட்ட
மீனாட்சி அப்பனுக்கு ஒருவிதத்தில சந்தோசம். ஒத்த பொண்ணு, செல்லமா வேற
வளர்த்துப்புட்டாக அவள பிரிய வேணாமேனு சந்தோசம். ஒருவழியா ஊரார் முன்னாடி துரசாமி
சித்தப்புவோட மவனா மீனாட்சி கைய பிடிச்சுது இந்த அண்ணன்.
இப்படியே
ஒவ்வொருத்தருக்கும் என்ன செய்யமுடியுமோ அம்புட்டு உதவி, காசு பணத்தால, உடம்பாலன்னு
நேரம் காலம் பாக்காம செய்யும். மீனாட்சி அண்ணியும் ஒரு குறையும் சொல்லாம அண்ணனோட
விருப்பத்துக்குத் துணையா இருந்துச்சி.
ஒரு நா அண்ணனுக்கு திடீர்னு மயக்கம் வர டவுனாசுபத்திரிக்கு கூட்டிப்போய்
காட்டினப்ப மாரடைப்பு சொல்லிட்டாங்க. அண்ண என்னோட உசிரு ஊர்லதான் போகனும் ஆசுபத்திரில
இருக்கமாட்டேனு சொல்லி வூட்டுக்கு பிடிவாதமா வந்துடுச்சு. மீனாட்சி அப்பனும்
மாப்பிள்ளையோட ஆசய கேட்டு ஒரு நர்ச வூட்டுக்கு கூட்டியாந்திட்டாரு. அண்ணன் ஊர்ல உள்ள எல்லார்கிட்டயும்
பேசனும்னு ஆசப்பட ஊர் மக்கள் எல்லாம் மீனாட்சி வூட்ல ஒன்னு கூடிட்டாங்க
சோகமா. எல்லார்கிட்டயும் யாரும்
வருத்தப்படக்கூடாது. என்னோட அண்ணன்,
தங்கச்சி, சித்தப்பு, பெரியப்பு, பெரியம்ம, சின்னம்மா எல்லாம் எப்பவும்போல இருங்க. எனக்கு ஒன்னும் இல்ல. சாவ யாரால வெல்ல
முடியும். ஆனா செத்தப்பொறவும் நான் உங்கள்ள வாழ விரும்பறேன். அதுக்கு உங்க உதவி
தேவைன்னதும், உனக்காக எது வேணா செய்வோம் சொல்லு தம்பி கூட்டமே கதற, நாஞ்செத்த
பொறவும், என் மீனாட்சி பூவும், பொட்டுமா எப்பவும் சந்தோசமா உங்க முன்னாடி வரனும்.
அவ சந்தோசத்துல, அவ உருவுல நான் இருப்பேன். அவ மூலமா நான் உங்கஎல்லார் கூடவும்
எப்பவும் நல்லது கெட்டதுல இருப்பேன். என் மீனாட்சிய எதுலயும் ஒதுக்கி வக்கக்கூடாதுன்னு
கேட்க, ஊர் அம்புட்டு சனங்களும் ஒட்டுமொத்தமா மாணிக்கம் அண்ணனுக்கு சத்தியம்
செய்துச்சு. இந்த மீனாட்சிய பார்த்து வருங்கால சந்ததிங்க பொண்ணுங்கள மதிக்கிறது
எப்படின்னு பார்த்து கத்துக்கட்டும்னு சொல்லி சிரிச்சிகிட்டே உசிர
விட்டுச்சு.
அந்தக்காலத்துலயே
பகுத்தறிவ பேசறதோட நிறுத்தாம பெண்ண மதிக்கிறது எப்படின்னு உதாரணமா விளங்கிச்சு எங்க
மாணிக்கம் அண்ணன். இன்னிக்கும் மீனாட்சி இல்லாம எங்க ஊர்லஎந்த விசேசமும் நடக்காது. ஏன் நம்ம பிள்ளைங்க கல்யாணத்துக்கூட மீனாட்சி அக்காதான தாலி
எடுத்துக்கொடுத்துச்சி.. இன்னிக்கு நம்ம புள்ளைய நல்லாத்தான இருக்கு.? மறந்திட்டு
பேசறீங்களே அண்ணி என்ற மரகதம், போன் சத்தம் கேட்க, போன் வந்திருக்கு வாங்க உங்க
மருமவனாத்தான் இருக்கும் ஹூம்ம்.. இப்ப எல்லாம், போனு, ஈமெயிலுனு என்னென்னமோ
சொல்றாக யார் நம்ம ஊர் போஸ்ட்மேனுனு கூட தெரியமாட்டேங்குது என்று தனக்குத்தான் பேசியபடியே
உள்ளே சென்றாள். மீனாட்சி வச்ச சோறை காக்கா சாப்பிடுவதயே பாத்துக் கொண்டிருந்தாள்,
ராசாத்தி....!!
நல்ல பதில்...
ReplyDeleteநன்றி சகோ..:)
Deletenice
ReplyDeleteநன்றி அமுதா...
Delete
ReplyDeleteENNAL VASIKKA MUDIHIRATHU.....YOSIKKAMUDIYAVILLAI.VALTHAUM...
KAVITHAIN KATHALAN.